CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 31, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 2100% உண்மைச்சம்பவங்களை கொண்ட இத்தொடரை எழுத சில மாதங்களுக்கு முன்பே எண்ணியபோதும் அதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்துள்ளது. சமீபத்தில் நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் கூட தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அசுர வேகத்தில் பரவிவரும் மதுப்பழக்கம் குறித்து சில வார்த்தைகள் பேசினேன். அப்போது நண்பர் நரேன் 'இதை உங்கள் பதிவில் சொல்லலாமே?' என்று கூறினார். இப்போது எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த சந்திப்பில் கூட ஒரு சில நண்பர்கள் நான் சொல்ல வந்ததை சற்று வேறுவிதமாக புரிந்து கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் தீர்க்கமாக சொல்லிக்கொள்வது இதுதான். குடிப்பவர்களை திருந்த சொல்லி பிரச்சாரம் செய்யும் சமூகப்பாதுகாவலன் வேடம் பூண்டு கொள்வது என் நோக்கமல்ல. 'குடிக்காதே' என்று பிறரின் உரிமையில் எடுத்தவுடன் தலையிடலும் தவறு என்பதையும் நன்கறிவேன். தயவு செய்து சக மனிதர்களுக்கு தொந்தரவு செய்யாமல் இருங்கள் என்பதே எனது கோரிக்கை.

இதோ...சமூகத்தில் நல்ல நிலையில் இருந்து மெல்ல மெல்ல மதுவிற்கு அடிமையாகி இறுதியில் அதற்கே இரையான எனது தந்தையின் கதை. என் தாய் சொன்னதை இப்பதிவு தொடங்கி அடுத்த சில பதிவுகள் வரை பகிர்கிறேன்.

தமிழக கலைத்துறை வரலாற்றில் நீங்காமல் நிலைத்து நிற்கும் வண்ணம் பெரும்புகழ் பெற்ற ஒருவர் மீது கொண்ட அன்பினால் சொந்த ஊரை விட்டு மெட்ராஸ் வந்தடைந்தார் என் தந்தை. அவரிடமே காரோட்டியாகவும் வேலைக்கு சேர்ந்தார். சில வருடங்களில் நேர்மையான தொழிலாளி எனும் பெயரையும் பெற்றதோடு மட்டுமின்றி தனக்கென சொந்தமாக ஒரு அம்பாசிடர் காரையும் வாங்கினார். எங்கள் வாழ்வை புரட்டிப்போட்டதில் இந்த காருக்கும் முக்கிய பங்குண்டு.

1970 கால கட்டத்தில்  காரோட்டி ஒருவர் சொந்த வாகனம் வைத்திருப்பது பெரிய அந்தஸ்தை தந்தது. மெட்ராசில் இப்படி ஒரு மதிப்பு என்றால், சொந்த ஊரில் சொல்லவா வேண்டும். ஊருக்கு செல்கையில் எல்லாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் சொந்தங்களும் 'அந்த பிரபலத்திடம் வேலை செய்கிறார் இவர். சொந்த வாகனமும் வைத்துள்ளார்' என்று வியப்பு மேலிட பேசுவார்களாம். இப்படி ஒரு நிலையில் என் தந்தை இருக்கையில் பொறாமை எனும் பிசாசு சிலர் மனதில் குடிகொள்ளாமல் இருக்குமா? அப்படி ஒரு நல்லவர் எங்கள் நெருங்கிய சொந்தத்தில் இருந்தார்.

