CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, February 14, 2012

பாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி?                                                                       
"பிள்ளை விரும்பும் பாடத்தையே படிக்க விடுங்கள். ஆசைப்படும் தொழிலையே செய்ய அனுமதியுங்கள்" என்று சமீபகாலமாக திரைப்படங்களில் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.அது நடைமுறையில் எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது முக்கியமான கேள்வி.அதுவும் இந்தியக்கல்வி முறையை பின்பற்றிக்கொண்டு. "எஜுகேஷன் சிஸ்டத்த மாத்தியே தீரணும்" என்பதும் அடுத்து முன்வைக்கப்படும் வாதம். இதைக்கூட மிக மெதுவாகத்தான் சில அரசுகளும், பள்ளிகளும் செயல்படுத்த துவங்கி உள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் சென்றடைய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? 

முன்பொரு காலத்தில் பி.ஏ. படித்தவருக்கு கிடைத்த மரியாதையே தனி. தமிழ்ப்படங்களில் கூட "மாப்ள என்ன படிச்சிருக்கார்?" என்றால் "பி.ஏ." என்று பெருமிதம் பொங்க சொல்வார்கள் அந்தக்கால ஹீரோக்கள். அதற்கடுத்த கால கட்டத்தில் பி.காம் பட்டதாரிகள் ஒவ்வொரு தெருவிலும் கணிசமாக உலவி வந்தனர். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எல்லாம் எம்.சி.ஏ. ஜுரம் ஏகத்துக்கும் பற்றிக்கொண்டது. தன் பிள்ளை டாக்டர், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அரதப்பழசான வசனத்தை பேசி வந்த பெற்றோர் கூட திடீர் கோடீஸ்வரன் ஆக சிறந்த வழி இதுதான் என ஞான திருஷ்டியில் உணர்ந்து கணினி பயில பிள்ளைகளை கட்டாயப்படுத்தினர். கொஞ்ச காலம் கழித்து   கம்ப்யூட்டர் துறை ஓரிரு முறை பெருவீழ்ச்சி கண்டதும் எம்.சி.ஏ. சீட்டுகள் எல்லாம் கல்லூரிகளில் கற்று வாங்க ஆரம்பித்தன. 

மீண்டும் ஒரு செய்தி காற்று வாக்கில் பரவ ஆரம்பித்தது. அடுத்து உலகத்தை ஆட்சி செய்யப்போவது பயோ டெக்னாலஜி துறைதான் என்பதுதான் அது.  அதற்கான படையெடுப்பு துவங்கியது. பிறகு அந்த மோகமும் நீர்த்துப்போனது. இப்போது 'நானே ராஜா' என்று சொல்லிக்கொள்ள எந்தத்துறை சார்ந்த படிப்பும் இல்லாத சூழல். ஆச்சர்யமான விஷயம்தான். 

                                                                     
பத்தாம் வகுப்பு முடித்ததும் தன் பிள்ளை எந்தத்துறை சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என பணக்கார பெற்றோர்கள் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்துவிடுகின்றனர். அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்லவே. ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களுக்கும் பெரிய குழப்பங்கள் இல்லை. யாரேனும் உதவி செய்தால் அதை வைத்து குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க யோசிப்பார். இல்லாவிடில் வேலைக்கு அனுப்பி விடுவர். ஆனால் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் நிலைதான் அந்தோ பரிதாபம். மண்டையைக்குடைந்து முடிவு எடுப்பதற்கு முன்பே கல்லூரி அட்மிஷன்கள் முடிந்து விடுகின்றன. 

வெறும் டிகிரி இருந்தால் போதும். ஏதேனும் ஒரு வேலை நிச்சயம் என்று இன்னும் எத்தனை வருடங்கள் BPO முதலாளிகளை நம்பி பட்டதாரிகள் தம்  வாழ்வை தீர்மானிக்க முடியும்? ஏற்கனவே ஒபாமா அபாயச்சங்கு ஊதி வருகிறார். அப்படி ஒரு நிலைவந்து IT/BPO நிறுவனங்கள் ஷட்டரை மூட வேண்டிய நாள் வரலாம். அந்த நாளை கற்பனை கூட செய்ய இயலாது. இந்தியா இதுவரை காணாத வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்பது சர்வ நிச்சயம். பிறகென்ன? வீட்டுக்கொரு 'வறுமையின் நிறம் சிகப்பு' கமல் உருவாகும் நிலை வருவதை தவிர்க்கவே இயலாது.  

