CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, January 30, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (30/01/12)


ஆட்ட நாயகன்:

                                                                                                                                             
பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யு.எஸ்.ஓப்பன் ஆகிய 3 கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றிருப்பினும் ஆஸ்திரேலியன் ஓப்பன் மட்டும் வசப்படவில்லை. அதையும் தற்போது வென்று சாதனை படைத்துள்ளார் நம் நாட்டு டென்னிஸ் ராஜா லியாண்டர். ஸ்டெபானுக்குடன் சேர்ந்து வலிமை மிக்க எதிரிகளான பைரன் ப்ரதர்ஸை 7-6, 6-2 எனும் செட் கணக்கில் வீழ்த்தி உள்ளார். 38 வயதில் இன்னும் அதே வேகத்துடன் பெயஸ் ஆடி வருவது ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்தான். அசத்து தலைவா!!
.......................................................................

காதல் கோட்டை: 
'உலக சினிமா பாக்கலாம் வா'ன்னு ரெண்டு ஜாம்பவான் பதிவர்கள் போன வாரம் என்னை கவ்விட்டு போனாங்க. ஒரு திகிலோடத்தான் போனேன்.  ஆனா ரொம்ப வித்யாசமான படைப்பு. ஹீரோவும், ஈரோயினும் 73 நிமிஷம் மொபைல்ல பேசிக்கிட்டே இருக்கறாங்க. போர் அடிக்கலை (எனக்கும்தான்). இப்ப தியேட்டர்ல இருந்து தூக்கிட்டாங்க. உலக சினிமா ரசிகர்கள் தவற விட வேண்டாம். ட்ரெயிலர்: Good Night. Good Morning 
.................................................................................
  
ரத்த சரித்திரம்:
ஆஸி டீம் கிட்ட செம மாத்து வாங்குன இந்திய கிரிக்கெட் அணியை நெனச்சாலே ஒரே தமாசுதான் போங்க. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஊடகங்களும் இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போறீங்க? இதுவரை ஆஸிக்கு சுற்றுலா போயி ஒரு டெஸ்ட் தொடரை கூட ஜெயிச்சதில்ல. இப்பவும் அதே கதைதான். சச்சின் 100 வது நூறை எப்படி அடிப்பாருன்னு பேன்ஸ் எதிர்பாக்க, மீடியா இதுதான் வாய்ப்புன்னு உங்களை உசுப்பேத்த, அவரு வழக்கம்போல சொதப்ப...கொடுமைடா சாமி. அணியாக ஆடுற ஆட்டத்துல போட்டியை எப்படி ஜெயிக்கணும்னு பாக்காம தனியாளு புராணம் பேசுனா இதுதான் கதி. எனக்கென்னவோ அந்த மனுஷன் 100 வது அட்டம்ப்ட்லதான் 100 வது நூறை அடிப்பாருன்னு தோணுது.
...................................................................................

அடுத்த வாரிசு:
சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் இம்முறை ஜெயித்தே தீர காங்கிரஸ் 'கை'ப்புள்ள ராகுல் காந்தி தீயா வேலை செய்யறார். அவருக்கும், காங்கிரஸ் தொண்டருக்கும் தேர்தலுக்கு பிந்தைய பேச்சு வார்த்தை இப்படி இருக்குமோ:
(வடிவேலு காமடி)

"அண்ணே..பேப்பர் படிங்கண்ணே "

"படிக்க தெரியாதுடா"

"சும்மா படமாச்சும் பாருண்ணே. டேய் அண்ணனுக்கு ஒரு ஹார்லிக்ஸ்"

"ஆகக்கா"

"நமக்கு கால் இல்லையா. நீயும் கால் மேல கால் போடுண்ணே"

சேற்றில் விழும் கைப்புள்ள சொல்லும் டயலாக்கு:
"கௌரவம் கௌரவம்னு சொல்லி என்னை நாறடிச்சிட்டியேடா. அம்மா. அம்மா. அம்மம்மம்மம்மா"
..................................................................................
  
காதலில் சொதப்புவது எப்படி?
காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. சித்தார்த், அமலா பால் நடித்து உள்ளனர். இவ்வருடம் யூத்கள் கொண்டாடும் பிலிமாக இருக்க வாய்ப்புண்டு என எண்ணுகிறேன். குறும்படமாக வந்து வெற்றி அடைந்த படைப்பு இப்போது திரைப்படமாக. சும்மா ஒரு ரொமாண்டிக் லுக் விடணுமா?

கிளிக் செய்க:
குறும்படம்
திரைப்பட ட்ரெயிலர்
.....................................................................................

மக்கள் ஆட்சி:
ஆளும் கட்சி செயல்பாடுகள் திருப்தி அளிக்காவிட்டால் அவர்களை திரும்ப பெரும்(!) ரீகால் உரிமை விரைவில் இந்திய மக்களுக்கு தரப்படுமென தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதுதானா உங்க டக்கு..இத எப்பயோ எங்க கேப்டன் தென்னவன்ல சொல்லிட்டாரு. இதனாலத்தான் அவர் பப்ளிக்ல தன் திட்டத்தை சொல்றதே இல்லை. காப்பியா அடிக்கறீங்க காப்பி. எட்றா வண்டிய..நிறுத்துங்கடா தென்னவன் -2 ஷூட்டிங்க!!
.....................................................................................

பாட்ஷா:
ஷேர் ஆட்டோ அண்ணாத்தைகள் சாதா ஆட்டோ பாட்ஷாக்களுக்கு வித விதமா ஆப்பு வக்கிறாங்கப்பா. சென்ற ஞாயிறு ஸ்கைவாக் மால் வழியே நான்  ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தேன்.  ஓட்டுனர் அங்கு நின்றிருந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி(ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்) மாணவர்களிடம் "ரெகுலர் ரேட் பேசிக்கலாம்" என்றார். தமிழ் தெரியாத அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்க "400 ரூவா கேக்கறார்" என்றேன். "வாட். 400 ருபீஸ்? நார்மல் ஆட்டோவாலா ஆல்சோ ஆஸ்கிங் தி சேம் ரேட்" என்று கொந்தளித்து ஓடிவிட்டார்கள்.  உள்வாடகை விடுற வித்தை அருமை ஷேர் ஆட்டோ அண்ணே!
...............................................................................

பட்டத்து ராணி:
இன்னும் சளைக்காமல் மந்திரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார் மேடம் . நேற்று கூட புதிதாக பதவி ஏற்ற மந்திரி நாற்காலியில் அவசரமாய் அமரப்போய் ஆர்வக்கோளாறில் இன்னொரு நபரின் மடியில் குந்திக்கொண்டாராம். மடிதாங்கி நபர் சொன்னாராம் "உங்களை மேடம் தூக்கி ரெண்டு நிமிஷம் ஆகுது. நான் தூக்க ஒரு நிமிஷம்தான் இருக்கு. என் தொடை என்ன ரம்பா தொடையா? இன்ஸ்யூர் எல்லாம் பண்ணி வக்க? எந்திரிங்க பாஸ்"
...............................................................................

தேன் மழை: 
மனைவி அதிக சம்பளம் வாங்குவதைக்கண்டு கணவன் தாழ்வு மனப்பான்மை கொண்டு இருக்கையில் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடிய பாடல். அருமையான வரிகள்: 
........................................................................................................


.........................
My other site:
agsivakumar.com
..........................

.................................................................

