CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, August 28, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(28/08/11)விண்ணைத்தாண்டி வருவாயா?


"யுவராசா..இப்படியே என்னை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுடுடா மவராசா. இங்லான்ட் கிட்ட வாங்குன அடியை கூட தாங்கிக்கலாம். நம்ம ஜனங்க குடுக்கப்போற அடியை நினைச்சாலே பீதி பிளிறிக்கிட்டு வருது!"
........................................................................................

நீதிதேவன் மயக்கம்:
சமீபத்தில் நண்பர் நிரூபனின் வலைத்தளத்தில் படித்ததும்தான் தெரிந்து கொண்டேன்.. மரணத்தின் நிழலுக்கு அருகில் இருக்கும் மூவரில் ஒருவரான  ம.தி. சாந்தன் நம் சக பதிவர் ம.தி. சுதாவின் அண்ணன் என்று. இதுகுறித்து தன் அண்ணனுக்கு சுதா எழுதிய பதிவிற்கான லிங்க்:

அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

நிரூபன் விரிவாக எழுதியுள்ள பதிவைப்படிக்க:

தமிழ் நாற்று 

தமிழக முதல்வர் மனது வைத்தால் இந்த தண்டனையை தடுத்து நிறுத்த முடியும் என்று சொல்கிறார்கள். நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றன. முதல்வர் முடிவு எப்படி இருக்கும் என்று விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் நான் கேட்டு அறிந்தபோது அவர்கள் இருவேறான கருத்துக்களையும்,அதற்கான காரணங்களையும் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறைவாசத்தையும் அனுபவித்து விட்டு பிறகு மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டும் எனச்சொல்வது சரியாகப்படவில்லை.  இதற்கு முதலிலேயே ஏதேனும் ஒரு தண்டனையை (அவர்கள் தவறு செய்து இருந்தால் மட்டும்) அறிவித்து இருந்தால் இத்தனை மன உளைச்சலுக்கு குடும்பத்தினர் ஆளாகி இருக்க மாட்டார்கள். முதல்வர் கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்பது எனது நம்பிக்கை. காத்திருப்போம்.

என் சிற்றவிற்கு எட்டியவரையில் கொலைகளை திட்டமிட்டு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது தவறல்ல. அதேசமயம் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் போன்றவர்களைப்போல் துரதிர்ஷ்டவசமாக வழக்கில் சிக்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் மரணதண்டனை என இரண்டையும் அளிப்பது எந்த விதத்திலும் நியாயமாக படவில்லை.

'விந்தைமனிதன்' ராஜாராமின் Buzz-இல் ஒரு செய்தியை பார்த்தேன். பேரறிவாளன் கூட நம்மைப்போல் பதிவராக இருந்தது தெரிய வந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு வலைப்பூவில் அவர் எழுதிய பதிவை படிக்க:

http://perarivalan.blogspot.com

சிறைக்கொடுமைகள் எத்தனை விதமாக, எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை அவர் எழுத்துக்கள் விளக்குகின்றன. இளம் வயதினர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. அந்த அளவிற்கு ரணங்களை அனுபவித்து இருக்கிறார் 19 வயதில் சிறை சென்ற இளைஞர். 
...........................................................................................

மக்கள் என் பக்கம்: 
லோக்பால். அன்னா. லோக்பால். அன்னா. எந்த டி.வி.ய திருப்புனாலும். ஒரு வழியா சூடு தணிஞ்சிருச்சி. ஆனா அன்னா விட்றதா இல்லை. தேர்தல் முறையில் நடக்கும் குளறுபடிகளை தட்டிக்கேட்பேன்னு சொல்லி இருக்கார். குறிப்பா மக்கள் தேர்ந்தெடுத்த கலர் துண்டுங்க சரியா ஆட்சி செய்யலைன்னா 'ரீகால்' முறையை கொண்டு வரணுமாம். நல்ல மேட்டர்தான். ஆனா இதை பத்தி 'தென்னவன்' படத்துல கேப்டன் தெளிவா சொல்லிட்டாரே? "நான் சொன்னதை நீங்க எப்பிடி காப்பி அடிக்கலாம்"னு அன்னா முன்னாடி நின்னு ரெட் ஜெயன்ட்  கண்ணோட குறுகுறுன்னு கேப்டன் முறைக்கிற காட்சியை கற்பனை பண்ணி பாத்தா நமக்கே மெட்ராஸ் ஐ வந்துடும் போல இருக்கே!
..............................................................................................

மண்ணுக்கேத்த பொண்ணு: 

                                                             
தென் கொரியாவின் டேகுவில் நடக்கும் உலக தடகள போட்டிக்கு எட்டு பேர் கொண்ட இந்திய அணி சென்றிருந்தது. பெரும்பாலானோர் மண்ணை கவ்வ, நீளம் தாண்டுதலில் நன்றாக மண்ணில்  தவ்வி இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளார் மயூகா. சிஸ்டர் கேரளாவாம். தடகளம் என்றாலே பின்னி பெடல் எடுப்பது கேரள வீராங்கனைகள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கென ஒரு தனி சிறப்பு உண்டு. உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற ஒரே நபர் இவர்தான்.  2003 பாரீசில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வாரா என்பது அவர் தவ்வுவதை பொறுத்தே அமையும். பார்ப்போம்!!
...............................................................................................                                                        

மதராசப்பட்டினம்: 
ஆசியாவின் பதிவுலக பிரத(ம)ர் கேபிள் சங்கர் மற்றும் சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் நிரந்தர தலைவர் கே.ஆர்.பி. செந்தில் இருவரும் இணைந்து மிரட்டும் 'சென்னை (யூத்) பதிவர் சந்திப்பு' அதிபிரம்மாண்டமாக வரும் ஞாயிறு (செப்  4) அன்று நடைபெற உள்ளது. லீவ் போடாமல் வருபவர்களுக்கு நடராஜ் ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் இனிப்பு பல்பம் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறோம். மேலும் விவரம் அறிய அடம் பிடிப்பவர்கள் கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்:
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 'மனதளவில் யூத்' ஆக இருக்கும் சீனியர் பதிவர்களும் வருமாறு அன்புடன் கேட்டு கேட்டு கொல்கிறோம். நல்லா கேட்டுக்கங்க.
..........................................................................................

கடலோரக்கவிதைகள்: 
சமீபத்தில் மும்பை சென்றபோது ஜுஹு பீச்சில் நான் கண்ட கண்றாவி காட்சி. இந்த கப்படிக்கும் குப்பை மீது சர்வசாதரணமாக வாக்கிங் செல்லும் மும்பை மக்களின் துணிச்சலுக்கு சலாம். குப்பையை க்ளோஸ் அப்பில் பார்க்க மூக்கை பிடித்துக்கொண்டு படத்தை க்ளிக் செய்யவும்.

                                                               
..................................................................................

புது வசந்தம்: 

புதிதாக தோன்றி இருக்கும் 'புதிய தலைமுறை' செய்தி சேனல் நன்றாகத்தான் இருக்கிறது. எழுத்து டிசைனிங் போன்றவை நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் இளையவர்கள் படையுடன் இயங்கும் இந்த சேனல் நடுநிலை செய்திகளை தொடர்ந்து வழங்கினால் மகிழ்ச்சிதான். யூத் நிருபர்கள் ஆர்வத்தில் சற்று அவசரமாக பேசுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். கட்சி சார்ந்த செய்தி சேனல்களிடம் நாம் படும் பாட்டுக்கு இப்படி சில புதுவரவுகள் வந்தால்தான் சரிப்படும். மேடம் ஆட்சிக்கு வந்தா உச்சந்தலைக்கு மேல தங்கக்காசு கொட்டுதுன்னு அவங்க டி.வி.யும்,  இன்னும் கொஞ்ச நேரத்துல தமிழ்நாடு தண்ணிக்குள்ள போயிடும்னு எதிர்கட்சி டி.வி.யும் நம்மள வெறி பிடிக்க வைக்கிறதுக்கு முடிவு கட்ட ஏதோ ஒரு வழி பிறந்தா சரிடாங்கப்பா!!
...........................................................................................

