CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 28, 2011

Zindagi Na Milegi Dobara


                                                 

                                                  Zoya, Javed and Farhan Akthar            
                                                                                                 
ரோட் ட்ரிப் படம் என்பதால் ஜாலியாக மட்டும் இருக்கும். லாஜிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பொழுதுபோக்குக்கு கியாரண்டி தந்தாலே போதும் என்று எண்ணினால், அதையும் தாண்டி சென்சிபில் ஆகவும் படம் ஆக்கி உள்ளார் (பெண்) இயக்குனர் ஜோயா அக்தர். இந்தியாவின் தலைசிறந்த கதை மற்றும் பாடலாசிரியரான ஜாவெத் அக்தரின் புதல்வி. அது மட்டுமல்ல. பாலிவுட்டில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என சகலகலா வல்லவராக இருக்கும் பரான் அக்தருடன் பிறந்த ட்வின் சிஸ்டர்.  இப்படத்தின் பாடல் மற்றும் கவிதைகளை எழுதி இருப்பவர் ஜாவெத் அக்தர். தயாரிப்பும் இவர்களுடையதுதான்.   

கபீர்(அப்பே தியோல்)இம்ரான் (பரான் அக்தர்)அர்ஜுன் (ஹ்ரித்திக் ரோஷன்) மூவரும் நண்பர்கள். திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சியை கொண்டாட ஸ்பெயினில் ரோட் ட்ரிப் செல்ல முடிவெடுக்கிறான் கபீர். தன் தாயை விட்டுப்பிரிந்த தந்தை(நஸ்ருதீன் ஷா) ஸ்பெயினில் இருப்பதால் இம்ரான் ஸ்பெயின் செல்ல சரி என்கிறான். பொருள் ஈட்டுவதே வாழ்வில் பிரதானம் என எண்ணும் அர்ஜுன் முதலில் தயங்கினாலும் பிறகு ரோட் ட்ரிப்புக்கு சம்மதிக்கிறான். அங்கே அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்டர் ஆக அறிமுகம் ஆகிறார் கத்ரீனா கைப். ட்ரிப் முடிகையில் மூவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதே கதை.  

ஸ்பெயின் தேசத்து நவீன கட்டிடங்கள் மற்றும் நகரங்களை தவிர்த்து விட்டுரோட் ட்ரிப் படத்திற்கு தேவையான இடங்களை மட்டும் தேர்வு செய்து  இருப்பதை பாராட்ட வேண்டும். பிரசித்தி பெற்ற தக்காளி திருவிழாஸ்கை டைவிங்பாம்ப்லோனா நகரில் நடக்கும் ‘Bull Running’, கடல் சாகசம் என பல்வேறு காட்சிகளை அழகாக படம் ஆக்கியுள்ளனர். ஸ்கை டைவிங் காட்சியில் மூவரும் அந்தரத்தில் மிதக்கும் காட்சி பரவசத்தின் உச்சம். முன்னணி நட்சத்திரங்களாக இருப்பினும் கதைக்கு தேவையான அளவு மட்டும் நடித்துள்ளனர் ஹ்ரிதிக்கும்காத்ரீனாவும். ‘பேரழகி காத்ரீனா  ஸ்க்ரீனில் வந்தாலே போதும் ரசிகர்களுக்கு’ என்று சும்மாவா சொன்னார்கள்.   ‘ஸ்டீலிங் தெ ஷோ’ என்பார்களேஅதுபோல இப்படத்தில் கலக்கி இருப்பவர் பரான் அக்தர். படம் நெடுக நகைச்சுவை ஜாலம் செய்திருக்கிறார்.

                                                                                                                                                                                
இப்படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு பின்னணி இசையை சாரும். இசை மும்மூர்த்திகள் சங்கர் – எஷான் – லாய் ஆகியோருக்கு ஹாட்ஸ் ஆப். செயற்கையான ஒளிகளை திணிக்காமல் ஸ்பெயினை சுற்றிக்காட்டி உள்ளார் அயல்நாட்டு ஒளிப்பதிவாளர் கார்லஸ் (உலக சினிமா ஒளிப்பதிவர்களுக்கான விழாவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்). படம் முடிந்ததும் அதில் வேலை செய்தவர்கள் லிஸ்ட்டை சில கிலோமீட்டர் நீளத்திற்கு போட்டனர். மிகப்பெரிய வெளிநாட்டு டீம் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுடன் உழைத்திருக்கிறது. அதற்கு கிடைத்த வெற்றிதான் Zindagi Na Milegi Dobara படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன். அழகிய ஸ்பெயின், நல்ல பொழுதுபோக்கு, மிகையில்லா நடிப்பு, அர்த்தமுள்ள வசனங்கள் என அனைத்தையும் கலந்த ஒரு படம் பார்த்த நிறைவு.                                                   
இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் வித்யாசமாக வடிவமைத்து உள்ளனர். அதை பார்க்க இங்கு ‘கிளிக்’ செய்க: ZNMD

Zindagi Na Milegi Dobara பரவசமான ஸ்பெயின் ட்ரிப்!
.....................................................................................................

ஜாவெத் அக்தர்:

                               
Zindagi Na Milegi Dobara படத்தில் ஆங்காங்கு தன் கவித்திறனால் வசீகரித்த  ஜாவெத் அக்தர் பற்றி சில வரிகள் சொல்லவேண்டும். 1971 இந்தியா பாகிஸ்தான் போரை மையமாக கொண்டு வெளிவந்த மெகாஹிட் படமான ‘பார்டர்’ ரிலீஸ் ஆன சமயம். சென்னை மெலடி தியேட்டரில் பார்த்தேன். (ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்). அதில் வரும் இரண்டு பாடல்கள் கண்களில் நீரை எட்டிப்பார்க்க வைத்தன.

முதல் பாடல் ‘சந்தேசே ஆத்தே ஹை’. போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் தம் குடும்பத்தை எண்ணி பாடும் பாடல். ‘இல்லத்திற்கு எப்போது வருவாய்’ என கேட்டு குடும்பத்தினர் அனுப்பும் மடலை மையப்படுத்தி எழுதி இருக்கிறார் ஜாவெத் அக்தர்.