சமீபத்தில் எழுதியது:

ஹ்ரித்திக் ரோஷன் நடித்த அக்னிபத் 2012 

அமிதாப் நடித்த அக்னிபத் 1990 

மோகன் லால் நடித்த கான்பிடன்ட் காசனோவா
..................................................................Thursday, January 26, 2012

இவரும் மலையாளிதான்......                                                                       
மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்...நம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். பலருக்கு 'மிலிட்டரி ஆளு போல இருக்கு. ஆனா பேரு தெரியலியே'. தாஜ் ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மக்களை காப்பாற்ற தன் உயிரை ஈந்த இளைஞன். 31 வயதிலேயே காலம் இவரை அழைத்து சென்று விட்டது. பெற்றோருக்கு ஒரே மகன். பிறந்த இடம் கோழிக்கோடு. நம்மைப்போல் சந்தோஷமாக கல்லூரி வாழ்வை அனுபவித்தோமா, இளம்பெண்களை சைட் அடித்தோமா, வேலைக்கு சென்று வாழ்வில் செட்டில் ஆனோமா என என்னும் சராசரி இளைஞன் அல்ல. ராணுவத்தில் சேர்ந்து தேசப்பணியாற்ற வேண்டுமென்பது இவருடைய பால்ய வயதிலேயே மனதில் ஆழமாக ஊன்றிய எண்ணம். 31 வயதில் இறக்கும் இறுதி நொடிவரை தேசத்திற்காக செலவிட்ட மணித்துளிகளே மிக அதிகம்.  26/11 மும்பை சம்பவத்தன்று அப்படி என்ன செய்தார் இவர்? ஒரு முறை திரும்பி பார்ப்போம். 
  
                               அரிதாக 'நம் சகோதரர்'  சந்தீப் மகிழ்ந்த நிமிடங்கள்...         
                                 
தாஜில் ஊடுருவி இருந்த பாகிஸ்தான் தீவிரவாத பன்னாடைகளை வீழ்த்த நடந்த போராட்டத்தில் தனது அணியுடன் திட்டம் வகுத்தவாறு முன்னேறி கொண்டு இருந்தார். எதிர்முனையில் இருந்து கடும் துப்பாக்கி சத்தத்துடன் அந்த ராட்சசர்கள் ஆட்டம் போட, அதிலொரு குண்டு இவருடன் இருந்த வீரரை பதம் பார்த்தது. அவரை பத்திரமாக அனுப்பிவிட்டு, மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டார் சந்தீப்.பொதுவாகவே இம்மாதிரி ஆபரேஷன்களில் அனைவருக்கும் முன்பாக சென்று உயிரை பணயம் வைத்து சண்டை போடுவது இவரது இயல்பு. இம்முறையும் அதையேதான் செய்தார். தனது இரு ராணுவ நண்பர்களை நோக்கி எதிரிகள் சுடுவதை கண்டு அவர்களை காப்பாற்ற அந்த தோட்டாக்களை தன் முதுகில் படுமாறு பார்த்துக்கொண்டார். அடுத்த சில நொடிகளில் மரணத்தை தழுவினார் சந்தீப். 

அந்த சண்டையின்போது இந்த எண்ணம் மட்டும் அவர் மனதில் எழவே இல்லை:

"தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் பிடியில் இருப்பவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? அப்படி எவரேனும் இருப்பின், அவர்களை தவிர்த்து விட்டு மற்ற ஆட்களை மட்டும் காப்பாற்ற வேண்டும். அப்பதான் தமிழன்களுக்கு புத்தி வரும். சாவட்டும்".

சில நாட்களுக்கு முன் சென்னை எழிலக கட்டிட தீ விபத்தில் உயிரை இழந்த வீரர் அன்பழகன் கூட 'உள்ள மலையாளி இருந்தா காப்பாத்த மாட்டேன். தண்ணி விஷயத்துல நம்ம உசுர வாங்கற பயலுக' என்று நிபந்தனை போட்டு விட்டு களத்தில் இறங்கவில்லை. இப்படி இவர்களைப்போல ஒவ்வொரு ராணுவவீரனும், போலீஸ் அதிகாரிகளும் தனக்கு பிடிக்காத மாநிலம், இனம், மொழி, ஜாதி, மதத்தை சேர்ந்தவன் என்று தரம் பிரித்து இந்திய மக்களை காப்பாற்ற ஆரம்பித்தால்...நம்மில் பலர் இப்படி பேசிக்கொண்டு இருக்க மாட்டோம்:

"அந்த மலையாளி/பாண்டி நாயிங்களை செருப்பால அடிக்கணும். இனிமே எந்த மலையாள/தமிழ் பயலுக கிட்டயும் பேச்சே கிடையாது. $%$****". 

                                   ஒரே மகனை இழந்த சோகத்தில் சந்தீப்பின் தாயார் 

எனவே இனியேனும் முல்லைப்பெரியாறு போன்ற பிரச்னைகள் நடக்கையில் சற்று நிதானத்துடன் வார்த்தைகளை வெளியிட கேட்டுக்கொள்கிறேன். தமிழக பெண்களை அவமானப்படுத்திய பொறுக்கிகளையும், பிடிவாதம் பிடிக்கும் கேரளா அரசையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை.ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தோரை ஒருமையில் நாகரீகமின்றி பேசுவதில் என்ன பயன்? எரியும் நெருப்பில் மேலும் பெட்ரோலை ஊற்றி என்ன சாதிக்க போகிறீர்கள்? இதைப்படித்து சேட்டன்கள் வெறியாகி அங்குள்ள தமிழர்களை இன்னும் தீவிரமாக தாக்குவார்கள். அண்மையில் குடிக்க தண்ணீர் கேட்ட தமிழக ஐயப்பன் பக்தர் மீது வெந்நீர் ஊற்றி கொன்றார் ஒரு மலையாளி. முதலில் இந்நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். நாமும் நாகரீகம் இன்றி எல்லை மீறிய அசிங்கமான வார்த்தைகள் உபயோகித்து கொண்டே இருந்தால் அங்கே இன்னும் ஒரு தமிழன் தாக்கப்படுவது உறுதி. அவர்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தர நம்மால் இயலாதபோது இப்படி கொச்சையாக எழுதுவது எவ்வகையில் நியாயம்?  கூடுமானவரை கண்ணியம் காப்போம். மொத்தமாக 'மலையாள நாய்கள், பேய்கள்' என்று வர்ணிப்பதை குறைப்போம்(!).இது அவர்களுக்கும் சேர்த்துதான்.  

எந்த தமிழன்/மலையாளியிடமும் இனி பேச மாட்டோம். அவர்கள் தயாரித்த பொருட்களை தொட மாட்டோம். எமது சந்ததிகளுக்கும் அதையே போதிப்போம். மலையாளி/ தமிழர்/மலையாளி ஆசிரியராக இருக்கும் பள்ளிகளில் எமது பிள்ளைகள் படிக்க கூடாது என்று இருதரப்பும் முடிவெடுக்க முடியுமா? அட போங்க பாஸ். இப்போது இதை நீங்கள் படித்து கொண்டு இருக்கும்போதே ஒரு மலையாளி - தமிழ் ஜோடி 'ஐ லவ் யூ' சொல்லிக்கொண்டு இருக்கலாம்.  

