CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, March 3, 2012

Paan Singh Tomar


                                                                   Paan Singh Tomar

இவ்விமர்சனத்தை படிக்கும் முன் 'யார் இந்த பான் சிங்?' என்பதை அறிய க்ளிக் செய்க:  பான் சிங் தோமர்.  ட்ரெயிலரை பார்க்கும்போது கதை பற்றி ஒரு வரி கூட எனக்கு தெரியாது. ஆனால் பார்த்தே ஆக வேண்டும் எனத்தூண்டியவர் கதை நாயகன் இர்பான் கான். பெரிய அளவில் ஸ்ட்ரெயின் செய்யாமல், வித விதமான கெட்டப் இன்றி எப்பேர்பட்ட ரோலையும் அனாசயமாக செய்யும் நானா படேகர், நஸ்ருதீன் ஷா ஆகியோரின்  வரிசையில் என்னைக்கவர்ந்த நடிகர்தான் இர்பான். எனவே டிக்கட் ரிசர்வ்ட். அதன் பின் ஒருவரிக்கதையை படித்ததும் ஆர்வம் அதிகரித்தது. ஓட்டப்பந்தயம் மூலம் தேசத்திற்கு புகழை ஈட்டித்தந்த ஒருவர் சம்பல் கொள்ளைக்காரர் ஆன உண்மையான வரலாற்றை படமாக்கி உள்ளார் இயக்குனர் டிக்மன்ஷு.  

1950 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்கிறான் சம்பல் அருகேயுள்ள ஊரைச் சேர்ந்த  பான். சாப்பாட்டு சப்பாத்தி ராமனான இவனுக்கு விளையாட்டு பிரிவுதான் சரி என யோசனை சொல்கிறார் உயரதிகாரி. ஓட்டப்பந்தயம் என்று வந்துவிட்டால் பான் சிங்கை மிஞ்ச ஆளில்லை. 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தேசிய சாம்பியன் ஆகிறான். சில வருடங்கள் கழித்து இந்தியா போரை சந்திக்கிறது. ஆனால் ராணுவத்தில் 'விளையாட்டு வீரர்கள் போருக்கு செல்லக்கூடாது. அவர்கள் தேசத்தின் சொத்து. பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறி அவனை போர்முனைக்கு போக விடாமல் தடுக்கின்றனர். பிறகு சொந்த ஊரில் உறவினன் ஒருவனிடம் ஏற்படும் நிலத்தகராறில் கலெக்டர், போலீஸ் என அனைவரிடமும் முறையிட்டு தோற்கிறான் பான் சிங். 'இனி துப்பாக்கி ஏந்தினால்தான் சரி' என்று முடிவெடுக்கிறேன். பிறகு நடந்ததென்ன. திரையில் காண்க.   

                                                                                                  
இர்பான்..கண்கள் போதாதா? என்னா நடிகன்யா!! ஆளுக்கு வயது ஐம்பதாம். படம் பார்த்த கண்கள் சத்தியமாக நம்ப மறுக்கின்றன. ஓட்டப்பந்தய வீரனாக வரும் சீன்களில் இவர் ஓடும் ஓட்டத்தை பார்த்தால் என்றும் 16 மார்க்கண்டேயனின் நெருங்கிய சொந்தம் என்று அடித்து சொல்லலாம். அப்படி ஒரு பிட்னஸ். வயதான காலத்தில் தன்னை பேட்டி எடுக்க வரும் நிருபரை கிண்டல் செய்தவாறே ப்ளாஷ்பேக்கை சொல்கிறான் பான். முன்பொரு காலத்தில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்றபோதெல்லாம் பெரிதாக பேசாத மக்களும், ஊடகமும் சம்பல் கொள்ளைக்காரன் ஆன பிறகுதான் திரும்பிப்பார்க்கிறது என்று சொல்லும் இடம் நெகிழ்ச்சி. 

ராணுவத்தில் உயரதிகாரிகளிடம் மனதில் பட்டதை பேசுதல்,  குழந்தைகளை லெமன் சாக்லேட் வாங்க சொல்லுதல், ஜப்பான் ரசிகையை வைத்து மனைவியை வெறுப்பேற்றுதல் என ஹ்யூமரை அரங்கேற்றும் இர்பான்   அதன்பின் கொள்ளையர் அணித்தலைவனாகி ம.பி.,உ.பி.,ராஜஸ்தான் எல்லைகளில் போலீசுக்கு தண்ணி காட்டுகிறார். நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகிகள், விரட்டும் போலீஸ், பரம வைரி பன்வர் சிங் என பலரையும் சமாளிக்க திட்டங்களை வகுக்கும் காட்சிகள் என தொடர்ந்து இர்பான் ஆதிக்கம்தான். 

