ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் மனக்குரங்குகள். எனக்குப்பிடித்த விளையாட்டுப்பொருள் கிடைக்காவிடில் அழுது தீர்க்கச்சொல்கிறது அந்தக்குரங்கு. புதிதாக பள்ளிக்கு செல்கையில் முரண்டு பிடித்து வீட்டு வாசலை தாண்ட வேண்டாமென வேதம் ஓதுகிறது. விலை உயர்ந்த எழுதுகோலை தோழன் வைத்திருந்தால் தன் புராதன கோலை உடைத்துவிட்டு பெற்றோரிடம் போராடி புதிது வாங்கச்சொல்லி எம்பி விடுகிறது. தந்தை வாங்கித்தரும் தின்பண்டத்தை உண்ணுகையில் சகோதரனின் பங்கு சற்றே கூட இருந்தாலும் அதை தட்டி விடவோ அல்லது பிடுங்கித்தின்னவோ கட்டளை இடுகிறது.
தீப ஒளி பண்டிகை முடிந்த மறுநாள் அதிகாலையில் யாரும் இல்லா நேரத்தில் அண்டை வீட்டருகே இருக்கும் வெடித்துப்போட்ட பட்டாசு தாள்களை என் வீட்டருகே இடம்பெயர்க்க சொல்கிறது. தேர்வறையில் பார்த்து எழுத எத்தனிக்கையில் இடது கையால் தாளை மறைக்கும் நண்பனின் கபாலத்தை மைப்பேனா முனையால் குத்திக்கிழிக்கச்சொல்கிறது. தலைவனின் புதிய படத்தை முதல் நாள் பார்க்காவிடில் உனக்கு நரகம் நிச்சயம் என்று கொடுஞ்சாபம் விடுக்கிறது. எழில்மிகு கன்னி ஒருத்தி கண்ணில் பட்டுவிட்டால் உயிர் நண்பனின் உரையாடலைக்கூட புறந்தள்ள சொல்கிறது. அவள் கடந்து சென்றபின் 'நான் சொன்னது சரியா?' என்று ஏதோ ஒரு தலைப்பில் உரையாற்றிய அப்பாவி நண்பன் கேட்டதும் 'என்ன சொன்ன? திரும்ப சொல்லு?' என்று அவனை வெறியேற்ற வைக்கிறது. அவளைப்பார்த்தது சில நொடிப்பொழுதே எனினும் அதற்குள் அவளை காதலித்து, மணமுடித்து இன்புற வாழும் வாழ்வை மாயத்திரை கொண்டு நிரப்புகிறது.
ஐந்தாயிரம் ஊதியம் கிடைத்தால் போதும் அசராமல் வேலை பார்க்கலாம் என்று ஆரம்பத்தில் உத்வேகம் தந்து அதையும் தாண்டி அதிகப்படி சம்பளம் வந்த பின்னும் 'போதாது. இன்னும். இன்னும். இன்னும்' என்று ஆளுயர அட்சய பாத்திரத்தை எதிரில் நிறுத்தி நிரப்பச்சொல்கிறது. இல்லறம், அலுவலகம் இரண்டிற்கும் இடையில் நான் பட்ட பாடு போதுமடா என்று சோர்ந்து விழ நினைக்கையில் 'இனிதான் ஆட்டமே ஆரம்பம்' என்று சொல்லி கால்களுக்கு அடியில் அசுரவேகத்தில் இயங்கும் சக்கரத்தை கட்டிவிட்டு ஓடச்சொல்கிறது.
வார இறுதியில் அரிதாக ஒருமுறை அளவுக்கு மீறி பணவிரயம் செய்துவிட்டு இரவு தூங்குகையில் இதயத்தை கொத்தித்தின்கிறது. சொகுசான உணவகத்தில் உப்பு சப்பில்லா பண்டம் போட்டாலும் கேள்வி கேட்காமல் காசை கட்டிவிட்டு வெளியே வரச்சொல்கிறது.நெருங்கியோர் திருமணத்தில் உணவு பரிமாறுபவன் அறியாப்பிழை செய்தாலும் அனைவர் முன்னும் அவனை ஏசச் சொல்கிறது. 'நாட்டில் இவனும் சரியில்லை. அவனும் சரியில்லை. நீ மட்டுமே யோக்கியன்' என்று இறுமாப்பு கொள்ளச்சொல்கிறது.
மரணம் குறித்த செய்திகளை இதழிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கையில் விரைவாக அடுத்த பக்கத்திற்கோ அல்லது காட்சிக்கோ மாறச்சொல்கிறது. அன்றொரு நாள் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த வாகனம் முட்டித்தள்ளிய வேகத்தில் தலை நசுங்கி சிகப்பாறு ஓட என்னுடன் பிரயாணித்த நண்பன் மரணத்தை தழுவியதைக்கண்டு பதை பதைத்த தருணத்தில் எல்லா இடத்திலும் தேடினேன். அதோ அங்கே... ஓசையின்றி ஒடுங்கிக்கிடக்கிறது ஒரு மூலையில்......என் மனக்குரங்கு!
................................................................................................
...........................................
My other site:
...........................................
4 comments:
really really nice.....
மனிதன் மனமும் குரங்கும் ஒன்றுதான், அது ஆளுக்கு ஆள் தேசத்துக்கு தேசம் மாறுபடுவதில்லை இல்லையா...
மனச்சாட்சி உறங்கும்போதுதானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது?
இலக்கியவாதி ஆயிட்டீங்க... இனிமே உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் நடந்துக்கணும்...
Post a Comment