'நான் இந்தியன் இல்ல. தமிழன்டா' என்று அடிக்கடி ஆவேசப்படும் தோழர்களே. அதற்கு முன் இந்திய எல்லையில் அனைவரது உயிரையும் காக்க எந்த பேதமும் இன்றி தேசத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்களையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். காங்கிரஸ் அரசின் செய்கைகள் பிடிக்கவில்லை எனில் அவர்களை விளாசலாம். அதற்காக தமிழ்நாட்டை பிரித்து பேசி என்ன பயன்? அதுதான் சிலருக்கு விருப்பமெனில் முப்படை தளபதிகளிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வாருங்கள்: 

"நீங்க எல்லாம் வீட்டை பாக்க போங்க. நாங்க பாத்துக்கறோம்" 

போங்கய்யா நீங்களும் உங்க பிரிவினைவாதமும்.   
.................................................................................................................

மேஜர் சந்தீப்...நினைவலைகள்.....
.....................................................................................

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!

.............................
My other site:
...........................


Tuesday, January 17, 2012

நண்பன்

                                                                             
                                                                  மதன் கார்க்கி                                                   
                                                             

நண்பனுக்கு பேனா தூக்கிய மதன் கார்க்கி, ஷங்கர் இருவருக்கும் முதலில் ஒரு ஸ்பெஷல் கைகுலுக்கல். பெரும்பாலும் வசனங்கள் மிகச்சிறப்பு. குறைகளை இறுதியில் காண்போம்.த்ரீ இடியட்சை ஏற்கனவே பார்த்துவிட்டதாலும், அதற்கு முன் சேத்தன் பகத்தின் Five Point Some One புத்தகத்தை படித்ததாலும் நண்பன் போகும் எண்ணம் முதலில் இல்லை. விமர்சனங்கள் வரட்டும். பிறகு முடிவெடுப்போம் என காத்திருந்தேன். ஏகோபித்த பாராட்டுக்களை நண்பன் பெற ஆரம்பித்ததால் படம் பார்த்தேன். 3 இடியட்சுடன் கம்பேர் செய்து பார்த்தால் எப்படி இருந்தது  நண்பன்?

இந்த வயதில் அமீர்கான் கல்லூரி மாணவனா? திரையில் எப்படி சாத்தியம் என்றெண்ணி பார்த்தபோது ஆளு அநியாயத்திற்கு யூத்தாக வந்தார். விஜய் PG படிக்கும் மாணவன் போல. துள்ளல் மிஸ்ஸிங். ஆனால் நம்மூர் மாஸ் ஹீரோக்களுக்கே இருக்கும் வீம்பை கடாசி விட்டு அருமையாக பெர்பார்ம் செய்துள்ளார். மல்டி ஹீரோ சப்ஜெக்ட் செய்வது பெரிதல்ல. அதில் தன் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்துவதே முக்கியம். காதலுக்கு மரியாதை, பிரியமானவளே போன்ற படங்களில் இயல்பாக நடித்து வெற்றிக்கொடி கட்டிய விஜய் இதிலும் அசத்தியது ஆச்சர்யமில்லைதான். சில வருடங்கள் அதிரடி ரூட்டில் பெரும்பயணம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் இதுமாதிரி ரோலை ஏற்றது மகிழ்ச்சியை தருகிறது. 

       
மாதவன், ஷர்மானை விட தமிழில் ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பு பலமடங்கு மேல். குறிப்பாக தந்தையிடம் ஸ்ரீகாந்த் உருகிப்பேசும் காட்சி, ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவில் அமைதியாக பேசுவது....கலக்கறீங்கப்பா!! ஹிந்தியில் ஓம் வைத்யா செய்ததைவிட சத்யன் இங்கு தூள் பரத்தி இருக்கிறார். அவருடைய கேரியரில் முக்கியமான திருப்புமுனை. ஆனால் ஒரு நிறுவனத்தின் வைஸ்  பிரெசிடன்ட் ஆன பிறகும் அசட்டுத்தனமாக பேசும் சீன்கள் கொடுமை. 

சத்யராஜும் போமன் இராணியை விட நன்றாக நடித்து இருக்கிறார். சத்யராஜுக்கான அடுத்த அருமையான இன்னிங்க்ஸ் ஆரம்பம். இலியானா நடிப்பு ஸ்வீட். கொஞ்சம் வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார் எஸ்.ஜே. சூர்யா. துணைநடிகர்கள் கூட நடிப்பில் பெரிதாக குறைவைக்கவில்லை. 
                                                            
மனோஜின் ஒளிப்பதிவு மீண்டும் ஒரு முறை படம் பார்க்க தூண்டுகிறது. ஹாரிஸ் மேஜிக் இல்லாவிடினும் இரைச்சல் இல்லை. 'நண்பன் போல' 'ஆல் இஸ் வெல்' இரண்டும் இனிமை.டூயட் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம்...ஷங்கர் உங்க ரசனையா? நம்ப கஷ்டமாக உள்ளது. ரஹ்மான் இசை அமைத்து இருந்தால் இன்னும் அமர்க்களப்பட்டிருக்கும் பாடல்கள்.  ஆரம்பித்த 15 - வது நிமிடத்திலேயே நம்மை அண்ணாந்து கொட்டாவி விட வைத்து தியேட்டரின் கூரையை கிழிக்க வைக்கும் சீன்கள் இருக்கும் காலத்தில், மூன்று மணிநேரம் சோர்வின்றி ஆர்வமாக பார்க்க வைத்த எடிட்டர் ஆண்டனிக்கு ஹாட்ஸ் ஆப். 

                                                                 
குறைகள் என்று சொல்லப்போனால் சிலவற்றை பட்டியலிடலாம். பாரிவேந்தன், முனியம்மா போன்ற பெயர்களை கிண்டல் செய்வது எதுக்கு ஷங்கர்? அதுபோல சொட்டைத்தலை, தடிமனான கண்ணாடி போட்டவர்களை ஒரு காட்சியிலும், ஜீவாவின் அக்காவை சில சீன்களிலும் எள்ளி நகையாடுவது....எப்படி ரசிக்க சொல்கிறீர்கள்? கருப்பான, அழகில்லாத(உங்கள் வெகுஜன பாஷையில்) பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? நகைச்சுவை என்றாலும் நாகரீகம் வேண்டாமா? தங்கள் வீட்டிலிருப்போரின் நிறத்தையும் மனதில் கொண்டுதான் இக்காட்சியை அமைத்தீர்களா? 

                                                                     
அங்கவை, சங்கவை, முனியம்மா போன்றோரின் நிறம் கருப்பென்றால் மட்டும் ஏளனம் செய்து தாளிப்பீர்கள். அதே நிறத்தில் உள்ள ரஜினி 'சிவாஜி' படத்தில் வரும்போது மட்டும் விவேக்கை விட்டு "டேய்..யார சொன்ன? எங்க ஆள கருப்புன்னா சொன்ன? மேகம் கருப்பு. காமராஜ் கூட கருப்பு" போன்ற வசனங்களை பேச வைத்து கைத்தட்டலை அள்ளுகிறீர்கள். இல்லாதவன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமாக தெரிகிறான் போல. 

கேட்டால் மக்கள் பேசுவதை படத்தில் வைத்தேன் என்று கோடம்பாக்கத்தின் மொக்கை பஞ்ச்சை பேசுவீர்கள். அது யதார்த்தமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இதுபோன்ற வசனங்கள் நேற்று முளைத்த புதிய இயக்குனர் படங்கள் முதல் உங்களைப்போன்ற உலக இயக்குனர்கள் படங்கள் வரை தொடர்ந்து எழுதப்பட்டு வருவது சலிப்பை தருகின்றன. அதற்காகவாவது இவற்றை தவிர்க்கலாம்.

