தமிழ்(ச்செல்வன்)...ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். விவரம் தெரிந்த நாள் முதல் எமது மட்டைப்பந்து குழுவின் அங்கமானவன். பந்தை பாய்ந்து பிடிப்பதில் ஜாண்டி ரோட்ஸ். எந்த வீட்டின் மொட்டை மாடியில் பந்து விழுந்தாலும் அதை எடுக்க சுவர் ஏறும் முதல் ஆள் அவனாகத்தான் இருப்பான். பள்ளி,கல்லூரி படிப்பை முடித்து அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கையில் அவன் மட்டும் நிரந்தரமாக ஒரு வேலையில் தங்காமல் எங்கள் தெருவோரம் அமர்ந்தவாறு நண்பர்களிடம் அரட்டை அடிப்பான். "சிவா ஏதாச்சும் காசு இருந்தா குடு" என அடிக்கடி அவன் கேட்கையில் சிறிய தொகையை தந்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவற்றை எல்லாம் குடிப்பதற்கே செலவு செய்கிறான் என்று. அன்பாக சொல்லியும் தொடர்ந்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை பணி முடிந்து வீட்டருகே வந்துகொண்டிருக்கையில் சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டது. அது தமிழின் மரண அஞ்சலி செய்தி. செய்வதறியாது திகைத்தேன். ஏனெனில் நான் இழந்த முதல் நண்பன். நான்கு தெருக்கள் தள்ளி அவன் வசித்து வந்த வீட்டை நோக்கி வேகமாக விரைந்தேன். உடலை எடுத்து விட்டனர் என்ற செய்திதான் கிடைத்தது. 'எப்படி இறந்தான்?' எனக்கேட்டதற்கு கிடைத்த பதில் "பள்ளிக்கரணை மைதானத்தில் விளையாடுகையில் பந்தொன்று கிணற்றில் விழுந்தது. அதை எடுக்க உள்ளே சென்றவன் உள்ளே மூழ்கி இறந்துவிட்டான்" . சிறுவயதில் இருந்தே பந்து எங்கு விழுந்தாலும் பயமின்றி எடுக்கும் ஆர்வம் அன்றும் அவனிடம் இருந்ததால் மரணத்தை தழுவி விட்டான் என எண்ணி மனம் வருந்தியது.
வருடா வருடம் வீட்டருகே இருக்கும் சுவரொட்டியில் லேசான புன்னகை உதிர்த்தவாறு என்னைப்பார்க்கும் தமிழிடம் கேட்க விரும்புவது ஒன்றே: "டேய் தமிழு..நீயா கெணத்துல பந்து எடுக்க போயி செத்தியா? இல்ல எவனாவது 'உன்னாலதான் முடியும்'ன்னு உசுப்பேத்தி கெணத்துல எறக்கி விட்டானா?". ஒருவேளை உசுப்பேற்றப்பட்டு என் நண்பன் 24 வயதில் மரணத்தை தழுவி இருந்தால்...."ஆபத்தான விசயத்த ஒங்களால செய்ய முடியாட்டியும் இன்னொருத்தன உசுப்பேத்தாதீங்கடா டேய்"!!
சில மாதங்களுக்கு முன்பு எம் சொந்தம் ஒருவர் இறப்பை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். நடிகர்களுக்கு ஒப்பனை செய்பவர். 60 வயதை தாண்டியும் தொப்பை இல்லை. சுறுசுறுப்பின் சிகரம். இளவயதில் விருந்தாளி ஒருவரின் வீட்டில் உணவு அருந்தும்போது நேர்ந்த அவமானத்தால் அன்று முதல் இதுவரை எவர் வீட்டிற்கு சென்றாலும் பச்சை தண்ணி கூடி குடிக்க மாட்டார். வெள்ளுடை அவரது கவச குண்டலம்.
