CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, March 21, 2012

பவுன்சர்

 
                             
தமிழனின் தாய்மொழி தமிழ் என்று பெயருக்கு இருந்தாலும் ஆங்கிலம்தான் வழக்கு மொழி என்பது போல், ஹாக்கி தேசிய விளையாட்டாக பெயரளவில் இருப்பினும் இந்த தேசத்தில் கிரிக்கெட் மட்டும்தான் வல்லரசாட்டம்.  கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களுக்கும் இருக்கும் கிரிக்கெட் மோகம்  கல்லூரிக்காலம் வரை எனக்கும் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி மீது எந்த விருப்பும் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தீவிர ரசிகன் நான். காரணம்: தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொண்டு விளையாட்டை என்ஜாய் செய்யும் அந்நாட்டு வீரர்களின் குணம். அடுத்த பேவரிட் அணி என்றால் அது பாகிஸ்தான். காரணம்: புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் அதிவிரைவில் அற்புதமாக ஆட ஆரம்பிப்பது.  இன்றுவரை எனது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. விளையாட்டு, கலை இரண்டையும் அரசியல் ஆக்குதல் அழகல்ல  என்பதற்கு வரலாற்று சான்றுகள் பல. இவ்விரண்டும் மொழி, இன, மத, தேச எல்லைகளைக்கடந்தது என்று சொல்லித்தெரிய வேண்டாம். 

பிரிட்டிஷ்காரன் குடையின்கீழ் இருந்த தேசங்கள் மட்டுமே கிரிக்கெட்டை இன்றுவரை விடாப்பிடியாக பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன. முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான்,  மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த விளையாட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலக விளையாட்டு அரங்கில் கண்காணாத இடத்தில் இருக்கும் இந்த விளையாட்டு நம் தேசத்து ரசிகர்கள் பலருக்கு உயிரினும் மேல். ஐந்து நாட்கள் ஆடியும் முடிவின்றி ட்ரா ஆகும் டெஸ்ட் ஆட்டங்கள் உலக விளையாட்டின் விசித்திரம். வாழ்வில் வெற்றி பெற கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் 5 நாட்கள் செலவிட்டு ஒரு ஆட்டத்தை இந்தியா போன்ற வளரும்/ஏழை நாட்டை சேர்ந்த சராசரி இளைஞன் பார்க்கிறான் என்றால் அதை விடக்கொடிய நிகழ்வு ஏதுமில்லை. 

ஹான்சி க்ரோன்யே...உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆட்டக்காரர். தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று எப்போது அவர் பகிரங்கமாக அறிவித்தாரோ அன்றே இந்த ஆட்டத்தின் மீதான நம்பகத்தன்மை போய் விட்டது பலருக்கு. அசாருதீன், ஜடேஜா தாண்டி முகம்மத் ஆசிப், சல்மான் பட் வரை நீள்கிறது பட்டியல். நாள் முழுக்க செலவு செய்து ஒவ்வொரு ஒருநாள் போட்டியின்போதும் நாம் இந்த விளையாட்டை நேசித்து பார்த்த பொழுதேல்லாம் அறிந்திருக்கவில்லை ஒவ்வொரு பந்திற்கும், ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டதென்று. 'இன்னைக்கு இந்தியா கண்டிப்பா ஜெயிக்கும்டா',  'கடைசி பால்ல கண்டிப்பா சிக்ஸ் அடிப்பான் பாரு' என தேசமெங்கும் எத்தனை கோடி பிரார்த்தனைகள். சில நாட்கள் கழித்து அது சூதாட்டம், எனவேதான் அந்த அணி தோற்றது அல்லது ஜெயித்தது என்ற செய்தி கேட்கும்போது உங்கள் மனசாட்சியே உங்களை கேலி செய்ததை சற்று எண்ணிப்பாருங்கள். 

                     
நகரத்தில் நடக்கும் மேட்சை பார்க்க பல கிலோமீட்டர் பயணம் செய்து, அதிகாலை முதல் வரிசையில் நின்று, தடியடி பட்டு டிக்கட் கவுண்டரை நெருங்குகையில் ஹவுஸ்புல் பலகையை காணும் போது விதியை நொந்தென்ன பயன்?  உங்களைப்போன்ற  சாதாரண வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்களின் டிக்கெட்டுகளை ஏற்கனவே புளித்த ஏப்பக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று விட்டது கிரிக்கெட் நிர்வாகம் என அவ்வப்போது நாம் காணாத செய்தியா? தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்து அறிவியல், மருத்துவம், சமூக சேவை எனப்பல்வேறு துறைகளில் ஆண்டாண்டு காலமாக இயங்கி வரும் இதயங்கள் பல இருக்க 'சச்சினுக்கு பாரத ரத்னா' தரவேண்டுமென பலத்த குரல்கள் எழும் பாரதத்தின் பரிதாப நிலை கண்டு என் செய்வேன்? 

ஆஸ்திரேலிய பயணம், ஆசியக்கோப்பை, அடுத்தது ஐ.பி.எல். என சலிக்க சலிக்க கிரிக்கெட்.  கிரிக்கெட்.  நம் நாட்டின் மற்ற விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை செய்தாலும் அது ஒரு வரிச்செய்தியாகிறது. ஆனால் போன  வாரம் இந்திய கிரிக்கெட் அணி ஏன் தோற்றது என்பதை இன்றுவரை  விவாதிக்கும் விசித்திர ரசிகர்களை எப்படி பாராட்டினால் தகும்? என் தேசத்து இளைஞர்களின் ஆயிரக்கணக்கான மணிப்பொழுதுகளை தின்று தீர்க்கும் இந்த ஆட்டம் இன்னும் எத்தனை யுகங்கள் இம்மண்ணில் கோலோச்ச உள்ளது? உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட டென்னிஸ், கால்பந்து, பார்முலா ஒன், தடகளம் போன்ற விளையாட்டுகள் கூட அதிகபட்சம் ஒரு சில மணிநேரங்களைத்தான் நம்மிடமிருந்து பறிக்கின்றன. வெறும் 12 நாடுகள் ஆடும் இந்த ஆட்டமோ ஒரு நாள் முழுவதையுமே காவு கேட்கும் அராஜகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்போகிறோம்? 