பொதுவாக ஒரிஜினலை ரீமிக்ஸ் மிஞ்சுவது கடினம். அமீர்கானின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் விஜய்யை  விட ஒரு படி மேல் என்றால், விஜய்யின் நகைச்சுவை உணர்வு அமீர்கானை விஞ்சி நிற்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் தமது நடிப்பின் மூலம் த்ரீ இடியட்சை  விட நண்பன்தான் பெஸ்ட் என நிரூபித்து விட்டார்கள். இது போன்ற படங்களை எடுத்தால் நம்மூர் மக்கள் பார்க்க மாட்டார்கள். ஏனோ தானோ கமர்சியல் மசாலா போட்டு கல்லா கட்டிட்டு போகலாம் என்று என்னும் படைப்பாளிகளே..கொஞ்சம் மாத்தி யோசிங்க.

நண்பன் (விஜய்)  -  I AM BACK 
........................................................................................

விஜய்யை இடைவிடாமல் கண்டமேனிக்கு ரவுசு விட்ட ப்ரின்ஸ்கள் (ஆந்திர பிரின்ஸ் அல்ல) இப்போது அவசியம் சாப்பிட வேண்டியது எது? காணொளியில் காண்க:                                                           காணொளி காண இயலாதவர்களுக்கு........  
                                                                   


...............................................

..............................
My other site:
.............................

...............................................

புதிய பதிவுகள்:

சென்னை புத்தக கண்கொள்ளாக்காட்சி - 2

மகேஷ் பாபு நடித்த 'பிசினெஸ்மேன்' - விமர்சனம்
....................................................................
                                                                                                      Sunday, January 15, 2012

மேதை                                           ஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் 

சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு பொன்னர் சங்கர் படத்திற்கு அழைத்து சென்று சிக்க வைத்தோம். அது போலொரு பரவச நிலைக்கு அவரை மீண்டும் கொண்டு செல்ல நேற்றொரு வாய்ப்பு கிடைத்தது. சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த அவரை நானும், பிரபாகரனும் மேதை படத்திற்கு வருமாறு கெஞ்சல்,மிரட்டல், விரட்டல் என அனைத்தையும் முயன்று பார்த்தும் முடியவில்லை. சிதறி ஓடி விட்டார். அஞ்சாசிங்கம் ஞாயிறு முழுக்க நேரம் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றார். மேதை என்றோம். கண்டிப்பா போவோம் என்று குஷியாக கூறினார். தி. நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு விஜயம் செய்தோம் மூவரும். வாசலில் பட்டாசு, அதிர வைக்கும் பேனர்கள் என பட்டையை கிளப்பினர். ஏரியா ஆளும்கட்சி நபர் கார் ஒன்று வந்து இறங்கியது.  சைலண்ட்டா படம் பாருங்க. கட்சி ஆளுங்க கஞ்சி காச்சிட போறாங்க. ரவுசு வேண்டாம் என்று சிங்கத்தையும், தத்துவத்தையும் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. என்னா ரவுசு!!

கடலூர் மாவட்டத்தின் நல்லாசிரியர் நம்ம ஹீரோ. குழந்தை தொழிலாளிகளை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் வில்லன். அவனை எப்படி திருத்துகிறார் என்பதே கதை. ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஆஸ்கர் வாயிற்கதவை ஓங்கி தட்டுவதோடு மட்டுமின்றி, உடைத்து நொறுக்கும் என்பதில் ஐயமில்லை. 

தலைவரின் காஸ்ட்யூம்:
அண்ணனின் கலர் சட்டைகளை கிண்டல் செய்வதையே குலத்தொழிலாக கொண்ட ரசிகர்களுக்கு செம ஆப்பு வைத்துள்ளார் நம்ம ஆளு. முதல் பாதியில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி மட்டும்தான். (ஏ)மாற்று சினிமா?. ஒரே ஒரு பாடலில் மட்டும் தீவிர ரசிகனை திருப்திப்படுத்த ரோஸ், ராமர் ப்ளூ போன்ற சட்டைகளை போட்டு சேட்டை செய்கிறார். மற்றபடி படம் நெடுக       தன்னால் போட முடியாத கலர் ஆடைகளை நாயகிகள், மாணவ மாணவிகளுக்கு போட்டுவிட்டு நம்மை போட்டு தள்ளுகிறது மேதை டீம். அவர்கள் எல்லாம் சிகப்பு, அடர் சிகப்பு, கிளிப்பச்சை கலர்களில் உடை அணிந்து நம் அடி வயிற்றில் இருந்து ஓலத்தை எழுப்பி விடுகிறார்கள். 

                          ஷங்கர், லிங்கு...என் ஆட்டமும், உங்க ஓட்டமும் ஆரம்பம்!

மேலே இருக்கும் ஸ்டில் வருகிற பாடலில் கருப்பு, வெள்ளை உடைகளில் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு எம்மை கொண்டே போட்டார். திருமணம் முடிந்த மறுநாள் தன் மனைவியிடம் 'ஊருக்காக வெள்ளை வேட்டி சட்டை போட்டேன். இப்ப உனக்காக வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் போடறேன்' என்று சொல்லும் காட்சிதான் இரண்டாம் பாதியின் திருப்பு முனை. க்ளைமாக்ஸ் வரை அதே காஸ்ட்யூம்தான். 

அதிநவீன காட்சிகள்:
* ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கி அண்ணன் வருகையில் கேமரா பறந்து விரிகிறது. இரண்டு அடியாட்கள் நெஞ்சில் காலை வைத்து அந்தரத்தில் சில நொடிகள் அப்படியே நிற்கிறார். இதை கிராபிக்ஸ் என்று சொல்லும் நயவஞ்சகர்களை வன்மையாக கண்டிக்க தயங்கமாட்டேன். பீ கேர்புல். ப்ளாஸ்டிக் கேன்கள், தகர ட்ரம்கள், அட்டைப்பெட்டி என லேட்ட்டஸ்ட் பொருட்கள் மீது வில்லன்கள் அடிவாங்கி விழுவது....கைய குடுங்க ஸ்டண்ட் மாஸ்டர்!!

* 'கிழக்கு திசை நோக்கி கேளுங்கடா...மேற்கு திசை நோக்கி வணங்குங்கடா' பாடலை கேட்டும் திருந்தாவிட்டால் அவன் தமிழனே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இலக்கிய, (சேப்டி) பின் நவீனத்துவ வரிகள் சுழற்றி அடிப்பது புதுமையிலும் புதுமை.
                                              
                                            வரலாற்று பெட்டகம்..ஒரு பார்வை 

 * வசனங்கள் டக்கரோ டக்கர். கோவிலில் காதல் செய்யும் ஜோடியை பார்த்து தலை சொல்லும் வசனம்: "படிக்கட்ல ஸ்லிப் ஆனா பரவா இல்ல. படிப்புல ஸ்லிப் ஆகிடாதீங்க". தன் நலவிரும்பிகளிடம்: "நம்மை எதிர்த்தவன் தோக்கும்போதுதான் ஜாக்ரதையா இருக்கணும்", வில்லனிடம் "உன் உடன்பிறப்பு என் கஸ்டடில"  (தி.மு.க.விற்கு எச்சரிக்கை).    

* செகண்ட் ஹீரோயின் மனநிலை சரியில்லாமல் இருக்கையில் செகண்ட் ஹீரோ "இங்க பாரும்மா. நான் வந்துருக்கேன்" என்று சொல்லும்போது அவருக்கு சட்டென நினைவு திரும்புதல், வில்லனை இறுதியில் கொல்ல ஊரார் முடிவு செய்கையில் அவரை மன்னிக்க ராமராஜன் சொல்லுதல் இப்படி பற்பல பற்பல பலப்பல காட்சிகள் படத்திற்கு பக்கா பலம்.

