CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 2, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 3சென்ற பாகத்தில் குறிப்பிட்ட என் தந்தையின் முதலாளி வேறு யாரும் அல்ல. நடிகர் சிவாஜி கணேசன். இவர் நடிப்பினால் கவரப்பட்டு சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து மெட்ராசுக்கு வந்திறங்கினார் என் தந்தை. அவர் வீட்டிலேயே வேலையும் கிடைத்தது. சில வருடங்களில் சிவாஜி வீட்டாரின் நன்மதிப்பையும் பெற்றார். சிவாஜியின் நிஜப்பெயர் கணேசன். அதேதான் என் தந்தையின் பெயரும். எனவே கணேசன் என அழைக்க விரும்பாமல் இவர் பெயரை கணபதி என அழைக்க ஆரம்பித்தனர். வட்டாரத்திலும் அப்பெயரே நிலைத்துப்போனது. முதலில் திருமணம் செய்த பெண் இதயநோயால் இறந்து விட, இரண்டாம் தாரமாக என் தந்தைக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டார் என் தாய்.

அதை செவ்வனே செய்த பெருமை என் பாட்டியை சேரும்(என் தாயின் அம்மா). "உன் ஒரே  மகளை தெரிந்தே பாழும் கிணற்றில் தள்ளாதே. அவளுக்கு சகோதரர்கள் கூட இல்லை. நாளை மணம் முடிந்து மெட்ராஸுக்கு தனியாக சென்று அவள் அனுபவிக்கப்போகும் கொடுமைகளை இப்போதேனும் தடுத்து விடு.அந்த பட்டணத்தில் சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள ஓரிருவரைத்தவிர எவரும் இல்லை" என ஊரார் பலமுறை சொல்லினர். அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் நினைத்ததை நிறைவேற்றினார் என் பாட்டி. அதற்குப்பின் பல்லாண்டு காலம் நாங்கள் அனுபவித்த சித்ரவதைகளை கண்டு "ஐயோ..நான் தவறு செய்து விட்டேன்" என இன்று வரை புலம்புகிறார் அந்த மூதாட்டி. இன்று புலம்பி என்ன பயன்? சில நிமிடங்கள் நிதானமாக யோசித்து இருந்தால் அன்றே இந்த பாவச்செயலை தடுத்து இருக்கலாம்.     

பொதுவாக கிராமத்து பெண்கள் மணம் முடித்து நகரத்தில்,அதுவும் தலைநகரத்தில் தன் வாழ்வை தொடங்கப்போகிறோம் என்று நினைத்தால் மனதில் ஏற்படும் பூரிப்பிற்கு அளவிருக்காது. நல்ல கணவன், புதிய மற்றும் நவீன சூழல், தன்னை மேம்படுத்திக்கொள்ள கிடைக்கும் வாய்ப்பு என மகிழ்வுடன் நகரத்தில் கால் எடுத்து வைக்கும் பெண்கள் பலருண்டு. ஆனால் அதற்கு நேரெதிராக ஏதேனும் ஒரு சந்தோஷத்திற்கான அறிகுறி கூட இன்றி தனது தலைநகர பயணத்தை துவக்கினார் என் தாய். 

குடிக்கு பழக்கப்பட்ட கணவன், அவனிடம் இருந்து மாத சம்பளம் சரியாக கைக்கு வர வாய்ப்பே இல்லை,  எந்த பிரச்னை வந்தாலும் ஆதரவுக்கு ஓடோடி வர சொந்தமில்லை, நடுரோட்டில் போட்டு அடித்தாலும் கேள்வி கேட்காத பெருநகரம், கணவனின் முதல் தாரம் பெற்றுப்போட்ட இரண்டு ஆண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பெருஞ்சுமை, அதிலும் ஒரு பிள்ளை நோய் வாய்ப்பட்டவன். அனைத்திலும் மேலாக, அந்த பிள்ளைகளுக்கு சிறு அசௌகர்யம் ஏற்பட்டு விட்டால் கூட "பெத்தவ இல்லையே. சித்திதான. அதான்" என்று சர்வசாதாரணமாக வார்த்தைகள் உதிர்க்கும் விஷ நாக்குகள். ஆஹா, என் தாய்க்கு திருமணப்பரிசாக கிடைத்த செல்வங்கள்தான் எத்தனை? போதும் கடவுளே. 