இன்னும் ஒரு சில வாரங்களில் அனைவரையும் விட்டு பிரியப்போகிறார். கடந்த வாரம் எங்கள் இல்லத்திற்கு வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் இருந்து துண்டுச்சீண்டு ஒன்றைக்கண்டேன். அதில் 'தங்க மோதிரம் 2, கழுத்தணி, பச்சை கம்மல்' என்று ஆபரணங்கள் பற்றிய குறிப்பு இருந்தது. அவர் சென்றதும் அது குறித்து தாயிடம் கேட்டதற்கு: "தான் இறக்கும் முன் சேர்த்து வைத்தவற்றை சொந்தங்களுக்கு சரியாக பிரித்து தர அவர் போட்ட பட்டியல்" என பதில் கிடைத்தது. மீண்டும் ஒருமுறை அச்சீட்டை வாசித்தேன். இறப்பின் குரூரம் என் மனதிலும் சாரல்களை சத்தமாக தெளித்தது. வாகன விபத்து, இயற்கையின் சீற்றத்தால் நிகழும் மரணம், சக மனிதனால் கொல்லப்படுதல் போன்ற அனைத்தையும் விடக்கொடியது இன்னும் சில நாட்களில் இறக்கப்போகிறோம் எனத்தெரிந்து நாட்களை நகர்த்துவது. அனுபவிப்பவருக்கே தெரியும் அந்த வலி!
கிரி. தமிழைப்போலவே எங்கள் அணியின் அங்கம். இவன் அண்ணன் தினேஷ் அணித்தலைவன் என்றால், கிரி துணைத்தலைவன். விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை 'நண்பேன்டா'. தி.நகரில் உள்ள தெருவில் நாங்கள் போட்ட ஆட்டத்தில் பந்துபட்டு உடையாத வீட்டுக்கண்ணாடி இல்லை. பெரியோர்கள் பந்தைத்தராமல் சாபமிடுவது சகஜம். ஆனால் கிரியின் தந்தை மட்டும் எங்களை அரவணைப்பார். சிறிய புன்முறுவலுடன் பந்தை எடுத்து வெளியே போடுவார். எனவே அவர் மீது எமக்கு தனி மரியாதை உண்டு.
சென்ற ஆண்டு...கிரியிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு: "சிவா, அப்பா எறந்துட்டார்". நண்பர்களை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு விரைந்தேன். சோகத்தில் இருந்த அவனது தாயாரிடம் ஆறுதல் கூறிவிட்டு கிரியின் அருகே அமர்ந்தேன். ஓரடி தள்ளி அமைதியாக படுத்திருந்தார் அவன் தந்தை. "நேத்துல இருந்து தினேஷ் சாப்பிடல. யாராவது அவன சாப்புட சொல்லுங்கப்பா?" என குரல்கள் ஒலித்தன. எத்தனை முறை நாங்கள் சொல்லியும் தினேஷ் ஒப்பவில்லை. தந்தையின் இழப்பு அவனை கோபமாக எம்மை நோக்கி சீறவும் வைத்தது: "அவரப்பத்தி உங்களுக்கு தெரியும்ல? எப்படிடா என்ன சாப்புட சொல்றீங்க?". பதில் சொல்ல முடியாமல் திரும்ப வந்து தந்தையின் உடலருகே அமர்ந்தேன்.
தினேஷின் மகள். வயது நான்கு இருக்கும். தாத்தாவின் காலடியில் சிதறிக்கிடந்த ரோஜா இதழ்களை சட்டென எடுத்து வாயில் போட்டுக்கொண்டு "ரோஜா..வேணுமா?" என்று என்னிடம் கேட்ட அந்த நொடியை வாழ்நாளில் மறக்க முடியாது. மரணம் குழந்தைகளுக்கு கால் தூசா? அவளின் செய்கையில் பொதிந்திருக்கும் நிஜமென்ன? எதை உணர்த்த நினைக்கிறது காலம்? இன்றுவரை புலப்படவில்லை.
நண்பனிடம் கேட்டேன்: "கிரி என்னடா நடந்தது?"
