CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, June 20, 2011

விம்பிள்டன் - 1
விம்பிள்டன்.... உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டென்னிஸ் ஆடும் அனைவரின் லட்சியக்கனவு. டென்னிஸ் வரலாற்றில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியன் ஓப்பன், பிரெஞ்ச் ஒப்பன், யு.எஸ். ஓப்பன் மற்றும் விம்பிள்டன் ஆகியவை மிக முக்கியமானவை. அவற்றுள் மிகவும் புகழ்பெற்றதும் , 125 ஆண்டு கால பாரம்பரியம் உடையதும்தான் இந்த விம்பிள்டன் போட்டி. வருடாவருடம் லண்டன் நகரில் ஜூன் மாத இறுதியில் இரண்டு வாரங்களுக்கு களைகட்டும் இந்த போட்டியை இவ்வாண்டு யார் வெல்லப்போகின்றனர் என்பது அடுத்த ஞாயிறு அன்று தெரிந்து விடும். இன்று முதல் துவங்குகின்றன முதல் ரவுண்ட் ஆட்டங்கள். 

நான் டென்னிஸ் பார்க்க துவங்கிய காலத்தில் ஆண்கள் பிரிவில் இவான் லேண்டிலும், மகளிர் பிரிவில் மார்டினா நவ்ரதிலோவாவும் என்னுடைய அபிமான ஆட்டக்காரகளாக திகழ்ந்தனர். இருவரும் செக்கஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்தவர்கள். உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்த லெண்டில் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்ற போதிலும், கடைசி வரை விம்பிள்டனை வெல்ல முடியாமல் ரிடயர்ட் ஆகி விட்டார். ஆனால் மார்டினா வென்றதோ 9 விம்பிள்டன் கோப்பைகள். அந்த சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க இயலவில்லை.  ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் போட்டியில் பல ஆண்டுகாலம் கோலோச்சியவர் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ். லென்டிலுக்கு பிறகு டென்னிசில் எனது 'தல' என்று சொல்லலாம்.     90-களில் அசைக்க முடியாத நம்பர் 1 வீரராக இருந்த இவர் வென்றதோ 7 விம்பிள்டன் போட்டிகள். ஏஸ் போடுவதில் சூரர். களத்தில் சோதனையான கட்டம் வந்தாலும் முகத்தில் கோபத்தை காட்டாமல் அமைதியாக ஆடி வெல்லும் கில்லி. 

                                                   ரபேல் நடால் - ரோஜர் பெடரர்

வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான் இவ்வையகத்தில்? சாம்ப்ராஸின் விம்பிள்டன் ஆதிக்கத்தை வீழ்த்தி கோட்டையை கைப்பற்றினார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர். இதுவரை 6 முறை இப்போட்டியை வென்று இவ்வாண்டு சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார் இவர். இதை முன்பே சாதிக்க இவருக்கு வாய்ப்பு நெருங்கியது. ஆனால் அந்தக்கனவில் இரண்டு முறை(2008, 2010) மண்ணை போட்டவர் இன்றைய நம்பர் 1 வீரர் ரபேல் நடால்(ஸ்பெயின்). இவ்வாண்டு நீயா நானா என இருவரும் கோப்பைக்கு சண்டை போட்டாலும் இவர்களை அவ்வளவு எளிதாக வெல்ல விடாமல் கடும் சவாலை தர தயாராக உள்ளனர் செர்பியாவின் டோஜோவிக்கும், இங்கிலாந்து மண்ணின் மைந்தன் ஆண்டி முர்ரேவும். 