இத்தகு சோதனைகள் இருக்கும் என்று ஓரளவு புரிந்து கொண்டே தன் மண வாழ்வை தொடக்கினாலும், ஏதேனும் ஒரு வடிவில் வாழ்க்கை சீர்பட வாய்ப்புண்டு என சிறு நம்பிக்கை கொண்டிருந்தார் என் தாய். அது மட்டும் நடக்க வாய்ப்பே இல்லை என காலப்பேய் விஸ்வரூபம் எடுத்து கொக்கரித்தது. அசதிக்கு சற்று ஓய்வெடுக்க கூட நேரமின்றி நீண்ட சோதனை ஓட்டத்திற்கு தயார் ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி தனது பயணத்தை துவக்கினார்.

வரவேற்றது மெட்ராஸின் புகழ்பெற்ற ஏரியாவான தி.நகர். சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்திரி, நாகேஷ் எனப்பல திரையுலக ஜாம்பவான்கள் வாழ்ந்த தி.நகரில் தனது ஆட்டத்தை துவக்கியது விதி. பல்லாண்டு காலம் விதியின் பேய் ஆட்டத்திற்கு களம் அமைத்து கொடுத்த தெருவின் பெயர் - சாதுல்லா தெரு. தி.நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் பர்கிட் ரோட்டை ஒட்டி சில தெருக்கள் தள்ளி இருக்கிறது அந்த சாதுல்லா தெரு. அதே பெயருடன் இன்றும். 

தொடரும்......
........................................................

...................................
My other site:
agsivakumar.com
...................................


5 comments:

saidaiazeez.blogspot.in said...

சந்தோஷத்தை பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும்.
சோகத்தைப் பகிர்ந்தால் அது பாதியகும்.
உங்கள் சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
கடவுள் மிகப்பெரியவன்.
நம்மால் சுமக்க முடியாத பாரத்தை நம்மீது அவன் வைப்பதில்லை. அஞ்சலி படத்தில் வரும் வசனம் போல... அந்த பாப்பாவுக்கு ஒரு நல்ல அம்மா, அண்ணன், அக்கா தேவை என்பதால் நம் வீட்டில் பிறக்க செய்துள்ளார்...
இப்படித்தான் நம்மை தேற்றிக்கொள்ளவேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

இதை படித்துவிட்டு பெரும் துயரம் நெஞ்சை அடைகிறது மக்கா...

சென்னை பித்தன் said...

சிவகுமார்!எத்தகைய துயரத்தைச் சந்தித்திருக்கிறீர்கள்.

செங்கோவி said...

நண்பா, இன்று தான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது..அம்மா மேல் மரியாதை பொங்குகிறது..

ஆமினா said...

குடிகாரர் என தெரிந்தே பாட்டி இசைந்தது கண்டு மிகவும் வருத்தம் :-( கல்யாணம் ஆனா சரியாகும் என்ற வாதம் வைக்கப்பட்டாலும் இளமையில் அவர் சுமக்க வேண்டிய பல சுமைகளை கூட கருத்தில் கொள்ளாமல் விட்ட பாட்டியின் செயல் கண்டு ரொம்பவே வேதனை :-(


இவற்றிற்கெல்லாம் தண்டனையாக காலம் முழுவதும் கொடுமைகளை பார்த்தாகவேண்டிய வேதனையான நாட்கள்....

குடிப்பவன் தன்னை மட்டும் அழிப்பதோடல்லாமல் தன்னை சுற்றியுள்ளவர்களையும் அழித்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்? சம்மந்தமே இல்லாமல் அடுத்தவனின் பிழைக்கு அவனை சார்ந்தவர்கள் தண்டனையை ஏற்பது எத்தகைய மோசமான விஷயம்? :-((

Related Posts Plugin for WordPress, Blogger...