சர்வதேச டிபன்ஸ் மீட் ஓட்டப்பந்தயம் நடக்கும் சீனை அரங்கில் பார்வையாளர்கள் எவரும் இல்லாமல் எடுத்திருந்தது குறையாக பட்டது. அதே சமயம் ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பல ஜப்பானிய ரசிகர்கள் இருப்பதை காட்டி இருக்கும் டைரக்டருக்கு ஒரு சபாஷ். பான் சிங் பந்தயத்தில் பங்கு கொள்வதை திரையில் பார்க்கும் சினிமா ரசிகர்கள் ஜப்பானியர்கள் அமர்ந்து இருப்பதை பார்க்கவா போகிறார்கள் என்று எண்ணி ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து சமாளிக்காமல் இருந்தது நன்று.  

                                                                  
இதர பாத்திரங்களில் வருபவர்கள் இயல்பாக நடித்துள்ளதால் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டதால் சில கஷ்டமான ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தன. இர்பான் மனைவியாக வரும் மஹி கில் குடும்ப குத்துவிளக்கு. பான் சிங் தவறான பாதையில் செல்வதைக்கண்டு மனம் வெதும்பும் ராணுவ அதிகாரி "இனி உன்னைப்பற்றி யோசிக்கவே மாட்டேன்" என்று சொல்வதற்கு பான் சொல்லும் பதில்: "செய்தித்தாள் மூலமாக என்னைப்பற்றி அடிக்கடி தெரிந்து கொள்வீர்கள்". இப்படி ஆங்காங்கே பளிச் வசனங்கள். விரட்டல் காட்சிகளில் மிரட்டினாலும்,  சாதாரண இடங்களில் கூட தேவையற்ற டெர்ரர் சப்தத்தை குறைத்து இருக்கலாம் இசையமைப்பாளர் அபிஷேக்.  

படத்தின் முடிவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சில விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களை எழுத்தில் காட்டினர். ஆசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மருத்துவ வசதி இன்றியும், ஏழ்மையில் துவண்டும் இறந்த அவலம் திரையில் ஓட என் விழித்திரையை நீர் நிரப்பிற்று. இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிவிட்டு மற்ற விளையாட்டுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருக்கப்போகின்றனர் மக்கள்? சர்வேதச அளவில் சாதிக்கும் திறன் கொண்ட இளம் ரத்தங்களை உடனுக்குடன் இனம் கண்டு அவர்களுக்கு போதிய ஊக்கத்தையும், பொருளாதார வசதியையும் செய்து தரப்போகிறது இந்தியா? எப்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை  வெல்லப்போகின்றனர் நம் நாட்டினர்? தற்போதைக்கு அதற்கான தீர்வு கிடைப்பது கடினமென்றே  தெரிகிறது.

அரசின் அலட்சியத்தால் தடம் மாறிப்போன கணக்கிலடங்கா வீரர்களில் ஒருவரான பான் சிங்கின் நிஜ வாழ்வை சித்தரிக்கும் சிறந்த இந்தி(ய) சினிமா இது. 


பான் சிங் தோமர் - டோன்ட் மிஸ்!    
..................................................................................


...............................................
சமீபத்தில் எழுதியது:

..............................................

..............................
My other site:
..............................4 comments:

Thava said...

அருமையான படம் என்பதை விமர்சனமே சொல்கிறது சகோ..கண்டிப்பாக விரைவில் பார்க்க முயற்சி
செய்கிறேன்..நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Unknown said...

அதென்ன டோண்ட் மிஸ் # இங்குலீசு....

Unknown said...

பகுத் பகுத் அச்சா!!!!!!

Unknown said...

எளிய நடயில் விமர்சனம் நச்...அந்த கடைசி பத்தில கேட்டு இருக்கறத பாத்தா எல்லாமே அரசாங்கம் பண்ணும்னு எதிர்பாக்குற குடிமகனா நீர்...வேலைக்கு ஆகாது தம்பி..இறங்கி ஆடு(Goat அல்ல!)

Related Posts Plugin for WordPress, Blogger...