அந்தப்பாடல்:


மற்றொரு பாடலில், போரில் இறந்து பாகிஸ்தான் வீரர்களை பார்த்து இந்திய ராணுவ வீரன் சகோதரத்துவத்துடன் பாடும் ‘மேரே துஷ்மன் மேரே பாய்’  வரிகள் இரு தேசங்களை இணைக்கும் இதயப்பாலம்.

அந்தப்பாடல்:  


அப்போது ஹிந்தி சினிமா எனக்கு பரிச்சயம் இல்லாத காலகட்டம். மீண்டும் பார்க்கத்தூண்டிய படமாக ‘பார்டர்’ இருந்ததால் அப்போதுதான் இவ்விரு  உன்னதமான பாடல்களை எழுதியவர் ஜாவெத் என்று தெரிந்து கொண்டேன். நாற்பது ஆண்டு காலம் தன் எழுத்தால் திரையுலகில் கொடிகட்டிப்பறக்கும் அக்தரின் பேனா பிடிக்கும் கைக்கு முத்தங்களை தந்து விடைபெறுகிறேன். நன்றி!! 

.........................................................
My other site:
........................................................
சமீபத்தில் எழுதியது:

Wednesday, July 20, 2011

தெய்வத்திருமகள் - சுட்டது சரியா?                                                                   

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம்,  

வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல நாள் யோசித்து உருவாக்கிய I AM SAM எனும் பார்பி பொம்மைக்கு பொட்டிட்டு, பூச்சூடி கோடம்பாக்க சந்தையில் ‘தெய்வத்திருமகள்’ பொம்மை என பெயர் சூட்டி விற்பனைக்கு விட்டுள்ளார்கள். அந்த பொம்மையை தன் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை செலவழித்து வாங்குபவர்களிடம், “ஐயா அந்த பொம்மையின் உண்மையான முதலாளி வேறு ஒருவர். காப்பிரைட் சட்டப்படி இம்மாதிரியான செயல்களை ஊக்குவிக்க வேண்டாம்” என சொல்லியும் அதை மதிக்காமல் வாங்கும் வரை  இது போன்ற ‘உலக சினிமா உருவிகள்’ காட்டில் அடை மழைதான். இது போன்ற படங்களின் வெற்றியின் மூலம் இயக்குனர், நாயகன் சம்பளமும் மேலும் சில கோடிகள் உயரும். பிறகு ருசி கண்ட பூனை சும்மா விடுமா? அபேஸ் படலம் தொடரும். 

இப்படி ஒரு திருட்டு தொடர்ந்து நடக்கிறதே என்று அதை சில பதிவர்கள் வெளிச்சம் போட்டு காட்டினால் அதையும் முடக்க முனைகின்றனர் எம் சக நண்பர்கள். இந்த திருட்டு வேலை தமிழ் சினிமாவின் ஆதிகாலத்திலேயே துவங்கி விட்டது. தமிழில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நல்லதம்பி எனும் திரைப்படம், 1936 ஆம் ஆண்டு வெளிவந்த Mr. Deeds Goes to town எனும் ஆங்கில படத்தின் அபேஸ்தான். அதுபோல ஜெமினி, காஞ்சனா நடித்த வெற்றிப்படமான ‘சாந்தி நிலையம்’, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ‘The sound of Music’ எனும் படத்தின் அலேக். ஆங்கிலத்தில் கன்னியாஸ்திரி, தமிழில் ட்யூசன் டீச்சர். அங்கே காமடியன் இல்லை. இங்கே நாகேஷ். படத்தில் இடம்பெற்றுள்ள செட் கூட அப்படியே ஜெராக்ஸ்  எடுக்கப்பட்டுள்ளது. 

                                                                 The Sound of Music


என்ன ஒரு அற்புதமான நடிப்பு, கதை அம்சம்டா சாமி என்று நாம் புகழ்ந்து தள்ளிய (குறிப்பாக 1964 க்கு  பிறகு) பல படங்கள் சென்னை அண்ணாசாலையில் இருந்த சபையர் தியேட்டரில்தான் உருவாயின. ஆம். அங்குதான் அடிக்கடி ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவார்கள். நம் முந்தைய தலைமுறை புகழ்ந்து தள்ளிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என யாரேனும் ஒருவர் அந்த படத்தை பார்ப்பார்கள். படம் முடிந்ததும் “சார். சபையர்ல ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். சூப்பரா இருக்கு. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க. நாம தமிழ்ல செய்யலாம்” என்று அங்கேயே முதல் பூஜையை போட்டுவிடுவார்கள். அதன் பரிணாம வளர்ச்சியாக,  அதன் பின் ஆங்கில படங்களை டி.வி.டி.யில் இருந்து சுட்டனர். ஆனால் இணையத்தின் வளர்ச்சி மற்றும் உலக சினிமா பார்க்கும் இளைய தலைமுறையின் ஆர்வம் அதிகரித்ததால் படைப்பாளிகள் விழிபிதுங்கினர். கொரியா, இத்தாலி என்று எல்லைகளை விரிவுபடுத்தி சுட ஆரம்பித்தனர். ஆனாலும் பருப்பு வேகவில்லை. அந்த திருட்டையும் பதிவர்கள் பிற சினிமா ஆர்வலர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர். உதாரணம்: நந்தலாலா (Kikujiro எனும் ஜப்பான் படத்தின் அபேஸ்).  தற்போது படத்தின் ஸ்டில் வந்த உடனேயே அது எங்கிருந்து லபக்கப்பட்டது என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் உஷார் ஆகிவிட்டதால், மண்டை காய்ந்து நிற்கிறான் திருட்டு படைப்பாளி.

உலக சினிமாவை முறைப்படி அனுமதி வாங்கி தமிழில் எடுக்க பல கோடி செலவு செய்யவேண்டும் என்பதால் ‘தழுவி’ எடுக்கலாமா? அப்படியெனில் விலை உயர்ந்த பொருளை வாங்க வசதி இல்லை என்றால் திருடுவது சரியா?


