CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 4, 2011

அழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல!
                                                               
அண்மையில் 'அழகர்சாமியின் கழுதை'  என்ற தலைப்பில் ஒரு திரை  விமர்சனத்தை பிச்சைப்பாத்திரம் எனும் வலைப்பூவில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுரேஷ் கண்ணன் அவர்கள் இரு பதிவுகளில் அப்படத்தை குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருந்தார். இப்படத்தை நானும் பார்த்தேன். அந்த அளவிற்கு ஒன்றும் மோசமான படம் இல்லை என்பது என் கருத்து. எனவே அவர் எழுதியதில் புருவத்தை உயர்த்த வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என் தனிப்பட்ட கருத்தை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அளவிற்கு சினிமா ஞானம் இல்லாத ஒரு சராசரி ரசிகன் என்பதால், எழுத்தில் ஆழமும் நுட்பமான புரிதலும் நிறைய இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால்..என் எண்ணங்களை பகிர வேண்டும் எனும் முனைப்பே இப்பதிவு எழுத காரணம். இத்திரைப்படம் மூலக்கதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது எனும் விவாதத்திற்கு நான் வரவில்லை. ஏனெனில் அக்கதையை நான் படிக்கவில்லை. அதேபோல குதிரை பற்றிய கெமிஸ்ட்ரி அல்லது பிசிக்ஸ் எதுவும் எனக்குத்தெரியாது. கிண்டி ரேசை நிறுத்தியதன் நினைவாக சென்னை ஜெமினி பாலத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கழுதை..சாரி..குதிரை மட்டுமே அவ்வப்போது கண்ணில் படும். ஆதலால், அ.குதிரையை வெறும் படமாக மட்டுமே முன்வைத்து சில விசயங்களை இங்கு பகிர விரும்புகிறேன். 

முதல் பாகத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் இப்படத்தை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது. ஊடகங்களும் விமர்சகர்களும் வேண்டுமானால் கொண்டாடி இருக்கலாம். ஆனால் ரசிகர் கொண்டாடினர் என்று எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு இப்படம் வியாபார ரீதியில் வெற்றிப்படமும் அல்ல. இப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் 'அற்புதமான படைப்பு. பார்த்தே தீர வேண்டும்' என்று சொன்னதாக தெரியவில்லை. 'நல்லா இருக்கு' என்று வேண்டுமானால் சொல்லி இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை தமிழில் ஒரு வித்யாசமான முயற்சி எப்போது வந்தாலும் அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்து இருந்தால் வெகுவாக சிலாகிக்கும் மைன்ட் செட் உள்ளவர்கள் சொன்னதை மனதில் கொண்டு சுரேஷ் அவர்கள் அவ்வரிகளை எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. 

இரண்டாம் பாகத்தில் சில விசயங்களை அழகாக எழுதி இருந்தார். மக்களிடம் சிரிப்பை பிடுங்க வலிய திணிக்கப்படும் காட்சிகள் குறித்து. அது முற்றிலும் நியாயமான விவாதமே. படம் நெடுக நகைச்சுவையை தூவினால் மட்டுமே ரசிகனை சீட்டில் உட்கார வைக்க முடியும் என கருதி தேவையற்ற இடங்களில் கூட அத்தகைய காட்சிகளை இயக்குனர்கள் தொடர்ந்து சொருகி வருவது தமிழ் சினிமாவை உலக சினிமாவின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பெரிய தடைக்கற்களாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வகையில் என்னை கடுப்பேற்றிய படம் அமிர்கானின் 'பீப்ளி லைவ்'. விவசாயி ஒருவன் வறுமை காரணமாக தற்கொலை செய்ய முயல்வதை நகைச்சுவை காட்சிகளால் நிரப்பி இருப்பார்கள். எனவேதான் அப்படத்திற்கு ஆஸ்கர் கதவுகள் மூடப்பட்டனவோ என்னவோ. 

ஊர் பெரியவர்கள் காமடி செய்யும் 'இத்துப்போன கிராமம்' எனும் வார்த்தையை பிரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அசாதாரண விஷயங்கள் எதுவுமே படத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது யதார்த்த சினிமா அல்ல என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சரண்யா - அப்புக்குட்டி இருவருக்குமான காட்சிகள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை என்பது என்னவோ நிஜம். ஆனால் அழகான பெண்கள் சுமாரான ஆண்களை காரணம் இன்றி மணம் செய்ய மாட்டார்கள் என்று கூறி இருப்பது சத்தியமாக பிடிபடவில்லை. நம் அன்றாட வாழ்விலேயே அழகான பெண்ணும்  சுமாரான ஆணும் தம்பதியர்களாக வாழ்வதை பக்கத்துக்கு வீடுகளிலும், வெளி இடங்களிலும் பார்த்து வருகிறோம். அப்பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு கணக்கு போட்டுக்கொண்டுதான் அந்த ஆணை கைப்பிடித்து இருப்பார்கள் என்பது சற்று அபத்தமாகவே படுகிறது.  

ஊர் பெரியவர் ஒருவர் 'தாழ்த்தப்பட்ட சாதி' பெண்ணை என் மகன் மணம் செய்துவிட்டானே என்று சொல்லும் காட்சியில் அவர் ஏன் சாதியின் பெயரை குறிப்பிடாமல் 'தாழ்த்தப்பட்ட' எனும் வார்த்தையை பிரயோகித்து இருக்கிறார் என்று சுரேஷ் கேட்டதுதான் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்கான  பதிலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியே சுரேஷின் வலைப்பூவில் தந்து விட்டார் என்பதால் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் குப்பை என்று அவர் கூறி இருப்பது எதை வைத்து என்று தெரியவில்லை. கண்டிப்பாக ஒரு சில விதிவிலக்குகள் ஆவது உண்டு என்பது தமிழ் சினிமாவை பற்றிய அடிப்படை புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். 

