எனக்காக அன்னாசி. பார்சல் காட்டுகிறார் கோபி அண்ணாச்சி.
புன்னவெளி கிராமத்தில் இருக்கும் நண்பர் மகேஷ் வீட்டை
அடைந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி: “அருகில் ஆலப்புழை, குமரகம் உள்ளிட்ட பல சுற்றுலா தளங்கள் உள்ளன. எங்கே செல்லலாம்?”. நான் “குறிப்பிட்ட இடத்தை
சுற்றிப்பார்க்க அதிக நேரம் செலவு செய்வதைவிட முதலில் அருகில் இருக்கும் மனிதர்களை
காண்பதும், இயற்கையை ரசிப்பதையே
விரும்புகிறேன். மற்றதை பிறகு பார்க்கலாம்” என்றேன். அதை ஆமோதித்த மகேஷ் முதலில் என்னை வீட்டருகே
இருந்த அவரது மாமா கோபி வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
திட்டு திட்டாக மண் கறை படிந்த பழைய சட்டை, கையில்
ஒரு அருவாளுடன் எம்மைக்கண்டு லேசாக சிரித்தவாறு எதிரில் வந்தார் கோபி. மறுகணம் அன்னாசி
உள்ளிட்ட சில பழ வகைகளை பைகளில் நிரப்பலானார் . “வியாபாரத்திற்கோ அல்லது வேறு எவருக்கோ இப்பழங்களை
வைத்திருக்கலாம் அவர்” என்று நான் சொன்னதற்கு மகேஷ் “இல்லை. முன்பே அவருக்கு
சொல்லிவிட்டேன். நீங்கள் வருவதை அறிந்துதான் இவற்றை எடுத்து வைத்திருந்தார்”
என்றார். குடிக்க தண்ணீர் கேட்டதற்காக முல்லைப்பெரியாறு பிரச்சினை பேசி தமிழனை
கொன்ற அதே கேரள மண்ணில் ஒரு தமிழனுக்கு இப்பேர்பட்ட விருந்தோம்பல். இயற்கை
அன்னையுடன் மட்டுமே நட்பு பாராட்டும் கிராமவாசிகளின் மனதில் பிரிவினை எனும் நஞ்சு
துளியும் கலக்காது என்பதை பூரணமாக உணர்ந்தேன்.
கோபி சேட்டன் குறித்து கேட்டதில் மகேஷ் சொன்ன
செய்திகள் பல. அவற்றை உங்களுக்கு பகிர்கிறேன். சிறுவயது முதலே தந்தையுடன் சேர்ந்து
மரவளர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு இருந்த இவருக்கு போகப்போக கல்வி மேல் ஈடுபாடு குறைய
தொடங்கியது. “படிக்காமல் இருக்காதே” என்று தந்தை எவ்வளவு சொல்லியும் கேளாமல்
முழுநேரமும் பசுமையுடனே நாட்களை நகர்த்த ஆரம்பித்தார். அப்போது புன்னவெளி சாலை
வசதி இல்லாத மலைக்கிராமம். இவர் குடியேறிய பொழுது அங்கு மொத்தம் இருந்ததே இரண்டு
வீடுகள் மட்டுமே. சிறுவயது முதலே முறையற்ற தரிசு நிலங்களை சீரமைப்பதில் வித்தகர்
என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக புன்னவெளியின் நிலங்களை சீர்படுத்த ஆரம்பித்தார்.
தரிசாய் கிடந்த நிலங்கள் நாட்கள் செல்ல செல்ல ரப்பர் மரங்கள் உள்ளிட்ட பல்வேறு
இயற்கை வளங்களுடன் செழிக்க ஆரம்பித்தன. அதில் பெரும்பங்கு கோபி சேட்டனின்
வியர்வையில் விளைந்தது. மேடும் பள்ளமுமாக இருந்த கரடு முரடான பாதைகள் சீரான தார்
ரோடுகள் ஆனதிலும் இவருக்கு கணிசமான பங்குண்டு.