இந்தியன்: (sms)

"மச்சி..சின்ன வயசுல சுதந்திர தினம் அன்னிக்கு கொடி வாங்க போனப்ப கடைல நீ ஒரு கேள்வி கேட்டியே..ஞாபகம் இருக்கா?"

"இல்லையே. என்ன கேட்டேன்?"

"இது வேண்டாம். வேற கலர் குடுங்க"
.....................................................................................

தீபாவளி:  
ஓம் ஷாந்தி ஓம் படத்தின் இந்த பாடலுக்கு ஒட்டுமொத்த ஹிந்தி திரை உலகமும் சேர்ந்து நிகழ்த்திய வானவேடிக்கை. இனிமையான இசை மற்றும் குரல்வளத்தில் அசத்தும் இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்:http://youtu.be/VzLG6OqOcn8
................................................................

My other site:
nanbendaa.blogspot.com
.................................................................

சமீபத்தில் எழுதியது:

அடிவாங்குனது நாங்க. கோப்பை எங்களுக்குதான் சொந்தம்!
.................................................................................

           
                                         

Saturday, August 20, 2011

மும்பையும், முதல் விமான அனுபவமும் - 4

                                                                
வால்பேஷினுடன் மணிக்கணக்கில் மல்லுக்கட்டு நடத்தி ஒரு வழியாக சோதனையை தாண்டி வெளியே வந்ததும் 'மதியம் 2 மணி விமானத்தில் சென்னை செல்ல வேண்டும். தயாராக இருக்கவும்' என உயர் அதிகாரிகள் அறிவித்தனர்.  இன்னும் சிலமணிநேரமே இருப்பதால் ஜுஹு பீச்சுக்கு மட்டும் விசிட் அடித்துவிட்டு வரலாம் என முடிவு செய்தோம். காலை 6.30 மணிக்கு ஆட்டோ பறக்க ஆரம்பித்தது. அந்நேரத்திலேயே மும்பை மக்கள் பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள். 

அதுதான் அமிதாப் பச்சன் வீடு என்று கைகாட்டியவாறு பறந்துகொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுனர். திடீரென பெய்த மழை அந்தேரி தெருக்களின் அழுக்கை போக்கிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ஜுஹுவை வந்து அடைந்தோம். அங்கே  ஆச்சர்யமும் அதிர்ச்சியும் எங்களை வரவேற்றது. சினிமாக்களில் வரும் மும்பை பீச் போல் இல்லாமல் படு கேவலமாக இருந்தது அந்த இடம். கிலோமீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள். அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் எல்லா வயதினரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். சிலர் வெறும் காலுடனும்.அதில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்(சுத்தம்!). மேலும் ஒரு அடி எடுத்து வைக்கவே எங்களுக்கு மனம் ஒப்பவில்லை. இதை தூரத்தில் இருந்து பார்த்த பெரியவர் ஒருவர் என்னருகே வந்தார். 

                                                             நானும் அவரும் 

"இங்கே இப்படித்தான். மாலை நேரங்களில் மக்கள் அனைவரும் பொழுதை போக்கிவிட்டு பிளாஸ்டிக் கவர்கள், சோளம் போன்றவற்றை குப்பைத்தொட்டியில் போடாமல் செல்கின்றனர். நித்தமும் காலையில் குப்பை அள்ளுபவர்கள் வந்து மணிக்கணக்கில் சுத்தம் செய்கிறார்கள் பாவம். இம்மக்களை திருத்த இயலாது" என்றார். அருகிலேயே பெரிய குப்பைத்தொட்டி இருந்தும் பலர் உபயோகிக்கவில்லை. "நாங்கள் எதிர்பார்த்து வந்த ஜுஹூ இதுவல்லவே" என்றேன். அதற்கு அவர் "ஆம். அந்த இடம் இன்னும் தொலைவில் உள்ளது. அது சற்று சுத்தமாக இருக்கும்.  இது குப்பைகளின் நிரந்தர குடியிருப்பு. காலை 7 மணிக்கே இளம்ஜோடிகள் நடமாட்டம் அதிகமா இருக்கும்" என்றார்.

கண்களை வலம் -இடம் திருப்பினால் ஜோடிப்புறாக்கள் ஆங்காங்கு அமர்ந்திருந்தன. சிறிய உணவகம் முன் ஒரு ஜோடி உலகை மறந்து பேசிக்கொண்டிருக்க இரண்டு படிகளுக்கு மேலே ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞன் ஒருவன் BARE பாடியுடன் கொட்டாவி விட்டபடி முதுகை சொறிந்து கொண்டிருந்தான், தொடை தெரிய சார்ட்ஸ் போட்டுக்கொண்டு. அந்த இளம்பெண்ணை விட அவன் குடுத்த போஸ் அட்டகாசம்!!

                                                     நன்றி மறவா நண்பர்கள்  

பல நிமிடங்கள் மும்பை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் பெரியவர். கையில் இருந்த ஒரு கவரைப்பிரித்து தன் இளம்வயது புகைப்படங்களை காட்டினார். மும்பையின் தாதாக்கள் சிலருடன் அவர் இருந்த படங்களும் அதில் அடக்கம். மணலில் மல்லாக்க படுத்து தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்றை எழுப்பியவாறு சொன்னார் "2004 ஆம் ஆண்டில் இருந்து எனது நண்பனாக இருக்கிறான் இவன்". தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து மேலும் சில நாய்களுக்கு நண்பர்களுக்கு பசியாற்றினார். மும்பை வந்துவிட்டு சுற்றிப்பார்க்காமல் செல்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த எனக்கு அவர் தந்த பல தகவல்கள் மகிழ்ச்சியை தந்தது. 

பிறகு என்னிடம் விடைபெற்று சென்று கொண்டிருந்த பெரியவர் திடீரென ஓடத்துவங்கினார் ஒரு பிளாஸ்டிக் கவரை துரத்திக்கொண்டு. பெரிய போராட்டத்திற்கு பின் அந்த கவரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தன் நன்றியுள்ள நண்பர்களுடன் நடக்கத்தொடங்கினார். இப்படி ஓர் மனிதரை சந்திக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. கடற்கரையை ஓரமாக நடையை தொடர்ந்தோம். அங்கே மேலும் ஒரு பரவசம் காத்திருந்தது. 

                                            1000 புறாக்களும் சிங்கிள் சிங்கமும் 
                                                                    
நூற்றுக்கணக்கான புறாக்களுக்கு தானியங்களை தந்துகொண்டு இருந்தனர் சிலர். சென்னையில் நான் அதிகமுறை பார்த்தது காகத்தை மட்டும்தான். செல்போன் டவர்கள் கோலோச்ச ஆரம்பித்த நாள் முதல் ஒரு சில சிட்டுக்குருவிகளை காணும் வாய்ப்பும் காணாமல் போனது. வண்டலூர் ஜூவில் ஓரிரு முறை கூண்டுகள் கைதான பறவைகள் பார்த்திருக்கிறேன். அவ்வளவே! எனவே இந்தக்காட்சி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல அப்புறாக்களின் பக்கம் நெருங்கினேன். அப்போது பையில் இருந்த தானியங்களை வேகமான வீசினார் ஒருவர். அடுத்த நொடி புறாக்கள் அனைத்தும் சிறகுகள் படபடக்க என்னைச்சுற்றி பறக்க ஆரம்பித்தன. அற்புதமான அனுபவம்! திரைப்படங்களில் மட்டுமே பார்த்த இது போன்ற நிகழ்வுகள் இன்று நிஜத்தில். என்றும் மறக்க முடியாத நொடிகள் அது.

