CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, November 25, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 6நித்தம் செத்துப்பிழைக்கும் போராட்டத்தில் என் தாய்க்கு ஆதரவாக பல நல்ல உள்ளங்கள் அந்த சாதுல்லா தெரு காம்பவுண்டில் இருந்தன. குடித்து கூத்தடிக்கும் கணவனுடன் வாடகை வீட்டில் நாட்களை நகர்த்துவது கடுங்காவல் தண்டனையை விடக்கொடியது. குடிப்பவனை விட அவன் மனைவி தெருவில் செல்லும்போது ஏளனமாக பார்க்க நம் ஆட்களுக்கு சொல்லியா தர வேண்டும். அதுவும் 1980-களில். இன்று மெகாசீரியல், செல்போன் என பரபரப்பான வாழ்க்கை வாழும் நகர மக்களுக்கு பக்கத்து வீட்டு கதை கேட்க நேரம் இல்லை. ஆனால் அப்போது எந்த நவீன வசதியும் பெரிதாக இல்லாத காலம் என்பதால் பொரோட்டா வாங்கி தந்து புரணி கேட்கும்/பேசும் ஆட்களுக்கா பஞ்சம்? 

இப்படி சூழ்நிலைக்கைதியாக தவிக்கும் மனைவிகள் வாழ்வை வெறுத்துப்போய் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க இறைவன் குடுக்கும் ஒரே ஆக்சிஜன் என்ன தெரியுமா? அவர்களின் நிலையை புரிந்து கொண்டு ஆதரவு தரும் சொந்த வீட்டுக்காரர்கள் மட்டுமே. "உன் கணவன் குடித்து கலாட்டா செய்வதால் பக்கத்து வீட்டினருக்கு தொந்தரவாக உள்ளது. எனக்கும் கவுரவம் குறைகிறது. சில நாட்களில் வீட்டை காலி செய்" என்று சொல்லி விடுவார்கள். சற்று இரக்கம் உள்ளவர்கள் என்றால் "உன் நிலை எனக்கு புரிகிறது. ஆனால் மாத வாடகையை இனி தாமதப்படுத்தாமல் மாதம் ஐந்து தேதிக்குள் தந்துவிடு" என்று சொல்வார்கள். 

ஆனால் நாங்கள் குடி இருந்த வீட்டின் சொந்தக்கார பெண்மணி இப்படி எந்த நிபந்தனையும் போடாமல் பல ஆண்டுகாலம் எங்களுக்கு ஆதரவு தந்தார். அவர் பெயர் உஷா. எல்லோரும் அழைப்பது உஷா மாமி. இந்த ரணம் நிறைந்த  வாழ்க்கைப்பயணத்தை பற்றி சொல்லும் வேளையில் பல நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகளை கூறியே ஆக வேண்டும். அதில் ஒருவர்தான் இந்த உஷா மாமி. இன்று உடல் முடியாமல் நாட்களை நகர்த்தி கொண்டு இருக்கிறார். விரைவில் அவரை பார்க்க உள்ளேன். 

இப்படியாக காலம் சென்ற ஒரு கட்டத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை மூடியது. குடிக்காமல் கை, கால் நடுங்கிய குடிராசாக்கள் கள்ளச்சாராயம் அடிக்க ஆளாய்ப்பறந்தனர். எங்க வீடு ஆள் மட்டும் என்ன இளிச்ச  இளிக்காத வாயரா? சாதாரணமாகவே பேருந்தில் செல்லாமல் சென்னையில் பல கிலோமீட்டர் நடப்பார் அப்பா. அதுவம் செருப்பு கூட போடாமல். குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்? நடைப்பயணம் எழுச்சியாக தொடங்கியது. அப்போது விருகம்பாக்கம் பெரும்பாலும் வளர்ச்சி பெறாத சமயம். அங்கிருந்த  ஒரு காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் கிடைக்கிறதென ஒற்றன் ஒருவன் செய்தி சொல்ல வீறுகொண்டு நடந்தார் எங்கள் குடும்பத்தலைவர். இப்படியே போதையுடன் சில மாதங்கள் அவருடன் சேர்ந்து எங்கள் குடும்பமும்  தள்ளாடியது. கள்ளச்சாராயத்தின் தாக்கம் அதிகம் ஆனதால் அதை நிறுத்தி விட்டு பாக்கெட் சாராயத்தை அறிமுகம் செய்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சாராயம் எந்த வடிவில் வந்தால் என்ன குடிகாரனுக்கு. பாக்கெட்களை பக்கெட்டில் ஊற்றி அடித்தால் அதுவும் மகிழ்ச்சிதானே?

