CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, March 14, 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2முந்தைய பேட்டியின்  தொடர்ச்சி..

ராஜாராமன்: கட்சியின் செயல்பாடுகள், நோக்கங்களை மக்களிடம் கொண்டு செல்ல ம.தி.மு.க. வசம் ஊடக, பத்திரிக்கை பலம் இல்லை. புதிதாக வந்த தே.மு.தி.க.விற்கு கூட தனித்தொலைக்காட்சி இருக்கிறது. இந்த பலவீனத்தை ம.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப்போகிறது? 

சம்பத்: தற்போது இமயம் தொலைக்காட்சிதான் வைகோவின் பேச்சு மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை காட்டி வருகிறது. இமயத்தைதான் நாங்கள் இப்போது இமையாக கருதுகிறோம். எங்கள் சுமைகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள். நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம். வரும் காலத்தில் இமயம் இமயத்தை எட்டும். 

ராஜாராமன்உங்கள் கட்சிக்கென ஒரு தொலைக்காட்சியை தொடங்கும் எண்ணம் வைகோவிற்கு உள்ளதா?

சம்பத்: எண்ணம் இருக்கிறது. மூலதனம் இல்லை. 

ராஜாராமன்: தமிழ், தமிழர் நலன் எனும் அடிப்படையில் ம.தி.மு.க மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டாலும்,தங்கள் கட்சி மீது ஜாதிய முத்திரை விழுந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாய மக்களின் தலைவன், அந்த மக்களின் ஓட்டை தனக்கு சாதகமாக்க நினைக்கின்ற மனிதர் என்றும் வைகோ மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? இந்த முத்திரையை நீக்க என்ன செய்யப்போகிறது கட்சி?

சம்பத்: இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. தென்சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் முதலியார் வகுப்பை சார்ந்தவர். வடசென்னை மாவட்ட செயலாளர் பர்மாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர். காஞ்சி மாவட்ட செயலாளர் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர்.கட்சியின் அவைத்தலைவர் கொங்கு வேளாளர். துணைப்பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன்   முக்குலத்தோர் வகுப்பை சார்ந்தவர். ஆகவே எங்கள் மீது ஜாதி முத்திரை குத்துபவர்களுக்கு பதில் சொல்வதே தவறு. 

                                                                  சதீஷ், நாஞ்சில் சம்பத், ராஜாராமன்

ராஜாராமன்: ம.தி.மு.க. துவங்கப்பட்ட நேரத்தில் தி.மு.க.வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் பலர் அதில் இணைந்தனர். ஆனால் இப்போது பலர் வேறு கட்சிக்கு சென்று விட்டனர். இப்போது குறிப்பட்டு சொல்லக்கூடிய இரண்டாம் மட்ட தலைவர்கள் உங்கள் கட்சியில் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கட்சியை நடத்தி செல்கிறார் வைகோ. அவருக்கு அடுத்த வலுவான தலைவர்களை கட்சி உருவாக்கி வருகிறதா? 

சம்பத்: கட்சியின் பிரச்சார செயலாளராக நான் உள்ளேன். எங்கள் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் அழகுசுந்தரம் 19 மாத காலம் எட்டுக்கு நாலு கொட்டடியில் கருத்துரிமைக்கு காப்புரிமை பெற்றுத்தருவதற்கு வைகோவுடன் சிறையில் இருந்தவர். மாணவர் அணிச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்பாக செயல்படுகிறார். நீங்கள் சொன்னது போல் ஊடக, பத்திரிகை பலம் இல்லாததால் நாங்கள் இருட்டடிப்புக்கு ஆளாக்க பட்டிருக்கிறோம்.தமிழகத்தில் அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பது ம.தி.மு.க.வில் மட்டும்தான். தி.மு.க.வில் பொருளாளராகவும் மு.க.ஸ்டாலின்தான் இருக்கிறார்.இளைஞர் அணிச்செயலாளராகவும் அவர்தான் இருக்கிறார். தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கின்ற இளைய தலைமுறை எங்கள் கட்சியில்தான் அதிகம். 

ராஜாராமன்: வைகோ சிறந்த நாடாளுமன்றவாதி. மக்கள் நலனுக்கு போராடும் அரசியல்வாதி போன்ற சில தனித்தன்மைகள் அவருக்குண்டு. இருப்பினும் 1996 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ம.தி.மு.க. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் சூழலுக்கு பலியானது. இது ஒரு நல்ல தலைவனுக்கு அழகா? 

சம்பத்: நிலைமையை நாங்கள் உருவாக்கவில்லை. நிலைமைதான் எங்களை உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க.வோடு ரத்தமும், சதையுமாக இணைந்து இருந்தோம். ஒரு கோடியில் பூத்த இரு மலர்களாக நாங்கள் களத்தில் நின்றோம். கருணாநிதியின் குடும்ப பாசிச ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் இணைந்தோம்.இப்படி ஒரு முடிவை ஜெயலலிதா எடுப்பார் என்று யூகிக்க முடியவில்லை. அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம். ஆகவே நாங்கள் நிலைமையை உருவாக்கவில்லை.

ராஜாராமன்: அ.தி.மு.க. விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்குவதன் மூலம் உங்களுக்கு இடங்கள் மேலும் குறையலாம். இறுதி நேரத்தில் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்று உங்களுக்கு முன் கூட்டியே தெரியாதா?


சம்பத்: தெரியாது. நாங்கள் விசுவாசமாக இருந்தோம். கள்ளம் கபடமின்றி இருந்தோம். கூட்டணிக்கு துரோகம் செய்யாமல் இருந்தோம். அதற்கான பரிசை அவர்கள் தந்திருக்கிறார்கள். வைகோ பரிசுத்தமானவர் என்று சமூகம் இப்போது ஒரு அங்கீகாரத்தை தந்திருக்கிறது. தி.மு.க. தொண்டர்களின் பால் எங்கள் மீது ஒரு கௌரவம்,  அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் மீது காட்டும் அனுதாபம், பொதுமக்கள் எங்கள் மீது கொண்டுள்ள பச்சாதாபம், உலக தமிழர்கள் எங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்பு போன்றவைக்கு  இச்சூழல் வழி வகுத்து உள்ளது. நாங்கள் தவறு இழைக்கவில்லை. இதை தாக்குபிடிக்கும் ஆண்மை எங்களுக்கு உள்ளதே அதுதான் எங்களுக்கு இருக்கிற ஒரே சவால்.


ராஜாராமன்: தேர்தல் புறக்கணிப்பால் ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள் போன்றோர் வேறு கட்சிக்கு தாவ வாய்ப்பு இருக்கிறதே?


சம்பத்: கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில் அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.


ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது. 


பேட்டி நாளை தொடரும்...
...................................................................................6 comments:

வெளங்காதவன்™ said...

:-)

MANO நாஞ்சில் மனோ said...

நாஞ்சில் நாடு மணம் தருதே நாஞ்சில் சம்பத்தின் பேச்சில்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பேட்டி நல்ல ஒரு முயற்சி, வலைபதிவுகளுக்கு...!!!

நாய் நக்ஸ் said...

:))))))))))))

படிக்காமலே டேம்ப்லடே கமெண்ட் போடுவோர் சங்கம்...

சேலம் தேவா said...

//ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. //

இந்த பேச்சுதான் இவங்ககிட்ட எனக்கு புடிச்சது... :)

CS. Mohan Kumar said...

அலோ உங்க கேள்வியும் காணும். போடோவும் காணும். நிஜமாவே நீண்ட போனீங்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...