அடுத்த சில மணிநேரத்தில் முடிந்தது மும்பை சகவாசம். சென்னை - மும்பை பயணத்தில் ஜன்னலோர சீட்டை கோட்டை விட்ட நான் மும்பை - சென்னை ரூட்டில் எப்படியோ பிடித்துவிட்டேன்.  விதவிதமான மேகக்கூட்டங்களை கண்டு அதிசயித்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. சென்னையை நெருங்குகையில் பரவசம் அதிகமானது. சேப்பாக்கம் ஸ்டேடியம், புழல் எரி போன்ற பல இடங்களை விண்ணில் இருந்து பார்த்தது வித்யாசமான அனுபவம். குறிப்பாக மெரீனா கடற்கரைக்கு மேல் விமானம் பறக்கையில் கீழே கண்ட காட்சி மகிழ்ச்சியின் உச்சம். என்றும் மறக்க இயலாது முதல் விமான அனுபவத்தை. 

என்னைப்போல் வசதியில் சுமாராக இருக்கும் நண்பர்களே, நம் பெற்றோர்களின் முந்தைய தலைமுறைக்கு விமானம் என்பது ஒரு அதிசயப்பொருளாக இருந்திருக்கும். நம் தாய் தந்தையர் நம்மை படித்து ஆளாக்க அவர்களின் வாழ்நாளை தொலைத்து இருப்பார்கள். அவர்களுக்கு விமான அனுபவம் என்பது வெறும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அல்லது
புகைப்படங்கள் மூலம்தான் கிடைத்திருக்கும். தன் பிள்ளை விமானத்தில் சென்று வந்த அனுபவங்களை கேட்டு சந்தோசத்தில் மிதந்த என் தாயைப்போல தங்கள் பெற்றோரும் மகிழும் நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன். 

என்றேனும் ஒருநாள் போதுமான அளவு பணம் சேர்ந்தால் என் தாயை விமானத்தில் அழைத்துச்செல்ல இதயம் துடிக்கிறது. தங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தயவு செய்து பெற்றோரை அழைத்துச்செல்லுங்கள். குறிப்பாக தாயை. உலகை நமக்கு அறிமுகம் செய்த அந்த தேவதைக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து பாருங்கள். அந்த மகிழ்ச்சிக்கு அளவேது!!

.......................................................
My other site:
......................................................


                                                                

Wednesday, August 17, 2011

மும்பையில் ஓர் நாள் - 1


டம்ளர் சிறுசா போச்சி:

                                                   மும்பை விமான நிலையம்   
                                                                    
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் நண்பர்கள் சிலர் தங்கள் பைகளை இன்னொரு நண்பனிடம் தந்துவிட்டு முகம் கழுவ ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தனர். நானும் என்னிடம் இருந்த பையை கீழே வைத்துவிட்டு உள்ளே செல்ல முற்படுகையில் இரு கைகளில் பல பைகளை தாங்கிய நண்பன் அலறினான். "இங்க குண்டு வச்சி ஒரு வாரம் கூட ஆகல. இப்படி தனியா பைய வச்சிட்டு போறியே" என்று அலெர்ட் செய்தான். எல்லா ஊரும் நம்ம ஊரு மாதிரி என்று நினைத்த என் ட்யூப் லைட் மூளை அப்போதுதான் சுதாரித்தது. பையுடனே முகம் கழுவ சென்றேன்.  

அலுவல் விஷயமாக ஒருநாள் மட்டுமே தங்க வேண்டி இருந்ததால் உடனே ஆட்டோ பிடித்து அலுவலகம் உள்ள இடம் நோக்கி விரைந்தோம். மும்பையிலும் ஆட்டோ கட்டணம் சென்னை போல் அநியாயமாக இல்லை. சில மணிநேரத்தில் வேலை முடிந்ததும், வாசலில் இருந்த செக்யூரிட்டிகளிடம் பேச்சு குடுத்த என் நண்பன் அவர்களுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட, கடைசி வரை அவர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை. அனைவரையும் சந்தேகிக்கும் நிலைக்கு மும்பை மக்கள் வந்துவிட்டனரென அவர்கள் கூறினார்கள். காலை 4 மணிக்கே தெருவோரத்தில் பஜ்ஜி போட்டுக்கொண்டு இருந்தனர். 6 ரூபாய்க்கு மெகா சைசில் சுவையான பஜ்ஜி. வாழ்க!!

சுற்றிப்பார்க்க நேரம் குறைவாக இருப்பதால் ஜூஹு கடற்கரைக்கு மட்டும் செல்லலாம் என்று முடிவு செய்தோம். (துர்) அதிர்ஷ்டவசமாக 4 ஸ்டார் ஹோட்டலை புக் செய்து இருந்தது அலுவலக நிர்வாகம்.  என்னுடன் தங்கிய அதிகாரி கதவை திறக்க சாவியை உபயோகிக்காமல் கிரெடிட் கார்ட் மாதிரி ஒன்றை ஒரு இடுக்கில் சொருகினார். கதவு திறந்தது. என்னடா இது அதிசயம் என்று பார்த்தவாறு உள்ளே சென்றேன். ஏன்னா,  நான் சாதா ஹோட்டல்ல சாதா தோசை சாப்புடறதே வருசத்துக்கு ஒரு தரம்தான்.

                                              எவன்டா உன்ன கண்டுபிடிச்சான்

"சீக்கிரம் குளித்து விட்டு வா" என்றார் உயர் அதிகாரி. அங்குதான் விதி என் முன் கதக்களி ஆடியது. குளியல் அறைக்குள் நுழைந்ததும் தண்ணீருக்காக வாஷ் பேசின் அருகே இருந்த எவர்சில்வர் பிடியை திருகினேன். பருப்பு வேகவில்லை. அதனருகில் இன்னொரு பிடி இருக்க அதையும் திருகிப்பார்த்தேன். ம்ஹூம். என்னடா கொடுமை இது என்று சற்று தள்ளி இருந்த இடத்தை பார்த்தால் பாத் டப் இருந்தது. இதில் குளிக்க முயற்சிப்போம் என்று அங்கிருந்த குழாயை திருகினால் வெந்நீர் வெகு வேகமாக கொட்டியது.

நல்லவேளை இதில் குளித்திருந்தால் தோல் வெந்து உரிந்த கோழி போல் ஆகி இருப்பேன். என்னுள் இருந்த எரிமலை எகிற ஆரம்பித்தது. என்னங்கடா உங்க ஸ்டார் ஹோட்டலு. இந்த லேட்டஸ்ட் டெக்குனாலஜியை எல்லாம் எவன்டா கேட்டான். ஒரு பக்கெட்டு, ஒரு மக், சாதாரண குழாய வச்சா உங்க லட்சியத்துக்கு எதுனா இழுக்கு வந்துருமா என வெம்பியவாறு மீண்டும் ஒருமுறை குழாயை திருகினேன்.அப்பாடா! மிதமான குளிர்நீர் வாஷ்பேஷினில் கொட்டியது. நான் 'தலைவர் ரித்தீஷ்' சைசில் இருந்தால் கூட வாஷ்பேஷினில் உட்கார்ந்து குளித்து விடலாம். அதற்கும் வழி இல்லை. என்ன செய்யலாம். மக் இல்லையே...

அப்போதுதான் 'மக்'கின் ஒன்று விட்ட தம்பி உருவில் இருந்த கண்ணாடி டம்ளர் கண்ணில் பட்டது. வாஷ்பேஷினை திறந்து அந்த டம்ளரில் தண்ணியைப்பிடித்து குளிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளானேன். குறைந்தது அறுபது டம்ளர் தண்ணீரை பிடித்து.. பிடித்து...பிடித்து நீராடுவதற்குள் மண்டை காய்ந்தது நனைந்தது. பல்வேறு வகையான வாசனை  புஷ்பங்களை கொண்ட அரண்மனை குளியல் அறையில் ஒரு இளவரசி குளித்தால் கூட சீக்கிரம் வந்துவிடுவாள். அதைவிட பல நிமிடங்கள் தாண்டி குளிக்க வேண்டிய நிலை. நான் என்ன செய்வேன்..டம்ளர் சிறுசா போச்சி!!