                                                                         ராமதாஸ் 

சாதுல்லா தெருவில் நாங்கள் குடி இருந்த காம்பவுண்டின் அதே வரிசையில் சில வீடுகள் தள்ளி இருந்தது பழைய தமிழ் சினிமா வில்லன் ராமதாசின் வீடு. நகைச்சுவையாக பேசுபவர்கள் வீட்டில் சோகம் கொட்டிக்கிடக்கும் என்பது போல, வில்லனாக நடிக்கும் பல நடிகர்கள் நிஜத்தில் நல்லவர்கள் என்பதற்கு ராமதாசும் விதிவிலக்கல்ல. பெரிய சைஸ் வெண்ணிற கிருதா, கை வைத்த பனியன், லுங்கியுடன் காட்சி தரும் அவரை நான் சிறுவயதில் அடிக்கடி பார்த்த நாட்கள் நினைவிற்கு வந்து செல்கின்றன. வயதான காலத்திலும் வில்லனுக்கு உரிய கம்பீரம் கொண்டிருந்தார். என் தந்தையின் நண்பர்கள் குடித்து விட்டு ரோட்டில் பிரச்னை செய்தாலோ அல்லது எங்கள் குடும்பம் கிண்டல் செய்யப்பட்டாலோ அவர்களை அதட்டி அனுப்புவார். சில வருடங்களுக்கு முன்பு அந்த மனிதரும் காலமாகிவிட்டார்.

                                                                தங்கவேலு

அவர் வீட்டருகே இருந்தது டாக்டர் ஸ்ரீனிவாசனின் மருத்துவமனை. அந்த ஏரியாவில் மிகவும் பிரபலம். இப்போதும், எப்போதும் என்னுடைய அபிமான நகைச்சுவை நடிகராக தங்கவேலுதான் இருக்கப்போகிறார்  என்று அந்த சிறு வயதில் நினைத்திருப்பேனா?ஒருநாள் எதேச்சையாக அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார் அவர். வயது முதிர்ந்து தளர்ந்த நடையுடன் வெளியே வந்தார். தலையில் இஸ்லாம் அன்பர்கள் அணியும் தொப்பி. எம்.ஜி.ஆருக்கு இருப்பது போல அந்த தொப்பி அவருடைய ட்ரேட்மார்க். நான் நீட்டிய துண்டு பேப்பரில் கையெழுத்து போட்டுத்தந்தார். காலப்போக்கில் தொலைந்தே போனதது. ஆனால் என்றும் மனதில் நிற்கும் அந்த சந்திப்பு.

.................................................................
தொடரும்.......


.......................................................................
சமீபத்தில் எழுதியது:

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 5

மயக்கம் என்ன - விமர்சனம்
.................................................................

.................................
My other site:
agsivakumar.com
.................................

9 comments:

அஞ்சா சிங்கம் said...

உன்னை நன்றாக புரிந்து கொண்ட ஒரு நண்பனாக சொல்கிறேன் ........ உன் வலி மிக பெரிது ...............
தங்கவேல் எனக்கு மிக பிடித்த நடிகர் ............
அதை விட சிவா எனக்கு மிக பிடித்த நண்பர் ........................

! சிவகுமார் ! said...

நன்றி செல்வின். ஆரம்பம் முதல் நண்பர்களின் துணையோடுதான் பயணிக்கிறது என் வாழ்க்கைப்படகு.

Unknown said...

