CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, March 20, 2012

எஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணிஎஸ்.வி.சேகர் நாடகம் பார்த்து வெகுநாட்கள் ஆனதால் கடந்த ஞாயிறு வாணிமகாலில் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி பார்க்க உத்தேசித்தேன். பிலாசபி பிரபாகரனும் ஓக்கே போட்டார். வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களை அழைத்தேன். "இன்று நிறைய நேரம் வெளியே இருந்ததால் இனி வருவது கஷ்டமே" எனச்சொன்னார். அவர் சொன்ன தொனி 'வீட்டில் பூரிக்கட்டை பறக்கும்' எனும் அர்த்தத்தில் அமைந்தது. நாடகம் துவங்குவதாக அறிவிப்பு செய்த நேரம்  மாலை 7 மணி. டிக்கட்டை பணம் குடுத்து வாங்க எண்ணிய சமயத்தில் நண்பன் அரவிந்திடம் இருந்து ஒரு கால் வந்தது. "டிக்கட் எடுக்க வேண்டாம். என் அப்பா எஸ்.வி.சேகரின் பள்ளித்தோழர். எஸ்.வி.சேகருக்கு போன் செய்து சொல்லிவிட்டார். நம் மூவருக்கும் காம்ப்ளிமென்ட் டிக்கட் கன்பர்ம்" என்றான். இதுவரை பார்த்த எல்லா நாடகங்களையும் கடைசி அல்லது நடு வரிசையில் நின்றுதான் பார்த்துள்ளேன். இன்னும் முன்பமர்ந்து பார்க்க வேண்டுமெனில் 500, 1000 ரூபாய் குடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும். அந்தளவிற்கு நம்மிடம் கப்பாசிட்டி இல்லாதததால் இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனவே நண்பன் சொன்ன செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. நாடக நடிகர்களின் முகபாவங்களை முதல் வரிசையில் இருந்து பார்க்கும் வாய்ப்பு அமையப்போவதை எண்ணி பூரிப்படைந்தது உள்ளம்.  

நான் பார்த்தவரையில் சேகரின் நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகிவிடும்.மிகப்பெரிய கலைவாணர் அரங்கத்தில் கூட ஒருமுறை கூட்டம் நிரம்பி வழிந்ததை கண்டுள்ளேன். இதை பிலாசபியிடம் சொன்னபோது "அதெல்லாம் நடக்காது. கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்" என்றார். ஆனால் வழக்கம்போல் ஹவுஸ்புல் ஆனது இந்த ஷோவும். டிக்கட் வாங்கிய அனைவரும் அரங்கினுள் சென்று விட, நாங்கள் சேகருக்காக காத்திருந்தோம். காரில் வந்திறங்கியவர் எங்களைப்பார்த்து "இன்னைக்கி நாடகம் நடக்கறதே சந்தேகம்தான்" என்றார். என்னடா இது சோதனை என புரியாமல் விழித்தோம். ஏற்பாட்டாளர்களிடம் சற்று கோபமாக பேசிவிட்டு காரை கிளப்ப ஆயத்தமானார் சேகர். "இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டமில்லை" என்றேன். பிலாசபியோ "சான்சே இல்ல. அவர் போக மாட்டார்" என்று ஆருடம் சொன்னார். நம்மாளு சொன்னது போல அடுத்த சில நிமிடங்களில் கூல் ஆன எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த சம்மதித்து மீண்டும் உள்ளே வந்தார். பிரபாகரா எப்படி இப்படி?


நாடகம் தொடங்கும் முன் ஓரிரு நிமிடங்கள் என்னிடம் உரையாடிய சேகர், "அரசியல் குறித்து கேள்விகள் கேட்டால் தப்பில்லை. நான் மீண்டும் அ.தி.மு,க.வில். சேரப்போகிறேன்" என்றார். தங்களின் லேட்டஸ்ட் நாடகம் என்ன என்ற கேள்விக்கு "கடைசியா போட்ட டிராமாதான். அப்படி பாத்தா இந்த நாடகம்தான் லேட்டஸ்ட்" எனச்சொன்னார். அனாதையாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்துவரும் அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்தேன். நேரம் நகர்ந்து மாலை 7.15 ஐ தொட்டது. உள்ளே ரசிகர்கள் காத்திருக்க, "முதல் வரிசையில் அமர்ந்து கொள்ளுங்கள்" என எங்களுக்கு சிறப்பு அனுமதி தந்துவிட்டு நாடகத்தை துவக்கினார் அவர். 

    
எஸ்.வி.சேகர் டிராமா என்றாலே ஒன் மேன் ஷோ தான். அரசியல், இரட்டை அர்த்தங்கள் சற்று தூக்கலாக இருக்கும். அதற்கு இந்நாடகமும் விதிவிலக்கில்லை. 1979 ஆம் ஆண்டு முதல் இந்த குறிப்பிட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் சிறப்பம்சம் இடைவேளைக்கு பிறகு வரும் பட்டாபி எம்.எல்.ஏ.வாக வரும் சேகர் நிருபருக்கு தரும் பேட்டிதான். சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை மாற்றி நையாண்டி செய்வார். இம்முறை ஸ்பெக்ட்ரம் ராசா, சிதம்பரம், கலைஞரின் தீக்குளிப்பு, பட்ஜெட் என சகலத்தையும் கோர்த்து ரவுசு கட்டினார். லேசாக சொதப்பும் சக நடிகர்களை ஸ்பாட் வசனங்களால் கிண்டல் அடிப்பது, மைக், லைட் வெளிச்சம் ஆகியவற்றில் குறை இருப்பின் ஏற்பாட்டாளர்களை வெளிப்படையாக கலாய்ப்பது என நாடகத்தின் இடையே சுவாரஸ்யத்தை சேர்ப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி.  இம்முறையும் வழக்கம் போல அவை நிகழ்ந்தேறின. 

