CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, September 30, 2011

நான் 'MALE' ஜாதிடா - 2
நான் ஏன் அப்படி சொன்னேன்? இப்படி சொல்வதற்கு குறிப்பிட்ட குலம் அல்லது மதம் சார்ந்த புத்தக வாசிப்பை விட, பெரியோர் சொல்லும் அனுபவக்கதைகளை விட முக்கியமானது நாம் நிஜத்தில் உணர்ந்து தெளிதல். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த இடத்தில் நடந்த  நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். புதிதாக பணியில் அமர்ந்த சமயமது. நான் இருந்த அணியில் வேலை செய்யும் அனைவருக்கும் கடும் வேலைப்பளு. எப்போதும் பரபரப்பாக இயங்கும் நண்பர்கள்.  பொதுவாக முதல் ஓரிரு வாரங்கள் மட்டும் புதுமாப்பிள்ளை போல நம்மை உபசரித்து, அடிக்கடி எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்  சீனியர்கள். நாட்கள் நகர நகர 'நீயா ஆராய்ச்சி செஞ்சி தப்ப எப்படி திருத்தலாம்னு பாரு' என்று தொங்கலில் விட்டு விடுவார்கள். 

அப்படி ஒரு இக்கட்டான நிலை எனக்கும் வந்தது. சில வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்று தெரியாமல் மணிக்கணக்கில் மண்டை காய்ந்து கொண்டிருந்தேன். இப்படியே போனால் வேலைக்கு வெடி வைத்து விடுவார்கள் என மனம் மணி அடித்தது. அதை புரிந்து கொண்ட சீனியர் ஒருவர் எனக்கு உதவ ஆரம்பித்தார். படிப்படியாக தவறுகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு அவர் குடுத்த விலை மிக அதிகம். தனது வேலைப்பளு பற்றி கவலைப்படமால் பல வாரங்கள் எனக்கு நீண்ட நேரம் ஒதுக்கி மிகவும் உதவியாக இருந்தார். இதனால் அவர் தனது டார்கெட்டை அடிக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.  நிர்வாகம் அவரை எச்சரிக்க தொடங்கியது. அப்போதெல்லாம் என் மனது படபடக்கும். எனக்கு உதவி செய்யப்போய் தன் வேலையை சரிவர செய்ய இயலாமல் இப்படி அவர் அவமானப்பட நேர்கிறதே என்று. எனக்கு உதவி செய்ய அவரைத்தவிர வேறு நபர்கள் இருந்தனர். ஆனால் அவர்களை விட  எனக்கு சுயநலமின்றி உதவி செய்தார் இந்த குறிப்பிட்ட நண்பர்.  

அதுபோலவே இன்னொரு நபரும் வேறொரு புதிய அணிக்கு நான் மாற்றப்பட்ட நேரத்தில் வேலைசார்ந்த சந்தேகங்களை பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். சிலசமயம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல். என்னைப்பொறுத்தவரை அவ்விருவரும் ஆபத்பாந்தவர்கள். பொதுமொழியில் பிராமின்ஸ். இன்னும் சுருக்கி விளித்தால் ஐயர். எனக்கு உதவி செய்ததால் அவர்கள் பெற்றது ஒன்றுமில்லை. இழந்தது அதிகம்.மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் எனும் எனது ஸ்திரமான எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தன இத்தகு நிகழ்வுகள்.   ஏன் ஒருசாரார் மட்டும் இன்றும் ஒட்டுமொத்த பிராமணர்களையும் இழிவாக  பேசிவருகிறார்கள்? அவர்களை இழிவு செய்வதில் தமிழ் சினிமா இன்றுவரை பெருந்தொண்டு ஆற்றி வருகிறது என்பதை  மறுக்க இயலுமா?

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவனை பள்ளி கழிப்பறை சுத்தம் செய்ய பணிக்கும் கேடுகெட்ட ஆசிரியனை எந்த செருப்பால் அடிப்பது? இதற்கே இன்னும் விடை கிடைக்காதபோது இந்தியா வல்லரசு ஆகி எதை கிழிக்கும்?
      
                                                                   
நண்பர்களே, எனக்கு நெருக்கமாக இருக்கும் மலையாளி நண்பர் ஒருவரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வப்போது பணிசார்ந்த ஆலோசனைகளை தந்து கொண்டிருக்கும் அன்பான மனிதர். 'இப்படித்தான் முதல்ல இனிக்க இனிக்க பேசுவாங்க. அப்பறம் உனக்கு பம்ப் அடிப்பாங்க' என்று ஒரு குரல் ஒலிக்கலாம். மன்னிக்க வேண்டும். அவரும் நானும் வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள். ஆனால் இன்றுவரை இனிதாக தொடர்கிறது எங்கள் நட்பு. இன்னொரு வகையறாவை சேர்ந்தவன் நம்மை பிழைக்க விடமாட்டான் என்று சில 'நல்லவர்கள்' மூளைச்சலவை செய்வதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு நம்பப்போகிறோம் நண்பர்களே?

அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு நம் வாழ்வினை மேம்படுத்திக் கொண்டால் என்ன? 'பட்ட மேற்படிப்பு படித்தே தீர வேண்டும். அந்த படிப்பின் துணையுடன் அயலகம் சென்று பொருள் ஈட்ட வேண்டும். சிறுபிராயம் முதலே படிப்பு தவிர இன்னபிற கலைகள் ஒன்றிரண்டை கற்றுக்கொள்ள வேண்டும்'. இவற்றை விடாப்பிடியாக கடைப்பிடித்து வரும் பிராமணர்கள் பற்றி அனைவரும் அறிவோம். அவர்களைப்பார்த்து சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வதில் என்ன தவறு? 

அயலகம் சென்றாலும் கேரளத்தை சேர்ந்த நண்பனை வேலை செய்யுமிடத்தில் கண்டால் முதல் நாளே நட்பு பாராட்டி ஒன்றுபடுவதை மலையாள மக்களிடம் காண்கிறோம். காலை ஆறு மணிக்கு நமது டீக்கடைகள் சோம்பல் முறித்து திறப்பதற்குள், அதிகாலை நான்கு மணிக்கே கடைதிறந்து கல்லா கட்டும் சேட்டனின் சுறுசுறுப்பை கண்கூடாக பார்க்கிறோம். தீப்பெட்டி சைசில் டீக்கடை இருந்தாலும் வெள்ளை டைல்ஸ் போட்டு பளீரென வைத்திருக்கும் நாயர்கள் பலரை நாம் கண்டதில்லையா?  அதுபோல நம்மிடம் இருந்து அவர்களும், அங்கிருந்து நாமும் கற்க வேண்டிய விஷயங்கள் கொட்டிக்கிடக்கையில் எங்கிருந்து வந்து தொலைகிறது இந்த ஜாதி/மத/மொழி வெறி?

