பாகம் ஒன்றை படிக்க: ட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா
சில வாரங்களுக்கு முன்பொருநாள் நண்பர் ராஜாவுடன் சேர்ந்து தரமான பிரியாணிக்கடை தேடலை நடத்தியதில் ஏமாற்றமே மிஞ்சியது. அன்று ஞாயிறு மாலை 4 மணியானதால் காலி பிரியாணி அண்டாவுடன் "தீந்து போச்சி" பதில்தான் எல்லாக்கடைகளிலும் கிடைத்தது. இம்முறை மதியம் 2 மணிக்கே திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அமீருன்நிஸா கடையை ஆஜர் ஆனோம். துவாரபாலகர்கள் போல இருபுறங்களிலும் வேலையாட்கள் அண்டாவில் இருந்த பிரியாணியை அள்ளிப்போட்டு கொதிக்க கொதிக்க பார்சல் செய்து கொண்டிருந்தனர். அந்தச்சிறிய இடத்தில் கல்லா முன்பு இருந்தவரை நோக்கி ஏகப்பட்ட கரங்கள் 100, 500 ரூபாய் நோட்டுகளை நீட்டியவண்ணம் இருந்தன.
"பாய் எனக்கு ஒரு பேமிலி பேக்" என்ற குரல்கள் கோரசாக ஒலித்தவண்ணம் இருக்க, அவர்களை சமாளிக்க திணறிக்கொண்டு இருந்தனர் ஊழியர்கள். ரூபாய் நோட்டினை நீட்டியவாறே போர்டில் விலையைக்கண்டேன். இருவருக்கு போதுமான சிக்கன் பிரியாணி விலை 120. மட்டன் 130. தனித்தனி கவர்களில் பக்காவாக பார்சல் செய்து தருகிறார்கள். வெங்காய பச்சடி பார்சல் இல்லை. அங்கேயே சாப்பிடுபவர்களுக்கு மட்டும் பரிமாறப்படுகிறது சைட் டிஷ் . திருவிழாவில் உரியடிப்பது என்ன பிரமாதம். அமீருன் நிஸாவில் அடித்து பிடித்து பார்சல் வாங்குபவர்தான் அசல் பிஸ்தா.
தடைகளைத்தாண்டி பார்சல் வாங்கிய கையோடு நண்பரின் மேன்சனுக்கு விரைந்தோம். ரூமில் தட்டு இல்லாததால் அருகில் இருந்த லாயரிடம் "பாஸ்..ரெண்டு ப்ளேட் இருந்தா தாங்க" என்றார் ராஜா. "நான் என்ன குடும்பஸ்தனா? ரெண்டு தட்டு வச்சிருக்க? ஒண்ணுதான் இருக்கு?" என்று நக்கலடித்தார் லாயர். இன்னொரு ரூமில் ஒரு டிபன் பாக்சை இரவல் வாங்கி வந்து பார்சலை பிரித்தோம். புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பாய்க்கடை பிரியாணியை உண்பது எனக்கு முதல் அனுபவம் என்பதால் ருசியில் திளைத்தவாறு சாப்பிட்டுக்கொண்டே இருக்க "என்ன சிவா..எதுவுமே சொல்லல..எப்படி இருக்கு?" எனக்கேட்டார் நண்பர். "பேசாம இருக்கும்போதே தெரியலையா? பிரமாதமான டேஸ்டுங்க" என்றுரைத்தேன்.
ஸ்டார் ஹோட்டல்களில் கூட கஞ்சத்தனமாய் பிரியாணி மற்றும் லெக்பீஸ் வைக்கும் காலத்தில் பெரிய சைசில் மிருதுவான, ருசிமிகுந்த சிக்கன் பீஸையும், திருப்தி தரும் அளவிற்கு பிரியாணியையும் வைத்திருந்தனர். மயிலை கற்பகாம்பாள் மெஸ் நெய்ப்பொங்கல், கீழ்ப்பாக்கம் 'மொகல் பிரியாணி'யில் (ஈகா தியேட்டர் பின்புறம்) சாப்பிட்ட அல்டிமேட் மட்டன் பிரியாணி.இவை இரண்டும்தான் நான் உண்டதில் அலாதியான ருசியுடையவையாக இதுகாறும் இருந்து வந்தன. இப்போது அந்த வரிசையில் அமீருன் நிஸாவின் சிக்கன் பிரியாணியும் சேர்ந்து கொண்டது.
தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லாமலே தொண்டையில் இலகுவாக இறங்கிய இந்த பிரியாணியை ஒருமுறை சாப்பிட்ட பிறகாவது நகரில் பெரிய ஹோட்டல்களை நடத்துபவர்கள் கொஞ்சமாவது உருப்படியான பிரியாணியை போட்டால் உத்தமம். 120 ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் கைப்பிடி அளவிற்கு சுமாரான பிரியாணியை சாப்பிட்டு அலுத்து போனவர்கள் இக்கடை பக்கம் ஒருமுறை வந்து பாருங்கள். உண்டு முடித்த சில நிமிடங்களில் தொண்டை, வயிற்றை கலவரமாக்கும் பிரியாணிகளை ஒப்பிடுகையில் இது சூப்பர் ஸ்டார்தான். பக்கா வதம் செய்யப்பட சிக்கன் என்பதால் பக்க விளைவுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடுத்த முறை இக்கடையின் மட்டன் பிரியாணியையும் ஒரு கை பார்ப்பதென முடிவு செய்து விட்டேன். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையும், பாரதி சாலையும் சந்தித்து கொள்ளும் இடத்தில் ரத்னா கபே அருகே இவ்வுணவகம் அமைந்துள்ளது. திருவல்லிக்கேணி தள்ளி தூரமாக இருப்பவர்கள் பார்சல் கொண்டு சொல்லவேண்டாம். சுடச்சுட சாப்பிட்டால்தான் அட்டகாசமாக இருக்கும். எனவே கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை. உள்ளேயே அமர்ந்து ஒரு கட்டு கட்டுங்கள். இல்லாவிட்டால் பார்சலை கவ்விக்கொண்டு மெரீனாவில் உட்கார்ந்து உடனுக்குடன் இந்த உன்னத பிரியாணியை உள்ளே தள்ளுங்கள். ஞாயிறும் கடை திறந்திருக்கும். தரம் மற்றும் அளவை கணக்கில் கொண்டால் தாராளமாக 150 ரூபாய்க்கு கூட விற்கலாம். ஆனால் ஒருவர் திருப்தியாக உண்ணும் பிரியாணியை 60 ரூபாய்க்கு மட்டுமே தருகிறார்கள். இது வியாபாரம் மட்டுமல்ல. சேவையும் கலந்ததுதான் என்பது என் கருத்து. ஏழை, நடுத்தரவாசிகளின் (அசைவ) அட்சயம் இந்த அமீருன் நிஸா!
Photos: madrasbhavan.com
Photos: madrasbhavan.com
ட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா தொடரும்....
.......................................................................
......................................................................
சமீபத்தில் எழுதியது:
ஆனந்த விகடனில் ஆரூர். மூனா. செந்தில்
.........................................................................
...................................
My other site:
agsivakumar.com
...................................
ஆனந்த விகடனில் ஆரூர். மூனா. செந்தில்
.........................................................................
...................................
My other site:
agsivakumar.com
...................................
20 comments:
இந்த விலைவாசில இந்த ரேட்ல கொடுக்கறது பெரிய விஷயம்யா...அப்படியே ரெண்டு பாமிலி பேக் பார்சல் பண்ணி அனுப்புங்க...தொடரட்டும் சகோதரர்களின் பணி!
//ஸ்டார் ஹோட்டல்களில் கூட கஞ்சத்தனமாய் பிரியாணி மற்றும் லெக்பீஸ் வைக்கும் காலத்தில் பெரிய சைசில் மிருதுவான, ருசிமிகுந்த சிக்கன் பீஸையும், திருப்தி தரும் அளவிற்கு பிரியாணியையும் வைத்திருந்தனர்.//
சிவா, அது நெசமாவே சிக்கன் தானான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?
சும்மா கலாய்ப்பதற்கு மட்டுமே கேட்ட கேள்வி. அருமையான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளீர்கள்,சென்னை நண்பர்கள் கவனத்திற்கு. நன்றி.
