CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 10, 2012

எஸ்.வி. சேகரின் வால் பையன்                                                                 
எஸ்.வி.சேகரின் வால் பையன் உள்ளிட்ட படைப்புகள் ஏற்கனவே நாடக ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகி இருப்பினும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவற்றை பார்க்க தூண்டுவதற்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு. அதென்னவெனில் அவ்வப்போது நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப புதிய வசனங்களை அவர் கோர்த்து நையாண்டி செய்வதே. கடந்த ஞாயிறன்று மாலை வாணிமகாலில் பார்த்த நாடகம்தான் நாடகப்ரியா வழங்கிய வால் பையன்.

சிதம்பரமாக எஸ்.வி.சேகர். தாய் மற்றும் மிலிட்டரி சித்தப்பா ஆகிய இருவர்தான் இவருக்கு உறவு. தகுந்த வேலை கிடைக்காமல் அலையும் சிதம்பரம் அடிக்கடி சொறிந்து கொண்டே இருக்கும் பிரபல நடிகர் ஒருவரிடம் பி.ஏ.வாக வேலைக்கு சேர்கிறார். அந்த நடிகரின் மகளிடம் காதல் பூக்கிறது. ஒருமுறை அனுமான் வேடத்தில் நடிக்க ஆள் கிடைக்காமல் இவரையே நடிக்க சொல்லி முதலாளி வற்புறுத்தியும் ஒப்பாத சிதம்பரத்திற்கு சாபம் விடுகிறார் நடிகர். மறுதினம் நாற்காலியில் அமரப்போகையில் பின்புறம் ஏதோ ஒரு உறுத்தல் உணர்வு இருப்பதை கண்டு திடுக்கிடுறான் சிதம்பரம். என்னவென்று பார்த்தால் சாபத்தின் பலனாக அவனுக்கு குட்டி வால் ஒன்றுமுளைக்கிறது.

நாள் ஒன்றுக்கு ஆறு இஞ்ச் வளர்ந்து கொண்டே போகிறது வால். அதனால் சிரமங்கள் பல இருப்பினும் சில உபயோகமாகவும் இருக்கத்தான் செய்கிறது.  உதாரணத்திற்கு காபியில் சர்க்கரை சரியாக கலக்கவில்லை எனில் வாலாலேயே அதை கலக்கி குடிக்கிறான் சிதம்பரம். நாட்கள் கடக்கின்றன. வாலும் நீள்கிறது.இதற்கு மேலும் இதை வளரவிட்டால் தனது காதலுக்கு ஆபத்து என்பதால் மருத்துவரிடம் செல்கிறான். ஆனால் அவரோ ''நான் செய்த ஒரு தவறால் தன் மகனே நாயைப்போன்ற உருவில் பிறந்துள்ளதால் உன் வாலை வெட்ட இயலாது'' என்கிறார். அத்தோடு நிற்காமல் ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் கடிதம் எழுதி சிதம்பரத்தின் வாலை வெட்டாதீர்கள் என்று சொல்லப்போவதாக மிரட்டுகிறார். என்ன ஆனது வால் பையனின் நிலை என்பதை நாடகம் பார்க்கையில் காண்க.

                                                               
தொப்பை மட்டும் அதீத வளர்ச்சியை கண்டிருப்பினும், மற்றபடி இந்த வயதிலும் பயங்கர யூத்தாக இருப்பது எஸ்.வி.சேகர் வாங்கிய வரம் போல.  இவருடைய ஒன்லைன் காமடி வசனங்களுக்கு பல இடங்களில் க்ளாப்ஸ் விழுகின்றன. 


அவற்றில் சில:

பெரியவர்: சும்மாதான இருக்க. இந்த லெட்டரை படிச்சி காட்டு

சேகர்: மன்மோகன் சிங் கூடத்தான் சும்மா இருக்காரு. அவர்கிட்ட சொல்லிப்பாரு.

நடிகர்: சிதம்பரம்..காலிங் பெல் அடிச்சிட்டு நேரா உள்ள வந்து மே ஐ கம் இன்னு கேக்கறியே உனக்கு அறிவில்ல?

சேகர்: யோவ்..மணி அடிச்சிட்டு வாசல்லயே நிக்க நான் என்ன நீதி கேக்க வந்த பசுவா?

அம்மா: டேய் சிதம்பரம். நீ காதலிக்கற பொண்ணு எப்படிடா?

சேகர்: காலேஜ்லயே அவதாம்மா பர்ஸ்ட்.

அம்மா: அப்படியா!!

சேகர்: ஆமாம். எட்டு மணி காலேஜுக்கு ஏழு மணிக்கே வந்துடுவா.
 ....................................