'அவர்களை நம்பாதே. நச்சுப்பாம்பினும் கொடியவர்கள்' என்று இந்தக்கணினி யுகத்திலும் இளையோர் நெஞ்சில் விஷம் பாய்ச்சுவதேன் பெரியோர்களே? 

நண்பா..தற்கால பணிச்சூழலில் SURVIVAL OF THE MOST FITTEST எனும் ஜெபச்சொல் மட்டுமே நம் இதயத்தில் ஒலிக்க வேண்டும். மனிதர்களை வர்ணம், மொழி, மதம் அல்லது ஜாதி என்று தரம்பிரித்து பார்த்துக்கொண்டிருந்தால் இலக்கை நோக்கி நீ ஓடுவதென்ன. நடக்கக்கூட இயலாது. 

''இவ்ளோ பேசறியே. முதல்ல நீ என்ன ஜாதின்னு சொல்லுடா?'' என்று கேட்கும் சக சிட்டிசன்களுக்கு இருக்கவே இருக்கிறது அரதப்பழசான, மங்காப்புகழ் வாய்ந்த பஞ்ச்: "ஒலகத்துல இருக்குறது ரெண்டே ஜாதிதான். ஒண்ணு பெண் ஜாதி. இன்னொன்னு ஆண் ஜாதி. அதால நான் MALE ஜாதிடா!!"  

இறுதியாக: 

ஜாதி, மதங்கள் குறித்து ஆயிரக்கணக்கான விளக்கங்கள் நாட்டில் இருப்பினும், ஒரு மனிதனின் செய்கையை வைத்து அவனை பற்றி விமர்சிக்காமல் எடுத்த எடுப்பிலேயே அவனை இனம் பிரித்து பார்க்கும் முட்டாள்தனத்தை மையமாக வைத்தே இப்பதிவை எழுதி உள்ளேன். அதைத்தாண்டியும் நான் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதத்திற்கு கொடி பிடிக்கிறேன் என்று எவரேனும்  எண்ணினால் அது என் தவறல்ல. "அதெல்லாம் நம்ப முடியாது. நீ கண்டிப்பா மலையாளி. அப்டி இல்லனா பிராமின்" என்று சந்தேகப்படும் தாமஸ் ஆல்வா எடிசன்கள் தாரளாமாக இல்லத்திற்கு வந்து என் ஜாதிச்சான்றிதழை உற்று நோக்கலாம். சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.

விசாரணைக்கு/பஞ்சாயத்திற்கு நான் ரெடி:  +91 98416 11301.

மேன்மை தங்கிய பெரியோர்களே, தயவு செய்து இனிவரும் இளைய தலைமுறை சகோதரத்துவத்துடன் முன்னேற வழி செய்யுங்கள். வேற்றுமைத்தீயை பற்றவைத்து குளிர் காய வேண்டாம். அப்படியே நினைத்தாலும் உமக்குள் இருக்கும் பேயை விரட்டி அடிக்க தயங்காது இந்த இளையோர் படை.
.....................................................................................

  
..................................

My other site:

..................................
  

                                                                      

Thursday, September 29, 2011

நான் 'MALE' ஜாதிடா!


எச்சரிக்கை: 

ஜாதி/மொழி/மத/நிறவெறி பிடித்த மிருகங்கள் எல்லாம் யு டர்ன் அடித்து ஓடி விடுங்கள். நெஞ்சில் ஈரமும், தூய எண்ணங்களும் கொண்ட உள்ளங்கள் மட்டுமே நண்பர்களாய் இருத்தல் வேண்டும் என என்னும் இளைஞனின் இதயக்குமுறல் இது. 

                                                                     
நிறம்:
''ஓ மை காட். தமிழ்நாட்ல முக்காவாசி பேர கருப்பாவும், மாநிறமாவும் கலர்   அடிச்சி பூமிக்கு அனுப்பிட்டு,  என்ன மாதிரி ஒரு செட்டை மட்டும் எதுக்கு கொஞ்சம் வெள்ளையா படச்ச" என்று அவ்வப்போது கேட்கத்தோன்றும். ஏனெனில் ரோஸ்/கோதுமை/வெள்ளை உளுவை/செகப்பு ஆகிய நிறங்கள்  தமிழனின் நிறம் அல்ல என்பது சிலரின் அரிய கண்டுபிடிப்பு. என்னை புதிதாக சந்திக்கும் ஆட்கள் பொதுவாக கேட்கும் கேள்வி: "நீங்க பிராமிணா?" "நீங்க சேட்டா?"  "நீங்க முஸ்லிமா?" ஸ்ஸ்ஸ்...எத்தன தடவ சொல்றது: "இல்லீங்க. இல்லீங்க". இந்தக்கேள்விக்கு நான் பதில் சொன்ன உடனே பெட்ரோல் விலை ஒரு ரூபாயாவது குறையும்னா சொல்லுங்க. எத்தனை தடவைன்னாலும் பதில் சொல்றேன். எங்க இருந்துதான் கெளம்பி வர்றாங்களோ....         

ஒருத்தன் வேற ஜாதி, மதம், மொழிய சேந்தவனா இருந்தா போதும். அவன் நல்லவனா கெட்டவனான்னு பகுமானமா பகுத்து அறியாம நக்கல் அடிக்கறது. "இந்த க்ரூப் இப்படித்தான் இருக்கும். உஷாரு" அப்டின்னு கி.மு. 007 ல ஏதோ ஒரு உத்தம ஆத்மா சொல்லிட்டு போனதையே புடிச்சி தொங்கிக்கிட்டு இன்னைக்கி வரைக்கும் உலாத்திட்டு திரியுது ஒரு கூட்டம். What a pity வாத்யாரே!     

மதம்:
என்று ஆறாம் வகுப்பில் சேர்ந்தேனோ அன்றே தூக்கி எறியப்பட்டு விட்டன  ஜாதி/மத/மொழி வேறுபாடுகள். என் முதல் நண்பன் பெயர் முசாதிக் நசீர். அடுத்த சில நாட்களில் எங்களுடன் கைகோர்த்தவன் பெஞ்சமின். நானும் முசாதிக்கும் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பெஞ்சமின் வசதியானவன். பள்ளி முடிந்ததும் நித்தம் ஒரு இளநீர் குடிக்க ஏற்பாடு செய்திருந்தார் அவன் தாயார். கடைக்காரரிடம் வாங்கும் இளநீரில் எங்கள் இருவருக்கும் சமபங்கு தந்துவிட்டுதான் குடிப்பான் அவன். அது போல ஏழாம் வகுப்பு படிக்கையில் புதிதாக BSA SLR சைக்கிளை வாங்கிய நாள் முதல் எங்கள் இருவரையும் ஏற்றி இடைவேளை நேரங்களில் மைதானத்தை சுற்றி வருவான்.