நீதி:

முதல் முறை நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் அன்பர்கள் 'டேய் டேய் செகப்பு சட்ட' 
என்று கத்தாமல் அங்கு வேலை செய்யும் ஆளை அழைத்து எப்பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என அறிந்து கொள்ளுதல்/கொல்லுதல் நலம்.


எப்பொருள் ஸ்டார் ஹோட்டலில் தென்படினும் அப்பொருள்
எப்படி வேலை செய்யும் எனக்கேட்பதே அறிவு!

                                                               
மும்பை அந்தேரி பகுதியின் பிரதான ரோடுகள் அழுக்காகத்தான் இருந்தன. சென்னை எவ்வளவோ மேல். மும்பையில் இருந்து எப்படி இவ்வளவு அழகான பெண்களை நம் ஊர் இயக்குனர்கள் பிடித்து வருகிறார்கள் என்பதற்கு விடை எனக்கு அன்றுதான் கிடைத்தது. ஆட்டோவில் பயணம் செய்கையில் பேருந்து  நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்களை (தற்செயலாக) பார்த்தபடி சென்று கொண்டிருந்தேன்). சென்னையில் 10 - க்கு 2 இளம்பெண்கள் என்றால் மும்பையில் 10 - க்கு 7 பேர் ஹீரோயின் போல தகதகவென மின்னினார்கள்.

அந்த (நல்ல) நேரம் பார்த்து நண்பன் விடுத்த எச்சரிக்கை ஒன்று நினைவிற்கு வந்தது: "டேய். நம்ம ஊர் மாதிரி கிண்டல் பண்ணா மும்பை பொண்ணுங்க கண்டுக்காம இருப்பாங்கன்னு நினச்சிடாத(அடப்பாவி. நான் பரம யோக்யண்டா). செம (விவ)காரமான பொண்ணுங்க. போன வருஷம் இப்படித்தான் ஒரு நாள் நான் மும்பை பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். ரவுடி பசங்க ஒரு பொண்ணை நக்கல் பண்ணிட்டு இருந்தானுங்க. அதுல ஒருத்தன் நல்ல ஹைட். இந்த பொண்ணு குள்ளமா இருந்தாலும் அவளுக்கு வந்த கோவத்துக்கு அவனை எகிறி எகிறி கன்னத்துல அறைஞ்சா. அவனுக்கு செவுலு அவுலு உட்டுக்கிச்சி" என்றான். மும்பைக்கு முதல் தரம் போற இளந்தாரிங்க உஷாருப்போய். சொல்லிப்புட்டேன்!!
............................................................................................................

அடுத்த பதிவில்:

ஜுஹூ கடற்கரையில் நான் சந்தித்த மும்பைவாசி..
..................................................................

தொடர்புடைய பதிவுகள்:


எனது முதல் விமான அனுபவங்கள் - 1


எனது முதல் விமான அனுபவங்கள் - 2
..................................................................


My other site:
nanbendaa.blogspot.com
................................................................

சமீபத்தில் எழுதியது:

அன்னாவிடம் காங்கிரஸ் இன்னிங்க்ஸ் தோல்வி!?
.............................................................


                

Monday, August 15, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (15/08/11)வாய்க்கொழுப்பு: 

                                                                 
இங்கிலாந்திடம் 3 - ஆவது டெஸ்டில் இந்தியா தோற்று முடித்த சில நிமிடங்களில் தோனியை பேட்டி எடுத்தார் மண்ணின் மைந்தன் மைக்கேல் ஆதர்டன். அப்போது குத்தலான கேள்விகளால் வரம்புக்கு மீறி பேசினார் மைக்கேல் அண்ணாத்தை "நம்பர் 1 இடமும் போச்சி. இதுவரை ஒரு முறை கூட 300 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை? ஏன்?" என்று கேட்டதற்கு தோனி தனது பாணியில் பொறுமையாக பதில் அளித்தும் மேலும் சீண்டிக்கொண்டே இருந்தார் ஆதர்டன். நம்மை ஆண்ட கொழுப்பின் மிச்சமாக இருந்தது அந்த பேச்சின் உச்சம். மகனே..நீ ஆடிய காலத்தை நெனச்சிப்பாரு தம்பி. தானைத்தலைவன் மெக்ராத் உன் விக்கெட்டை சொல்லி சொல்லி எடுப்பாரே. அதெல்லாம் மறந்து போச்சா? இன்னிக்கி கைல மைக்கு கெடச்சா தோத்தவனை உன் லிமிட்டுக்கு மீறியா ரவுசு உட்ற...ராஸ்கோல்!!
............................................................................................

தமிழன்: 


                                                                        
என் பள்ளிக்கால நண்பனான தியாகராஜன் தற்போது சென்னை கல்லூரி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்று வருகிறான். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஒளி ஏற்றி சாதனை படைத்து வரும் 'வாழை' எனும் அமைப்பில் தன் பங்கை ஆற்றியுள்ளான். இன்றைய தினமலரில் வாழை  குறித்த கட்டுரை வெளியானதில் மகிழ்ச்சி. அதைப்படிக்க:

வாழை - தினமலர் செய்தி 

தமிழ்மீது கொண்ட பற்றினால் தியாகராஜன் எனும் தனது பெயரை ஈகை வேந்தன் என மாற்றிக்கொண்டான். 2008 ஆம் ஆண்டே வலைப்பூவை தொடங்கி ஒரு சில பதிவுகளை எழுதி இருப்பினும், கடந்த சில வருடங்களாக வலைப்பூவில் இயங்கவில்லை. தமிழ்மொழி குறித்த தேடல் இன்னும் நிறைய இருப்பதால் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளான். வாழை அமைப்பு குறித்து ஈகைவேந்தன் எழுதிய பதிவை படிக்க:

வாழை - ஈகைவேந்தன்
.................................................................................................

சந்தித்த வேளையில்: 

                                                             
சென்ற வெள்ளி அன்று ஆங்கிலப்படம் பார்க்க சத்யம் வாசலில் நின்று கொண்டிருந்த சமயம். NDTV HINDU-வில் திரை விமர்சனம் செய்யும் அனுராதா ஆனந்த் கண்ணில் பட்டார். எனக்குத்தெரிந்த பட்லர் இங்கிலீஷில் "உங்கள் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். CNN IBN ராஜீவ் மசந்த் போல துணிவாக நீங்கள்  ஏன் படங்களை விமர்சிப்பதில்லை?" எனக்கேட்டேன். அதற்கு அவர் "இல்லையே நானும் தேவையான இடங்களில் அவ்வாறு விமர்சித்துள்ளேன். ராஜீவ் மசந்த் ஒரு பூனை. நான் பெண் புலி" என்றார். அதை நாங்கதான சொல்லணும் என்றது மனசாட்சி. இன்னும் கொஞ்சம் கிண்டினேன்.."காப்பி அடித்து எடுக்கப்படும் படங்கள் குறித்து தமிழ் மீடியாக்கள் பெரிதாக பேசுவதில்லையே?" என்றேன். 