லைட்டா குடி. தப்பில்ல:  

திருமணத்திற்கு முன்பு வரை வெகு அரிதாக குடித்த என் தந்தைக்கு அந்த வாசனை மேலும் பழக்கப்பட தூண்டுகோலாய் இருந்தவன் அந்த பொறம்போக்கு. என் பெற்றோரின் திருமண நாள் அன்று காலை கூட சிறிய எவர் சில்வர் வாளியில் சாராயத்தை நிரப்பி தந்தையை குடிக்கச்சொல்லி வற்புறுத்தி அதில் வெ(ற்)றியும் பெற்றான். சொந்தக்காரனோ அல்லது நண்பனோ ஒருவனை அடிக்கடி வற்புறுத்தி குடிக்க சொல்வதற்கு முக்கிய காரணங்களில் கீழ் சொன்ன இரண்டும் முக்கியமானது என்பது எனது கணிப்பு: ஒன்று தன்னை விட ஒரு படி மேலே போய் விட்டவனை பள்ளத்தில் தள்ள விரிக்கும் சூழ்ச்சி வலை. மற்றொன்று தனியாக குடிக்க திராணி இன்றி 'கம்பனி' எனும் பெயரில் வீட்டில் இருப்பவனை வெளியே அழைத்து ஊற்றிக்கொடுத்தல்.

புத்திசாலிகள் சிலர் இடைப்பட்ட காலத்தில் சுதாரித்துக்கொண்டு அந்தப்பேயை விரட்டி விடுவர். ஆனால் பல பேர் அந்த வஞ்சக குணம் அறியாமல் மதுவிற்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து விடுவர். அதில் இரண்டாவது ரகம்தான் என் தந்தை. தன் சொந்தக்காசை செலவு செய்து அப்பாவிற்கு ஊற்றிக்கொடுப்பானாம் அந்த நல்லவன். ஆனால் அவன் மதுவைத்தொட மாட்டான். அவனைச்சொல்லி குற்றமென்ன? இவருக்கு எங்கே போனது புத்தி?

என் நண்பர்கள் அவ்வப்போது "வாடா பாருக்கு போலாம்" என்று அழைக்கையில் எல்லாம் "தாராளமாக போய் வாருங்கள். நான் வரவில்லை" என்று கூறுவேன். அதற்கு அவர்கள் "சும்மா வாடா. நாங்க எல்லாரும் என்ன மொடாக்குடிகாரங்களா? லைட்டா குடிப்போம் அவ்ளோதான்" என்று உபதேசம் செய்வார்கள்.  அவர்கள் வீட்டில் குடியடிமை ஒருவன் இல்லாமல் இருக்கும் வரை என் நிலையை உணர வாய்ப்பில்லை.

முதல் சிப்பை உறிஞ்சும் ஒவ்வொருவனும் 'நாம் குடிக்கு அடிமையாகி சுயம் இழந்து குடும்பத்தினரை தீரா இன்னலுக்கு ஆளாக்க வேண்டும்' என்று சபதம் ஏந்தி குடிக்க ஆரம்பிப்பதில்லைதான். ஆனால் ஒரு குடும்பம் சிதைவதற்கான ஆரம்ப புள்ளியே அந்த முதல் 'சிப்'பாக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே தகப்பனால் பட்ட பாட்டை உணர்ந்த ஒருவன் அந்த கருமத்தை எப்படி தொடுவான்???

தொடரும்........
.............................................................

...............................
My other site:
agsivakumar.com
..............................
  


12 comments:

Unknown said...

உங்களின் குடும்ப உதிரத்தை உறிஞ்சிய உக்கிரத்தை உரைத்தீர்கள். உள்ளம் உறைந்தது.

நிச்சயமாக நம்மில் ஒழுக்கம் குறைந்துகொண்டு வருகிறது. தவறு செய்ய நம்மில் பலர் அஞ்சுவதில்லை.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள்...
குடித்துவிட்டு பாடம் நடத்துகிறார்கள்...
குடித்துவிட்டு வேலைக்கு வருகிறார்கள்...
குடித்துவிட்டு படிக்க செல்கிறார்கள்....
குழந்தை பிறந்தாலும் குடிக்கிறார்கள்...
யாராவது செத்தாலும் குடிக்கிறார்கள்...

