CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 3, 2012

லியோனி பட்டிமன்றம் - நேரடி ரிப்போர்ட்


                                       
                                                            கம்பீரமான கலைஞர் அரங்க வாயில்

சென்ற சனிக்கிழமை மாலை கலைஞர் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கையில் தமிழ்ப்புத்தாண்டு...எக்ஸ்ட்ரீம்லி சாரி. 'விடுமுறை தின சிறப்பு பட்டிமன்றம் கலைஞர் அரங்கில்(அண்ணா அறிவாலயத்தினுள்) நடக்கவுள்ளது. அனைவரும் வருக' என்றொரு அறிவிப்பு. அப்போது நேரம் மணி நான்கு. நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 5.30. எப்படியும் ஹவுஸ்புல் ஆகிவிடும்   என்பதால் அடுத்த சில நிமிடங்களில் அறிவாலய வாசலில் ஆஜரானேன். கலைஞர் அரங்கம் இருக்கும் இடத்தை சுற்றி நன்கு பராமரிக்கப்பட்ட அழகிய பூங்கா வண்ண மலர்களுடன் நமக்கு ஹாய் சொல்லிக்கொண்டிருந்தது. அற்புதமா மெயின்டெயின் பண்றீங்க கலைஞர் ஜி. உள்ளே சென்று பார்க்கையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே பாதி அரங்கம் நிரம்பி இருந்தது. நடுவரிசையில் நானமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் பால்கனி உட்பட மொத்த நாற்காலிகளும் நிரப்பப்பட்டன. ஏசி அரங்கம் என்றாலும் கலைஞர் டி.வி. ஆட்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய  ஆங்காங்கே வைத்திருந்த மின் விளக்குகள் உஷ்ணத்தை கிளப்பிக்கொண்டு இருந்தன. ஆறு மணிக்கு மேடையேறிய லியோனிக்கு உற்சாக வரவேற்பளித்தனர் ரசிகர்கள்.

'திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா? ' என்பதுதான் தலைப்பு. அதற்காக வைத்திருந்த பேனரில் சிறப்பு பட்டிமன்றம் அல்லது சிறப்புப்பட்டிமன்றம் என்பதற்கு பதில் 'சிறப்புப் பட்டிமன்றம்' எனவும் பெருமை, சிறுமை எனும் வார்த்தைகளுக்கு அடுத்து 'ப்' இல்லாமலும் இருந்தது. ஏனைய பட்டிமன்றங்களிலும் இந்த மொழிச்சிதைவு சகஜமாகி விட்டது. மெத்தப்படித்த தமிழ் முனைவர்கள் நடுவர் மற்றும் பேச்சாளர்களாக இருக்கும் இது போன்ற சபைகளில் இதை இவ்வளவு நாட்கள் கண்டு கொள்ளாதது கொடுமையே. பெருமைப்படுத்துகிறது அணி சார்பாக சங்கரநாராயணன் மற்றும் இனியவனும், சிறுமைப்படுத்துகிறது அணி சார்பில் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் கோவை தனபாலும் பேசினர்.

பல்க்காக இருந்த சங்கரநாராயணனை பற்றி அறிமுகம் செய்த லியோனி "இவர் பெரியபுராணத்தில் ஆராய்ச்சி செய்து வெகுவிரைவில் டாக்டர் பட்டம் பெறப்போகிறார். ஆள் எழுந்து நிற்க சிரமப்படுவார். மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு 'இரவு சாப்பாட்டையும் இப்படி அமர்ந்தவாறே முடித்து விடுகிறேன்' என்று சொல்லும் அளவிற்கு சுறுசுறுப்பானவர்' என ஓட்டினார். மைக்கை பிடித்ததுமே அரங்கம் அதிரும் வண்ணம் குரலை உயர்த்திய சங்கர் "மன்னிக்கணும். எனக்கு சரீரமும் பெருசு. சாரீரமும் பெருசு" என்று ஆரம்பித்தார். தலைப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரம் ரூட்டில் சிறிது நேரம் பேசியவர் "நடுவர் அவர்களே நீங்கள் நடித்த ஒரே படம். அதன் பெயரென்ன?" என லியோனியை கேட்க "கங்கா கெளரி" என்று பின்சீட்டில் இருந்து ஒரு இளைஞரின் குரல் ஒலித்தது. அதற்கு லியோனி "இதுல இருந்து அவர் ஒருத்தர்தான் அந்த படத்தை பாத்து இருக்கார்னு தெரியுது" எனச்சொன்னதும் விசில் பறந்தது.

தொடர்ந்து பேசிய ச.நாராயணன் "அண்ணா ஆட்சியில் மெரீனா கடற்கரை செல்லும் வழியெங்கும் கண்ணகி, அவ்வை உள்ளிட்ட பெண்கள் சிலை நிறுவப்பட்டது. ஏன் என்று கேட்டதற்கு அண்ணா சொன்னார்: அறம் காத்த மகளிர் தோன்றிய பூமியிது. எனவே இந்த வழியில் பயணம் செய்யும் அமைச்சர்கள் அதை மனதில் கொண்டு பெண்களை மதித்தல் வேண்டும் என்பதே எனது விருப்பம்" எனும் தகவலையும் சொல்லி விடைபெற்றார் சங்கரநாராயணன்.
        