சாலை நடுவே விழுந்த கல்லை அகற்றி மீண்டும் பழைய
இடத்தில் கோபி சேட்டன் வைக்கையில்......
இவர் இருந்த தோட்டத்து கேட்டில் ஜான் வில்லா என்று
எழுதி இருந்தது. கோபி குறித்து மேற்சொன்ன விஷயங்களை அறியும் முன் ‘‘உங்கள் மாமா பெயர் ஜானா?’’ என்று கேட்டேன். அதற்கு
நண்பர் மகேஷ் “இல்லை. இவரது நண்பர் பெயர் அது. அயல் நாட்டில் குடியேறிவிட்ட செல்வந்தர்.
முன்பொரு காலத்தில் “உனது விளைச்சல் இல்லா நிலத்தை என்ன செய்யப்போகிறாய்? நான்
குத்தகைக்கு எடுத்து அதை காய், கனிகள் விளையும் இடமாக மாற்றுகிறேன்” என்று கோபி
கூறியதற்கு சம்மதித்தார் ஜான். சேட்டனின் கடும் உழைப்பில் வெகுவிரைவாகவே அந்த மாற்றம்
நிகழ்ந்தேறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜான் இறந்து போனாலும், அவருடைய பிள்ளைகள்
அனைவரும் இன்றுவரை கோபி சேட்டனையே தந்தையாக பாவித்து வருகின்றனர். குடும்பத்தில்
அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைத்தும் இவர் சொற்படியே.
தொடர் உழைப்பால் தனது சொந்த பிள்ளைகளையும் நன்றாக
படிக்க வைத்து செட்டில் செய்து விட்டார். தந்தைக்கு உதவ கணிசமான தொகையை அவ்வப்போது
பிள்ளைகள் அனுப்பி வைத்தாலும் அதை இவர் தனக்காக செலவு செய்வதில்லை. பணம் அனுப்பும்
மகன், மகள் பெயரிலேயே வங்கிக்கணக்கை துவக்கி அதில் அப்பணத்தை போட்டு விடுகிறார்.
ஏன் இப்படி என பிள்ளைகள் கேட்டதற்கு கோபியின் பதில்: “நீங்கள் தரும் பணத்தை வைத்து
நான் வாழ்வை நகர்த்த விரும்பவில்லை. என் செலவுக்கு ஆகும் பணம் முழுவதையும் நான்
வளர்த்த இச்சிறு பூமி தரும். அதில் விளையும் காய், கனிகள் மட்டுமே போதும். என்னை
வாழ வைக்க.....”
இயற்கை தந்த வரம் – கோபி சேட்டன்
சொந்த ஊரான புன்னவெளியில் விளைநிலம் வாங்கிப்போட்டு
விட்டு அயல்நாட்டில் இருக்கும் இளைஞர் சிலர் உண்டு. அவர்கள் விடுமுறையில் கிராமத்திற்கு
திரும்பி நண்பர்கள்/உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தால் கோபியிடம்
இருந்து தப்புவது கடினம். “நிலத்தை வாங்கி போட்டால் போதுமா? களைகளை சீர் செய்து
ஆவன செய்தால்தானே சரியாகும். உன் நிலத்துடன் நீயே நேரத்தை கழிக்காமல் இருத்தல்
சரியா?” என்று முடுக்கி விடுவார். அத்துடன் மட்டுமின்றி அருகிலிருந்து ஆலோசனை
மற்றும் உடல் உழைப்பையும் பிரதிபலன் பாராது செய்கிறார் சேட்டன்.
சில மாதங்களுக்கு முன்பு வாயில் கேன்சர் தாக்கி
அவதிப்பட்டார். ‘’பல்லாண்டு காலம் காட்டில் உழைத்ததன் விளைவே இவர் உயிரை காப்பாற்ற
பயன்பட்டுள்ளது. சாதாரண மனிதராக இருப்பின் நோயின் தாக்கத்திற்கு ஈடு தந்திருக்க
முடியாது” என்றார் மருத்துவர். பல மாதங்கள் பூரண ஓய்வு தேவை என்று சொன்னதையும்
கேளாமல் சில வாரங்களிலேயே மீண்டும் களப்பணிக்கு தயாராகி விட்டார் கோபி. “படுக்கையில்
கிடந்த நாட்களில் களைகள் பெருத்துவிட்டனவே. இந்த சீசனுக்கு விதைக்க வேண்டிய
வேலைகள் துவங்கவில்லையே” என்ற ஆதங்கத்துடன் மடமடவென மீண்டும் பணியாற்ற
துவங்கிவிட்டார் இந்த மனிதர்.