நாங்கள் உலக சினிமா பார்க்க வாய்ப்பு இல்லை. அதனால் ‘அபேஸ்’ படங்களை பார்க்கிறோம் என்று சொல்லும் நண்பர்களே. தங்கள் வாதம் நியாயம்தான். ஆனால் ஒரு திரைப்படம் திருடப்படுகிறது என்று தங்களுக்கு எடுத்துரைக்கும் பதிவர்களை புரிந்து கொள்ளுங்கள். நம்மில் 99% பேர் சொந்தமாக உழைத்து உண்கிறோம். அப்படி கிடைத்த பணத்தில்தான் படமும் பார்க்கிறோம். ஆனால், கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஊரான் உழைப்பை திருடி இங்கு படமெடுத்து, ஓரிரு வருடங்களில் கோடீஸ்வரர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதை உணருங்கள். இப்படங்கள் வெற்றி பெற்றால்  திருடனின் கனவு மேலும் விரியும். முதலில் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் நடிப்பவன் இம்மாதிரி திருட்டு படங்களில் நடித்து கொஞ்சம் டெல்லி, அப்புறம் கட்சி, கடைசியா சி.எம். என்று மனக்கணக்கு போடுகிறான். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்க வேண்டாம். 

இருப்பவனிடம்(உலக சினிமா படைப்பாளி)இருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு(தமிழ் ரசிகன்) தரும் கோடம்பாக்க ராபின் ஹூட்களே,  ஒரு நிமிடம். மக்களிடம் கொள்ளை அடித்தவனிடம் இருந்து பணத்தை பிடுங்கி மக்களுக்கு தரலாம், தவறில்லை. ஆனால் சுயமாக உழைத்து பணம் ஈட்டியவனிடம் இருந்து திருடும் உரிமையை உனக்கு எவன் தந்தான்? இப்படி சுட்டு எடுத்த படங்களை இனிவரும் கணினியுக இளைய சமுதாயம் வேடிக்கை பார்க்கும் என்றால் அது தங்கள் பகல் கனவாகவே இருக்கும். 


அதற்கு கிடைத்த சாட்டையடிதான் யோகி(Tsotsi), மன்மதன் அம்பு (Romance on the high seas), ஆடுகளம் (Amores Perros) போன்ற படங்களின் வசூல் ரீதியான தோல்வி. இதோ சகபதிவர் தந்துள்ள மேலும் ஒரு சான்று:

                       அயல்நாட்டு ‘அவ்வை சண்முகி’


சக பதிவர் ஹாலிவுட் பாலா  அவர்கள் தெய்வத்திருமகள் திருடப்பட்டது குறித்து I AM SAM படத்தின் தயாரிப்பு நிறுவனமான Newline Cinema – விற்கு மின் அஞ்சல் அனுப்பிய செய்தியை ‘கருந்தேள்’ வலைப்பூ மூலம் அறிந்து கொண்டேன். அப்பதிவில் பின்னூட்டம் அளித்துள்ள நண்பர் ‘உலக சினிமா ரசிகன்’ அவர்கள், இம்மாதிரி திருட்டு விஷயங்கள் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டப்படி 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என கூறி உள்ளார். வலைப்பூ மூலம் இந்த கொள்ளைக்கு முடிவு கட்ட கிளம்பி இருக்கும் பதிவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

ஆங்கில படத்தை தழுவலாம் என்று திருட்டு படைப்பாளிகளுக்கு ஆதரவு தரும் அன்பர்களே. சற்று யோசித்து பாருங்கள். நாலு பேருக்கு நல்லது நடந்தா தப்பில்லை. எங்களுக்கு தேவை ஒரு நல்ல படம். எங்க இருந்து சுட்டா எனக்கென்ன என்று சொல்கிறீர்களே. தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை மட்டும் எதற்காக ரீமேக் அனுமதி பெற்று இவர்கள் படம் எடுக்கிறார்கள். ஏன்னா அனுமதி இல்லாம எடுத்தா தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆளுங்க பொளந்து கட்டிடுவாங்க. ஆனா எங்கயோ இருக்குற வெளிநாட்டுக்காரன் பாவம். இதெல்லாம் அவனுக்கு தெரியாது. அதனால் திருடலாம். சூப்பர் அப்பு!!

என்னய்யா நியாயம் இது? இவனுங்க திருடி படம் எடுப்பாங்களாம். ஆனா அந்தப்படத்த நாம திருட்டு வி.சி.டி.ல பாத்தா மட்டும் இவங்களுக்கு பொறுக்காதாம். திருடி எடுக்கப்பட்ட படங்களை திருட்டு வி.சி.டியில் மட்டும்தான் பார்க்க வேண்டும்னு ஒரு சட்டம் வந்தாதான் இந்த போலி படைப்பாளிங்க திருந்துவாங்க.


                                                                     

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கூட இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷின் திருட்டை அம்பலப்படுத்தி உள்ளது. “ப ப பாப்பா” என விக்ரம் பாடும் பாடல் 1973 ஆம் ஆண்டு வந்த Whistle stop எனும் படத்தின் அச்சு அசல் காப்பி எனவும், பாடல் வரிகள் கூட அப்படியே திருடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. அண்ணே நா.முத்துக்குமார் வாழ்க உங்கள் தொண்டு!


இதோ பாருங்கள் அந்த கொடுமையை:
http://youtu.be/B8UF-2_nlzg


இப்படிப்பட்ட கொள்ளைக்கூட்ட படைப்பாளிகளை தொடர்ந்து துகில் உரிக்கும் உலக சினிமா பதிவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்!!

............................................................
My other site:
nanbendaa.blogspot.com
...........................................................
சமீபத்தில் எழுதியது:
...................................................................                                                             

Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்                                                                   
தெய்வமகன், தெய்வத்திருமகன்..அப்புறம் ஒரு வழியா தெய்வத்திருமகள். நல்லவேளை. ஆளும் கட்சில ஆளுங்க வந்து எப்படிடா எங்க அம்மா பேரை படத்துக்கு டைட்டிலா வச்சன்னு சண்டைக்கு வரலை. வித்யாசமா ஒரு தமிழ் சினிமா வந்துருக்கேன்னு நாக்கு மேல விரலை வச்சிக்கிட்டு பாக்கலாம்னு போனா அதுல 99% வெளிநாட்டு படத்துல இருந்த உருவின படங்களாத்தான்  இருக்கு. யோகி, நொந்தலாலா..இந்த லிஸ்டுல இப்ப தெய்வத்தி(ருட்டு)மகள்.   