சிவா, இது வரை இந்த குடிபற்றிய பதிவில் ஒரு பகுதி கூட படிக்கவில்லை, இன்று தான் 6 பகுதியையும் படித்தேன். மனது கனக்கிறது. இதுநாள்வரை குடித்து விட்டு கலாட்டா செய்வதை ஜாலி என்று எண்ணியிருந்தேன். எனக்கு ஒராண்டுக்கு முன்பு தான் திருமணமானது. இன்னும் குழந்தைகள் இல்லை. நான் தினமும் குடிப்பவன் அல்ல, வாரம் ஒரு முறை மட்டுமே, இப்போது இந்த தொடரை படித்த பிறகு விட்டுவிட முயற்சிக்கிறேன். ஆனால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் முன் குடியை விட்டு விடுவேன் என்று சத்தியம் செய்கிறேன். நன்றி சிவக்குமார். இன்று முதல் நீங்கள் என் நெருங்கிய நண்பர்.

! சிவகுமார் ! said...

செந்தில் சார், என்னால் ஆன சிறு முயற்சியாக இரு நண்பர்களை குடியில் இருந்து மீட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அழிவை நோக்கி சென்ற அவர்கள் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். நீ சொன்னால் மட்டும் திருந்தி விடுவார்களா என்று பதிவு எழுதும் முன் கிண்டல் செய்தனர் ஒரு சிலர். அதற்கு உங்கள் பதில் ஒன்றே போதும். ஆனால் குடியை நிறுத்துகிறேன் என்று பல முறை சத்தியம் செய்துவிட்டு மீண்டும் அதை தொடர்ந்தவர்கள் பலர். அதனால் அப்படி யார் சொன்னாலும் அதை குறைந்தது ஒரு வருடமேனும் நிரூபியுங்கள் என்றே கூறி உள்ளேன். இன்று தாங்கள் அளித்த பதில் மகிழ்ச்சியை அளிக்கிறது. செயலிலும் இருந்தால் இத்தொடர் ஏற்கனவே வென்றது போலத்தான். குடிப்பவர்கள் அனைவரையும் திருத்த இப்பதிவை நான் எழுதவில்லை என்று முதலிலேயே சொல்லி இருந்தேன். பிறருக்கு தொல்லை தராமல் குடிக்குமாறு கோரிக்கை மட்டுமே வைத்தேன். சில வாரங்களுக்கு முன்பு நமக்கு நெருங்கிய பதிவர் ஒருவர் போதையில் தெருவை கடக்கையில் வேகமாக வந்த பைக் ஒன்றை கவனிக்கவில்லை. நாங்கள் கத்தியதும் அவருக்கு கேட்கவில்லை. நல்லவேளை விபரீதம் ஏதும் நடக்கவில்லை. அப்படி சுயநினைவை இழக்கும் அளவிற்கு நண்பர்கள் குடிக்க வேண்டாம் என்பதுதான் என் கோரிக்கை.

ஆமினா said...

உங்கள் தாயாருக்கு பலம் சேர்க்க உதவிய உஷாமாமி,ராம்தாஸ் போன்ற நல்லுள்ளங்களை பார்க்கும் போது மனிதநேயம் ஆங்காங்கே இருக்கதான் செய்கிறது என நினைபடுத்துகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

மகா குடிகாரர்கள் சிலபேராவது உங்கள் பதிவை படித்து திருந்தினால் சந்தோசமே, விழிப்புணர்வு பதிவு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எவ்வளவோ இன்னல் பட்டு மீண்டு வந்துருக்கிறீர்கள் இல்லையா...!!!

sathishsangkavi.blogspot.com said...

குடி பற்றிய பதிவை இன்று தான் படிச்தேன் சிவா...

குடியின் வழியை நீங்கள் முழுமையாக உணர்ந்தவர் என்று என்னோடு பதிவர் சந்திப்பில் நீங்கள் தனியாக பேசும் போது அறிந்து கொண்டேன்...

இப் பதிவின் மூலம் உங்கள் வலி தெரிகிறது... உங்களின் இந்த பதிவு நிறைய குடிககாரர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு...

டாஸ்மார்க்கை அரசு இழுத்து முடியானல் நிச்சயம் உங்கள் பதிவு தான் பாராட்டு பத்திரமாக இருக்கும் என்பது எண் எண்ணம்...

ARASU said...

nan iru than 6 pathivaiyum padithen,nalla pagirvu nanbare,vizhippunarvai unarthum pathivu.

Related Posts Plugin for WordPress, Blogger...