இந்த பிரியாணி அரிசி பாசுமதி ரகம்தானே...எங்க ஊர் பக்கம் சீரக சம்பா அரிசி தான் ...நான் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கிறேன்...அரிசி பிடிக்காத காரணத்தினால் என்னமோ மனதை ஒட்டவில்லை..ஆனால் அந்த கோழி லெக் பீஸ் மட்டும் எப்படி பெரிதாய் தருகிறார்கள் என்று மட்டும் புரியவில்லை...
நீங்கள் ஆஹா ஓஹோ என்று புகழும் அந்த கடையின் பிரியாணியை சாப்பிட்ட கசப்பான அனுபவம் நினைவுக்கு வருகிறது.
உணவு உலகம் சங்கரலிங்கத்திடம் அந்த பிரியாணியை டெஸ்ட் செய்ய கொடுத்து ரிசல்ட் பாருங்களேன்.
மாமா...தூக்கம் வரலையா????
இல்லை...
பிரியாநிக்காக....
காத்திருன்தீன்களா...????
:-)
என்ன ஓய் லாயரை கிண்டல் செய்றீர்??
எல்லாரும் ஹோட்டல் பத்தி எழுத ஆரம்பிச்சா யூத் கோபிசுப்பார்
@ விக்கியுலகம்
பார்சல் அனுப்பிடுவோம்.
@ FOOD NELLAI
சிறிய கடைகள் மீதான தரம் குறித்து கேள்விகள் எழுவது இயற்கையே. பாரம்பரிய செட்டிநாடு ஹோட்டல், ஸ்டார் ஹோட்டல் என்று சொல்லிக்கொண்டு மொக்கையான பிரியாணி போடும் கடைகளை விட இது பலமடங்கு மேல் சார். அடுத்த முறை சென்னைக்கு வரும்போது உங்களை கூட்டிட்டு போறேன். டெஸ்ட்/டேஸ்ட் பண்ணி சொல்லுங்க.
@ ஜீவா நந்தம்
பெரிய கோழி பீஸ் ரகசியத்தை துப்பு துலக்கி பாக்கறேன்.
@ மென்பொருள் பிரபு
உணவு உலகம் ஆபீசர் சென்னை வருகையில் கண்டிப்பாக இக்கடைக்கு அழைத்து சென்று ரிசல்ட் கேட்கிறேன் பிரபு.
// NAAI-NAKKS said...
மாமா...தூக்கம் வரலையா????
இல்லை...
பிரியாநிக்காக....
காத்திருன்தீன்களா...????//
ஆமாம் தலைவா.
@ வெளங்காதவன்
:))
//மோகன் குமார் said...
என்ன ஓய் லாயரை கிண்டல் செய்றீர்??
எல்லாரும் ஹோட்டல் பத்தி எழுத ஆரம்பிச்சா யூத் கோபிசுப்பார்//
நடந்த சம்பவத்தை எழுதனேன். அம்புடுதேன்!
தலைவரும் ஒரு பொஸ்தகம் போடுறதுக்கு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்காரு போல......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தலைவரும் ஒரு பொஸ்தகம் போடுறதுக்கு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்காரு போல......//
அடுத்த புத்தக கண்காட்சில பவர் ஸ்டார் தலைமையில் புத்தக வெளியீடு நடத்த ப்ளான் பண்ணி இருக்கேன். டைட்டில்: "படித்த உடன் கிழிக்காமல் விடவும்". :)))
திருப்தியா சாப்பிட்டீங்க இல்ல.மகிழ்ச்சி.நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்!
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
தலைவரும் ஒரு பொஸ்தகம் போடுறதுக்கு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்காரு போல......//
ஆஹா, இது வேறயா!
பிரபல ஹேட்டல்ல இங்க மட்டன் பிரியாணி 150 ரூபாய், சிக்கன் பிரியாணி 110 ரூபாய் கறி ரப்பர் மாதிரி இருக்கும்...சூடும் இருக்காது நீங்க கொடுத்து வைச்சவங்க...ம்ம்
Post a Comment