* லொக்கேஷன்கள் எல்லாம்.......வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். 

*இரண்டு நாயகிகளும்(அண்ணனுக்கு ஒருவர்தான்) காட்டும் முகபாவம்...நம்மை தியேட்டரில் சொக்கி விக்கி விழ வைக்கிறது. 

                         இடைவேளையில் தப்பித்து ஓட இயலாமல் சிக்கியவர்கள்           
         
கிருஷ்ணவேணி தியேட்டரில் பல ஆண்டுகள் கழித்து படம் பார்த்தேன். அஞ்சாசிங்கம் அருகில் இருந்த நபர் மொக்கை ஜோக்குக்கு எல்லாம் வாய்விட்டு சிரிக்க, பிலாசபி அருகில் இருந்த ஒருவரோ அடிக்கடி கைதட்டிக்கொண்டே இருந்தார். நல்லவேளை நடுவில் இருந்ததால் நான் பிழைத்தேன். ஆனால் இடைவேளைக்கு பின் சீட் மாற்றி அமர வைத்து எனக்கு ஆப்படித்தனர் இருவரும். எம்.ஜி.ஆர். படத்தை ராமராஜன் வீட்டு சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் காட்சி வரும்போதெல்லாம் தியேட்டரில் பிகில். இதுபோக அண்ணா, வள்ளலார், காமராஜ் என ஏகப்பட்ட தலைவர்களின் படத்தை அடிக்கடி காட்டுகின்றனர். புதுமையை புகுத்தலாம். அதுக்காக இப்படியா? நம்ம நெஞ்சை கிழிச்சி அதுல தலைவர் ராமராஜன் ஸ்டில்லை  ஆணியில் அடித்து தொங்கவிட்டும், மூளையில் இலக்கிய ரசனை பொங்கும்  வசனங்களை சொருகியும்....ஆத்தாடி...ஆத்தா!!

மேதை - ராம ராஜ்யம்லே!! 
...................................................................

பொங்கல் பரிசு:  
பாடலை முழுதாக கேளுங்கள். பரவச நிலையை அடையுங்கள். பொங்கல் நல்வாழ்த்துகள்:  வானிலை எச்சரிக்கை:  
இரண்டாம் ஸ்டில்லை தவிர மற்ற அனைத்தும் எனது மொபைல் மூலம் தியேட்டரில் எடுத்தது. அடுத்த சில பதிவுகளில் கிருஷ்ணவேணி தியேட்டரில் எடுத்த அதிரவைக்கும் படங்கள் மற்றும் வியக்க வைத்த நிகழ்வுகள். உங்களுக்கென்றே தயாராகி வருகிறது 'மேதை சிறப்பு மலர்'. யாரும் தப்ப முடியாது!!
..........................................................................................

..............................
My other site:
agsivakumar.com
..............................

....................................................
சமீபத்தில் எழுதியது:

மகேஷ்பாபு நடித்த பிசினெஸ்மேன் - விமர்சனம்

சென்னை புத்தக கண்கொள்ளா காட்சி - 2

சென்னை புத்தக கண்காட்சி -2012  
....................................................Saturday, January 14, 2012

வேட்டைதிருப்தியாக ஒரு கமர்சியல் படத்தை தர திருப்பதி பிரதர்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளனர்  தூத்துக்குடி பிரதர்ஸ்  மாதவன்,ஆர்யா மற்றும் சிஸ்டர்ஸ் சமீரா, அமலா. யுவன்,நா.முத்துகுமார் இணையால் மட்டுமே 'பையா' வில் தப்பிப்பிழைத்த லிங்கு, இம்முறை வேட்டையில் அவர்கள் இருவரிடமும்  வேலை வாங்குவதில் கோட்டை விட்டுவிட்டார். மாதவன், ஆர்யா இருவரும் எனக்குப்பிடித்த க்யூட் ராஸ்கல்ஸ் என்பதால் வேறெதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் பார்க்க முடிவு செய்தேன். எப்படி இருந்தது வேட்டை?

கமர்சியல் படங்கள் என்றாலும் கூட லாஜிக்கே சுத்தமாக இல்லாமல் இருந்தால் எப்படி என்று கேட்டால் ''சும்மா ஜாலியா பாரு மேன். மசாலா படம் தானே'' என்று நண்பர்கள் அட்வைஸ் செய்து வருவதால், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு பார்க்க வேண்டி இருப்பினும், "அதெல்லாம் பத்தாது. இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" என்று  லிங்கு போன்ற இயக்குனர்கள் சொன்னால்..கொஞ்சம் கஷ்டம்தான். ஆர்யா, மாதவன் அண்ணன் தம்பியாக செம கெமிஸ்ட்ரி உடன் கலக்குகிறார்கள். ஆர்யாவை விட மாதவனுக்குதான் நடிக்க வாய்ப்பு அதிகம். பயந்த போலீசாக முதல் பாதியிலும், வெகுண்டெழும் போலீசாக அடுத்த பாதியிலும் அசால்ட் செய்கிறார். 

சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது. ஆனால் இந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி உள்ளார். அமலா பால் ஓவராக நச்சரிக்காமல் அழகாக வந்து போகிறார். மேக் அப் மேனுக்கு என்ன வெறியோ? மேடம் முகத்தில் பவுடர் மற்றும் லிப்ஸ்டிக்கை அதிகமாகவே பூசி பழி வாங்கி இருக்கிறார். தம்பி ராமையா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு வில்லன்களும் டம்மி பீசாக வலம் வந்து வழக்கம் போல் தமிழ் சினிமா ரூல்ஸை மீறாமல் ஆர்யா, மாதவனிடம் அடி வாங்குகிறார்கள். நாசர் வந்தார். போனார். 

பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பப்ப பப்பா பாடலை ஹிட் ஆக்க ரிலீசுக்கு முன்பே அரும்பாடு பட்டாலும் தியேட்டரில் எடுபடவில்லை. க்ரூப்பாக சிலர் காத்து வாங்க எஸ்கேப் ஆயினர். பாடல் காட்சிகளும் சுமாராகத்தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன. 'இந்த கதைக்கு இது போதும்' என்று நீரவ் ஷாவின் கேமரா முடிவு செய்துவிட்டது நன்றாக தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் நீரவ் ட்ரேட்மார்க். 

                                                                           
சமீராவின் ஸ்கூட்டியை ஆர்யா தள்ளிவிடும் காட்சியில் ஒருவரை பார்த்து 'போய்யா சொட்டை' என சமீரா சொல்கிறார்? ஏன் மிஸ்டர் லிங்கு? உங்க தலை கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. அதையும் மனதில் கொண்டு இம்மாதிரி கிண்டல் வசனங்களை தவிர்க்கலாம். அளவுக்கு மீறிய சண்டைக்காட்சிகள் சற்று பொறுமையை சோதிக்கின்றன. அமெரிக்க மாப்பிளை என ஒருவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். அம்மாதிரி கேரக்டர் எல்லாருமே 'டுபுக்கு' இங்கிலீஷில் பேசிக்கொண்டு, கையில் ஒரு கோக் பாட்டிலுடன் இருப்பது போல் காட்டுவது சகிக்கவில்லை. இதெல்லாம் புளிச்சி போன பழங்கால மேட்டர் பாஸ். அமெரிக்க மாப்பிள்ளைகளை விட உள்ளூரில் உடான்ஸ் விடும் பீட்டர்கள் தொல்லைதான் ஜாஸ்தி. அது தெரிந்துதான் இந்த கேரக்டரை வைத்தீர்களா? இல்லை நாங்கள் 'கெக்கே பிக்கே' சிரிப்போம் என்கிற அசாத்திய அசட்டு நம்பிக்கையா? திருப்பதி பாலாஜிக்கே வெளிச்சம். 

