CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, November 8, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 4எழுபதுகளின் இறுதியில் சாதுல்லா தெருவில் உள்ள ஒரு காம்பவுண்டில் 75 ரூ மாத வாடகைக்கு ஏற்கனவே என் தந்தை தங்கியிருந்தார். அதே வீட்டில் தனது வாழ்வை துவக்கினார் அம்மா. தந்தையின் மூத்ததார மகன்கள் இருவரை வளர்க்கும் பொறுப்புடன். அந்த காம்பவுண்ட் ஒரு மினி தென்னிந்தியா எனச்சொல்லலாம். மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிபேசும் பத்து குடும்பங்கள் சேர்ந்த கலவை. பக்கத்து வீடுகளில் ஹிந்தி, கொங்குனி பேசும் குடும்பங்களும் இருந்தன.

காம்பவுண்டில் வீட்டின் சொந்தக்காரர் மற்றும் ஓரிரு வசதி உள்ளவர்களின் வீடுகள் பெரிதாக இருந்தன. எங்கள் வீடு அதிநவீன முறையில் விசாலமாக   கட்டப்பட்டு இருந்தது. ஒரே அறை. நடுவில் ஒரு மரத்தடுப்பை வைத்து இரண்டு அறைகளாக மாற்றும் ஒண்டிக்குடித்தன டெக்னிக்கை அதே வரிசையில் இருந்த மற்ற நான்கு குசேலர் குடும்பங்களும் பின்பற்றின. இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை படுத்தாலே ஹவுஸ்புல் ஆகும் அளவிற்கு பிரம்மாண்ட வசதி. அதிலும் சற்று உயரமானவர் விருந்தாளியாக வந்தால் அவருடைய குதிகால் வீட்டு வாசலுக்கு வெளியே நிலவொளியில் ஓய்வு எடுக்கும் அதிர்ஷ்டம் கொண்டிருந்தது. 

திருமணம் நடந்த ஒரு சில வருடங்கள் எப்போதாவது சர்பத்/மருந்து(மதுவிற்கு மற்ற பெயர்களாம்) அடித்து வந்தார் அப்பா. நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது காலம். கல்யாணம் ஆன பெண்களுக்கு மாமியாரை விட பெற்ற தாய்தான் பெரிய வில்லி என்று பலருக்கு தெரியுமோ தெரியாதோ. சினிமாவும், பத்திரிகை ஜோக்குகளும் வேண்டுமானால் மாமியார் கொடுமைகளை மட்டுமே ஊதிப்பெருசாக்கலாம். பல நேரங்களில் நிஜம் அதற்கு எதிரானதும் கூட.  பெண்ணைக்கட்டி கொடுத்தோம். வயதான காலத்தில் ஊரில் காலத்தை ஓட்டினோம் என்றில்லாமல் அடிக்கடி மெட்ராஸ் வந்து அப்பாவின் காதில் மந்திரங்களை ஓதினார் பாட்டி "பாவம். இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நீ படுற கஷ்டம் இருக்கே" என்று மருமகனுக்கு ரத்த கொதிப்பை ஏற்றினார். அவர் மட்டுமா? 

ஊரில் ஒரு சொந்தக்காரன் குடிகெடுக்க அலைகிறான் என்று முன்பு சொன்னேனே அவனும் மெட்ராஸ் வந்து தன்னால் ஆன காரியத்தை சிறப்பாக செய்தான். குடிப்பதற்கு அழைத்துச்சென்று அவரை குழப்பி சந்தோஷம் அடைந்தான். இது போதாது என்று திரையுலகில் கொடிக்கட்டிப்பறந்த நடிகரின் மனைவி "கணபதி, பாத்து நடந்துக்க. சித்தியா வந்தவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும். புள்ளைங்களுக்கு வேலா வேலைக்கு சோறு போட்ராளான்னு கண்காணி" என்று தன் பங்கிற்கு ஆவன செய்தார்(அப்பெண்மணி தற்போது உயிருடன் இல்லை). இந்த தூபங்களுக்கு பிறகுதான் அண்ணாத்தை(எங்கப்பா) சற்று அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்.

பெரியவீட்டு பெண்மணி சொன்னதைக்கேட்டு ஒரு நாள் ஜன்னல் வழியாக மறைந்து கொண்டு இரு பிள்ளைகளுக்கும் தன் மனைவி ஒழுங்காக சோறு போடுகிறாளா என்று உளவு பார்த்தார். இதை பார்த்துவிட்ட என் பெரிய அண்ணன் சைகையால் அம்மாவிடம் சொல்லிவிட்டான். இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை அம்மா. சத்தமாக சில வார்த்தைகள் மட்டும் பேசினார்."உங்களிடம் சொகுசான வாழ்வு கிடைக்கும் என்று தெரிந்து வந்திருந்தால் நீங்கள் இப்படி சந்தேகப்பட ஒரு நியாயம் உள்ளது. எதை செய்ய வேண்டுமென்றாலும் உங்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று கத்தியதை கேட்டு பக்கத்து வீட்டார் வந்து அப்பாவை லெப்ட் ரைட் வாங்கினர். அதில் ஒரு பெண்மணி "உன்னுடன் வாழ்வது கடினம் என்று முடிவு செய்தால் விஷத்தை மூன்று பங்காக்கி பிள்ளைகளுக்கு தந்துவிட்டு  தானும் போய் சேர்வாளே தவிர பாகுபாடு பார்க்க மாட்டாள்" என்று காய்ச்சியதும் அமைதி ஆனார் அப்பா.  

அந்த காலகட்டத்தில்    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். குடிமகன்கள் இப்போது இருப்பது போல நினைத்தவுடன் சோமபான கடைக்கு சென்று  குடித்துவிட்டு ரோட்டில் மட்டையாகி விட முடியாது. அரசாங்கம் பெர்மிட் கார்டை தரும். அதில் வாரம் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் மேலும் சில கண்டிஷன்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்ம ஆளு (நைனா) ஏற்கனவே அந்த கார்டை பொறுப்பாக வாங்கி வைத்திருந்தார். ஒருநாள் சக மதுவடிமை ஒருவர் "உன்னால முடிஞ்சா 2 பெர்மிட் கார்ட் வாங்கு பாக்கலாம்" என்று அசத்தலான, எங்கள் குடும்பத்தில் தீயை வைக்கும் சவாலை முன் வைத்தார். நம்மாளும் சவாலை ஏற்றுக்கொண்டார். என்னா நட்புடாங்கப்பா!! 

தொடரும்.................
...........................................................................................


...............................
My other site:
agsivakumar.com
...............................


3 comments:

RVS said...

அன்பின் சிவா!

படிக்க மிகவும் சோகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அசால்ட்டாக அதைச் சொல்லிச் செல்லும் விதம் பிடித்திருக்கிறது.

ஆண்டவன் உங்களுக்கு பலமான இதயத்தைக் கொடுத்திருக்கிறான்.

வாழ்க!

MANO நாஞ்சில் மனோ said...

மனம் தவியா தவிக்குதுய்யா உங்கள் கடந்த காலத்தை நினைத்தால்...!!!

ஆமினா said...

உங்க தந்தை மட்டுமல்லாமல் உங்க அம்மாவை சம்மந்தமில்லாதவர்களும் தன்பங்குக்கு வருத்தப்படுத்தியிருக்கிறார்கள் :-(

அம்மாவின் மனபக்குவம் நினைக்கும் போது வியப்பா இருக்கு...

Related Posts Plugin for WordPress, Blogger...