தியேட்டரில் இதற்கு முன் பார்த்த மலையாளப்படங்கள் எல்லாம் எந்த ஒரு ஈர்ப்பையும் தராத நிலையில் மீண்டும் ஒரு படத்திற்கு டிக்கட் எடுத்துவிட்டு அழைத்தார் கேரள நண்பர். சசிகுமார் நடித்துள்ளார் என்பதால் 'சும்மா போய்தான் பாப்பமே' என முடிவு செய்தேன். மௌனகுரு, கஹானி அளவிற்கு சிறப்பாக இல்லாவிடினும் ஒரு நல்ல த்ரில்லரை பார்த்த நிறைவை தந்தது மாஸ்டர்ஸ். கோட்டயத்தை மையமாக கொண்டு கதையை பின்னியிருக்கிறார்கள். துடிப்பான போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜ், அவர் நண்பனாக சசிகுமார்..இன்னும் ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம் படம் முழுக்க.
நகரத்தில் தொடர்கொலைகள் நடப்பதற்கான காரணத்தை கண்டு பிடிக்க ஏ.எஸ்.பி. ஸ்ரீ(ப்ரித்விராஜ்) எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்கிறான் நண்பன் மிலன்(சசி). தன்னை கொல்ல வரும் நபர் யார் என அறியாமலே இறந்து போகின்றனர் சிலர். கொலை செய்பவர்கள் எல்லாருக்கும் ஒரு சோகமான பின்னணியை சின்ன பிளாஸ்பேக் மூலம் விளக்குகின்றனர். கண்ணில் கொலைவெறியுடன் திரியும் பெண்ணாக பியா. உதட்டில் மரணம் தரும் ரசாயனத்தை பூசிக்கொண்டு பழிதீர்க்கும் அனன்யா, மகள்களின் வாழ்வை கெடுக்க நினைப்பவனை அளிக்கும் சலீம், இது போக காதல் சந்தியா, சித்திக் என பலர் வந்து போகின்றனர். பாவம் சமுத்திரக்கனி..'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ரோட்டில் கொடிபிடித்து ஒரு செகண்ட் மட்டும் கோஷம் எழுப்பிவிட்டு போகிறார். சசியின் நண்பர் என்பதால் சும்மா தலைகாட்டி விட்டு போயிருக்கிறார் போலும்.
ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஜினு ஆப்ரஹாம். யார்? எதற்காக கொன்றார்கள்? எனும் சஸ்பென்சை அதிகரித்து பிறகு மெல்ல அந்த முடிச்சுகளை அவிழ்க்கையில் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. பிருத்விராஜுக்கு ஜோடி இல்லாதது பெரிய ஆறுதல். ஓரிரு பாடல்கள் மட்டும்தான் என்பது அடுத்த ஆறுதல். எனவே தங்கு தடையின்றி வேகமாக பயணிக்கிறது போலீஸ் ஜீப். தமிழில் கெத்தாக நடிக்கும் சசி மலையாள படத்தில் ரொம்பவே சிரமப்படுகிறார். 'வேற்றுமொழிப்படம். ஒழுங்கா நடிச்சுருவோமா' எனும் படபடப்பு அவர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. டப்பிங் உதவியுடன் வாயசைத்து உள்ளார். தந்து ட்ரேட்மார்க் டபுள் பாக்கெட் சட்டையுடன் வந்து போகும் சசி போய் இறுதியில் இந்திய சினிமாவில் செகண்ட் ஹீரோவுக்கு என்ன கதி நேருமோ..அதற்கே ஆளாகிறார்.
திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் சுமார். பின்னணி இசை பல நேரங்களில் செவுலை பதம் பார்க்கிறது. அளவுக்கு மீறி வாசித்து விட்டார் ம்யூசிக் டைரக்டர் கோபி. கொஞ்சமே வந்தாலும் பிஜு மேனன் மனதில் நிற்கிறார். இளம் பெண்களின் வாழ்வை சூறையாடும் கயவர்களை கொல்ல கரம் கோர்த்து சசி, அனன்யா, பியா, சலீம், காதல் சந்தியா, பிஜூ மேனன் உள்ளிட்டோர் எப்படி பழி வாங்குகின்றனர் என்பதை பிரித்விராஜ் சொல்லும் காட்சியில்தான் நமக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. நீச்சல் குளத்தில் வில்லனை அடித்து கொல்ல முயலும் காட்சியில் சலீமின் சிவந்த கண்கள்...யப்பா. அவருடைய மகளாக வரும் மித்ரா(காவலன்) மனதை சுண்டி இழுக்கிறார். கேரளத்து பெண்கள் அழகுக்கு நிகரில்லை என்பது 'உங்கள் சிஸ்டர்' வந்து போகும் சீன்களில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தொடர் கொலை, துப்பு துலக்குதல், பிளாஷ்பேக் சீன்கள் விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது நம்மை மூச்சு முட்டத்தான் வைக்கிறது. அவசர அவசரமாக பப்பே உணவு உண்ட உணர்வு வருகிறது எண்ட் கார்ட் போட்ட பின்பு. இன்னும் புத்திசாலித்தனமாக க்ளைமாக்சை முடித்து இருக்கலாம். எனினும் கடந்த சில மாதங்களில் வந்த கேரளப்படங்களில் மாஸ்டர்ஸ் ஓக்கே ரகம் என்பதென்னவோ உண்மைதான். முக்கிய கதாபாத்திரமாக வரும் சசியிடம் இருந்து நடிப்பை நன்றாக வெளிக்கொண்டு வந்திருப்பின் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஏகப்பட்ட கேரக்டர்கள், கிளைக்கதைகள் வந்து போவதால் மொழி தெரியாதவர்களுக்கு மண்டை கிர்ரடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பக்கத்தில் மலையாள மாஸ்டர் இருந்ததால் அவ்வப்போது அவரை நச்சரித்து சீன்களை புரிந்து கொண்டதால் தப்பித்தேன். குடுத்த நாட்டுக்கு வஞ்சகமின்றி ஒரு த்ரில்லரை தந்த இயக்குனர் ஜானி ஆண்டனிக்கு சபாஷுங்கோ!!
மாஸ்டர்ஸ் - மர்டர் மங்காத்தா
..........................................................................................
..............................
My other site:
agsivakumar.com
.................................
..............................................
சமீபத்தில் எழுதியது:
த்ரீ - விமர்சனம்
.............................................
5 comments:
RIGHT!!!!
ம்
Supper vimarsanm
எப்பயாச்சு தமிழ்ல டப்பாகி வரும். அப்போ பார்த்துக்கலாம்.
//கேரளத்து பெண்கள் அழகுக்கு நிகரில்லை என்பது 'உங்கள் சிஸ்டர்' வந்து போகும் சீன்களில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
//
இதுலாம் ஓவர் நக்கல் ..
Post a Comment