உலகில் தான்
விரும்பும் வி.ஐ.பி.க்களை பார்க்கும் ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பது இயற்கை.
ஆனால் இயற்கை சிபாரிசு செய்யும் இது போன்ற அரிதான வி.ஐ.பி.யை காணும் வாய்ப்பு
எனக்கு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டபோது
கூட தனக்கு பிடித்த மரமொன்றின் அருகில் நிற்கிறேன். பிறகு எடுக்கவும் என்றார்
சேட்டன். கேரளத்தை விட்டு செல்கையில் ஆட்டோவின் உள்ளே அமர்ந்திருந்த என்னிடம் கை கொடுத்தார்
சேட்டன்(வயது எண்பதை நெருங்குகிறதாம்). ஒரு நேர்மையான கிராமத்து விவசாயியின்
கரடுமுரடான கரங்களின் ஸ்பரிசம் அகல மணிகள் பல ஆனது. பரஸ்பரம் பாஷை புரியாத
காரணத்தால் இருவரும் ஒரு சில வார்த்தைகளுக்கு மேல் பேசிக்கொள்ள இயலவில்லை. நண்பர்
மகேஷின் மொழிபெயர்ப்பால் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம் நானும், கோபி சேட்டனும். மீண்டும்
ஒரு விடுமுறை நாளில் அவரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். அந்நாள் எந்நாளோ....
தொடரும்......
அடுத்து: குடியால் சீரழியும் சேர நன்னாடு.
......................................................................................
...........................
My other site:
agsivakumar.com
...........................
...................................................
சமீபத்தில் எழுதியது:
மிஷ்கின் ஆத்திய சொற்பொழிவு
..................................................
9 comments:
Nice to know a good human being.
இவரைப் போன்ற கிராமத்துமனிதர்கள் எப்போதும் பழகுவதற்கு இனிமையானவர்கள்.சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது பதிவு..!!
செமையா இருக்கு உங்க கேரளப் பதிவுகள்! ஏதோ ஒன்னு குறையுது...
ஆமா சேர நாட்டிளம் பெண்கள் யாரையும் சந்திச்சு பேட்டி எடுக்கலையா பாஸ்? :-)
ஆசானே.....!கோபி சேட்டன் தீர்க்காயுசோட வாழட்ட.....
மனதை நெகிழ வைத்த பதிவு.
கடவுள் அவரது நோய் தீர்த்து... புவியில் நீண்ட ஆயுளோடு வாழ அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஆதர்ச மனிதர் பற்றிய பகிர்வுக்கு நன்றி சிவா.
அருமை சிவா,சார்!உலகில் எங்கும் மோதல்,பிரிவினை என்று இருந்தாலும் நாட்டை நேசிப்போர்,மனிதர்களை நேசிப்போர் இன்னுமின்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்,கோபி சேட்டன் போல்!
சிவா ,சென்னை வெயிலில் இருந்து
தப்பிச்சிட்டீங்க போல...
கேரளத்து குளிர்ச்சி உங்கள்
எழுத்துக்களில்
பூமித்தாய் மீது இத்துணை பாசத்துடன் செயல் படும் கோபி சேட்டன்கள் நமக்கு இன்னும் தேவை.
சினிமா நடிகர்களை, படம் முடிந்த, பல வருடங்கள் ஆகியும் , நாயக பூஜை செய்யும் சமுதாயம், கோபி சேட்டனை 'ஹீரோ''வாக ஏன்வைக்க கூடாது?
அவரை வாசகர்கள் முன் வைத்த உங்களுக்கு, நன்றி.
Post a Comment