முசாதிக் அந்த இளம் வயதிலேயே ரமலான் நோன்பை கடுமையாக கடைபிடித்தான்.  ''உனக்கு பசிக்காதா? எப்படி தாங்கிக்கொள்கிறாய்?" என அவனை நச்சரிப்பேன். நோன்பிருப்பதற்கான காரணங்களை விளக்கி இஸ்லாம் மதம் குறித்தான அறிமுகத்தை எனக்கு தந்தவன் அவன்.  எங்கள் நட்பு நாளாக நாளாக மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. வகுப்பாசிரியர்கள் எங்களை அழைத்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்: "உங்கள பாத்தா பொறாமையா இருக்குடா. எப்பவும் இப்படியே இருக்கணும்". இன்று வரை அவர்களின் ஆசியுடன் தொடர்கிறது அந்த பந்தம். மதவெறி/மதவேறுபாடு  எனும் விலங்குகளின் பற்களை பிடுங்கி எறிந்தது அந்த நட்பு.

ஜாதி/மொழி: 
தற்போது பத்திரிக்கைகளில் படித்து வரும் அபத்தங்களை கண்டால் அதிர்கிறது இதயம். ஆசிரியர் சற்று அதிகமாக கண்டித்தால் 'ஜாதி பிரச்சினையை கிளப்பி உன்னை காலி செய்து விடுவேன்' என்கிறான் பள்ளி மாணவன். கல்லூரிகளிலும் சில சமயம் வெளிப்படையாக பொங்கி சிதறுகிறது  ஜாதித்தீ. அந்தத்தீ சமீபத்தில் பதிவுலகிலும் கொழுந்துவிட்டு எரிந்தது.

குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்களையும் அவர் தலைவரையும் ஆபாசமாக வர்ணித்து கிண்டல் செய்கிறார் ஒருவர். அத்தோடு விடாமல் இவர் வெறுக்கும் ஜாதி ஆள் ஒருவரை வம்புக்கு இழுக்கிறார். அவரும் உள்ளே புக சண்டை உச்ச கட்டத்தை அடைகிறது. இருவரும் மாறி மாறி நாகரீக எல்லை கடந்து வசைபாடினாலும் ஒரு வசனத்தை மட்டும் நேக்காக சொருகத்தவறவில்லை:"எனக்கு ஜாதி வெறியெல்லாம் கிடையாது. எல்லாரும் எனக்கு சமமே". அட ஆண்டவா! கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கொக்க கோலாவுல எலுமிச்சை சாறு வடியுமாம். தீவிரவாதம், வெப்பமயம், வாகன விபத்து, சுற்றுச்சூழல் சீர்கேடு  என்று உயிருக்கு பாதுகாப்பு இல்லாத யுகத்தில் நம் அடுத்த தலைமுறைக்கு எதை மிச்சம் வைக்கப்போகிறோம் என்று நிச்சயம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சணத்தில் ஜாதிவெறி ஒன்றுதான் பாக்கி. போங்கடா நொன்னைங்களா.
                                                                   
                                                                                                                    
தற்போதைய கணினி யுகத்திலும் சக மனிதனை குலம் அல்லது மொழியை  வைத்து வேறுபடுத்தி பிரிக்க எண்ணும் அரக்கர்களை அண்டவிடாமல் இருப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது என்னைப்போன்ற இளையவர்களுக்கு. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், இருக்கவே இருக்கிறது பேமசான டயலாக்: "மச்சி. பிராமிண் பசங்ககிட்டயும், கேரளா பசங்ககிட்டயும் உஷாரா இரு. காரியம் ஆவனுன்னா உன்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க".  இது என்னடா இப்படி அலாரம் அடிக்கரானுங்க என்று நான் ஆரம்பத்தில் சற்று குழம்பினேன். "என்னடா இப்படி சொல்ற. நான் பழகுன பிராமிண், கேரளா ஆளுங்கள்ள நல்லவங்க இருக்காங்களே. அப்படியெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு சார்பு மக்களை  குத்தம் கண்டு புடிச்சி பழகுறது எனக்கு புடிக்காது". நான் ஏன் அப்படி சொன்னேன்?

நாளை தொடரும்.......
    
......................................................................................................


..................................................
My other Site:

.................................................
Wednesday, September 28, 2011

வானரம் ஆயிரம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் மனக்குரங்குகள். எனக்குப்பிடித்த விளையாட்டுப்பொருள்  கிடைக்காவிடில் அழுது தீர்க்கச்சொல்கிறது அந்தக்குரங்கு. புதிதாக பள்ளிக்கு செல்கையில் முரண்டு பிடித்து வீட்டு வாசலை தாண்ட வேண்டாமென வேதம் ஓதுகிறது. விலை உயர்ந்த எழுதுகோலை தோழன் வைத்திருந்தால் தன் புராதன கோலை உடைத்துவிட்டு பெற்றோரிடம் போராடி புதிது வாங்கச்சொல்லி எம்பி விடுகிறது. தந்தை வாங்கித்தரும் தின்பண்டத்தை உண்ணுகையில் சகோதரனின் பங்கு சற்றே கூட இருந்தாலும் அதை தட்டி விடவோ அல்லது பிடுங்கித்தின்னவோ கட்டளை இடுகிறது.    

தீப ஒளி பண்டிகை முடிந்த மறுநாள் அதிகாலையில் யாரும் இல்லா நேரத்தில் அண்டை வீட்டருகே இருக்கும் வெடித்துப்போட்ட பட்டாசு தாள்களை என் வீட்டருகே இடம்பெயர்க்க சொல்கிறது. தேர்வறையில் பார்த்து எழுத எத்தனிக்கையில் இடது கையால் தாளை மறைக்கும் நண்பனின் கபாலத்தை  மைப்பேனா முனையால் குத்திக்கிழிக்கச்சொல்கிறது. தலைவனின் புதிய படத்தை முதல் நாள் பார்க்காவிடில் உனக்கு நரகம் நிச்சயம் என்று கொடுஞ்சாபம் விடுக்கிறது. எழில்மிகு கன்னி ஒருத்தி கண்ணில் பட்டுவிட்டால் உயிர் நண்பனின் உரையாடலைக்கூட புறந்தள்ள சொல்கிறது. அவள் கடந்து சென்றபின் 'நான் சொன்னது சரியா?' என்று ஏதோ ஒரு தலைப்பில் உரையாற்றிய அப்பாவி நண்பன் கேட்டதும் 'என்ன சொன்ன? திரும்ப சொல்லு?' என்று அவனை வெறியேற்ற வைக்கிறது. அவளைப்பார்த்தது சில நொடிப்பொழுதே எனினும் அதற்குள் அவளை காதலித்து, மணமுடித்து இன்புற வாழும் வாழ்வை மாயத்திரை கொண்டு நிரப்புகிறது. 