சிவாஜி, கமல் எல்லாம் அவங்க நடிப்பால நாலு கால் பாய்ச்சல்ல முன்னேறினா, இந்த விக்ரம் எட்டு கால் பாய்ச்சல்ல பறக்குராறு. அதுல ஒண்ணுதான் இந்தப்படம். பயங்கரமான ஹோம்வொர்க். ஓவர் ஆக்டிங் அல்லது சொதப்பல் இரண்டும் இல்லாம கடைசி வரை செம நடிப்பு. குறிப்பா தன் மகளை ஸ்கூல்ல இருந்து தூக்கிட்டு ஓடும்போது, துரத்திட்டு வர்ற ஆளுங்ககிட்ட அவர் சொல்லும் வசனம்: “நான் வீட்டுக்கு போணும்”. அனுஷ்கா, அமலாபால் ரெண்டு பேரும் அழகா, அளவா நடிச்சி இருக்காங்க. எல்லாரையும் மிஞ்சியது குழந்தை சாராவின் நடிப்பு. எதையோ தொலைத்த மாதிரி இருக்கும் அவளது கண்கள், கேரக்டருக்கு செம பொருத்தம். ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம்.  எம்.எஸ். பாஸ்கருக்கு தேவையா அந்த தெத்துப்பல்? கார்த்திக், ஒய்.ஜி. ரெண்டு பேருக்கும் படத்துல பெரிய ஸ்கோப் இல்ல.

விக்ரம் தன் மாமனார் வீட்டுக்கு உள்ளே, வெளியே ஓடும்போது அவரை பிடிக்க முடியாம செக்யூரிட்டிங்க திணறிப்போற சீன் எல்லாம் நம்பமுடியல. பார்க் ஹோட்டல்ல சந்தானம், அனுஷ்கா மற்றும் பலர் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டமும் அதேமாதிரிதான்.  

                                                                        
முதல் பாதி போர் அடிக்காம போகுது. இரண்டாம் பாதியில் எட்டிப்பாக்குது ஏகப்பட்ட சினிமாத்தனங்கள். கோர்ட்ல விவாதம் நடக்கும்போது ரெண்டு வயசான வக்கீல்கள் ‘அடடா’ ‘அப்பப்பா’ அப்டின்னு அடிக்கடி பேசுறது சுத்த நாடகத்தனம். ‘வியட்நாம் வீடு’ சிவாஜி நடிப்பை காப்பி அடிக்க முயற்சி செஞ்சிருக்கார் நாசர். அவ்வ்வ்!! அசத்தலான ஒன்லைன் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துது. கடைசி பால் சிக்சர் மாதிரி க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்ல விக்ரமும், குழந்தையும் சைகையால பேசுற இடம் கண்ணை குளமாக்குது. அசத்தல் பெர்பாமன்ஸ். தியேட்டரில் செம கைதட்டல். அங்க நிக்கறாரு ‘தூள்’ விக்ரம். அவருக்கு சமமா நடிச்சிருக்கு அந்த ‘தெய்வத்திருமகள்’ சாரா. ரெண்டு பேருக்கும் பல அவார்ட்ஸ் காத்திருக்கு. ஆனா............   
                                                                       
இயக்குனர் மிஸ்டர் விஜய். எப்படிய்யா கூச்சமே இல்லாம I AM SAM படத்தை உருவி இந்த மாதிரி படத்த எடுக்க மனசு வந்துச்சி? இப்படி சொந்த சரக்கு இல்லாம உங்களை மாதிரி ஆளுங்களை விட மசாலா படம் எடுக்குற ஹரி, கே.எஸ்.ரவிகுமார், பேரரசு மாதிரி ஆளுங்க எவ்வளவோ மேல். விக்ரம் அண்ணாத்த. நீங்க மெனக்கெட்டது எல்லாம் பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். ஆனா அதுக்காக I AM SAM ஹீரோ Sean Penn மாதிரியே முகம், ஹேர் ஸ்டைல்னு அப்பட்டமா காப்பி அடிக்கணுமா என்ன? கேட்டா ‘இன்ஸ்பிரேஷன்’ன்னு சப்பை கட்டு கட்டுவீங்க. ஒழுங்கா நீங்க வாங்குன சம்பளத்துல பாதிய ‘சீன் பென்’னுக்கு மணியார்டர் செஞ்சி பாவத்த போக்கிக்கங்க. 

இதுல என்ன காமடின்னா, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி உலக திரைப்பட விழாங்களுக்கு இந்த படத்தை அனுப்பி வப்பாங்க. தெய்வத்திருமகளை பாத்துட்டு வெளிநாட்டுக்காரன் அவார்ட் குடுத்தான்னா அவனை மாதிரி ஒரு கேனப்பய உலகத்துல இருக்க முடியாது. அதுக்கு முன்னாடி I AM SAM படத்தை எடுத்த நியூலைன் சினிமா தயாரிப்பாளரை சந்திச்சி “எசமான், உங்க படத்தை சுட்டு எடுத்துட்டோம். மன்னிச்சிக்கங்க. இந்தாங்க எங்க லாபத்துல ஒங்களுக்கு சேர வேண்டிய பங்கு” அப்டின்னு தெய்வத்திருமகள் டீம் செய்வாங்கன்னு எதிர்பார்த்தா நம்மள விட முட்டாளுங்க உலகத்துல இருக்க முடியாது.  

ஆனாலும் ஒரு விசயத்துல இயக்குனர் விஜய்யை பாராட்டியே தீருவேன். I AM  SAM - ல, பலூன் வாங்கிட்டு ரோட்டை கிராஸ் செய்யுற சீன்ல சீன் பென் அண்ட் கோ எல்லாரும் கைல ஒரே கலர் ஆரஞ்சு பலூனை கொண்டு போவாங்க. ஆனா நம்ம படத்துல அந்த சீனை அப்படியே எடுக்காம கலர் கலரா பலூனை கொண்டு போற மாதிரி எடுத்து இருக்காங்க. பட்.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர். விஜய்!!


http://youtu.be/EROTbDCr5agதெய்வத்திருமகள்திருட்டு மாங்கா. ருசியாத்தான் இருக்கும்!!
...............................................................................................................