கதை, திரைக்கதை என்று ஏதோ சொல்வார்களே அதற்கெல்லாம் கூல்ட்ரிங்க்ஸ் தந்து ஓரமாக உட்கார வைத்துள்ளனர். கோ, சிங்கம் போன்ற படங்களின் இயக்குனர்கள் மக்களின் பல்ஸை சரியாக புரிந்து கொண்டு சிக்சர் அடித்ததுபோல் என்னால் முடியாது. குறைந்த பட்சம் ஒரே பந்தில் பவுண்டரியாக விளாசாமல் ஓடி ஓடி எடுக்கிறேன் என்று மட்டும் நிரூபித்துள்ளார் லிங்கு. தட்டுத்தடுமாறி போர் அடிக்கவிடாமல் படத்தை ஒருவழியாக முடித்திருக்கின்றனர்.  நண்பனின் புயல் வேக வசூல் வேட்டைக்கு முன்பு இந்த வேட்டை அணி அதிகமாக சிரமப்பட்டே கரையேற வேண்டி இருக்கும் என தெரிகிறது. நாளை தலைவர் ராமராஜனின் மேதை வேறு ரிலீஸ் ஆகிறது...வேட்டைக்காரர்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். 

வேட்டை - ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்!!

 ....................................................................


..............................
My other site:
...............................


 
                                                                        

Monday, January 9, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (09/01/12)வாகை சூட வா:

                                                                                                                                                       
சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு கடந்த சில வருடங்களாக செல்ல ஆசைப்பட்டும், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்காததால் நுங்கம்பாக்கம் செல்வதை தவிர்த்து வந்தேன். முன்பொரு முறை தற்போதைய மெகா ஸ்டார் ரபேல் நடால் சென்னையில் மையம் கொண்டபோது அரங்கத்தில் அமர்ந்தேன். இவ்வாண்டு நம்நாட்டு சோம்தேவ் மற்றும் பல வெளிநாட்டு ஸ்டார்கள் இல்லாததால் களையிழந்து போனது இப்போட்டி.பெயஸ்,பூபதியும்  இரட்டையர் போட்டியில் கலந்தாடவில்லை. வேறொரு வெள்ளைக்காரருடன் சோடி போட்டுக்கொண்டனர். அதனால் போக மனமில்லை.

மிலோஸ் ரோனிக் எனும் 21 வயது கனடா புயல் அரை இறுதியில் 17 ஏஸ்களை போட்டு அசத்தியதை செய்தியில் கேட்டேன். அவர் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் 35 ஏஸ்களை போட்டு 7-6 6-7 7-6 எனும் செட்கணக்கில் கடுமையாக மோதி டிப்சாரேவிக்கை(செர்பியா) வீழ்த்தி உள்ளார். அருமையான ஆட்டத்தை நேரில் பார்க்க தவற விட்டு விட்டேன். இனி வரும் ஆண்டுகளில் எத்தனை பெரிய ஸ்டார் ப்ளேயர்கள் வந்தாலும் இப்படி ஒரு அனல் பறக்கும் இறுதி ஆட்டத்தை சென்னையில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.  
.........................................................................

லாடம்
மேடமை நக்கீரன் 'ஓவராக' தாக்கியதால் மேடமாட்கள் நக்கீரன் மீது பவுன்சர்களை வீசியது கண்டு 'ஏன்தான் இப்படி செய்யறாங்களோ' என்று உ.த. அண்ணனும், கம்பிவடப்பதிவரும் பீல் பண்ணலாம். நீங்க அடிக்கடி ஆத்தா, மம்மின்னு விளிக்கரத கொஞ்சம் கம்மி பண்ணிக்கங்க. அப்பறம் டூமாங்கொலி சைஸ் போண்டாவை எட்டுத்திக்கிலும் இருந்து எறிஞ்சிட போறாங்க. 
....................................................................

வெளுத்துக்கட்டு: 
'தானே' புயல் நிவாரண நிதி வழங்க கடலூர் போயிருக்காரு நம்ம கேப்டனு. அங்க ஒரே தள்ளு முள்ளாம். டென்ஷன் ஆன நம்மாளு ஒருத்தரை சாத்திட்டாராம். 'என்ன ஏங்க அடிச்சீங்க? நான் நிருபருங்க' என்றாராம் தர்ம தர்மா அடி வாங்கியவர். 'அது எனக்கு எப்படிய்யா தெரியும். ஐ.டி. கார்ட் மாட்டாதது உன் தப்பு" என்று கூலிங் கிளாஸ் போட்டு குத்துமதிப்பாக அடித்ததை சமாளித்தார் தல. அதுவும் சர்தான். ஐ.டி. கார்ட் மாட்டாதது சரியோ தப்போ. சிங்கத்து கிட்டு சிக்குனா ஒரு அப்பாவது வாங்காம தப்ப முடியாதே அப்பு!
.................................................................................

ப்ளேயர்ஸ்(ஹிந்தி) : 
அபிஷேக், பாப்பி தியோல், பிபாசா பாசு என ஏகப்பட்ட பேர் இருந்தும் யாரும் பெரிதாக நடிக்கவில்லை. ரஷ்யா, நியூசிலாந்து என பணத்தை கொட்டி படத்தை எடுத்துள்ளனர். ஆங்காங்கே விறுவிறுப்பாக இருப்பது போல் தோன்றினாலும், ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை. ரஷ்யாவில் இருந்து ருமேனியா செல்லும் ட்ரெயினில் இருக்கும் 10,000 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை லபக்க ப்ளான் செய்வதே கதை. 

துப்பாக்கியை யார் தலையில் வைத்தாலும், உடனே ஒருவர் அதை தட்டிவிட்டு சண்டை போடுகிறார். எத்தனை தடவைய்யா இப்படி எடுப்பீங்க. ஜான்னி லீவரும், ஓம் வைத்யாவும் மிக சுமாராக சிரிக்க வைக்கிறார்கள். மொத்தத்தில் ஆவரேஜ் ப்ளேயர்ஸ்!!
................................................................................

ஊமை விழிகள்:
சேத்தன் பகத்தின் பைவ் பாய்ன்ட் சம் ஒன் புத்தகத்தை படித்துவிட்டு அமீர்கானின் த்ரீ இடியட்ஸ் படமும் பார்த்தாகிவிட்டது. அங்கிள் வயதில் கல்லூரி மாணவாக கலக்கி இருந்தார் அமீர். மறுபடியும் 'நண்பன்' ரூபத்தில் அதே கதை. அதனால் பார்க்க விரும்பவில்லை. பாத்துட்டு சொல்லுங்க. போமன் இரானி வேடத்தில் சத்யராஜ். சவாலான பாத்திரம். எப்படி நடித்து உள்ளார் என்பதை அறியும் ஆர்வம் உள்ளது. விமர்சனங்கள் வரும் வரை காத்திருக்கிறேன்.
.....................................................................................