ஐந்தாயிரம் ஊதியம் கிடைத்தால் போதும் அசராமல் வேலை பார்க்கலாம் என்று ஆரம்பத்தில் உத்வேகம் தந்து அதையும் தாண்டி அதிகப்படி சம்பளம் வந்த பின்னும் 'போதாது. இன்னும். இன்னும். இன்னும்' என்று ஆளுயர அட்சய பாத்திரத்தை எதிரில் நிறுத்தி நிரப்பச்சொல்கிறது. இல்லறம், அலுவலகம் இரண்டிற்கும் இடையில் நான் பட்ட பாடு போதுமடா என்று சோர்ந்து விழ நினைக்கையில் 'இனிதான் ஆட்டமே ஆரம்பம்' என்று சொல்லி கால்களுக்கு அடியில் அசுரவேகத்தில் இயங்கும் சக்கரத்தை கட்டிவிட்டு ஓடச்சொல்கிறது. 

வார இறுதியில் அரிதாக ஒருமுறை அளவுக்கு மீறி பணவிரயம் செய்துவிட்டு  இரவு தூங்குகையில் இதயத்தை கொத்தித்தின்கிறது. சொகுசான உணவகத்தில் உப்பு சப்பில்லா பண்டம் போட்டாலும் கேள்வி கேட்காமல் காசை கட்டிவிட்டு வெளியே வரச்சொல்கிறது.நெருங்கியோர் திருமணத்தில் உணவு பரிமாறுபவன் அறியாப்பிழை செய்தாலும் அனைவர் முன்னும் அவனை ஏசச் சொல்கிறது. 'நாட்டில் இவனும் சரியில்லை. அவனும் சரியில்லை. நீ மட்டுமே யோக்கியன்' என்று இறுமாப்பு கொள்ளச்சொல்கிறது.   

மரணம் குறித்த செய்திகளை இதழிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கையில் விரைவாக அடுத்த பக்கத்திற்கோ அல்லது காட்சிக்கோ மாறச்சொல்கிறது. அன்றொரு நாள் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த வாகனம் முட்டித்தள்ளிய வேகத்தில் தலை நசுங்கி சிகப்பாறு ஓட என்னுடன் பிரயாணித்த நண்பன் மரணத்தை தழுவியதைக்கண்டு பதை பதைத்த  தருணத்தில் எல்லா இடத்திலும் தேடினேன். அதோ அங்கே... ஓசையின்றி ஒடுங்கிக்கிடக்கிறது ஒரு மூலையில்......என் மனக்குரங்கு! 
................................................................................................


...........................................
My other site:

...........................................

                         
                                     

Tuesday, September 27, 2011

நான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்


                                                                     
திரும்பி பாக்ரதுக்குள்ள அம்பது வயசு ஆயிடுச்சி. மொத மொதோ ரோட்டோரமா வெறும் இட்லி, தோசை போட்டு வயத்த கழுவுக்கினு கெடந்தேன். அப்பல்லாம் போலீசுஆளுங்கட்சி ஆளுங்களுக்கு மொய் வக்கிறது போதாதுன்னு பொர்க்கி பசங்க வேற எப்பயாச்சும் தண்ணிய போட்டுட்டு வந்து ஓசில துன்ட்டு போற கொடுமையையும் தாங்கிட்டு கெடந்தேன். வெலைய ஓவரா ஏத்தி கோலிக்குண்டு சைசுல இட்லியும், முறுக்குன கர்சீப் ஆட்டமா பொரோட்டாவும் போட்டு ஊர ஏமாத்தாம ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல டிபன் போட்டதால வந்தவங்களே அடிக்கடி வந்து சாப்ட்டு போனாங்க. அதால நிக்குற தள்ளுவண்டில ஏதோ என் வாழ்க்க வண்டி சுமாரா ஓடிச்சி. இப்ப ஒருவழியா சின்னதா ஓட்டல தெறந்து கல்லால குந்திக்கினு கெடக்கறேன். 

என்னதான் கைல காசு பொளங்குனாலும் நம்மளும் நல்லா பட்ச்சி    இருக்கலாமோன்னு அப்பப்ப மனசு அரிச்சிக்கினே கெடக்குது. ஏழுக்கு மேல படிக்க முட்ல. மிஞ்சிப்போனா தினத்தந்தி படிப்பேன். அவ்ளோதான். சிறுசா இர்க்க சொல்லோ உஸ்கோலுக்கு போவாம ஏரியா பசங்களோட சேந்துக்குனு தேட்டரு, பீச்சுன்னு சுத்துனா எங்க உருப்பட்றது. இப்ப அத நெனச்சாலே டென்சனா கீதுப்பா. ஒரு வாட்டி இப்படித்தான்..என் கடைய புதுசா தொறக்க சொல்லோ சாப்பாட்டு ஐட்டம் பேர பெயிண்ட்ல எழுத சொல்லி ஒரு பயகிட்ட வேள கொடுத்தேன். அந்தப்பயல 'காஞ்ச மொளகா கார சட்னி'ன்னு எழுதுடான்னு சொன்னா கம்னாட்டி 'கஞ்சா மொளகா கார சட்னி'ன்னு கிறுக்கி வச்சிட்டான். ரெகுலரா கடைக்கு வர்ற ஏட்டு என்ன தனியா இஸ்துக்குனு போயி செம துருவு துருவிட்டாறு. வெளக்கம் சொல்லி எட்டு ஓசி பொரோட்டாவ அவர் தலைல கட்டி அனுப்புறதுக்குள்ள..யம்மா! 

வூட்டாண்ட கீர செந்திலு பய ஒரு தரம் போன்பில் கட்ற எடத்துல என்ன பாத்துட்டு கேட்டான்: "என்னண்ணா ரொம்ப நேரமா வர்சைல நிக்கறீங்க. கடைல கூட்டம் வர்ற நேரமாச்சே. இதையெல்லாம் ஆன்லைன்ல கட்டி நேரத்த மிச்சப்படுத்துங்கண்ணே". நான் சொன்னேன்: "நல்லா பாரு செந்திலு. நான் ஆண் லைன்ல தான் நிக்கறேன்". அல்லாரும் சிர்ச்சாங்க. ஒண்ணியும் புர்ல எனுக்கு. அப்பால என்ன தனியா வல்சிக்கினு போயி செந்திலு சொன்னான்: "ண்ணா. ஆன்லைன்னா கம்ப்யூட்டர்லயே பில்லு கட்றது. மொபைல் பில்லு, ட்ரெய்ன், தியேட்டர் டிக்கிட்டு அல்லாத்தயும் க்யூல மணிக்கணக்குல நிக்காம பத்து நிமிசத்துல கம்ப்யூட்டர்ல கட்டிக்கலாம்". கேக்க நல்லாத்தான் இந்துச்சி. அப்டியே கம்ப்யூட்டர் வாங்குனாலும் எப்படி வேல செய்றதுன்னு தெரியாது. காலா காலத்துல நாலு வார்த்த சேத்து பட்சி இருந்தா பிஸ்னசையும் சூப்பரா கொண்டு போய்ருக்கலாம். எம்புள்ள பட்ச்சி மேல வர்ட்டும்னு காத்துனு கீரேன்.     