My other site:


nanbendaa.blogspot.com
..................................................................சமீபத்தில் எழுதியது:
......................................................................


Monday, July 11, 2011

ஆரண்ய காண்டம்


                         படத்தின் ரியல் ஹீரோக்கள் 

“டேய். நாங்கள்தான் சொல்றம்ல. ஆரண்ய காண்டம் வேல்ட் சினிமான்னு. பரதேசி. இன்னுமா பாக்காம இருக்க. நாப்பது அடி ஒசர அருவாள எடுத்து ஒரே போடா போட்டுருவேன். ஒழுங்கா போய் பாரு” என்று க்ரூப்பாக ஒரு சில ஒலக சினிமா ரசிகர்கள் என் கனவில் வந்து மிரட்டியதால் அதிர்ந்து போய் எழுந்தேன். 'எதுக்கும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோம். சாமி கண்ண குத்துதோ இல்லையோ. இவங்க சொருகுனாலும் சொருகிடுவாங்க' என்ற படப்பிடிப்பில்.. ச்சே..படபடப்பில் படத்தை பார்த்தேன். 

“சாணக்யா, எது தர்மம்?”ன்னு கேட்டா “எது தேவையோ அதுதான் தர்மம்” அப்டின்னு சாணக்யர் சொன்னதை சிரமேற்கொண்டு படத்தை தொடங்குறார் டைரடக்கர். அவர்(Mr.chanakyar) நல்ல விசயத்துக்கு சொன்னா அதை அப்படியே குறுக்கால வாய்க்கா வெட்டி படம் புல்லா அதர்மம் நடக்குற மேட்டருக்கு ரத்தம் பாய்ச்சி இருக்காங்க.

ஒரு ஊர்ல(மெட்ராஸ்) ஒரு ஐயா (ஜாக்கி செராப்). அவருக்கு கீழ எப்ப பாத்தாலும் கெட்ட வார்த்தை, ஆன்ட்டியை மடக்குறது எப்படி, சாரயம்னு  திரியிற நாலு கொய்யா. அதுல ஒருத்தர் பசுபதி (சம்பத்). கஜேந்திரன் கஜேந்திரன்னு ஒரு பேஜாரான ரவுடி(அட! ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார்). அவருக்கு ஒரு தொம்பி. அவன் பேரு கஜபதி. இவங்களுக்குள்ள வெட்டு, குத்து, துரோகம். அவ்ளதாங்க. இது போதாதுன்னு ஜாக்கி ஐயாவோட அல்லக்கை ‘சப்பை’ ரோலில் ரவிக்ருஷ்ணா. ஜாக்கியாண்ட மாட்டிக்கிட்ட இளம் வயசு பொண்ணு ஒண்ணு. அவங்களுக்குள்ள தனியா ஒரு கசமுசா ட்ராக் வேற.   

படத்துல செம கலக்கு கலக்கி இருப்பது கொடுக்காப்புளி (மாஸ்டர் வசந்த்) பையனும், அவன் அப்பாவும். இருவரின் குரல் உச்சரிப்பும், யதார்த்த நடிப்பும்  தமிழ் சினிமாவிற்கு சிறந்த வரவு. குறிப்பாக கடை போனில் பேசிவிட்டு, தன் தந்தை கிடைக்க மாட்டார் எனும் ஆற்றாமையில் சிறுவன் அழும் சத்தம். அல்டிமேட்.வழக்கமாக தமிழ் சினிமாவில் ரௌடிகள் கத்தியை எடுத்துக்கொண்டு 100 மீட்டர் உலக சாம்பியனை விட வேகமாக தெருத்தெருவாக ஓடுகையில் அவர்களை விட வேகமாக பின்னணி இசை நம் காதை கிழித்துக்கொண்டு பறக்கும். நல்ல வேலை யுவன் காப்பாற்றிவிட்டார். எனக்கு தெரிந்து சண்டை காட்சிகளுக்கு இவ்வளவு மெலடியான ட்யூனை முதன் முறை கேட்கிறேன். மிஸ்கின் படத்தில் வருவது போல உலக சினிமா இசையை அப்படியே (பில்டர்) காப்பி அடிக்காமல், தேவையான இடங்களில் மட்டும் தெளிவாக வாசித்துள்ளார் யுவன். 

                                                                      
என்னதான் டார்க் ரூம் எபக்ட், தென்மேற்கு கேமரா ஆங்கிள், டயட் வசனம் (மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி) எடுத்து என்னதான் பிலிம் காட்டினாலும் படம் ஒன்றும் பெரிதாக இல்லை. இதற்குப்போய் ‘ஆரண்ய காண்டம் – தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா’, ‘கொய்யாலே. இதுதாண்டா உலக சினிமா’, ‘கோடம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல 75 வருசமா காத்திருந்தேன். அந்தா வருது பாரு ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ்’ என்று காதில் பூவுக்கு பதில்  மெகாசைஸ் பொக்கேவை வக்கிறவங்ககிட்ட உஷாரா இருங்கப்போய்!!    

சம்பத் போன்ற திறமைசாலிகளை வித விதமான கேங் படங்களில் பெரும்பாலும் நடிக்க வைத்து என்னத்த சாதிக்கப்போறாங்களோ. நீங்கள் ஆட வேண்டிய களம் பெரிது சம்பத். இந்த வட்டத்தை விட்டு அப்பப்ப வெளில வாங்க. அவன் இவன்ல பாலா ஜமீன்தாரை கிளைமாக்ஸ் காட்சில செம செக்ஸியாக காட்டுறது மாதிரி, இந்தப்படத்துல ஜாக்கி செராப் இடுப்புக்கு கீழ மட்டும் ஒரு இஞ்ச் கிராபிக்ஸ் செய்து மறைத்துவிட்டு, படு செக்ஸியாக காட்டுகிறார்கள். அடப்பாவிங்களா. உங்க யதார்த்த சினிமாவுக்கு ஒரு அளவே இல்லையாடா. கேட்டா “படத்துக்குதான் சர்டிபிகேட் குடுத்து இருக்கே. அப்பறம் நீ ஏண்டா கூவுற” அப்டின்னு கேக்குற தலைங்க சொல்றதும் சரிதான். அதைத்தான் நானும் கேக்கறேன். அந்த ஒரு இஞ்சை கூட ஏன் மறைக்கணும். அதையும் காட்ட வேண்டியதுதான. முழுக் நனஞ்சதுக்கு அப்பறம் மான் மார்க் குடை எதுக்கு? கொஞ்ச வருஷம் முன்னாடி வரை ஈரோயின் இல்லாக்காட்டி கவிர்ச்சி நடிகைங்கதான் எசகு பெசகா வருவாங்க. இப்ப என்னடான்னா ஆம்பளைங்க அவுத்து போட்டுட்டு நடிக்கறாங்க. செய்ங்கடா. நீங்க செய்ங்க. 