இந்தியாவின் சார்பில் சானியா மிர்சா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் களத்தில் உள்ளனர். பலதவை முயன்றும் கிராண்ட் ஸ்லாம்  போட்டிகளில் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வி அடைந்து வீடு திரும்பி விடுகிறார் சானியா. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரமேஷ் கிருஷ்ணன், மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பிறகு உலக அரங்கில் தடம் பதித்த  வீரர்கள் இதுவரை இல்லை என்றே சொல்லலாம். லியாண்டர் பெயஸ் கூட ஒற்றையர் பிரிவில் பெரிதாக சோபிக்கவில்லை.ஆனால் சோம்தேவ் சமீபகாலமாக தன்னை விட ரேங்கிங் பட்டியலில் பல இடங்கள் முன்னே உள்ள வீரர்களை வென்று வருவது பெரிய நம்பிக்கையை தருகிறது. ஆசியாவில் இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஒருவர் கூட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றதில்லை என்ற மிகப்பெரிய குறையை சமீபத்தில் போக்கியவர் சீன வீராங்கனை லீ நா. அது போல் ஒரு நாள் இந்தியாவும் தனது பெயரை நிலைநாட்டுமா என்று காத்திருக்கும் அனைவருக்கும் இப்போதைய ஒரே நம்பிக்கை சோம்தேவ் மட்டுமே. 

                                                                                                                  
இரட்டையர் பிரிவில் கூட களம் இறங்கும் சோம்தேவ், ஜப்பான் வீரர் கெய் நிஷிகொரியுடன் கைகோர்க்கிறார். இன்று மாலை இந்திய நேரம் 4.30 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஒரு காலத்தில் விம்பிள்டன் போட்டிகளை கால் இறுதி சுற்றில் இருந்தே நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது தூர்தர்சன். அப்போது எங்கள் வீட்டில் டி.வி. இல்லாததால் பக்கத்துக்கு வீட்டு அங்கிள்கள்  டென்னிஸ் பார்த்தால் அவர்களுடன் அமர்ந்து சில வருடங்கள்  ஓசியில் பார்த்தேன். ஒருவழியாக டி.வி. வாங்கும் நிலை எனக்கும் வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அனைத்து விம்பிள்டன் போட்டிகளையும் இன்று வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருவதால் பல போட்டிகளை காணும் வாய்ப்பை இழந்து விட்டேன்.   ஜிம்பாப்வே உடன் ஆடும் மொக்கை கிரிக்கெட் போட்டியை கூட லைவாக போடும் தூர்தர்சன், டென்னிசை சுத்தமாக ஒதுக்கி விட்டது. அரசு கேபிள் வந்தால் விளையாட்டு சேனல்கள் தெரியுமா? அல்லது DTH-க்கு     மாறினால்தான் வேலைக்கு ஆகுமா? என்று தெரியவில்லை. அரசின் ஆணைக்காக காத்திருக்கிறேன். விம்பிள்டனில் மழை எப்போது நிற்கும், ஆட்டம் எப்போது துவங்கும் என காத்திருக்கும் டென்னிஸ் ரசிகர்களைப்போல. 

விம்பிள்டன் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து தருகிறேன். லவ் ஆல்!!

.............................................................................
My other site: 

............................................................................
                   
                                                                

6 comments:

சென்னை பித்தன் said...

//விம்பிள்டனில் மழை எப்போது நிற்கும் ஆட்டம் எப்போது துவங்கம் என காத்திருக்கும் டென்னிஸ் ரசிகர்களைப்போல. //

நல்ல சஸ்பென்ஸ்தான்!
தொடருங்கள்!

rajamelaiyur said...

புதிய தகவல்கள் நன்றி

rajamelaiyur said...

//
விம்பிள்டன் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து தருகிறேன். லவ் ஆல்!!//

ஆவலுடன் எதிர்பர்கேறேன்

Anonymous said...

///ரோஜர் பெடரர்///எனக்கு பிடிச்சவீரர் எனினும் தற்போது இவர் ஆதிக்கம் விலகுகிறது என்று தான் நினைக்கிறேன்

செங்கோவி said...

என்னமோ மாப்ளே..நமக்கு இதெல்லாம் புரியறதே இல்லை..ஃபிகர் பார்க்கிறதோட சரி.

கத்தார் சீனு said...

ஸ்டெபி கிராப் பத்தி கொஞ்சம் சொல்லி இருக்கலாம் .....

Related Posts Plugin for WordPress, Blogger...