அது இன்னாவோ தெர்ல..உஸ்கோல்ல இங்கிலீசு பாடத்த கண்டாலே வவுத்த கலக்கும். மத்த எல்லாத்துலயும் கவுரதையா 25-க்கு மேலயாச்சும் வாங்கிருவேன். இங்கிலீசுல மட்டும் ரெட்டப்பட மார்க் வாங்க நான் பட்ட பாடு இருக்கே. ஏன் கேக்குற. எர்ம மாடு வய்சாயி கல்யாணம் பண்ணதுக்கு அப்ரமேட்டு கூட சொம்மா இருக்குற நேரத்துல தமிழு, இங்கிலீசு ரெண்டுத்தையும் சுமாராவாவது கத்துனு இருந்துருக்கலாம். கடைய மூடிட்டு வூட்ல போயி டி.வி.ல போட்ட படத்தையே பத்தாவது தபா போட்டாலும் புதுசா பாக் மாதிரி பல்ல இளிச்சிக்கினு பாக்றது இல்லாகாட்டி ரோட்ல நின்னுக்கினு எவங்கிட்டயாவது கட்சிங்கள பத்தி ஆத்துதுன்னு பொழுத வேஸ்ட் பண்ணிட்டேன்.

பையன் சுரேஷு இப்பதான் டெண்த்து  பச்சினு இருக்கான். அவன் தலை எடுத்துட்டான்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். டி.வி. பாக்க சொல்லோ அப்பப்போ இங்கிலீசு சேனல் பக்கமா ஊர்வலம் போவேன். அதுல ஓட்டல் பத்தி ப்ரோக்ராம் போட சொல்லோ அவுங்க இன்னா சொல்றாங்கன்னு ஒண்ணியும் புரியாது. நம்ம தொழில் சம்மந்தமா போட்ற மேட்டர கூட புரிஞ்சிக்க முடியலியேன்னு மனசு அட்சிக்கும். எப்டியாச்சும் எம்மவன ரொம்ப நல்லா படிக்க வச்சி டக்கரா கொண்டு வந்துரனும். என்ன மாதிரி இல்லாம நாலு பேத்துக்கு நல்லா பாடம் சொல்லி குடுக்குற அளவுக்கு எம்மவன் ஒசந்தான்னா அப்பால அவனான்டயே நானும் கொஞ்சம் கத்துக்கலாம்னு காத்துருக்கேன்.  ஏதோ மனசுல இருந்தத ஒன்னான்ட சொல்லனும்னு தோணிச்சி.


நீயும் நம்ம கேசுன்னா சொம்மா இர்க்க சொல்லோ நாலு வார்த்த சேத்து கத்துக்கண்ணே. வர்ட்டா!!
..............................................................................................................................
எக்ஸ்ட்ரா மீல்ஸ்:


                                                                      
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட ஒரு செய்தி. கடந்த ஞாயிறு அன்று  இஸ்தான்புல் நகரில் நடந்த உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது இளம்சிங்கம் தீபிகா குமாரி சீனப்பெண்ணிடம் கடுமையாக போராடி தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். அது மட்டுமா..அடுத்த வருடம் நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று விட்டார் நம்ம தங்கச்சி.  


உலக அரங்கில் போட்டிபோட தகுதி உள்ள இந்திய ஆட்டக்காரர்கள் வறுமைக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல. தந்தை ஆட்டோ ஓட்டுனர். தாய் நர்ஸ். சிறுவயதிலேயே தனது ஊரில்   மாங்காய்களை குறி தவறாமல் அடிப்பதில் கில்லியாம் இந்த தீபிகா. இப்போது உலக அரங்கில் பட்டையை கிளப்புகிறார் இக்குமரி. 


........................................................
My other site:

........................................................Monday, September 26, 2011

எங்கேயும் எப்போதும்


                                                             
என்னதான் பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும், படம் நன்றாக உள்ளதென பலர் பேன்ட் வாசித்தாலும் ஒரு சில நாயகிகள் அந்தப்படங்களில் நடித்து இருந்தால் தியேட்டர்  பக்கம் தலைகாட்டவே கூடாது என்பது எனது தலையாய பாலிசிகளில் ஒன்று. உதாரணம்: த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் சிலர். ஆனால் எங்கேயும் எப்போதும் படத்தில் கிடைத்ததோ டபுள் ட்ரீட். தற்காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் பொடிப்பெண்ணான அஞ்சலியும், அல்டிமேட் ஹோம்லி லுக்குடன் விளங்கும் அனன்யாவும் இணைந்து சரியான பெர்பாமன்சை தந்திருக்கிறார்கள். (நாயகிகளுக்கு) துணை நடிகர்களாக வரும் ஜெய் மற்றும் சரவ் இருவரும் தத்தமது பணிகளை செவ்வனே செய்துள்ளார்கள். 

முக்கால்வாசி படம் முழுதும் செம ப்ரெஷ் ஆன காதல்-கம்-காமடி பூவாசங்களை தியேட்டரில் மணக்க விட்டு அதற்கு அன்பளிப்பாக தொடர் கைத்தட்டல்களை கூடையில் கொத்து கொத்தாக வாங்கிக்கொள்கிறார் இயக்குனர் சரவணன்.  இறுதிக்கட்ட காட்சிகளில் விபத்து குறித்த பிரச்சார நெடி வராமல் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறது இப்படக்குழு.  முதல் தயாரிப்பிலேயே பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து ஜில்லா முழுக்க கல்லா கட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர், எம். மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் சின்ன ஸ்க்ரீன்களில் இருந்து பெரிய ஸ்க்ரீன்களுக்கு இப்படம் மாற்றப்பட்டு மங்காத்தா புகழை சற்று மங்க வைத்து இருப்பதே இதற்கு சாட்சி. 

அனன்யா...சென்னையில் இண்டர்வியூ செல்லும் வழிநெடுக சரவ்வை சந்தேக்கண்ணுடனே பார்க்கும் காட்சிகள். என்ன சொல்ல. மிரளும் மான் விழிகளுக்கு ஒட்டுமொத்த காப்பிரைட்டை வாங்கிவைத்த ஆள்போல அசத்தி எடுக்கிறார். எப்படிம்மா இப்படி? அஞ்சலிக்கு அங்காடித்தெரு படத்திற்குப்பின் சரியான தீனி. சில இடங்களில் ஜெய்யை மிரட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஸ்பீட் எடுக்கிறார். தவிர்த்து இருக்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஜெய் ஸ்கோர் செய்து விடுகிறார். ஜெய்யின் கேரியரில் இந்தப்படம் ஒரு மைல்கல். அஞ்சலி பேசும் வசனங்களில் ஆந்திர வாடை அதிகம். அனன்யா மீதுள்ள அதீதப்பற்றால் இயக்குனர் அஞ்சலியை கோட்டை விட்டிருக்கலாமோ என்னவோ. அவர் என்ன செய்வார் பாவம். அனன்யா அம்புட்டு அழகாக மிரண்டால்/மிரட்டினால்......... 