                                                                      பட்டிமன்ற அரங்கத்தினுள்       

எதிர் அணிக்காக அடுத்து களமிறங்கினார் மதுக்கூர் ராமலிங்கம். எடுத்த எடுப்பில் "முன்பெல்லாம் வீட்டில் நுழைந்ததும் சுவிட்ச் போர்டை தேடுவோம். இப்போது மெழுகுவர்த்தியை தேடுகிறோம்" என ஜெ ஆட்சியை வாரினார். அதற்கு லியோனி "இப்போது இன்னும் உஷாராக மக்கள் சட்டை பாக்கெட்டில் மெழுகுவர்த்தி ஒன்றை வைத்துக்கொண்டே உலா வருகிறார்கள்" என்றார். வேட்டை படத்தில் வரும் 'பப்ப பப்பே' பாடலை வெகுவாக கிண்டலடித்தனர் இருவரும். "உன் பூப்போட்ட பாவாடை போதும் எனக்கு. அதுல வெற்றிவிழா படம் காட்ட ஆசை எனக்கு" ன்னு ஒருத்தன் எழுதி இருக்கான்யா. பூப்போட்ட பாவாடைல படம் காட்டுனா தெரியுமா?" என வாரினார் லியோனி. சென்னை ராயபுரத்தை சேர்ந்த இனியவன் பேசுகையில் "அங்காடித்தெரு திரைப்படத்தில் விபச்சாரி மற்றும் குள்ளமான மனிதர் பேசும் வசனம், ராம் படத்தில் தாயை புகழ்ந்து பாடும் பாடல் போன்றவை பெண்களை பெருமைப்படுத்துகின்றன" என பேசி முடித்தார். சமீபகால பேச்சாளர்களில் எனக்கு பிடித்த ஒருவர் இந்த இனியவன். இறுதியில் வந்த கோவை தனபால் கொங்கு மொழியில் பேசி 'இந்தியாவின் குடும்ப அமைப்பு எனக்கு பிடித்துள்ளது' என்று ஹில்லாரி கிளிண்டன் கூறியதை மேற்கோள் காட்டி சில நகைச்சுவை துணுக்குகளை வீசி விட்டு அமர்ந்தார்.

                                                                   கலைநயம் மிக்க ஓவியங்கள்

தீர்ப்பு சொல்லும் முன்பு பேசிய லியோனி "வில்லன் நாயகியை பலாத்காரம் செய்யறப்ப உடனே வரமாட்டான் இந்த ஹீரோ. முக்கியமான கட்டம் வரும்போது கண்ணாடி ஜன்னலை உடச்சிகிட்டு பைக்குல பறந்து வருவான். அப்ப தியேட்டர்ல படம் பாக்குறவன் "இன்னும் கொஞ்ச லேட்டா வரக்கூடாதா இவன்" என டென்ஷன் ஆவான். நம்ம ஹீரோ நாயகியை இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு அம்பது பேரை அடிப்பான். அந்த ஆளுக்கு உதவி செய்யற மாதிரி எதிரிங்களை லேசா கடிச்சி கூட வைக்காம வேடிக்கை பாக்கும் அந்த அம்மா" என்று சினிமாவில் பெண்களை வைத்து எடுக்கப்படும் காட்சிகளை வெளுத்து வாங்கினார். இடையிடையே சுருதி தப்பாத பாடல்களுடனும். என்ன தீர்ப்பு சொன்னார் என்பதை அறிய வரும் ஏப்ரல் 14 அன்று காலை கலைஞர் டி.வி. பார்க்க மக்களே. அதற்கு முன்பு அதை வெளியிட்டால் தி.மு.க. பொதுக்குழுவில் எனக்கு எதிராக கண்டபடி கண்டனம் தெரிவிக்கப்படலாம்.

முன்பெல்லாம் பட்டிமன்றம் என்றாலே சிலப்பதிகாரம், ராமாயணம் என்று மாற்றி மாற்றி பேசி போர் அடிப்பார்கள். அதன் பின் லியோனி, சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன் ஆகியோர் வந்ததும் வெகுஜனங்கள் வெகுவாக ரசிக்க தொடங்கினர். ஆனால் இப்போதெல்லாம் தாம் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவாக இது போன்ற சான்றோர்கள் ஜால்ரா அடித்து பேசுவது ரசிக்கும்படி இல்லை. இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையும் பெரிதாக இல்லை என்பதே நிதர்சனம்.


லியோனி பட்டிமன்றம் - கட்சிசார் கமர்சியல் தர்பார்

Photos: madrasbhavan.com
Location: Kalaignar arangam, Mount road, Chennai.
...................................................................................

..............................
My other site:
agsivakumar.com
.............................                                                

...................................................
சமீபத்தில் எழுதியது:

த்ரீ விமர்சனம்
           
மாஸ்டர்ஸ் விமர்சனம்
..................................................


7 comments:

CS. Mohan Kumar said...

Ok. Paathuduvom.

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!!!!!///நாட்டாம தீர்ப்பை சொல்லு!(இப்பெல்லாம் கண்டனம் தெரிவிக்க மாட்டாங்க,கண்டுக்காம போய்க்கிட்டே இருப்பாய்ங்க!பயப்படாதீங்க!!!)

நாய் நக்ஸ் said...

innumaa intha ulagam t.v.
pakkuthu,....?????

Thava said...

சிறப்பான பகிர்வுங்க சகோ, மிக்க நன்றி.

சென்னை பித்தன் said...

//லியோனி பட்டிமன்றம் - கட்சிசார் கமர்சியல் தர்பார்//
நல்லாச்சொன்னீங்க!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ரிப்போர்ட் !

Related Posts Plugin for WordPress, Blogger...