"நேத்து காத்தால மூணு மணி இருக்கும். திடீர்னு நெஞ்சு வலிக்கறதா சொன்னார். தண்ணி தந்துட்டு, வீட்டு கிட்ட இருக்ற மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு உடனே வந்து உதவி செய்ய சொல்லி கேட்டேன். யாரும் வரல. கேட்டா 'மருத்துவர்கள் நோயாளியின் வீட்டுக்கு வந்து வைத்தியம் செய்ய முடியாது. கொஞ்ச வருஷமா இதுதான் நிலை. வேணும்னா அவரை இங்க கொண்டு வாங்க. ஆனாலும் பெரிய மருத்துவர் காலை ஏழு மணிக்குதான் வருவார்". என்ன செய்வது என கிரி பதறிய நேரத்தில் அவன் மடியிலேயே மரணத்தை தழுவினார் தந்தை. எத்தனை பணம் தரவும் தயாராக இருந்தும், நோயாளி உங்கள் பகுதிக்கு அருகில் இருந்தும்..கடமை ஆற்றாத மருத்துவர்களே வாழ்வாங்கு வாழ்க உங்கள் புகழ்!!
.......................................................................................
...............................
My other site:
..............................
11 comments:
வணக்கம் சார்!உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்.மருத்துவம் பார்ப்பது "தொழில்"ஆகிவிட்ட காலம் இது.என்ன செய்ய?இப்போதும் ஒரு சில மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் இருக்கக் கூடும்!"அந்த"ஊரில் இல்லாது போய் விட்டார்கள்.
//இன்னும் சில நாட்களில் இறக்கப்போகிறோம் எனத்தெரிந்து நாட்களை நகர்த்துவது. அனுபவிப்பவருக்கே தெரியும் அந்த வலி//
அதைவிடக் கொடுமையான விடயம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
ஒரு நண்பனின் பிரிவின் வலி வார்த்தைகளில் அடங்காது.
உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.
நண்பனின் நண்பனின் மரணம், நண்பனின் நண்பனின் அப்பாவின் மரணம், கண்ணில் கண்ணீர் ஊற்றுதய்யா...!
இறக்கும் நாள் தெரிந்த மனதினை கொண்டவரை நினைத்து தொண்டை முட்டுகிறது.
நோயாளி உங்கள் பகுதிக்கு அருகில் இருந்தும்..கடமை ஆற்றாத மருத்துவர்களே வாழ்வாங்கு வாழ்க உங்கள் புகழ்!!//
சம்பந்தப்பட்ட மருத்துவமனையை வன்மையாக கண்டிக்கிறேன் ராஸ்கல்...
வாசிக்க வருத்தமா இருக்கு.
சில தனியார் டாக்டர்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு டாக்டர் முழுக்க வீட்டுக்கு வந்து பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார். ஆனால் வேளச்சேரி , மடிப்பாக்கம், மேடவாக்கம் ஏரியா மட்டும் தான் வீட்டுக்கு வந்து பார்க்கிறார்.
பணத்துக்காக இறந்த நண்பன் சம்பவத்தில் ஒரு சிறு கதை இருக்கு. எழுதலாம்.. யோசிங்க. தப்பு இல்லை. சுஜாதா போன்றோர் இத்தகைய கதைகள் மூலம் தங்கள் நண்பர்களை மீண்டும் நினைவு கூர்ந்தார்கள்
வேதனையான பதிவு.
மனதை நெகிழ வைக்கிறது.
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
மரணங்கள் வாழ்வை புரிய வைக்கின்றன. உங்களுக்கு ஆறுதல் கிடைக்கட்டும்!
நெஞ்சுவலி போன்ற எமெர்ஜென்சியின் போதும் கூட ஆம்புலன்சுகளை அழைக்கலாம் என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை.
கனத்த பதிவு!நண்பனின் மரனம் மிகத்துயரமானது!நெஞ்சு வலியிருப்பவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது!காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து ரிலாக்ஸாக நாம் இருக்க வேண்டும் பதட்டப்படக்கூடாது!நாம் பதட்டப்படுவது அவர்களுக்கு தெரிந்தால்...வலியின் தீவிரம் அதிகமாகும்....பிறகு ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டும்....108 ல் முதலுதவி கருவிகள் உள்ளன....
Post a Comment