                                                                   

படம் பார்க்கையிலே இளவட்டங்கள் குடுத்த லைவ் கமண்ட்டுகள்:

* சென்னைக்கு வரும் அனன்யா தன் ஊருக்கு ஒரு ரூபாய் போட்டு லான்ட் லைனில் பேசுகிறார். ரொம்ப நேரமாக. கமன்ட்: "ஒரு ரூபா போட்டுட்டு எப்படிடா இவ்ளோ நேரம் பேசறா?" 

* அஞ்சலி அறிமுகம் ஆகும் காட்சியில் "ஏய். இவ நேர்ல இவ்ளோ வெள்ளை இல்லியே. மேக்கப்பா?"

* மரணம் நிகழ்கையில் நாயகி அழப்போகும் காட்சி வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ஓநாய் போல ஊளையிட்டு அழுதது சில 'விசிலடிச்சான்' க்ரூப். பாவம் விபத்தின் கொடூரத்தை உணராதவரை அவர்களுக்கு எப்படி தெரியும் அதன் வலி. நீங்க ஆடுங்கடா. அந்தக்காட்சியில் தன் நடிப்பின் மூலம் மேலுமோர் உயரத்தை எட்டியுள்ளார் அஞ்சலி. 

சென்னையை சப்போர்ட் செய்து சரவ் சொல்லும் ஒரு வசனம் சூப்பர்ப். சென்னை நகரை மையமாக வைத்து வந்த பெரும்பாலான படங்களில் லோக்கல் ஸ்லாங்கில் பேசும் மக்கள் மட்டுமே சென்னையில் இருப்பதாக ஒரு பிம்பமும் இல்லாவிடில் பப் கல்ச்சரில் புரள்பவர்கள்(ஈசன்), ட்விட்டர்/பேஸ்புக் என சிம்புவின் பாடல் வரிகளில் வாழ்பவர்கள் என வேறுவகையான பிம்பமும் மக்களிடையே முன் நிறுத்தப்பட்டு வந்தன. அதிலிருந்து மாறுபட்டு சென்னை இளசுகள் பற்றிய சில நுணுக்கமான காட்சிகளை பதிய வைத்து இருக்கிறார்  இயக்குனர் சரவணன். சபாஷ். ஆனால் சரவ்வின் அடையாளம் பற்றி தன் அக்காவிடம் அனன்யா போன் போட்டு சொல்வது சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது. 

                                                                         
படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் மற்றும் (காமடி) வசனங்களில் லாஜிக் கலந்த மேஜிக் சாரல்கள் இடைவிடாமல் அடித்து மனதை நனைய வைக்கின்றன. பொதுவாக விமர்சனங்களில் கதை/மொத்த வசனம் அல்லது கிளைமாக்சை சொல்வதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் ஒரு காட்சி அரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அஞ்சலியை பூங்கா அருகே பார்த்ததும் குச்சி ஐஸை வாயில் இருந்து எடுக்க எத்தனிக்கையில் குச்சி மட்டும் கையோடு வர, அப்போது ஜெய் முழிக்கிறாரே. சான்ஸ்லெஸ்!  

லைவ் விமர்சகர்கள்: 

என்னுடன் சேர்த்து நால்வர் படம் பார்த்தோம். நல்ல படம் வந்தால் கூட நக்கல் அடிப்பதை குலத்தொழிலாக வைத்திருக்கும் நண்பன் ஒருவன் "எப்படியோ ஒரு டாக்குமென்டரி படத்த பாக்க வச்சிட்ட" என்று என்னிடம் அங்கலாய்க்க, க்ளைமாக்ஸ் பார்த்து கனத்த இதயத்துடன் இருந்த மற்றொரு நண்பன் படம் எடுத்து ஆடிவிட்டான்: "டேய். உனக்கெல்லாம் உணர்ச்சியே இல்லையா? மவனே இது உனக்கு டாக்குமென்டரியா? படத்துல வருதே அந்த பஸ்சுல உன்ன ஏத்தி அனுப்பிச்சி இருக்கனுண்டா?" என்று ரிவிட் அடித்தான். 

பரவாயில்லை என்னை நம்பி வந்தவனுக்கு நல்ல படத்தை காட்டி உள்ளோம் என்று இதயம் குளிர்ந்தது. ஆனால் மீண்டும் அவன் டேக் ஆப் ஆகி அதே நண்பனை திட்ட ஆரம்பித்தான்: "நீயெல்லாம் மனுஷனாடா. எவ்ளோ எமோசனலா படம் இருந்துச்சி. அதப்போயி..". என்னடா பயபுள்ள மனசு அநியாயத்துக்கு ஈரமா இருக்கே என்று தியேட்டரை ஒரு முறை நோட்டம் விட்டேன். ரைட்டு. பையன் சும்மா கொதிக்கவில்லை. இரண்டு வரிசை தள்ளி இளம் பெண்கள் சிலர் படம் முடிந்து கூட்டம் கலையும் வரை சீட்டில் அமர்ந்து இருந்தனர். அதான் அளவுக்கு மீறி சமூகப்பொங்கல் வைத்திருக்கிறான்.        


எங்கேயும் எப்போதும் - எப்போதாவது அரிதாக!
...............................................................................


............................................
My other site:

...........................................Sunday, September 11, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(11/09/11)


கலர் அப்பளம்: 


"எவருடா அதி..ராமராஜுலு. எனக்கே போட்டியா? சவுத் இந்தியாலோ ராமனும் நானே. ராஜனும் நானே. மைன்ட் இட்"
.............................................................

பால் பாயசம்:

                                                                 
இன்று நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி  பாகிஸ்தானை 4 -2 எனும் கோல்கணக்கில் பம்ப் அடித்து கோப்பையை வென்று உள்ளது. ரெகுலர் டைமில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்ததால் பெனால்டி முறையில் பலத்தை நிரூபிக்க வேண்டியதாயிற்று. நம்ம ஆளுங்க சும்மா வீடு கட்டி அடிச்சிட்டாங்கப்போய்!
.......................................................................... 

இடியாப்பம்:  

தாய்க்குலங்க மெகாசீரியல் பாக்கும்போது கணவன்மாருங்களுக்கு ஏதோ கால் வயித்து கஞ்சியாவது குத்துமதிப்பா தட்டுல விழும். இப்ப அரசு கேபிள் வந்ததுக்கு அப்பறம் மெகா எல்லாம் மாயமா போனதால கொந்தளிச்சி போயி இருக்காங்க நம்ம லேடீஸ். தயவு செஞ்சி இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க ஜெ மேடம். பாவம் ஆம்பளைஸ். பசி பொறுக்க மாட்டாங்க. 
...............................................................