மாஸ் ஹீரோ நடிச்ச படத்துல வர்ற பன்ச் டயலாக், மரம்சுத்தி டூயட் இதையெல்லாம் கிண்டல் பண்ணி அவங்கள க்ளோஸ் பண்ணிட்டோம்.  டீசண்டா படம் எடுத்த விக்ரமன் மாதிரி ஆளுங்களையும் அமுக்கிட்டோம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன கதையா, ரௌடிப்படங்க எல்லாம் நல்ல படங்களை விரட்டிட்டு, இப்போ தமிழ் சினிமால பாய் போட்டு படுத்துருச்சி. ம்ஹூம். இது ஆவுரதில்ல!!
...................................................................................

My other site:


.....................................................................................சமீபத்தில் எழுதியது – நண்பேன்டா மிக்சர் கடை 
.......................................................................................


                                                               

Saturday, July 9, 2011

வேங்கை
விபூதியுடன் ராஜ்கிரண், குங்குமப்பொட்டுடன் தனுஷ், சந்தனம் மற்றும் குங்குமம் சேர்ந்த பொட்டுடன் பிரகாஷ்ராஜ், கோபுர பொட்டுடன் தமன்னா. சிங்கம், சாமி போல ஆட்டம் பாம் வெடிக்க இயலாவிடினும், அட்லீஸ்ட் லட்சுமி வெடியையாவது பற்ற வைத்து இருக்கலாம் ஹரி. ஆனால் நமக்கு(அவ்வ்வ்..எனக்கு)மிஞ்சியது ‘பொட்டு’வெடிதான். இதுவரை  கண்டிராத பல புதுமையான காட்சிகளை உள்ளடக்கி வீறுகொண்டு பாய நினைத்து இருக்கிறது இவ்வேங்கை. அத்தகு உள்ளடக்கங்கள் பின்வருமாறு:

சிவங்கையின் காட்பாதர் ராஜ்கிரண். ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்ர்ர். தப்பு செஞ்சா செம மிதி மிதிப்பாரு. அந்த ஊர்ல ஜட்ஜ், இன்ஸ்பெக்டர், டவாலி, வக்கீல் எல்லாமே அவர்தான். அவரோட புள்ளைதான் நம்ம ஈரோ தனுசு. இவர் கேரக்டரும் ரொம்ப புதுசு. எங்க அடிதடி நடந்தாலும் தட்டி, குட்டி, வெட்டிகூட கேப்பாரு. ஆனா இவரும் நல்லவருங்கோ..  இவர் சாதுவா மாறணும்னு அவங்க மாமா ஊரான திருச்சிக்கு அனுப்பி வைக்கிறார் ராஜ்கிரணு. அடப்பாவிங்களா. எம்ஜி.ஆர் காலத்துல இருந்து, ரஜினி நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு தாண்டி இன்னும் எத்தனை வருஷம் இப்படியே ஓட்டுவீங்க. போதும் ரீலு அந்து போச்சி. அடுத்து நம்ம வில்லன் பிரகாஷ்ராஜ். முதன் முறையா மிகவும் புதுமையான கேரக்டரை  சவாலா ஏத்து கலக்கி இருக்காரு. அதாகப்பட்டது சிவகங்கை எம்.எல்.ஏ. ரோல். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, ஹீரோவை முறைப்பது, அப்புறம் டம்மி பீஸ் ஆவது, “டேய் டேய்”, “அவனை தூக்குடா தூக்குடா”, “கொன்னுடுவேன், கொன்னுடுவேன்என்று டபுள் ட்ரபுள் குடுப்பது என பின்னுகிறார்.

‘தக தக’ தமன்னா படம் முழுக்க 2G வழக்கில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கைது ஆகப்போகும் வி.ஐ.பி.யைப்போல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நடிக்கிறார்(?) படம் நெடுக. மசாலா தமிழ் சினிமா படங்களில் அம்மா பாத்திரத்தில் யார் நடித்தாலும் ஒரே காட்சி அமைப்புதான் என்பது கோடம்பாக்க கல்வெட்டில் பதிக்கப்பட்ட ஒன்று. ஊர்வசி மாதிரி திறமையுள்ள நடிகைகள் எதற்கு இப்படி வீணடிக்கப்பட வேண்டும்? ஈரோவுக்கு தொங்கச்சியாக வருபவர்களை மெகாசீரியலில் இருந்து 99 வருட லீசில் எடுத்து இருக்கிறார்கள் போல. இங்கும் அவ்வாறே. பாவம் பொண்ணு. படத்தில் இருந்ததே தெரியவில்லை. 