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை அறிவிக்க போகிறாராம் பன்மோகன். இந்தியான்னு ஒரு நாடு இருக்கு, அதுல இத்தன கோடி ஜனங்க இருக்காங்களே. அதப்பத்தி கொஞ்சமாவது பீல் பண்றாரா பாருங்க மக்களே. உள்ளூர் செலவாணிக்கே வக்கில்லாம அலையறோம். இதுல அந்நிய செலவாணி ஆளுங்களோட  சேந்துக்கிட்டு இவர பண்ற அலப்பறை தாங்கல. எப்ப பாத்தாலும் 'என்ன அமெரிக்கால ஒபாமா கூப்டாக, ஹாலிவுட்ல லியனார்டோ டீ, காப்பியோ  கூப்டாக'ன்னு சொல்லிக்கிட்டு வானத்துல வவ்வலாட்டம் வலம் வந்துக்கிட்டே இருக்காரே..என்ன செய்யலாம்?
...................................................................................

'அணை'யா விளக்கு:
'சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி' என்பது போல் மொக்கையான DAM 999 படத்திற்கு ஏக பில்ட் அப் குடுத்துவிட்டார்கள். அந்த டைரக்டர் வேற தமிழ்நாட்ல படத்த ரிலீஸ் பண்ணியே ஆகணும்னு சுப்ரீம் கோர்ட் பின் கேட் ஓரமா வலது கால் கட்டைவிரல்ல வாரக்கணக்கா நிக்கறாராம். இது போதாதுன்னு இதை ஆஸ்காருக்கு வேற அனுப்பி இருக்காங்க. இத ஆஸ்காருக்கு பரிந்துரை செஞ்ச மவராசுகளே,  ப்ரீயா இருந்தா இருமாநில பார்டர் பக்கம் வந்துட்டு போங்க. இறுக்க அணைச்சி ஒரு உம்மா தரணும்!!
.....................................................................................

தர்மம் இலை காக்கும்:
இலவசம் என்பது இழிவான சொல். எனவே விலையில்லா என்று சொல்வதே சரி. இது மேடமின் கண்டுபிடிப்பு. விலையில்லா வேட்டி, விலையில்லா கோழி, ஆடு....!! விலையில்லான்னா ரெண்டே அர்த்தம்தான் எனக்கு தெரிஞ்சி. ஒண்ணு: இதுக்கு மதிப்பே இல்ல(சோர்ந்த குரலில் சொல்லிப்பாருங்கள்). அதாவது 'நயா பைசாக்கு பிரயோஜனம் இல்ல'.அடுத்து: விலைமதிப்பில்லாதது(புருவத்த ஒசத்தி அடடே ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு  சொல்லிப்பாருங்க. அதேதான்). அதாவது இந்தப்பொருளோட விலையை நிர்ணயம் செய்ய முடியாத அளவுக்கு காஸ்ட்லி. மேடம் 'விலையில்லா'வை எந்த அர்த்தத்துல சொல்றாங்களோ.

வேணாம் எதுக்கு வம்பு. அப்பறம் அவங்க ஆளுங்க நான் எழுதுன பொக்கிஷ  பதிவுகளை எல்லாம் பிரிண்ட் எடுத்து வீதில வச்சி கொளுத்திட போறாங்க!  
.............................................................................................

காதலி என்னை காதலி:
(இனி பொறுப்பதில்லை. கவிதை எழுத முடிவு செஞ்சாச்சி)

முன்பொரு மாதம் என் தெருவைக்கடக்கையில்
ஓரவிழி கொண்டு என் கோர விழிகளை உரசினாய்.
நீ வருவாய் என சூம்பிப்போன ரோசாப்பூவுடன்
இளையராசா பாடல்களை கேட்டவாறு காத்திருந்தேன்.

மாதம் ஒன்று உருண்டு புரண்டோடியும் நீ வரவில்லை.
இதயத்தில் ஈட்டி. நின்றுவிட்டது எனது நாள்காட்டி.
இன்றுகாலை தோளைத்தொட்டு தோழன் சொன்னான்:
"அடச்சீ எந்திரி. தெருமொனைல தோண்டுன பள்ளத்த
இன்னும் மூடல. அதான் அவ இந்த பக்கம் வரல"
..............................................................................................

கண்டேன்:
சனியன்று சென்னை புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் விசிட். உயிர்மை ஸ்டாலில் தென்பட்டனர் களவாணி வில்லன் திருமுருகனும், இயக்குனர் சற்குணமும். அட நம்ம கிட்ட விருது வாங்குனவங்கள சந்திக்க ஒரு வாய்ப்பா என மகிழ்ந்தேன்.  :-)

                                              சற்குணம், திருமுருகன், அடியேன்

"களவாணியில் வில்லனாக நன்றாக நடித்தீர்கள்" என்று திருமுருகனிடமும், "களவாணி மழைக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் எடுத்தது ரசிக்கும்படி இருந்தது,  'வாகை சூட வா'வில் சிறுவர்களின் நடிப்பு அபாரம்" என்றும் கூறினேன். அடுத்த ப்ராஜக்ட் பற்றி டிஸ்கஷன் நடப்பதாக கூறினார்.  மேலுள்ள படத்தின் (மொபைல்) கேமராமேன் பிலாசபி பிரபாகரன். செ.பு.கண்காட்சி தனிப்பதிவு விரைவிலுங்கோ.                                                             
..........................................................................

அழகிய தமிழ் மகன்:
'கொலைவெறி'பல ரூபத்தில் நம் உசுரை வாங்கினாலும்,யாழ்ப்பாண   இளைஞர்கள் பாடிய இப்பாடல்தான் அனைத்திலும் உசத்தி எனலாம். சரியான பதிலடியும் கூட. தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள தமிழ்ப்பற்றுள்ள வரிகள்.இப்பாடலை வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல:...............................................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................


                                                                       

Tuesday, January 3, 2012

வெகுஜன விமர்சனம்


குறிப்பு: இப்பதிவை படிக்க கண்டிப்பாக 1 நிமிடம் 30 நொடிகளுக்கு மேலாகும். முதலில் இதைப்படித்து விட்டு வரவும்: விமர்சனம்

                                    "சைத்தான் கா பச்சா..பதிவாடா எழுதறீங்க.."  

வணக்கம் கே.ஆர்.பி. அண்ணே


தோழர் யுவகிருஷ்ணா ஒரு பதிவை ஒன்றரை நிமிடத்திற்குள் படிக்குமாறு எழுத வேண்டுமெனக்கூறியதை தங்கள் பதிவில் கண்டேன். எந்திரன் 'சிட்டி'யை தவிர யாராக இருப்பினும் இப்பதிவுகளை படித்து முடிக்க குறைந்தது 1.31 நிமிடமாவது ஆகுமென்பது எனது கருத்து: துள்ளுவதோ இளமைங்கோ, ரோசாவின் நினைவுகளுங்கோ

சினிமா விமர்சனம் எழுதுவதிலாவது தான் பார்த்த மொக்கைப்படத்தை பலபேர்  பார்க்காமல் தப்பிக்கட்டும்  எனும் சமூக நல்லெண்ணம் மேலோங்கியுள்ளது. சிறு சேமிப்பிற்கான சீரிய தொண்டல்லவோ அது. படைப்பாளி பதிவர்களின் தர்க்க பலனாக 2 காஞ்ச வெங்காயம் கூட வாங்க முடிந்ததில்லை. 