அதிரசம்:

நம்மள பாக்குற இந்நாட்டு மன்னர்கள் எல்லாம் "என்னப்பா சாப்டியா"ன்னு பொதுவா கேக்குறது வழக்கம். எந்திரன் படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சி, ஆளாளுக்கு "எந்திரன் பாத்தியா? இன்னுமா பாக்கல?" அப்டின்னு சொல்லி கொலையா கொன்னாங்க. கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். இப்ப என்னடான்னா வேல செய்ற எடம், கேண்டீன், பாத்ரூம்னு எங்க பாத்தாலும் 'மங்காத்தா பாத்தியா? மங்காத்தா பாத்தியா?". முடியல. நான் இன்னும் அந்த படத்த பாக்கல. பாக்கல. பாக்கல. "டேய்..நீ விஜய் ரசிகனா?" அப்டின்னு யாரும் டேக் ஆப் ஆயிடாதீங்க. டிக்கட் வாங்க காசு இல்லப்பா...!
.................................................................

காரக்கொழம்பு: 

                                                பெடரர் -    நடால் -  டோஜோவிக் 

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறந்தது. உலக நம்பர் 3 பெடரர் vs நம்பர் 1 டோஜோவிக் ஆடிய ஆட்டம் 5 செட்வரை நீண்டு இறுதியில் டோஜோவிக் வெற்றி பெற்றார். முதல் இரண்டு செட்டை வென்ற பிறகு அடுத்த 3 செட்டை கோட்டை விட்ட பெடரருக்கு இது அரிய அனுபவம். இதற்கு முன் இதே போல் பெடரர் ஒருமுறைதான் தோற்றுள்ளார்(சாங்கோ எனும் பிரெஞ்ச் வீரரிடம்). வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆடியன்சுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஒன்றை ஆடி அசத்தினார் டோஜோவிக்.

இன்னொரு அரை இறுதியில் இங்கிலாந்தின் முர்ரேவை ஸ்பெயினின் நடால் பேக் அப் செய்தார். கஷ்டப்பட்டு அரை இறுதி வந்து நடாலிடம் உதை வாங்குவதையே முர்ரே இம்முறையும் தொடர்ந்ததுதான் பரிதாபம். இதற்கு முன் இங்கிலாந்தின் டிம் ஹென்மன் விம்பிள்டன் அரை இறுதிக்கு வருடா வருடம் முன்னேறி வந்து அப்போதைய 'தல' பீட் சாம்ப்ராசிடம் உதைபடுவார். இங்கிலாந்தின் ராசி அப்படி. பட்டையை கிளப்பப்போகும் இறுதிப்போட்டியில் நடாலும், டோஜோவிக்கும் நாளை மோதப்போவது டென்னிஸ் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும். நேற்று இரவு முழுக்க என்னை தூங்கவிடாமல் விறுவிறுப்பான போட்டியை ஒளிபரப்பிய டென் ஸ்போர்ட்சுக்கு  சலாம்!
.........................................................................

பாவக்காய் கூட்டு: 

வெள்ளி அன்று ரிலீஸ் ஆன மேரி ப்ரதர் கீ துல்ஹன் எனும் ஹிந்திப்படத்தை இன்று பார்த்தேன். காமடி எனும் பெயரில் சிரிப்பே வராத படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஜிந்தகி நா மிலேகி தோபாரா போன்ற கலக்கலான படத்தை   சில வாரங்களுக்கு முன் தந்த பாலிவுட், அரதப்பழசான கதை மற்றும் நகைச்சுவை களத்தை கொண்ட  மேரி ப்ரதர் கீ துல்ஹன் போன்ற படங்களையும் தருவது கொடுமை. (என்னைப்போன்ற) தீவிர காத்ரீனா கைப் ரசிகர்கள் மட்டுமே பொறுமையுடன் பார்க்கலாம். மத்தவங்க எஸ்கேப் ஆகிடுங்க.
.........................................................................

பொங்கல்: 

டில்லி நீதிமன்ற குண்டுவெடிப்பிற்கு எதிர்பார்த்த பஞ்ச் டயலாக்கை மீண்டும் உதிர்த்து இருக்கிறார் பன்மோகன். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கணுமாம். ஒற்றுமையா மார்க்கெட், தியேட்டர் மாதிரி பொது இடங்கள்ள கூடுனதுக்குதான் வக்கிறாங்களே வெட்டு. அய்யா.. சாமி உங்கள மாதிரி ஒசந்த அதிகாரிங்க எல்லாம் வாரம் ஒரு தரம் ஒத்துமையா போலீஸ் துணை இல்லாம மக்கள் புழங்குற இடத்துக்கு வந்துட்டு போங்க. அப்பறம் விடலாம் அறிக்கை, கண்டனம் எல்லாம்.
...........................................................................

சுடுதண்ணி:

டெல்லி குண்டுவெடிப்பில் பலியான மக்கள் சிலரின் வீட்டிற்கு அவசர அவசரமாக நுழைந்திருக்கிறது மீடியா. கணவரை இழந்து தேற்ற முடியாமல் அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் மைக்கை நீட்டி பேச சொன்னதும் அவர் கடும் கோபத்தில் "தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள். இந்நிலையில் நான் என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கத்தி விட்டார். அப்படி என்னங்கடா உங்களுக்கு அவசரம்? கொஞ்சம் பொறுத்துதான் போறது.  
..............................................................................

பிரசாதம்: 

உழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு மிகக்குறைந்த விலையில் பல்லாண்டு காலமாக உணவளித்து வரும் ராமு சேர்வை - பூர்ணத்தம்மாள் தம்பதிகளுக்கு கோடான கோடி நன்றி..............................................................
My other site:
nanbendaa.blogspot.com
............................................................

சமீபத்தில் எழுதியது:

..............................................................

           

Tuesday, September 6, 2011

வினவு/ஐ.டி/மங்காத்தா


      
'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பது போல சிலருக்கு கணினித்துறையில் இருப்பவர்களை கிண்டிப்பார்ப்பதில் அப்படி ஒரு சுகம். அதிலும் வினவு சமீபத்தில் எழுதிய பதிவில் சட்டி ஓட்டை ஆகும் வரை அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கிண்டி இருக்கிறார்கள். சமூகம் சார்ந்த விசயங்களில் கணினித்துறையினருக்கு எந்தப்புரிதலும், அறிதலும் இல்லையாம். மங்காத்தா பற்றி திரைப்பட ரசிகனை விட பல மைல் நீளத்திற்கு சமீபத்தில் அவர்கள் எழுதிய பதிவில் மீண்டும் அந்த மேட்டரை மீட்டருக்கு மேலே/உள்ளே சூடு கிளப்பி உள்ளனர்.