"காப்பி அடிப்பது என்னைப்பொறுத்தமட்டில் தவறில்லை. இந்த உலகத்தில் எதுவுமே ஒரிஜினல் இல்லை. நீங்கள் கூட(ஆத்தாடி)" என்று வால்யூமை ஏற்றினார். இன்னும் கிளறினேன்: "எந்திரனுக்குப்பிறகு தமிழ் சினிமா குளோபல் மார்க்கெட்டை தொட ஆரம்பித்து விட்டதால், இன்னும் சில வருடங்களில் அயல்நாடுகளில் வெளியாகும் "சுட்ட" தமிழ் படங்களை ஒரிஜினல் படம் எடுத்தவன் பார்த்ததால் "சுட்டு" விட மாட்டானா?" எனக்கேட்டேன். அதைக்கேட்டு சிரித்த அனுராதா "எந்திரனா? its a crap (மொக்கை/ ப்ளேடு) movie. do you know? did you like it? " என்று கேட்டார். ஆமுக்கும், இல்லைக்கும் பொதுவாக தலையை ஆட்டினேன். இறுதியாக "தமிழ் சினிமாவை துணிந்து விமர்சிப்பதற்கான வாய்ப்பு நம்முடைய மீடியாக்களில் தரப்படுவது இல்லை" என்றார். "நிஜமாகவா சொல்கிறீர்கள்?" என்று அழுத்தினேன். அதே பதிலைத்தான் தந்தார். 

படத்தில் நடித்தவர்கள் பெயரையும், கதைச்சுருக்கம் சொல்வதையும் மட்டுமே இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழக டி.வி.க்கள் செய்யுமோ? 

அனுராதாவின் 'நந்தலாலா' விமர்சனம் பார்க்க:

.......................................................................................

நட்புக்காக: (sms)

நட்பின் மகத்துவத்தை பற்றி இதைவிட உயர்ந்த தத்துவத்தை சொல்ல முடியுமா.....

"உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட".
......................................................................................

குள்ளநரி கூட்டம்: 
பழைய திரைப்படம் ஒன்றில் எம்.ஆர்.ராதா நடித்த காட்சி. தெருவில் ஒருவனை மக்கள் அடித்துக்கொண்டு இருப்பார்கள். அதை தடுத்து காரணம் கேட்பார் ராதா. "தீய பழக்கங்கள் சமூகத்திற்கு கேடு என்று புத்தகம் எழுதிய இவன் இன்று அதே பழக்கத்திற்கு ஆளாகிறான்" என மக்கள் சொல்ல, அதற்கு ராதா "சொன்னவன் என்ன செய்றான்னு பாக்காத. அவன் சொன்னது சரியா இல்லையான்னு மட்டும் பாரு" என்பார்.

அதுபோல, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடிவரும் அன்னா ஹசாரேவை அடக்கி ஒடுக்கி, தற்போது அவர்மீது பலமுனையில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதல் நடத்தி இறுதியில் ஹசாரே ஒரு ஊழல் பேர்வழி என்ற முத்திரையையும் குத்தி விட்டார்கள். வயதான மனிதரை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதி போல நடத்துகிறது மத்திய அரசு. லோக்பால் வரம்பிற்குள் அன்னா சொன்ன அனைவரும் வராதவரை சுதந்திர தின விழாக்கள் கொண்டாடி எதை கிழிக்கப்போகிறது பன்மோகன் அரசு?
.............................................................................................

எங்கேயோ கேட்ட குரல்:  


                                                                    
நேற்று பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா ஒன்றில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கராச்சியில் ஒன்று கூடிய மக்கள் 5,857 பேர் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடியதுதான் அந்த சாதனை. இதற்கு காரணமான பாலி எனும் மவராசன் பேசியது என்னவெனில் "இதற்கு முன் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த இந்தியர்கள் முயற்சித்தனர். 'வந்தே மாதரம்' எனும் பாடலை அவர்கள் பாடியதால் அதை தேசிய கீதமாக கருதி கின்னஸ் அமைப்பு விருது தரக்கூடாது என்று நான் போராடி வென்றேன் (இத மட்டும் கரெக்டா செய்ரீங்கடா). எனவே அவ்விருதை 5,248 பேரை திரட்டி தம் நாட்டு தேசிய கீதத்தை பாடிய பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தந்தனர்".  
...................................................................................

தேடினேன் வந்தது:

"இந்த டி.வி.சேனல் எல்லாமே வேஸ்ட். சுதந்திர நாள்ல கூட நடிகைங்க பேட்டி போட்டு கலாச்சாரத்த சீர் அழிக்கறாங்க" என்று ஒவ்வொரு வருடமும் பலர் அங்கலாய்ப்பதுண்டு. ஆஸ்தான அறுவை சேனல்களையே பார்த்துக்கொண்டு இருப்பதற்கு பதில் ரிமோட்டை யூ தரன் போட்டு வேறு சேனல்களின் பக்கம் போனால் பல நல்ல நிகழ்ச்ச்சிகளை காணலாம் என்பதே உண்மை.

அதுபோல இன்று உருப்படியான சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் விடுதலையும் உழைப்பாளிகளும் எனும் சென்னை சார்ந்த நிகழ்ச்சியில்  குப்பை அள்ளுபவர், ரிக்சா தொழிலாளி, போர்ட்டர் என பலரை பேட்டி கண்டனர். நீயா நானாவில் நல்ல தமிழில் பேசுவோருக்கும் தங்கிலீஷ் பேசுவோருக்குமான சூடான விவாதம் நடந்தது. CNN-IBN சேனலில் அவ்வப்போது ரியல் ஹீரோஸ் எனும் நிகழ்ச்சியில் சமூக சேவை செய்த பலரைப்பற்றி வெளிச்சம் போட்டு காட்டினர்.

டைம்ஸ் நவ் சேனலில் 'ஹீரோஸ்' நிகழ்ச்சியில் தேசத்திற்காக பாடுபட்ட முப்படை வீரர்களின் பேட்டி.மாலை 6.30-க்கு மக்கள் தொலைக்காட்சி 'சிறைச்சாலை' எனும் தலைப்பில் வேலூர் கோட்டையை மையமாக வைத்து சுதந்திர தினப்போராட்டம் நடந்த கதையை விவரித்து இருந்தனர். இப்படி பல அருமையான நிகழ்ச்சிகளை தந்த சேனல்களுக்கு நன்றிகள் பல.

அறிவாலயத்தில் தேசியக்கொடி மட்டும் ஏற்றினால் போதுமா கலைஞரே? பேரனின் தூங்காநகரத்தை போட்டு கல்லா கட்டிவிட்டீர்கள். என்னே உமது  தேசபக்தி!!
..........................................................................
  
பேய்வீடு: 
தமிழன் என்பவன் எப்பேர்பட்ட சோதனையையும் தாங்கும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என்பதற்காக அராஜகத்தின் உச்சிக்கே சிலர் செல்வதை கண்டு இதற்கு மேலும் பொறுமையாக இருத்தல் தகுமோ? ஆம். தமிழா. இதோ உன் இதயத்தில் இடியை இறக்கும் இன்னொரு செய்தி. விரைவில் குறள் டி.வி.யை தொடங்க இருப்பதாக டி.ஆர். அறிவித்தே விட்டார். தலையை சுத்தி மயக்கம் வருமே? விடமாட்டேன். மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடாவை அடிச்சி எழுப்பி இன்னொரு செய்தியையும் சொல்லியே தீருவேன்.


அது என்னன்னா..மத்த டி.வி. மாதிரி "அரச்ச மாவ அரைப்போமா" நிகழ்ச்சிகள் குறள் டி.வி.யில் வராது,  அசத்தலான நிகழ்ச்சிகள் மட்டுமே போடப்படும்  என்று அறிவித்துள்ளார் டி.ஆர். அதாகப்பட்டது, 60% சிம்பு பற்றிய பொன்னான செய்திகளும், 40% டி.ஆரின் தத்துவங்களும் கொண்டதாக மட்டுமே இருக்குமாம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளும். இனி தினம் தினம் தீபாவளிதான் சாமியோ!!

யாரு தெரியுமா அப்பன்? யாரு தெரியுமா தாய்? அது கூட தெரியாம இப்படி மரம் மாதிரி வளந்து இருக்குறீங்களே....கொஞ்சம் இந்த போதிமரத்துக்கு கீழயும் உக்காந்துட்டு போங்க..அப்ப தெரியும் அப்பான்னா யாரு..அம்மான்னா யாருன்னு. (கூட்டத்துல யாருப்பா அது பச்ச சட்டை எஸ்கேப் ஆவுறது).................................................................
My other site:
nanbendaa.blogspot.com
................................................................