இளையராஜா பற்றி சொல்கையில், அவர் யாரையும் பேச விடுவதே இல்லை என்பதால் அவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் விலகியதாகவும், ரஹ்மான் எனும் மகத்தான கலைஞன் தோன்றியதும் இக்காலத்தில்தான் என்றும் கூறி உள்ளார். அதே சமயம் இன்று இளம் இயக்குனர்களுக்கு இசை அமைத்து ஊக்குவிப்பதில் இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஷங்கர் மற்றும் மணிரத்னத்தின் படங்களுக்கு மட்டுமே இனி ரஹ்மானின் கீ போர்ட் வேலை செய்யும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் பல சுமாரான படங்களுக்கு கூட தன் சிறப்பான இசையின் மூலம் பாடல்களை தந்த ரஹ்மான் இன்று எத்தனை புது இயக்குனர்களின் நல்ல கதைகளுக்கு செவிமடுத்து உள்ளார்? அண்மையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ராஜா இருந்த மேடையில் இயக்குனர் அமீரும் உடன் இருந்தார். அப்போது தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டதற்கு ராஜா சொன்ன பதில் "கண்டிப்பாக இசை அமைக்க மாட்டேன். உன் படத்தில் வரும் நாயகர்கள் கத்தியும், ரத்தமுமாக அலைகிறார்கள். அது எனக்கு சரிப்பட்டு வராது" என்றார். நெத்தியடியான பதில். இது போன்ற சம்பவங்களை வைத்துக்கொண்டு அவரை மொத்தமாக 'தலைக்கனம்' பிடித்தவர் என்ற வட்டத்திற்குள் அடைப்பது தவறு. அதே சமயம் அவர் இசையில் வந்த சில பாடல்கள் 'சுய தம்பட்ட' வகையை சார்ந்தவை என்பதும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு ஒருவித வெறுப்பை கிளப்பின என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது ராஜாவிடம் அம்மாதிரியான விசயங்களில் பெரிய மாற்றம் வந்துள்ளதை வரவேற்க வேண்டும். ஹங்கேரி இசையை ராஜா பயன்படுத்தி இருப்பது குறித்து சுரேஷின் கருத்துக்கள் நியாயமானவையே. 

உலகப்படத்தை நோக்கி தமிழ் சினிமாவின் பயணம் மெதுவாக ஊர்ந்து கொண்டு செல்கிறது என்பதே இன்றைய நிலை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பது இளம் படைப்பாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் பொருளாதார நிர்ப்பந்தங்கள் முற்றிலும் சுதந்திரமான படைப்பை தர மறுக்கின்றன என்று அவர்கள் சொல்வது முற்றிலும் நிதர்சனம் எனினும், அக்காரணம் ஒரு திரைப்படத்தை நடுநிலையாக அணுகும் ரசிகனுக்கு கண்டிப்பாக அவசியமான விஷயம் இல்லை என்பதே உண்மை. அதுதான் சுரேஷின் வாதமாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு சுரேஷ் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால், 'அன்புள்ள சாமியின் புஷ்பக விமானம்' என்ற பெயரில் ஒரு படம் வந்தால் கூட அதை 'அ.சா. காகித ராக்கெட்' என வர்ணித்து பதிவிடுவார் என நம்புவோமாக!!

சுசீந்திரனும், பாஸ்கர் சக்தியும் பொத்தி வளர்த்து சந்தைக்கு கொண்டு வந்த அழகிய குதிரை சுரேஷின் பார்வையில் கழுதையானது சற்று வருத்தமாக இருப்பினும், ஒரு திரைப்படத்தை எப்படி பூதக்கண்ணாடி வைத்து அதன் நிறை குறைகளை நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கு பிச்சைப்பாத்திரம் வலைப்பூவின் இவ்விரு பதிவுகளும் ஒரு உதாரணம். 

இறுதியாக ஒன்று, படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது (அழகர்) சாமி!!
..............................................................................

My other site:


.............................................................................

சமீபத்தில் எழுதியது:


............................................................................7 comments:

மதுரை சரவணன் said...

நீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் சரிதான்.. உயிர்மையில் நம் தலை சாருவின் விமர்சனத்தை படித்து பார்க்கவும்.. வாழ்த்துக்கள்

Unknown said...

ஏனுங்க என்னமா சொல்றீங்க விளக்கம்........
நடத்துங்க மாப்ள.......!

rajamelaiyur said...

Boss . . Chance a illa. . . Kalakurinka. . .

rajamelaiyur said...

Very deep analysis . . .

M.G.ரவிக்குமார்™..., said...

இது போன்ற பல விமர்சனங்களை நான் பார்க்கிறேன்!...பாய்ஸ் படத்தை ச்சீ என்று ஒரே வரியில் உதாசீனப் படுத்திய விகடன் அதே தன் படமான சிவா மனசுல சக்திக்கு 44 மார்க் கொடுத்தது....இவர் பிச்சைப் பத்திரம் அல்ல ஓட்டைப் பத்திரம்....எவ்வளவு முயற்சி செய்தாலும் நிரப்ப முடியாது!

MANO நாஞ்சில் மனோ said...

நீ நடத்து மக்கா.....!!!

ஜீவபாலன் said...

//படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது.//

சூப்பர் னா...

Related Posts Plugin for WordPress, Blogger...