       
அறிவாற்றலில் இரண்டு நாட்கள் பின்தங்கி இருந்தாலும் நமது வேலையை இன்னொருவன் தட்டிச்செல்லும் இந்த கணினியுகத்தில், இன்னும் எத்தனை நாட்களுக்கு நம் பொன்னான நேரத்தை பன்னாட்டு கம்பனிகளுக்கும்,  இந்த ஆட்டத்தை ஓயாமல் ஒளிபரப்பும் சேனல்களுக்கும் தாரைவார்த்து தந்து கொண்டே இருக்கப்போகிறோம்? இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்காதவன் தேச பக்தனே அல்ல என்று கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு ஒரே கேள்விதான்: நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா?  இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்? 

ஆஸி.யில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் மண்ணைக்கவ்வியதன் மூலம் கோடானுகோடி இந்தியர்களின் நேரங்களை மிச்சப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றி.  வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக பல நாட்களை தானம் செய்ய காத்திருக்கும் கலியுக கர்ணர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!
..................................................................................

...........................
My other site:
...........................

.................................................
சமீபத்தில் எழுதியது:


................................................10 comments:

bandhu said...

இந்த கொடுமைகளின் உச்சம் இந்த IPL போட்டிகள்.. கொஞ்சம் கொஞ்சமாக திகட்ட ஆரம்பிப்பதை பார்க்கும்போது இதெல்லாம் ஒருநாள் ஒழிந்து போகும் என்ற நம்பிக்கை வருகிறது!

Philosophy Prabhakaran said...

// ஐந்து நாட்கள் ஆடியும் முடிவின்றி ட்ரா ஆகும் டெஸ்ட் ஆட்டங்கள் உலக விளையாட்டின் விசித்திரம். //

Class...

Philosophy Prabhakaran said...

// முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான், மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த விளையாட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. //

இந்தப்பழம் புளிக்கும் கதைதான்... அவை கிரிக்கெட்டின் ஆரம்பக்கட்ட நிலையிலேயே வெளியேற்றப்படும் அணிகள்... சுருக்கமாக இந்தியா ஃபுட்பாலில் எப்படியோ அதுபோல...

MANO நாஞ்சில் மனோ said...

சச்சின் என் ஃபேவரிட் ஹீரோ எனக்கு, ஆனால் கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது....!!!

Unknown said...

மிக அருமையான பதிவு என்பதைவிட ஆதங்கம் எனலாம்!.

அருமை!..

Unknown said...

'இறுதிப்போட்டிக்கு செல்லாமல் மண்ணைக்கவ்வியதன் மூலம் கோடானுகோடி இந்தியர்களின் நேரங்களை மிச்சப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றி.' இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா?! உண்மையான வார்த்தைகள்.

ஆர்வா said...

ஆழமான எழுத்துக்கள்... மிக உபயோகமான பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

//நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா? இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்? //

நெத்தியடி கேள்வி.. நம்ம ஆட்களின் தேசபக்தி கிரிக்கெட்டில்தான் இருக்கிறது போலும்...

நட்புடன்
கவிதை காதலன்

ஆர்வா said...

ஆழமான எழுத்துக்கள்... மிக உபயோகமான பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

//நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா? இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்? //

நெத்தியடி கேள்வி.. நம்ம ஆட்களின் தேசபக்தி கிரிக்கெட்டில்தான் இருக்கிறது போலும்...

நட்புடன்
கவிதை காதலன்

Unknown said...

நான் கூட என்னுடைய 12 13 வயதுகளில் போட்டியில் தோற்று விட்டால் வெறி கொண்டு சுவற்றில் மண்டையை மோதிக் கொண்டெல்லாம் அழுதுள்ளேன். பிறகு வெறுத்துப் போய் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டு விட்டேன் சிவா.

Anonymous said...

கிரிக்கெட் நம் நேரத்தை விழுங்குகின்றது என்பது நிதர்சனமான உண்மை...

ஆனால் அதைப் பார்ப்பது எதோ மிகப்பெரிய தவறைப்போல சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

சிலருக்கு ப்ளாக் எழுதுவதிலேயே ஆர்வம் இருக்கும், சிலருக்கு மெகா சீரியல் பார்ப்பதிலேயே ஆர்வம் இருக்கும், சிலருக்கு புத்தகம் படிப்பதிலேயே ஆர்வம் இருக்கும், சிலருக்கு யூடியூபில் வீடியோ பார்ப்பதிலேயே ஆர்வம் இருக்கும், சிலருக்கு கிரிக்கெட் பார்ப்பதிலேயே ஆர்வம் இருக்கும்,

அதற்காக கிரிக்கெட் பார்க்கிறவன் அனைவருக்கும் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களின் பெயர் தெரியுமா என்று கேட்பதெல்லாம் பதிவுக்கு மிக அழகு சேர்க்கும் வார்த்தைகள் அவ்வளவுதான்.

ஆனால் நம்ம ரசிகர்களும் பாருங்க, கிரிக்கெட் போட்டி நடக்கிற அன்னைக்கு ஸ்டேடியத்துல பயங்கர தேசபக்தியா இருக்கறமாதிரி காட்டிப்பானுங்க... அதையும் ஒத்துக்கதான் வேணும்...

Related Posts Plugin for WordPress, Blogger...