இந்தப்பதிவை அவர்கள் எழுதியது கல்வெட்டிலோ, ஓலைச்சுவடியிலோ, கரும்பலகையிலோ அல்ல. கணினியில்தான் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறோம் யுவர் ஆனர். சாப்ட்வேர் ஆட்கள் மீது அம்புட்டு காண்டு இருந்தால் என்ன வெளக்கெண்ணைக்கு அவர்கள் கண்டுபிடித்த  சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டும்? இதைப்பார்க்கையில் விவேக் ஒரு படத்தில் சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது. சாப்பாட்டு இலையை ஒருவர் எடுத்துக்கொண்டு போவார். அவரைப்பார்த்து விவேக் "ஏம்பா, சாப்புட்ட இலைய எங்க கொண்டு போறீங்க?". அதற்கு அந்த இலைதூக்கி "ஆட்டுக்கு போடப்போறோம்" என்று சொல்வார். விவேக் "அடப்பாவீங்களா..ஆட்டை கொன்னு பிரியாணியை இலைல போட்டு திம்பீங்க. அப்புறம் அதே இலைய கொண்டு போயி ஆட்டுக்கே போடுவீங்க. உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா" என்பார்.
 
ஐ.டி. நண்பர்கள் எதிரிகள் மீது இருக்கும் கோபத்தை காட்ட அவர்கள் கண்டுபிடித்த மென்பொருட்கள் உதவியுடன் செய்யாமல் கல்வெட்டு அல்லது ஓலைச்சுவடி வாயிலாக காட்டினால் மகிழ்வோம். "ஐ.டி. பசங்களா...சனிக்கிழமை ஆனா பாரு. அளவுக்கு மீறுன பீரு. எல்லாம் அளவுக்கு மீறுன சம்பளம் செய்ற வேலை" என்று பிந்தைய தலைமுறை பிதாமகர்களின் அங்கலாய்ப்பு. தினக்கூலி செய்றவன் சம்பளத்த டாஸ்மாக்ல குடுத்துட்டு செக்சியா ரோட்ல படுத்து உருள்றான். ராயல் க்ரூப்ல பலபேரு   ஸ்டார் ஓட்டல்ல ஊத்திக்கிட்டு கார்ல போயி கவுந்துக்கறான். எவன்தான் குடிக்கல? என்னமோ நீங்கல்லாம் முதல்ல வாங்குன சம்பளத்த கடைசி வரைக்கும் வாங்குன மாதிரி சிலுப்பு காட்டறீங்களே தலைவா. சாப்ட்வேர் ஆளுங்க மேல அவ்வளோ வெறுப்பு இருந்தா "இனிமே நாங்களோ, அடுத்து வர்ற எங்க தலைமுறையோ கணினி உதவி இல்லாமலே எல்லாத்தையும் செஞ்சிக்குவோம்"னு பகிரங்கமா அறிவிக்க தயாரா?

                                                                 
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ட்ரைன்/சினிமா டிக்கட் ரிசர்வ் பண்ண, கரண்ட்/போன் பில் கட்ட, அப்ளிகேஷன் வாங்க, பிறப்பு/இறப்பு சான்றிதழ் வாங்க இப்பிடி எல்லாத்துக்கும் சீனா வால் மாதிரி க்யூவுல நின்னதை கொஞ்சம் யோசிச்சி பாருங்க 'தல'. அவசரத்துக்கு பாத்ரூம் வந்தாக்கூட நகர முடியாது.அப்ப இடுப்ப வளச்சி நமிதா மாதிரி டான்ஸ் ஆடுவீங்களே..அதெல்லாம் மறந்து போச்சா? இப்ப நோகாம வீட்ல இருந்துகிட்டே ஆன்லைன்ல எல்லாத்தையும் செஞ்சி நோம்பி கும்புட வச்சது  சாப்ட்வேர் பசங்கதான். அது புரிஞ்சா சரி(பாவம் அந்த பிள்ளையார் வாகனம்(மவுஸ்) உங்க கிட்ட அந்த பாடு படுது).

ஊழல் எதிர்ப்புக்கு மெழுகுவர்த்தி ஏந்துதல், அது முடிந்தவுடன் மங்காத்தாவுக்கு படையெடுத்தல் போன்றவை எல்லாம் சாப்ட்வேர் துறையினரின் 'சென்சேஷன்' என்பது இவர்களின் அரிய கண்டுபிடிப்பு. சும்மா இருந்தா 'ஏண்டா உங்களுக்கு சமூக பொறுப்பே இல்லையா'ன்னு கெளப்பி விடுறது. 'சரி பெரியவங்க சொன்னதை கேப்போம்'னு போராட்டத்துல போயி நின்னா 'இன்னும் எத்தனை நாள் வருவீங்க. சும்மா ஒருநாள் சீன் மட்டும் போடுறது'ன்னு எகத்தாளம் பண்றது. என்னடா இது வம்பா போச்சின்னு மங்காத்தா போனா 'அய்யய்யோ..இங்க பாருங்க HR எல்லாம் சேந்து சாப்ட்வேர் பசங்கள கும்பல் கும்பலா மங்காத்தாவுக்கு இஸ்துக்குனு போறாங்க"ன்னு கூரைல ஏறி கூவுறது. இப்ப என்னதாய்யா ஒங்க பிரச்சன?  

சாப்ட்வேர்ல இருக்குற அம்புட்டு பயலும் உத்தமனுங்கன்னு எவனும் சொல்லல. எல்லா துறைலயும் மன்மத ராசாக்கள், பணம் சுருட்டிகள், ஜாதி வெறியர்கள் இருக்காங்கன்றதுதான உண்மை. ஆனா இந்த துறைல அது ரொம்ப கம்மி. அதை நீங்க எப்படி திரிச்சி எழுதுனாலும் மறைக்க முடியாது சாரே. மத்தவங்க மாதிரி கோயிலுக்கு ட்யூப்லைட் வாங்கி குடுத்தாக்கூட 'உபயம்: உத்தம ராசா' அப்டின்னு விளம்பரம் செய்றது, போஸ்டர் அடிச்சி செவுத்த நாற வக்கிறது எல்லாம் ஐ.டி. பீல்டுல ரொம்ப ரொம்ப கொறச்சல். சாப்ட்வேர் கூட்டத்துல இருக்குறவங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம் எல்லாம் நெறைய ஸ்டாக் இருக்கத்தான் செய்யுது. அவங்களும் சமூகத்துக்கு முடிஞ்சத செஞ்சிட்டுதான் இருக்காங்க. வேணும்னா கீழ இருக்குற சாம்பிளை பாருங்க. தல என்ன சொல்றார்னு காதை சாணை பிடிச்சிட்டு கேளுங்க:
எனவே.. பார்ப்பனீயம், பாசிசம், பேட் ஐ.டி. க்ரூப், பகுத்தறிவுன்னு உங்க ஹோட்டலோட ஸ்பெஷல்(!?) மசாலா உணவுகளை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.  வாசனை திருவான்மியூர் டைடல் பார்க் வரை கும்முன்னு தூக்க வாழ்த்துகள். 

அப்புறம் பாஸ்... மங்காத்தா பாத்தோம்னு சொன்னீங்களே..அது எப்பிடி தியேட்டருக்கே போயி க்யூல நின்னு டிக்கட் வாங்குனீங்களா இல்ல வூட்ல குந்திக்கினே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணீங்களா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ...!!

................................................
My other site:
...............................................Related Posts Plugin for WordPress, Blogger...