சமீபத்தில் எழுதியது:

சென்னையில் மகாகவி பாரதி 
...............................................................


Sunday, August 7, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (07/08/11)உன்னால் முடியும் (முடியுமா) தம்பி:  


"தம்பி..அடுத்த ஷாட்ல பவர் அண்ணன் மாடில இருந்து ஜம்ப் பண்ணி உன் உச்சித்தலைல வலது கால் கட்டை விரலை மட்டும் வச்சி பத்து நிமிஷம் பரதநாட்டியம் ஆடப்போறாரு.சலங்கை ஒலி கமல் எல்லாம் இதுக்கு முன்னால ஒண்ணுமே  இல்ல. சீக்கிரம் ரெடியாவு"
..........................................................................

தசாவதாரம்: 

சமத்துவ சரத்குமாரோட இன்னொரு பக்கத்தை இன்னைல இருந்து எல்லாரும் பார்க்க அரிய வாய்ப்பு வந்துருக்கு. என்னடா நம்ம பெட்டிக்கடைல புதுசா ஒரு புக்கு தொங்குதேன்னு வாங்கிப்பாத்தா "மீடியா வாய்ஸ்"ன்னு ஒரு தமிழ் பத்திரிக்கை. டயர்ட் ஆன சிங்கத்தோட(சரத்?) முகம்தான் லோகோ. விலை ரூ. 10. பக்கம் மொத்தம் 46. 'தமிழக ஹில்லாரி' ஜெவும், 'அமெரிக்க அம்மா' ஹில்லாரியும் அட்டைப்படத்தில். சரத் கௌரவ ஆசிரியராம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மூணு பேர் ஆசிரியர் குழுவுல இருக்காங்க.

2-வது பக்கத்துல சரத் பத்தி செம பில்ட் அப். சாம்பிள்: மகாத்மாவின் தேடலையும்,  நேதாஜியின் வேகத்தையும்(அப்டியா),  பெருந்தலைவரின் விவேகத்தையும் (அட்ரா... அட்ரா), அம்பேத்கரின் சமூக சிந்தனையையும் கொண்டவராம் சரத்.  எதுக்கு 'மீடியா வாய்ஸ்'ன்னு பேர் வச்சாங்க? அதுக்கு விளக்கம் சொல்றார் சரத்: "கிட்டத்தட்ட அதுவும் ஒரு தமிழ்ச்சொல்(சொல்லவே இல்ல..) ஆகிவிட்டதால் அதையே வைத்து விட்டோம்". ஆங்கிலத்திலும் இந்த இதழ் வெளியாகிறது. இது போக 'பேஜ் செவென்'ன்னு இன்னொரு ஆங்கில பத்திரிக்கையும் தொடங்கிட்டாங்க. அவ்வ்!!

இந்த புக்குல சேரன் பேட்டிய படிச்சேன். சீமானை ஏகத்துக்கும் சீண்டி இருக்காரு. "சீமானிடம் ஒரு 'தாதா இமேஜ்'தான் தெரிகிறது. உள்ளூர் தமிழர்களுக்காக அவர் முதலில் ஏதாவது செய்யட்டும். பின்னர் இலங்கைக்கு போகலாம்" அப்டின்னு சொல்லி இருக்கார். 
.........................................................................................
  
ஏழாம் அறிவு: 

எசகுபிசகா யோசிக்கறதுல நம்ம ஆளுங்கள மிஞ்சவே முடியாது. எக்ஸ்ப்ரஸ் அவின்யுவுக்கு வெளில ரோட்ல நடந்து போயிட்டு இருக்குறப்ப ஒரு போஸ்டர் கண்ணுல பட்டு(ரு)ச்சி.  அபிராமி தியேட்டரில் ஆடித்தள்ளுபடி. திங்கள் முதல் வியாழன் வரை டிக்கட் விலையில் 10% தள்ளுபடியாம்.  ஆனா ஒண்ணு அபிராமி ராமநாதன் சார். எங்கள் மாதிரி தீவீர ரசிகர்கள் இருக்குறவரை தமிழ்நாட்ல உங்கள யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது! 
.......................................................................................

வந்தாளே மகராசி:  

                                                                       Bina Kalindi 

மேற்கு வங்கத்தின் புருலியா கிராமத்தில் புரட்சிப்பெண்ணாக வீறுகொண்டு எழுந்து இருப்பவள்தான் நம் 14 வயது தங்கை பினா கலிந்தி. பால்ய விவாகம் செய்ய தன் பெற்றோர்கள் வற்புறுத்தியபோது அதை எதிர்த்து நின்றதோடு மட்டும் இல்லாமல், கடும் எதிர்ப்பினூடே தன் கிராம பெண்களையும் இளம் வயதில் திருமணம் செய்ய வேண்டாம் என வீடு வீடாக சென்று வற்புறுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறாள். இவளிடம் தகராறு செய்யும் பெற்றோர்களை போலீசில் மாட்டி விடவும் செய்கிறாள். உங்கள் சார்பாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? இதோ அதற்கான வழி:

Cell : +91 9434003281
E-mail: prosenjit.kundu18@gmail.com
Address: Bina Kalindi, C/O, Dist National Child Labour Project Society, O/O Asst Labour Commissioner,
Amlapara, P.O. & Dist: Purulia, West Bengal, PIN 723101.

சற்று முன் செல்லில் தொடர்புகொண்டு பேசினேன். பினாவின் நலம் விரும்பி ஒருவர் பேசினார். எனக்குத்தெரிந்த சுமாரான ஹிந்தியில் "பினாவிடம் பேசலாமா?" என்று கேட்டதற்கு அவள் மிகவும் ரிமோட் ஆன கிராமத்தில் இருப்பதாகவும், அங்கு இணைப்பு கிடைப்பது அரிது என்று கூறினார். ஆனால் என் செய்தியை அவளுக்கு கண்டிப்பாக தெரிவிப்பதாக சொன்னார். CNN - IBN டி.வி.யில் "ரியல் ஹீரோஸ்" நிகழ்ச்சி மூலம் பினா பற்றி அறிந்து கொண்டேன். அவளுக்கு என் பாராட்டுக்களை தெரிவியுங்கள் என்றேன். நீங்களும் முடிந்தால் தொலைபேசி அல்லது (மின்)அஞ்சல் மூலம் நம் தங்கைக்கு ஆதரவு தாருங்கள்.   
.........................................................................................

வித்தகன் - WITH A GUN

உங்கள மாதிரி மனசாட்சிக்கு துரோகம் பண்ணிட்டு ஞாயித்து கெலம சாந்தரம் 7 மணிக்கு வெளில சுத்துற ஆளு இல்லைங்க நானு. நம்ம பொழுதுபோக்கே தனி. அந்த டைம்ல கேப்டன் டி.வி.ல நம்ம தவசி அய்யா லாப்டாப்ல மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ற திவ்யமான காட்சிய வார வாரம் பாக்குறேன். ப்ரோக்ராம் பேரு: புரட்சிக்கலைஞரின் புரட்சிப்பாதையாம்ல(ஆனா இந்த பாதை எங்க இருக்குன்னு இதுவரைக்கும் தகவல் இல்ல). தி.மு.க.வை வறுத்து எடுக்குறாரு நம்ம தவசி.   போனாப்போவுது உங்களுக்கும் அந்த லிங்க்கை தர்றேன். அழாம வாய்ல வெரல வச்சிக்கிட்டு படிக்கணும்:

.........................................................................................

தம்பி ஊருக்கு புதுசு:

பவர் ஸ்டாருக்கு செம பைட் தர புதுசு புதுசா கெளம்பி வர்ற போர்ப்படைல இப்ப ஒரு தம்பி சேந்துருக்கு. பேரு: திலீப் குமார். படம் பேரு 'ஒத்த வீடு'.  