                                                                             
சமீபகால தமிழ் சினிமாவில் ஈரோவுக்கு வேலை வெட்டி இல்லாவிடினும் உலக வரலாறு முதல் உள்ளூர் உருட்டுக்கட்டை உருவான விதம் வரை எல்லாத்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ராஜ்கிரண் வெளியூருக்கு ட்ரெயினில்/காரில் செல்லும் வழியில் அவருக்கு ஆப்பு வைக்க பிரகாஷ்ராஜ் ஆட்களை அனுப்புகிறார். அப்பாவை காப்பாற்ற தனுஷ் தன் ஆட்களுக்கு ‘கூகுள் எர்த்’ பற்றி எல்லாம் தெரிந்த வொர்த் ஸ்டூடன்ட் போல கிளாஸ் எடுக்கிறார். எப்படி? இப்படித்தான்: “அப்பா சிவகங்கைல இருந்து ட்ரெயின்ல கிளம்பு இத்தனை மணிக்கு அங்க போவாரு. அவனுங்க அத்தனை மணிக்கு அங்க நிப்பாங்க. அதுக்குள்ள காரைக்குடி வழியா சாத்துக்கொடி கடை பின்னாடி பைக்குல 199 கி.மீ. ஸ்பீட்ல நம்ம போயி அவனுங்கள போட்டுரலாம். அதுல தப்பிச்சா அடுத்து அவனுங்க அடுத்த ஊருல மூணாவது சந்துல முறுக்கிக்கிட்டு நிப்பாங்க. நம்ம குறுக்கு சந்துல போயி பொளக்கலாம்” என்று பின்னி பெடல் எடுக்கிறார்.
                                
                               
ஹரி படம் என்றால் ACP, DSP என்று யாராவது இருந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்பது விக்கிரமாதித்த வேதாளத்தின் சாபம் என்பது நமக்கு நன்றாக தெரியும். இப்படத்தில் பணியாற்றிய DSP (Devi Sri Prasad) வேலையை ஒழுங்காக செய்யவே இல்லை. ‘பிடிக்கல’ பாடல் சுமார். மத்த எந்த பாட்டும் எனக்கு பிடிக்கல. ஹாரிஸ் ஸ்டைலில் ‘ஒண்ண மட்டும் புடிக்குது’ பாடலில் சேட்டை செய்ய முயற்சி செய்து உள்ளார். யாருக்கும் புரியாத பாசையில “‘உனாகி சாங்கலோ, அமையா வீங்கேலோ, லிபியா ஊங்கோயா யான்கேளா வாங்களோ வாங் வாங்” என்று ஆரம்பிக்குது அந்தப்பாட்டு. பட்..சாங் இஸ் ஓக்கே. அதுக்காக மட்டும் இவரை மன்னிக்கலாம். இல்லன்னா மாண்புமிகு அம்மாகிட்ட சொல்லி இந்த DSP – யையும் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்ய சொல்லலாம்னு நினச்சேன்.

கஞ்சா கருப்பு காமடி செய்கிறேன் பேர்வழி என்று ஹரி பட ரௌடிகளை விட மோசமாக நம் கழுத்தை அறுக்கிறார். எல்லா படத்திலும் வாய்ஸ் மாடுலேஷன் எதுவும் செய்யாமல் ஒரே மாதிரி இன்னும் எத்தனை நாள்தான் கருப்பின் பருப்பு வேகும் என்று தெரியவில்லை. வடிவேலு, விவேக், சந்தானம் என்று யாராவது இருந்திருக்கலாம். 

படத்தில் முக்கியமான இரு பஞ்ச் டயலாக்குகள்: ஒன்று பிரகாஷ்ராஜ் சொன்னது “பருப்புல ஒசந்தது முந்திரி. பதவில ஒசந்தது மந்திரி”. படம் பார்த்தவர்கள் மனதில் “தயவு செஞ்சி சீட்டை விட்டு சீக்கிரம் எந்திரி”.

 அடுத்த பஞ்ச் பேசியவர் நம்ம ஈரோ தனுசு: “கோபக்காரன் அருவா எடுத்தாதான் தப்பு. காவக்காரன் எடுத்தா தப்பில்ல”. என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை.. அப்ப கோவக்காரன் எவனுமே காவக்காரனா இருக்கக்கூடாதா? இல்ல காவக்காரன் எவனுக்குமே கோவமே வராதா? 

சுமோ, பொலேரோ, ஸ்கார்பியோ, அருவாள், டவுன், கிராமம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஊர் பெரியவர், கோயிலும் கோயில் சார்ந்த இடங்கள், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை...ஆத்தாடி இதுக்கு மேல எங்க ஒடம்பு தாங்காது ஹரி சார். ஏதோ விக்ரம், சூர்யா ரெண்டு பேரும் நல்லா பெர்பாம் பண்ணதால சாமி, சிங்கம் ரெண்டும் தப்பிச்சது. அவங்க பண்ண (ஒன்றரை டன்) வைட்டான ரோலை எல்லாம் தனுஷ், பரத் மாதிரி ஆளுங்க மேல ஓங்கி முதுகுல அடிச்சா தாங்குமா? 

நாங்க சொல்றதை பத்தி எல்லாம் கவலைப்படாம நீங்க உங்க ரூட்டை மாத்தாம இப்படியே படம் எடுங்க ஹரி சார். அப்பதான் வெள்ளை வேட்டி சட்டை விக்கிறவங்க, வெளுக்கறவங்க, அயன் பண்றவங்க, வித விதமா (ஓட்டு) மீசை வச்சி விட்றவங்க, காரை வாடகைக்கு விட்றவங்க, பொட்டு விக்கிறவங்க இப்படி எல்லாருக்கும் பிசினஸ் ஜகஜோரா நடக்கும். யூ கண்டின்யூ!!   

வேங்கை  மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண. 
 தனுஷ், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சா எனக்கென்ன!   
.................................................................

My other site:

..............................................................


                                                                     

Thursday, July 7, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (07/07/11)


வியட்நாம் வீடு: 

                           
"வெள்ளிக்கம்பி ஜெயில்தான் வேணும்னு அடம் பிடிக்கப்படாது. டெல்லில ரெண்டு நாளா மிதமான மழை பெய்யுதாம். திகார்ல நாலு சொட்டு எக்ஸ்ட்ரா மழையாம். சமத்தா போகணும். நான் அங்க வரும்போது குருவி ரொட்டியும், குச்சி முட்டாயும் வாங்கிட்டு வருவனாம். போடி செல்லம்!!"
.................................................................................................