சூர மொக்கை போட்டு ஹிட்ஸ் போதையில் இருப்பவர்களை விட்டு விடுவோம். ஆனால் தன்னறிவுக்கு எட்டியதை சுமாரான எழுத்து நடையில் எழுதுவோர் பலர்தான் எதிர்விமர்சனத்தை ஏற்கிறார்கள். படைப்பாளிகளின்  வலைப்பூவில் புதியவர்கள் எதிர் கேள்வி வைத்தால் ஒன்று நீக்கப்படுகின்றன அல்லது பதிலே கிடைப்பதில்லை. அதிகபட்சம் வாயை அடக்க பார்க்கின்றனர். சிலர் மட்டுமே விதிவிலக்கு. எங்களுக்கு அவதானிப்பு, அடிவருடி, ரௌத்திரம் போன்ற சொல்லாட்டம் தெரியாது. 'நெனச்சேன், ஜால்ரா, பொங்காத' தான்.

'வாசிங்கடா, வாசிங்கடா' என்று ஒளிவட்ட பதிவர்கள் அடிக்கடி 'ஸ்ருதி' வாசிப்பதை பார்த்து வருகிறோம். (உங்கள சொல்லல. நீங்கள் இருதரப்பினரிடமும் நன்றாக பழகி வருபவர் என்பதால் என்னத்த சொல்ல). எமக்கு கி.ரா, ஜெமோ, பாரா படைப்புகளை படிக்கக்கூடாது என்ற எண்ணம் என்றும் இருந்ததில்லை. காரணம்: இளையோர் பலர் 9-5 வேலை பார்ப்பதில்லை, சொந்த யாவாரம் செய்துகொண்டு கடையில் அமர்ந்து வாசிப்பதில்லை, பத்திரிகையில் வேலை செய்வதில்லை,பாட்டன் சொத்தில் பகோடா சாப்பிடுபவர்களுமில்லை. ஐந்தாண்டுக்கொரு முறை வேலைவாய்ப்பிற்கான போட்டி கழுத்தை முன்பைவிட வேகமாக நெரித்து கொண்டிருப்பதாலும், விலைவாசி மலேசியா ட்வின் டவரை க்ராஸ் செய்து பறப்பதாலும் பிரபல காவியங்களை ஈசி சேரில் அமரும் காலத்தில்தான் படிக்க முடியும்.

                                               Recession Hits Hard. Job first. Elakkiyam Next.
                                       
                                                     ரொம்ப 'வாசிச்சிட்ட'.. கெளம்பு!      

வாடகை வீட்டில் ஒத்த ரூமில் குத்த வைத்து இருப்பவன் தினத்தந்தி பேப்பரை மாதம் ஒரு முறை சேர்த்து வைக்கவே இடமின்றி அல்லாடுகையில், நீங்கள் சொன்ன செங்கல் சைஸ் புத்தகங்களை அடுக்கி வைப்பது சாத்தியமே  இல்லை என்பதுதான் நிதர்சனம். 

சான்றோர் ஷகிலா புராணம் எழுதினால் அது க்ளாஸ்/யதார்த்தம். அதையே நாங்க எழுதுனா பிட்டுப்பட விமர்சனம். நல்லா இருக்கு ஒங்க நியாயம். கூகிள் பஸ்ஸில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை 'கீழ்'த்தரமாக விமர்சித்து so called சான்றோர்கள் அடிக்கடி கும்மி அடித்தது போல் எம்மைப்போன்ற சுமாரான/மொக்கை பதிவர்கள் பெரும்பாலும் செய்ததே இல்லை. கஜுரஹோ கஜ கஜா சிலைகளை சீனியர்கள்/இலக்கிய ரசனை கொண்டவர்கள் குறுகுறுவென பார்த்தால் அது கலைப்பார்வையாம். சாமான்யன் பார்த்தால் காமப்பார்வையாம். இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா? 

நகைச்சுவையாக எழுதி மொக்கை போடுபவர்கள் எல்லாம் வாசிப்புத்திறன் அறவே இல்லாதவர்கள் என்றோ, பண்புடன் பழகத்தெரியாதவர்கள் என்றோ எண்ணினால் அந்த எண்ணத்தை ஞானபீட பதிவர்கள்(நீங்க இல்ல) மாற்றிக்கொள்ள வேண்டும். மனிதநேயமும், தேர்ந்த புத்தக வாசிப்பும் கொண்ட நகைச்சுவை/மொக்கை/கும்மி பதிவர்கள் சிலர் பற்றி எனக்கு போதிய பரிச்சயமுண்டு. பதிவை வைத்து பதிவரை எடைபோட்டால்...ஒரே சிப்பு சிப்பா வருதுண்ணே! யோவ் கூகிள் ஓனருங்களே, நீங்க கூட கேக்காத கேள்வியை இந்த பிரபல பதிவருங்க கேட்டு நச்சு பண்றாங்க. என்னான்னு கேளுங்க.

                                               gOOgle owners: Larry page, Sergey Brin
                           "KRP, உமக்கேன் இந்த அக்கறை..எமக்கே இல்லாத அக்கறை"          

சுமாராக மொக்கை போடும் பதிவர்களே, சாதா வாசிப்புத்திறன் கொண்ட தோஸ்துகளே...யூ கண்டினியூ. அநியாயத்துக்கு நல்லா எழுத ஆரம்பிச்சிட்டா அப்பறம் மண்டைல கர்வ போதை வரலாம். பொறவால தனித்தனி தீவாத்தான் நிக்கணும். சாமான்ய நண்பர்களுடன் கூடுவோம். நட்பு வட்டத்தை கூட்டுவோம்!

மிஸ்டர். கே.ஆர்.பி., போன வருஷம் புத்தக கண்காட்சில வாங்குன நெறைய பொஸ்தகத்த இன்னும் படிக்கலைன்னு சொன்னவரு நீங்க. அதுக்குள்ள அடுத்த கண்காட்சி வந்துடுச்சி. எங்கள மட்டும் 'படிங்கடா பசங்களா' ன்னு சொல்றீங்க. குசும்பு ஜாஸ்திண்ணே!
................................................................................

.....................................................
எஸ்.ரா நல்லவரா? கெட்டவரா? தயவு செஞ்சி யாராச்சும் சொல்லுங்க. கே.ஆர்பி., யுவகிருஷ்ணா ரெண்டு பேரும் கொளப்பி அடிக்கறாங்க.   
......................................................
..........................
My other site:
..........................

.....................................................
சமீபத்தில் சிக்கியது:

......................................................

.......................................................
அண்மையில் துவக்கியது:

அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா + பேட்டி!
.......................................................Monday, January 2, 2012

கல்வி உதவிஅனைவருக்கும் வணக்கம்,


சகோதரி ஆமினாவிடம் இருந்து வந்த மின்மடலை இங்கு பகிர்கிறேன்:

சென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வரும் சகோதரர் ஷாஹுல் ஹமீது எனும் சகோதரர் பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்க வைத்து வருகிறார்அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டு கொண்டிருப்பதால் சகோதரர்கள் தஙகளால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.தொடர்புக்கு: ஷாஹுல் ஹமீது,
தொலை பேசி: 8695916565 / 9175577593
....................................................................

மேலும் விவரங்கள்(படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்):

நண்பர்கள் விரும்பினால் தங்கள் வலைப்பூக்களில் இச்செய்தியை  பகிரவும். நன்றி.

ஷாஹுல் அவர்களை இருமுறை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பேச எண்ணுபவர்கள் சிறிது நேரம் கழித்து(3 மணிக்கு பிறகு) தொடர்பு கொள்ளுங்கள்.
...........................................................................
                                                       


Related Posts Plugin for WordPress, Blogger...