                                                                              
'உங்கள ஹீரோ ஆக்குறது என் பொறுப்பு. இப்போதைக்கு பைல எவ்ளோ இருப்பு'ன்னு சொல்லி தம்பிய யாரோ கெளப்பி விட்டுருக்காங்க. உஷாரு டோய்!
....................................................................................

தவப்புதல்வன்:  (sms)

"என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

"லிப்ஸ்டிக் எடுத்து தர சொன்னாங்க. தெரியாம Fevistick எடுத்து தந்துட்டேன்"

"நீ என் மகன் இல்லடா. நண்பேன்டா!!"
...................................................................................

தூறல் நின்னு போச்சி:

நான் ஸ்கூல் படிக்ற காலத்துல எங்க காம்பவுண்டல நிறைய பேரு பாக்யராஜோட 'பாக்யா' புக்கை விரும்பி படிப்பாங்க. நானும்தான். அட்டைல வர்ற வித்யாசமான படம், பாக்யராஜ் கேள்வி பதில் எல்லாம் சூப்பரா இருக்கும். அதுபோக வெளிநாட்டு விஷயம் பத்தி கட்டுரை எல்லாம் வரும். அப்படி இருந்த பாக்யாவை ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கி வாங்கி பாத்தேன். ஐயோ பாவம். ரொம்ப சுமாரான பேப்பர் தரம். அங்கங்க கவர்ச்சி படங்க. மொத்த புக்கும் ப்ளாக் அண்ட் வைட் கலர். ஏன் இந்த நிலையோ.. 
........................................................................................

My other site:
........................................................................................

சமீபத்தில் எழுதியது:

.........................................................................................

                                                                      

Friday, August 5, 2011

எனது முதல் விமான அனுபவங்கள் - 2


என்னமா படம் காட்றாங்க!

எனக்கு முன் சீட்ல இருந்த நண்பன்கிட்ட "என்னய்யா இது. கிங்க்பிஷர் சீட் பின்னாடி டி.வி. இருக்குற மாதிரி நான் எங்க வீட்டு டி.வி.ல பாத்து இருக்கேன். இங்க ஒண்ணுமே காணுமே?"ன்னு கேட்டதுக்கு "அதெல்லாம் ஸ்பெஷல் சாதா  பளைட்லதான் இருக்கும். இது சாதா டைப்"ன்னு சொல்லி என்னை ஆப் பண்ணான். அதுவும் போச்சா. எனக்கு லெப்ட் ரைட் ரெண்டு பக்கமும் இருந்த மவராசனுங்க கைல ஒரு புக்கை வச்சி படம் பாத்துகிட்டு இருந்தாங்க. சுத்தி முத்தி பாத்தா நெறைய பேரு கைல புக்கு. நம்மளும் ஒரு புக்கை வாங்கிட்டு வந்துருக்கலாம். ரெண்டு மணிநேரம் எப்படி ஓட்டுவேன்?

ஆனது ஆகட்டும். நமக்கு பொழுது போகணும். மாநிறத்துல இருந்த ஏர் ஹோஸ்டசை வச்ச கண் வாங்காம பாத்துகிட்டே இருந்தேன். அவ அதுக்கு  மேல.  பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி முன்பக்கம் இருந்த செவப்பு ஸ்க்ரீனை மூடி மூடி திறந்துகிட்டே இருந்தா. கொஞ்ச நேரத்துல என் சீட்கிட்ட இருந்த லெப்ட்,ரைட் பார்ட்டிங்க ரெண்டு பேரும் லைட்ட ஆப் பண்ணிட்டு அவங்க AIR - ஐ (கொறட்டை) டேக் ஆப் செஞ்சாங்க.  அடப்பாவிங்களா. தானும் படுக்காம (படுத்து), தள்ளியும் படுக்காம (படுத்து)  கெடக்குறீங்களே... உங்களுக்கு எதுக்குடா ஓர சீட்டு?  

உள்மண்டை உக்கிரம் ஆன நேரத்துல முன் சீட்டோட பின் பக்கத்தை பாத்தேன். என்னத்தையோ சொருகி வச்சி இருக்காங்களேன்னு எடுத்து பாத்தா..புக்கு. இந்த ஓசி புக்கைத்தான் அத்தனை பேரும் படிச்சாங்களா? ரைட்டு. "நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லா (ஓசி புக்) படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க".

புக்கை புரட்ட ஆரம்பிச்சேன். இருட்டா இருந்ததால படம் மட்டும் பாத்துகிட்டு இருந்தேன். வெளிச்சத்துக்காக  எசகுபிசகா ஏதாவது சுவிட்சை போட்டு தூங்குறவங்கள எழுப்பி உண்டைக்கட்டி வாங்க விரும்பல. ஆனா ஜன்னலோர மவராசு என் தலைக்கு மேல இருந்த நடு லைட்டை போட்டு விட்டாரு.  வெளிச்சம் கரெக்டா என் மேல மட்டும் விழுந்துச்சி. வாட் எ டெக்னாலஜி வாத்யாரே!

                                                கைல காசு. வாய்ல சாண்ட்விச்சு.    

நேரம் ஆக ஆக வயிறு 'கிய்யா மிய்யான்னு கத்த ஆரம்பிச்சது. பசி. நாலாயிரம் ரூவா குடுத்து டிக்கட் எடுத்துருக்கோம். கண்டிப்பா ஓசி சோறுதான்னு நம்பி இருந்தேன். ஆனா வெம்ப வச்சிட்டாளுங்க அழகிய ராட்சசிங்க. எல்லாரும் கைல இருந்த 100, 500 ரூவா நோட்டை புரணிவித்தைக்காரன்கிட்ட குடுக்கற மாதிரி தந்தாத்தான் சாண்ட்விச்சு, 'கோக்'னு தள்ளுவண்டில இருந்து எடுத்து தருவாங்களாம். தீர்த்தத்துக்கு தெளிக்கிற தண்ணிய விட கம்மியா இருந்த ஒரு வாட்டர் பாட்டில் மட்டும் ப்ரீயாம். "எசுகுச்மீ. டூ வான்ட் எனிதிங்"னு என்னை கேட்டா ஒருத்தி. 'ஒரு வெங்காயமும் வேண்டாம். போய்டு'ன்னு மனசுல வச்சிக்கிட்டு சைலண்டா சைகை காட்டினேன். யோவ் விஜய் மல்லையா.. என் சாபம் உன்னை சும்மா விடாது!  

என்னோட லெப்டும் ரைட்டும் செமகட்டு கட்டிட்டு இருந்தானுங்க. வெறுங்கையா இருந்த என்னப்பாத்து லுக்கு வேற. 'பொத்திக்கிட்டு தின்னுட்டு போத்திக்கிட்டு தூங்குங்கடா' மனசாட்சி உருமிச்சி. ஜன்னல் ஓரத்தை எட்டிப்பாத்தா மும்பை நெருங்க ஆரம்பிச்சது. சாரி நாங்க மும்பைய நெருங்கினோம். நீளமான மெயின்ரோட் லைட் வெளிச்சத்தை மேல இருந்து பாத்தா அனகோண்டா பாம்பு டிஸ்கோ ட்ரெஸ் போட்ட மாதிரி தக தகன்னு ஒளிருச்சி. டக்கர் பீலிங். இறங்குரப்ப கூட சீட் பெல்ட் மக்கர் பண்ண, முதல்ல ஹெல்ப் பண்ண லெப்ட் சைட் அண்ணன் முறச்சிகிட்டே கழட்டி விட்டாரு..பெல்ட்டையும் என்னையும். ஒரு வழியா மும்பை வந்தாச்சி!


மும்பை அனுபவங்கள்...அடுத்து வரும் பதிவில்.  

............................................................................

 My other site:

............................................................................
  
சமீபத்தில் எழுதியது:

............................................................................