ரசித்த வசனங்களில் சில: 

அம்மா: "இந்த புடவை கிழிசலை தைக்க கூட முடியல. கண்ணுல கோளாறு. எவ்ளோ நேரந்தான் ஊசில நூலை கோக்க கஷ்டப்படுவனோ.."

சேகர்: எத்தனை வருஷம் ஆனாலும் உன்னால இதை தைக்க முடியாது. ஏன்னா இது குண்டூசி "

அப்பா: "இனிமே நீ இந்த வீட்டு வாசலை மிதிக்க கூடாது" 

சேகர்: "ஏன் வாசல்ல புதுசா சிமென்ட்  பூசி இருக்கியா?"

அப்பா: "நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வருவன்னு கனவு கண்டேன்டா "

சேகர்: "உனக்கு அறிவே இல்லையா? அது எப்படி ஒருத்தனே டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா ஆக முடியும்?" 

                                                                            
இப்படி இரண்டு மணி நேர சிரிப்பு மத்தாப்புக்களுடன் நாடகம் முடிந்தது. மறுநிமிடம் தேசிய கீதம் ஒலித்தது. அதன்பின் பேசிய எஸ்.வி. சேகர் ஞாயிறு அன்று சினிமா, டி.வி. போன்றவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு இந்த ட்ராமாவை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார். சில ஆயிரங்கள் மதிப்புள்ள டிக்கட்களை எனக்கும், பிலாசபிக்கும் அன்பளிப்பாக தந்து ஓர் இனிய மேடை நாடக அனுபவத்தை ஏற்படுத்திய  நண்பன் அரவிந்தின் தந்தை மற்றும் எஸ்.வி.சேகருக்கு  நன்றியைக்கூறி வீடு திரும்பினேன்.
  
Photos: madrasbhavan.com
Location: vani mahal, Chennai - 17.
..............................................................

.............................
My other site:
.............................

.......................................................

சமீபத்தில் எழுதியது:

......................................................


10 comments:

CS. Mohan Kumar said...

அடடா முதல் ரோவில் பிரீயாகவே பாத்துட்டீங்களா? வட போச்சே !

நல்ல வேளை என் வைப் என் ப்ளாக் தவிர மற்றது படிப்பதில்லை (திரட்டிகள் பத்தியே தெரியாது..) நீங்க எழுதிருக்கிரதை படிச்சா..... :))

உணவு உலகம் said...

மிக அருமையான அனுபவ பகிர்வு. சுவையாகவும் இருந்தது.

உணவு உலகம் said...

அருமையான நாடகத்தை அருகிலிருந்து பார்க்க கொடுத்து(!) வைத்த புண்ணியவான்.

உணவு உலகம் said...

//தங்களின் லேட்டஸ்ட் நாடகம்
என்ன //
இப்படில்லாம் இரட்டை(அரசியல்) அர்த்த கேள்விகள் கேட்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, முதல் வரிசையில் இடம் கொடுதிருப்பார்னா நினைக்கீங்க!

நாய் நக்ஸ் said...

நல்லது...

Unknown said...

எஸ் வி சேகர் நாடகம் இன்னும் பார்க்கிறாங்க என்பது ஆச்சர்யம்தான்...

சென்னை பித்தன் said...

முதல் வரிசை! எதற்கும் கொடுப்பினை வேண்டும் சிவா!

Unknown said...

சின்ன வயசில் என்னிடம் இந்த நாடகத்தின் வசனம் அடங்கிய கேஸட் இருந்தது. பல நூறு முறை கேட்டு கேட்டு இந்த நாடகத்தின் அனைத்து வசனங்களும் எனக்கு அத்துப்படி.
நானும் இது நாள் வரை ஒரு நாடகத்தையும் முன் வரிசையில் இருந்து பார்த்ததில்லை. நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

Philosophy Prabhakaran said...

ஆமாம் ஹவுஸ்ஃபுல் ஆகும் என்று நான் கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை... ஆச்சர்யமான விஷயம் அது...

Philosophy Prabhakaran said...

// நம்மாளு சொன்னது போல அடுத்த சில நிமிடங்களில் கூல் ஆன எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த சம்மதித்து மீண்டும் உள்ளே வந்தார். பிரபாகரா எப்படி இப்படி? //

எல்லாம் அரசியல்... கொஞ்சம் பெரிய லெவலுக்கு போனதும் ஏறிவந்த ஏணிப்படிகளை எட்டி உதைப்பது சகஜமாகி விட்டது... இதைப்பற்றி சில வரிகள் எழுதலாமென்று நினைத்தேன், பிறகு நாடகத்தின் இறுதியில் எஸ்.வி.சேகர் சொன்ன சில நல்ல விஷயங்களை கேட்டபிறகு மனதை மாற்றிக்கொண்டேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...