சேகரின் சோலோ பட்டாசுகள்:

"இத்தாலி ஆளுங்க சிலரை புடிச்சி வச்சிருக்கு இந்தியான்னு கலாட்டா பண்றாங்களே..அவங்களை ரிலீஸ் பண்றது இருக்கட்டும். இத்தாலி ஆளு கிட்ட ஒருத்தர் சிக்கிட்டு இருக்காரே அவரை முதல்ல ரிலீஸ் பண்ணுங்க.."

"ஷேர் மார்க்கெட்டையே காலி பண்ண சிதம்பரம் தீவிரவாதிங்களை காலி பண்ணாமலா போய்டுவாரு?"

"என்ன சித்தப்பா உங்க வால் கொதிக்குது. ராத்திரி என்ன பண்ணீங்க?"

"என்னது ரோட்டை க்ராஸ் செய்யும்போது உன் வாலை ஆட்டோ ஏத்திருச்சா? இதுக்குத்தான் வால்ல ரிப்லக்டர் மாட்டிக்கன்னு சொன்னேன்"

"சாருக்கு கௌரவ நடிகர் பட்டம் எப்படி வந்துச்சின்னு தெரியும். இதுக்கு முன்ன ஒரு மகாபாரத படத்துல 100 கௌரவர்கள்ல ஒருத்தர நடிச்சதாலதான?"
.........................................

நாடகத்தின் இடையே அவ்வப்போது தத்துவம் ஒன்றை சொல்லிவிட்டு மறைகிறது ஒரு கேரக்டர். யார் இவர் என்று இறுதியில் சொல்கிறார் சேகர் "என்னோட ட்ராமால வெறும் ஜோக்தான் இருக்கு. கருத்தே இல்லைன்னு சிலர் பேசிக்கறாங்க. அதான் இப்படி ஒரு ஆளைப்போட்டு மெசேஜ் சொல்றேன். இன்னைக்கு மக்கள் எல்லாரும் திருந்திடுவாங்கன்னு நம்பறேன்" என கிண்டல் அடித்தார். மேலும் பேசியவர்.."என்னுடைய ஏ மெயில் mylaporemla@gmail.com. இப்ப அந்த தொகுதில வேற யாரோ எம்.எல்.ஏ.வா. இருக்கலாம். ஆனா இந்த மெயில் ஐ.டி. எனக்கு மட்டும்தான் சொந்தம்." எனச்சொன்னார்.

தனது நாடகங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வருடத்திற்கு 15 பேருக்கு கல்வி உதவியும், பலதரப்பட்ட ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளும் செய்து வருவதாக கூறினார். பல வருடங்களாக அனாதை பிணங்களை அடக்கம் செய்து வருவதாகவும், மருத்துவமனைகளில் ஏதேனும் ஒரு நாள் அமரர் அறையை சுத்தம் செய்ய விரும்புவோர் தன் இ மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு விடைபெற்றார் சேகர். வரும் ஞாயிறு மாலை வாணிமகாலில் இவரது இன்னொரு நாடகம் 'எல்லாரும் வாங்க' அரங்கேற உள்ளது. அது குறித்த தொகுப்புடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி.


வால் பையன் - சேட்டைக்காரன் 


Photos: madrasbhavan.com
Location: Vani Mahal, T.Nagar, Chennai
.....................................................

இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த நாடகம் என்று சொன்னால் அது சமீபத்தில் பார்த்த ஒய்.ஜி.மகேந்திரனின் படைப்பை சொல்லலாம். ட்ராமாவின் பெயரே 'நாடகம்'தான். தூர்தர்ஷன் தமிழகத்தில் தன் ஒளிபரப்பை துவங்கிய காலத்தில் நாடகக்காரர்கள் எப்படி சிரமத்திற்கு உட்பட்டனர் என்பதை சிரிப்பு, சிந்தனை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து சொன்ன நாடகமிது. அதற்கான லிங்க்:

.......................................................................

............................
My other site:
...........................


4 comments:

ஆர்வா said...

ஹா.. ஹா.. மன்மோகன்சிங் காமெடி செமையா இருக்கு... நாடகம் பார்க்கணுமே...
நட்புடன்
கவிதை காதலன்

முத்தரசு said...

அவற்றில் சிலவும், சோலோவும் மெய்யாலுமே பட்டாசுதான்

Unknown said...

நல்லா நாடகம் பார்க்கறீங்க கொளுத்துங்க.....

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!இப்போதும் தமிழகத்தில் நாடகம் உயிர் வாழ்வது கேட்டு சந்தோசம்!பலர் விட்டு விட்டார்கள்.(உ:பாலசந்தர்)விடாது தொடரும்,எஸ்.வி,மற்றும் ஒய்.ஜி க்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!

Related Posts Plugin for WordPress, Blogger...