                                                                   

Wednesday, August 3, 2011

எனது முதல் விமான அனுபவங்கள் - 1


யுவர் அட்டென்சன்  ப்ளீஸ்:

இதுவரை ப்ளைட்ல போகாத மக்களை மனதில் கொண்டு எழுதியதுதான் இந்தப்பதிவு. அடிக்கடி சரக் சரக்னு வெளிநாடு போன நண்பர்களுக்கு இது வெகு சுமாரான பதிவாக இருக்குமென அபாய சங்கு ஊதுகிறேன்!
  

பொறந்துல இருந்து நமக்கு சென்னைதான் உலகமே. மிஞ்சிப்போனா நாலஞ்சி தரம் திருப்பதி போயிருப்பேன். கூட சுத்துன பயலுவ எல்லாம் வேலை கெடச்சதும் ஏகப்பட்ட நாட்டுக்கு போயி சுத்திட்டு வந்து போட்டோவை காட்டி காண்டு ஏத்துவானுங்க. போன வருஷம் அமெரிக்கா போக கெடச்ச சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸு. 'இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். ஆபீஸ்ல அனுப்பாட்டியும் சொந்த காசுல ஏரோப்ளேன் ஏறி வெளிநாடுக்கு போயி தீரணும்'னு முடிவோட இருந்தப்ப போன வருஷம் உயர் அதிகாரி என்கிட்டே வந்து "பெங்களூர் போவ ரெடியா இருங்க"ன்னு சொன்னாரு. சகலைங்க எல்லாம் "நம்ம கம்பெனில ப்ளைட்லதான் அனுப்புவாங்க"ன்னு டெவெலப் செஞ்சானுங்க. மீனம்பாக்கம் போற ப்ளைட்டை அண்ணாந்து பாத்த நமக்கு அடிச்சதுடா யோகம்னு பாத்தா 'பஸ்லதான் போறோம்'னு சொல்லி நெனைப்புல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டாங்க. 

போனவாரம் ஒரு அதிகாரி வந்து "ப்ளைட்ல மும்பை போவ ரெடியா இருங்க"ன்னு சொன்னாரு.  பப்பரப்பேனு பறக்கப்போறோம்னு மனசுல லேசா ஒரு சந்தோஷம். கூட இருந்த தோஸ்து "நம்ம ஆபீஸ்ல ஏர் இந்தியா ப்ளைட்தான் மாப்பு. ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் ஒன்லி ஆண்டீஸ்" ன்னு வவுத்த கலக்குனான். கிங்க்பிஷர்ல போறவன்தான் கொடுத்து வச்சவன். சிலை மாதிரி பொண்ணுங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். நமக்கு அந்த வாய்ப்பு இல்லையேன்னு கண்கலங்கி இருந்தப்ப ஒரு வாரம் கழிச்சி அதிகாரி வந்து சொன்னாரு பாருங்க ஒரு சேதி.."கிங்க்பிஷர்"ல போறோம்னு அப்பதான் கண்ணு பிரகாசமா தெரிஞ்சுது.

பிளைட் அனுபவம் நமக்கு சுத்தமா இல்லாததால, கூட வந்த 5 பேரோட கைப்புள்ள மாதிரி பவ்யமா கார்ல ஏறி மீனம்பாக்கம் போய்ட்டு  இருந்தேன். "காமராஜ் ஏர்போர்ட் போங்க"ன்னு நண்பர் டிரைவர் கிட்ட சொன்னார். "சென்னைல அண்ணா ஏர்போர்ட்தான..இது என்ன புதுசா"ன்னு கேட்டேன். "உள்நாட்டு விமானம் வந்து போற இடம்"ன்னு சொன்னார். முதல் பல்ப். ப்ளைட்டை நெருங்கும்போது NDTV மேடம் பர்கா தத் கண்ல பட்டாங்க. கூட வந்த அதிகாரி அடுத்த குண்டை போட்டாரு. "ஜன்னல் பக்கத்துலதான் உக்காருவேன்னு ஸ்கூல் பசங்க மாதிரி யாரும் அடம் பிடிக்கப்படாது". ஆனா நான் மல்லுக்கு நின்னேன்: "சாரிங்க. நீங்க எல்லாம் ஒலகம் புல்லா சுத்தி இருக்கீங்க. எனக்கு இதுதான் முதல் அனுபவம். வெட்டுகுத்தே நடந்தாலும் சரி நான் ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன்"ன்னு சொல்லிட்டேன். அவங்களும் என் கோரிக்கைய ஏத்துகிட்டாங்க. ஆனா விதி செஞ்ச சதி இருக்கே...........

                                                 என்னுடன் பறந்த தேவதைகள் 

ப்ளைட் உள்ள போயி நம்பரை பாத்தா எனக்கு நடு சீட். கிங்க்பிஷர் சிகப்பை விட அடர்த்தியா என் ரத்தம் கொதிச்சது. மத்த அஞ்சி பேர்ல யாராவது ஒருத்தர் கண்டிப்பா ஓர சீட்ல இருந்தா அவங்களை கிளப்பிட்டு நாம உக்காரலாம்னு பாத்தா அவங்க எல்லாருக்கும் அதே நடு சீட். இதுக்கு நான் பாதயாத்திரையாவே மும்பைக்கு போயிருப்பனே பரம்பொருளே. உச்ச கட்ட வெறில  சீட்ல குந்துனேன். அப்பதான் மேல இருக்குற படத்துல லெப்ட் ஓரம் இருக்குற ஆண்ட்டி வந்து வணக்கம் சொன்னாங்க. (இந்தப்படம் கூட கூகுள்ள தேடுனப்ப லக்குல கெடச்சது). விஜய் மல்லையா சாச்சிபுட்டாறேன்னு டென்சன் ஆனப்ப ரைட் ஓரத்துல இருக்கே அந்த பொண்ணு எட்டிப்பாத்தா.  'பளீர்'னு ஒரு பொண்ணும் கூட இல்லையான்னு இறைவன ஜ(ச)பிச்ச அடுத்த நிமிஷம் போட்டோ நடுவுல இருக்கற பொண்ணு என்ட்ரி குடுத்துச்சி. அப்பாடா!!

சினிமால பாக்குற மாதிரி சீட்பெல்ட் போடத்தெரியாம அசடு வழியவே கூடாதுன்னு சபதம் எடுத்து இருந்தேன். முடியல. பக்கத்துல இருந்தவர் ஹெல்ப்போட அதை மாட்டிக்கிட்டேன். லெப்ட் சைட் ஆண்ட்டி வந்து சைகையால கைய அசைக்க அவங்களுக்கு யாரோ டப்பிங் குடுத்தாங்க. ப்ளைட் தண்ணில விழுந்தா (உங்க நாக்கை நாலு அஞ்சி தரம் ஷேவ் பண்ணி தொலைங்கடா)  எப்புடி எஸ்கேப் ஆவணும், மூச்சு நின்னு போனா(அடங்கோ) எப்படி சமாளிக்கனும்னு டிப்ஸ் குடுத்தாங்க. 

ப்ளைட் ஸ்டார்ட் ஆகி  கொஞ்ச நேரம் தரைலயே கோலம் போட்டுட்டு இருந்துச்சி.  நைட் எட்டே முக்கா ஆனதும் ஜொய்யுனு பறக்க ஆரம்பிச்சது. ஜன்னல் ஓரம் இருந்தா இயற்கையை வேடிக்கை பாக்கலாம்.   இடது ஓரம் இருந்தா ஏர் ஹோஸ்டசை பாத்து பரவசம் அடையலாம். ரெண்டும் இல்லாம இப்படி நடுவுல மாட்டிக்கிட்டனே...எவன் வச்ச செப்புத்தகடோ?


ப்ளைட்டில்  பல்ப் வாங்கிய அனுபவங்கள் தொடரும்...  

...........................................................

My other site:

............................................................
  
சமீபத்தில் எழுதியது:

..............................................................


                                                                  
Related Posts Plugin for WordPress, Blogger...