இந்த ஆபத்தை முன்பே உணர்ந்து அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குமா என்று எதிர்பார்த்தால் நம்ம பன்மோகன் நித்தம் ஒரு வெளிநாட்டில் போய்தான் இறங்குகிறார். இலவசங்களை அள்ளித்தெளிக்கும் எந்த மாநில அரசும் சராசரி இளைஞனுக்கு வேலை தருவதில் அக்கறை செலுத்துவதில்லை. தொடர் மின்வெட்டால் ஸ்தம்பித்து போய் உள்ளது தமிழகம். கணினி பூங்காக்களில் மட்டும் 24/7 கரண்ட் சப்ளை. ஆனால் கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் இடைவிடாத மின்வெட்டு. இப்படியே இன்னும் சில மாதங்கள் நிலைமை நீடித்தால் டெக்ஸ்டைல், பேஷன் டெக்னாலஜி போன்ற படிப்பை படிக்கும் சில மாணவர்கள் கூட சாப்ட்வேர் படித்து பிழைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.  

இம்மாதிரி நிர்வாக சீர்கேட்டால் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களையும் அறிந்தும், அறியாமலும் கணினி சார்ந்த படிப்பை தேர்ந்து எடுக்க வைக்கும் கட்டாயத்தை உருவாக்கி வருகின்றனர் ஆட்சியாளர்கள். இசை, விளையாட்டு, சைக்காலஜி போன்ற பல துறைகளில் இளைஞர்கள் மிளிரும் வாய்ப்பை ஆண்டுதோறும் குறைத்து கொண்டே வருவது கல்வித்துறையின் வீழ்ச்சியாகவே கருதப்படும். ஒருவேளை ஆட்டுமந்தை போல அல்லாமல் சிந்தித்து படித்து இளைஞர்கள் முன்னேறிவிட்டால் நம்மை எதிர்த்து கேள்விகள் கேட்டு, பிறகு ஆட்சிக்கு வரவும் வாய்ப்புண்டு என்பதால் மௌனம் சாதிக்கின்றனவா அரசுகள்? ஒரே கல்விசார் துறையில் வருமானம் கொட்டும் நிலையை சிறிதேனும் மாற்றியமைக்க எப்போது திட்டம் தீட்டப்போகின்றனர் இவர்கள்? 

அவர்கள் முடிவு எடுக்கும் வரை... 

"பாட்டு ஒண்ணு பாடு தம்பி... பசிய கொஞ்சம் மறந்திருப்போம்"
               


.......................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................


7 comments:

Unknown said...

மாப்ள நல்ல விழிப்புணர்வு பதிவு

Yoga.S. said...

சிந்திக்க வைக்கும் பதிவு!வெளிநாட்டுக் கொள்கையில் தான் தடுமாற்றம் என்றால்,உள்நாட்டிலும் கொள்கை வகுப்பதில் இந்திய அரசு பின் தங்கியே உள்ளது.சீனாக்காரன் கழுத்தைச் சுற்றி இறுக்குகிறான் என்றால் குய்யோ முறையோ என்று கத்துவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தித்து,தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வழி தேட வேண்டாமா?என்னமோ போங்க!அமேரிக்காவ நம்பி இன்னும் எத்தன காலமோ???????

நாய் நக்ஸ் said...

வணக்கம் சிவா...இன்னிக்கு..உங்க ஹோட்டல்-ல
பாவக்காய் சமையல் தானா...

அப்புறம் அந்த ஸ்டில் கேட்டேனே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல சிந்தனை சிவா. மக்களிடம் மாற்றம், ஆட்சியாளர்களிடம் மாற்றம் இரண்டும் நிகழ்ந்தால்தான் இது சாத்தியம்.

saidaiazeez.blogspot.in said...

கல்வியில் கவனமின்மை
விவசாயத்தில் அக்கரையின்மை
பொதுக்கட்டமைப்பு தேவையில்லாதது
மின்சாரம்... அடுத்த தேர்த்தலில் பார்த்துக்கொள்ளலாம்
வேலைவாய்ப்பு... அது அமெரிக்காவின் பிரச்சனை
தொழில்துறை... புரிந்துணர்வு கையொப்பமிட்டால் போதும்

உணவு உலகம் said...

பெற்றோர்,பிள்ளைகள்,ஆசிரியர்கள், நம் சமூகம் அனைத்திலும் மனமாற்றம் வரவேண்டும். வந்தால், அந்த நாள் பொன்னாள்தான், சிவா.

சிராஜ் said...

/* ஒரே கல்விசார் துறையில் வருமானம் கொட்டும் நிலையை சிறிதேனும் மாற்றியமைக்க எப்போது திட்டம் தீட்டப்போகின்றனர் இவர்கள்?

அவர்கள் முடிவு எடுக்கும் வரை...

"பாட்டு ஒண்ணு பாடு தம்பி... பசிய கொஞ்சம் மறந்திருப்போம்"*/

எனக்கு என்னவோ நாம் கடைசி வரை பாட்டு தான் கேட்டுக்கிட்டு இருப்போம்னு தோணுது.

Related Posts Plugin for WordPress, Blogger...