சரஸ்வதி சபதம்:
சென்னை புத்தக பிரியர்களே/வெறியர்களே, கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி விற்பனை தற்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோயில் எதிரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட புத்தகங்களை பலர் அள்ளிச்சென்று விட்டனர் என்பது மிச்சம் இருந்த சுமாரான தலைப்புகளை பார்த்தாலே தெரிந்தது. புதிய புத்தகங்கள் வர வாய்ப்பு உள்ளது. பெப்சி வரலாறு, எஸ்கொபார் எனும் டான் வாழ்க்கை, ஜீ.டி.வி. ஓனரின் வெற்றி ரகசியம் ஆகிய மூன்று புத்தகங்களை வாங்கினேன். மொத்தம் 80 ரூபாய் மட்டுமே. ஏகப்பட்ட பாக்கெட் சைஸ் புத்தங்கள் நிரம்பி இருக்கின்றன. இந்த ஞாயிறு வரை விற்பனை உண்டு என கடைக்காரர் சொன்னார். அதுபோல திங்கள் அன்று ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லாண்ட்மார்க் புத்தக கடைக்கு சென்றேன். அங்கும் தள்ளுபடி விற்பனை போட்டிருந்தனர். இரண்டு புத்தகங்களின் விலையில் மூன்று புத்தகங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்திய எழுத்தாளர்கள் எழுதியவை. இன்னும் எத்தனை நாள் இந்த தள்ளுபடி என்று தெரியவில்லை. நேரம்/விருப்பம் இருந்தால் இரண்டு இடங்களுக்கும் விசிட் அடிங்கோ!! 
.............................................................................................

குருதிப்புனல்:
தமிழ் ஈழ மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்த சேனல் காணொளி காட்சிகள் நாளை இரவு 10 மணி, வெள்ளி இரவு 11 மணி மற்றும் சனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்புகிறது ஆங்கில செய்தி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே. போர் நடைபெறுகையில் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஆங்கில செய்தி சேனல்களுக்கு இப்போதுதான் பார்வை தெரிந்துள்ளது. எப்படியோ சிங்கள கூட்டத்தின் அட்டூழியங்கள் உலகிற்கு இப்போதாவது தெரிய ஒரு வாய்ப்பு வந்துள்ளது. 
........................................................................................................


அபூர்வ சகோதரர்கள்: 

                             
சென்ற வாரம் நடந்து முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளனர் பாப் பிரயன் – மைக் பிரயன் சகோதரர்கள். இது இவர்கள் இணைந்து வென்ற 11 வது கிராண்ட் ஸ்லாம் போட்டி. இதன் மூலம், இதற்கு முன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகை கலக்கிய உட்போர்ட் – உட்பிரிட்ஜ் ஜோடியின் 11 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்துள்ளனர். கடந்த 244 வாரங்களாக இரட்டையர் பிரிவில் தொடர்ந்து உலகின் நம்பர் 1 இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர் இந்த அசத்தல் சகோதரர்கள்.
...........................................................................................................

சிந்தனை செய்:
சும்மா இருக்கறவனை சொறிஞ்சி விட்ட கதையா, ‘ஆரண்ய காண்டம் ஆஹோ ஓஹோ..செம உலகப்படம்’ என்று சில விமர்சகர்கள் உசுப்பேற்றி விட்டார்கள் எஸ்.பி.பி. சரணை. காண்டம் பாக்ஸ் ஆபீசில் கண்டம் ஆனதால்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் ஆசையாக கட்டிய ரிகார்டிங் ஸ்டுடியோ விற்கப்படும் நிலைக்கு வருவதாக செய்திகள் சொல்கின்றன. அப்படத்தில் வரும் அசிங்கமான விசயங்களை எதிர்த்ததற்கு லாலிபாப் சாப்பிட சொன்ன உலக சினிமா விமர்சகர்கள் இனியேனும் இளைய தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து அவர்களை உசுப்பேற்றவும். இல்லையெனில் லாலிபாப் வாங்க கூட கஷ்டப்பட வேண்டி வரும்.  
...........................................................................................................


எந்திரன்:
“நீ மட்டும் ஒரு தடவை கூட சிஸ்டம் பாஸ்வோர்ட் மறக்காம இருக்கியே, எப்படி?"


“என்னோட பாஸ்வோர்ட் ‘incorrect’ – னு செட் பண்ணி வச்சிருக்கேன். நான் மறந்தா கூட சிஸ்டம் ‘Your password is ‘incorrect’ – னு எடுத்து குடுத்துடும்!”
.........................................................................................................................


சங்கர் சலீம் சைமன்:
“என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” எனும் வாசகம் தாங்கிய வாகனங்களை தாண்டி எப்போதும் ஓரிரு வாகனங்களாவது முன்னே சென்று கொண்டுதான் இருக்கின்றன!!
.....................................................................................................

வேலை கிடைச்சிருச்சி:
வருடாவருடம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்தும் ‘ஜம்போ ஜாப் பேர்’ வேலை வாய்ப்பு முகாம் இந்த வருடமும் தொடர்கிறது. வரும் சனி மற்றும் ஞாயிறு சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் காலை பத்து முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.  ஐ.டி. மற்றும் பி.பி.ஓ வாய்ப்புகளே பிரதானமாக உள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் வேலை தரும் இந்த வாய்ப்பை வேலை தேவைப்படும் நண்பர்கள் நழுவ விட வேண்டாம்.
முகவரி:

சென்னை ட்ரேட் சென்டர்,
ஹால் 2, மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நந்தம்பாக்கம், சென்னை.
இணையம்:
மேலும் விவரங்களுக்கு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளிவரும் ‘சென்னை டைம்ஸ்’ இணைப்பின் கடைசி பக்கத்தை பார்க்கவும்.
............................................................................................................ 

சிங்கம்:
தமிழில் எகிறி அடித்த சிங்கம் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடித்துள்ளார். ஹிந்தி டைட்டிலும் ‘சிங்கம்’ தான். ஹீரோயின் கஜல் அகர்வால். வில்லன் அதே பிரகாஷ்ராஜ்தான். வரும் 22 ஆம் தேதி ரிலீஸ். சல்மானுக்கு ஒரு ‘தபங்’ என்றால் தேவ்கனுக்கு ஒரு ‘சிங்கம்’?  http://www.youtube.com/watch?v=mp-XqCrCi6I
...................................................................................
My other site:

nanbendaa.blogspot.com
...............................................................................
Related Posts Plugin for WordPress, Blogger...