முன்னேயெல்லாம் குடிப்பதற்கு ஊரைவிட்டு வெளியில் ஒதுக்குபுறமாக தேடி அலைந்து சென்றார்கள். இப்போது மூலைக்கு மூலை சுலபமாக கிடைக்கிறது.

நாளைய சமூதாயமே!!!
"வரும் முன் காப்போம்"

இளைஞர்களே எது வரும் முன் எதை காப்போம் என்பதை உங்களுக்கு நான் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நீங்கள் என்னைவிட அறிவாளிகள்

rajamelaiyur said...

//
லைட்டா குடி. தப்பில்ல:
//
லைட்டா கத்தியால குத்தினா தப்பில்லையா ?

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

சென்னை பித்தன் said...

//ஆனால் ஒரு குடும்பம் சிதைவதற்கான ஆரம்ப புள்ளியே அந்த முதல் 'சிப்'பாக இருக்கும் பட்சத்தில்,//
கம்பெனிக்கு என்று கொஞ்சமாக ஆரம்பிக்கும் அதுவே ,அவனை விழுங்கும் அவலத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தொடருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வேதனையான விஷயம்தான் நண்பா...

இளம் பரிதி said...

nalla iruku... innum strong dose words pottu eluthunga...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடருங்கள் நண்பா.....!

kanagu said...

எனக்கு குடி பழக்கத்தின் நேரடி அணுபவம் இல்லை. ஆனால் ஒருவர் குடிப்பதினால் அவர்களை சுற்றி இருப்பவர்கள் படும் இன்னலை பார்த்திருக்கிறேன்..

உங்கள் பதிவுகள் பலரை சென்றடைந்து பலரும் மாற வேண்டும் என்பதே என் எண்ணம்.

Unknown said...

தொடருங்கள் தலைவா..

Mahi_Granny said...

தொடருங்கள் தம்பி. யாரும் குடியைப் பற்றி பெருமையாய் எழுதினால் எரிச்சல் வரும் . . பாதிக்கப் பட்ட நீங்கள் எழுதுவதை நிறையப் பேர் வாசிக்கட்டும்.

ஆமினா said...

//ஒருவனை அடிக்கடி வற்புறுத்தி குடிக்க சொல்வதற்கு முக்கிய காரணங்களில்//

நான் மட்டுமா குடிக்கிறேன்? ஊர்ல எல்லா பயல்களும் இப்படி தான் " என சொல்லி சமுதாய பார்வையில் தப்பிக்க இதுவும் ஒரு வழி அவர்களுக்கு!

ஒரு முறை தொட்டாலே தன்னை தொடரும் நிழல் போல் ஆகிவிடுகிறது இந்த குடியும் :-(

காலை நடைபயணத்தின் போது சாலையின் ஓரத்தில், குப்பை மேட்டில், நாய்களுடன் படுத்திருக்கும் ஆட்களை கண்டால் கோபம் தான் வருகிறது (இரவு குடித்துவிட்டு மூளை செயலிழந்து போய் விழுந்த இடத்தில் கிடப்பவர்கள்). நிதானத்தில் இருக்கும் போது ஒரு முறை போட்டோ எடுத்து அவனுக்கே காட்டிவிட தோன்றும். இதையெல்லாம் தெரியாமலா டாஸ்மாக்கில் நுழைந்திருப்பார்கள்????

மனதை பதற வைக்கும் தொடர் சகோ :-(

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

குடிக்காதே என்று சொன்ன வள்ளுவன் வந்தால் கூட அவன் பிறர் உரிமையில் தலையிடுவதாகச் சொல்லும் ஒரு தறுதலை தலைமுறை உலவும் காலமிது. எல்லாவித போதை வஸ்துக்களும் தடை செய்யப்படவேண்டும் என்பதே திண்ணம். கல்வி போதைப்பொருட்களின் தீமையை கற்பிக்கத் தவறுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது,

Related Posts Plugin for WordPress, Blogger...