ஒருநாள் அம்மாவிடம் ஒரு கார்டை நீட்டி அதில் கையெழுத்து போட சொன்னார். பாதி கார்டை வேறு பேப்பர் வைத்து மறைத்தவாறு. மனைவிக்கு தெரியாமல் பெர்மிட் கார்டில் கையெழுத்து வாங்க ராஜ தந்திரம் செய்கிறாராம். கிராமத்து பெண்கள் என்றால் அவ்வளவு எளப்பமா வாத்யாரே? இதில் ஏதோ விஷயம் உள்ளது என உஷாராகி "எதற்கு" என்று அம்மா கேட்க "உன் பெயரில் பேங்கில் அக்கவுன்ட் ஆரம்பிக்க போகிறேன்" என்று சொல்லி இருக்கிறார். பொய் என்று தெரிந்தும் கையெழுத்து போட்டார் அம்மா. இல்லாவிட்டால் மட்டும் திருந்தவா போகிறார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில்.
சில நாட்கள் கழித்து இரண்டு பர்மிட் வாங்கிய சந்தோஷத்தில் பானம் அருந்தி திளைத்தார். அவ்வப்போது தெருவோர சாக்கடையில் உருண்டுவிட்டு வருவார் வெள்ளுடை வேந்தர். கிணற்றடியில் உட்கார வைத்து ஜலக்கிரீடை செய்துவிட்டு இரவு முழுக்க வெள்ளை சட்டை, வேட்டியை துவைத்து ஓய்ந்துவிடுவார் அம்மா. வாழ்க்கையில் கறைபடிந்த புண்ணியவான்கள்தான் அதிகமாக வெள்ளுடை அணிய பிரியப்படுவார்கள் போல. மாதம் 800 ரூபாய் தந்துகொண்டிருந்தவர் போதைப்பழக்கம் அதிகமாக ஆக 500, 300 என்று குறைத்து தர ஆரம்பித்தார். இனி இவரை நம்பினால் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை. சிறுவயதிலேயே டெய்லரிங் வேலை தெரிந்து வைத்து இருந்ததால் அத்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற அம்மா முடிவெடுத்தார்.
அந்த காலத்தில் சென்னையில் கொடிகட்டிப்பறந்தவர் டாக்டர் சவுரிராஜன். தன் நகைச்சுவை உணர்வால் நோயாளிகள் மனதை இலகுவாக்கி வியாதிகளை ஓட்டும் வல்லவர். தந்தையை அழைத்துக்கொண்டு அவரிடம் சென்ற என் தாயிடம் "இந்த ஆளை விட்டால் போதையில் சந்திரமண்டலத்திற்கு ஏணி வைத்து ஏறுவார் போல" என்று கிண்டல் அடித்துவிட்டு அதே தி.நகரில் இருக்கும் ராஜூ ஹாஸ்பிட்டலில் சிகிச்சை செய்யச்சொல்லி பரிந்துரை செய்தார். சில நாட்களில் மது மீதான வெறுப்பு வரும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது. கண்ணாடி டம்ளரில் எதைக்கொண்டு வந்தாலும் "ஐயோ..அதை கிட்டே கொண்டு வராதே"என அலறி மதுவைத்தொட பயந்தார் தலைவர். இக்காட்சிகளைப்பார்த்து அந்த துக்கத்திலும் சிரிப்பு எட்டிப்பார்த்தது அம்மாவிற்கு. இப்படி சிரித்தால்தான் உண்டு. எல்லாம் சில நாட்கள்தான். மீண்டும் மதுதாசன் ஆகி சிறகடித்து பறந்தார்.
குடிப்பழக்கத்தை தவிர வேறெந்த தவறும் செய்யாத மனிதர் என்பதால் வேலை தரும் முதலாளிகள் மத்தியில் நற்பெயர் உண்டு இவருக்கு. பெட்ரோல், பணம் திருடாத சில அதிசய டிரைவர்களில் ஒருவர் என்பதால் திரையுலகில் எவரேனும் வேலை தந்துவிடுவார்கள். 'சென்னை வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதே. சொந்த வீடு வாங்கவில்லையா?' என ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர் ஆர்ட் டைரக்டர் பரணி. இவர் யார் தெரியுமா? வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் இன்டர்வியூ செல்ல ஒரு நபரின் கோட்டை கழட்டிவிட்டு அவரை ஓவியம் தீட்டுவாரே ...அவர்தான்.
பரணி
சாதுல்லா தெருவில் இரண்டு கிரவுண்ட் நிலத்தில் வீடு வைத்திருந்த பரணி ஒரு நாள் என் தந்தையிடம் "இந்த இடத்தை விற்க முடிவு செய்துள்ளேன். உனக்கு 33,000 ரூபாய்க்கு தருகிறேன்" என சொல்ல, அதை மறுத்து விட்டு "எனக்கு சொந்தமாக கார் இருப்பதுதான் கவுரவம்" என்று அந்த அரிய வாய்ப்பை தட்டிக்கழித்துவிட்டார். அதுபோல் பல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை எல்லாம் புறம்தள்ளினார். ஒரு ஹவுசிங் போர்ட் வீடு வாங்கக்கூட முயற்சி செய்யவில்லை.
எலி வலையானாலும் தனிவலை வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள். இதோ சென்னை மாநகரில் வாழ்வை துவங்கி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இரவுபகல் உழைத்த சம்பளம் எல்லாம் வாடகைக்கே பெரும்பாலும் போய் விடுகிறது. கழுத்தை நெறிக்கும் விலைவாசியும் சேர்ந்து கொண்டு என்று நகரை விட்டு எங்களை விரட்டப்போகிறது என்று தெரியவில்லை. இப்போதைய இளைஞர்கள் எல்லோரும் சொந்த வீடு ஒன்றை உங்களுக்காக விட்டுச்சென்று இருக்கும் தந்தையை நித்தம் துதிக்கலாம். அவர் உங்களுக்கு எத்தனை கொடுமை புரிந்திருப்பினும் ஒரு வீட்டையாவது விட்டுச்சென்றாரே என்று தாரளமாக பெருமூச்சு விடலாம். அதைக்கூட செய்யாமல் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு நாற்றம் எடுக்கும் திரவத்தை குடித்து குடும்பத்தை தெருவில் நிற்க வைக்கும் நபர்களின் எண்ணிக்கை இன்று அதிகம் ஆகி வருவதுதான் உச்சகட்ட கொடுமை. எங்கே போகிறது தமிழகம்?
தொடரும்......
..................................................
..................................................................
தொடர்புடைய பதிவுகள்:
..........................................................................
...............................
My other site:
..............................
4 comments:
படித்து முடிக்கும்போது மனம் கனத்துப் போகிறது சிவா.தொடர்ந்து படிக்க முடியுமா எனத் தெரியவில்லை.
நல்ல பதிவு
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
மதுவின் கொடுமையை அனைவரும் உணர உங்கள் அனுபவம் உதவட்டும்..
//நிம்மதியாக கழிக்காமல் நித்தம் உழைத்து சாகும் நரக வாழ்வை இளம் மனைவிக்கு ஏனடா தருகிறீர்கள் அரக்கர்களே?//
சாட்டையடி சிவா....
தொடர்ந்து படிக்க மனம் பக்குவப்படவில்லை :-( இந்த பாதிப்பு நீங்கும் போது தொடர்கிறேன்......
Post a Comment