CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, June 22, 2011

விம்பிள்டன் - 2
உலக சாதனை புரிந்த இஸ்னர் - மாஹட்  

புல்தரையில் ஒரு மல்லுக்கட்டு: 

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சென்ற ஆண்டு இஸ்னர் மற்றும் மாஹட் இருவருக்கும் நடந்த முதல் சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் மறக்க இயலாது. அதிகபட்சம் ஐந்து செட்கள் கொண்ட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடுமையான ஒற்றையர் போட்டியாக இருந்தாலும் ஐந்து மணி நேரத்தை தாண்டுவது அரிது. ஆனால் இந்த இருவருக்கும் சென்ற ஆண்டு நடந்த போட்டி மொத்தம் 11 மணி மற்றும் 5 நிமிடங்கள் நடந்தது. இவர்கள் ஆடி சோர்ந்தார்களோ இல்லையோ, நேரிலும், டி.வி.யிலும் பார்த்த ரசிகர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். முதல் நான்கு செட்களை ஆளுக்கு இரண்டாக வென்றபிறகு, வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை ஆட ஆரம்பித்தனர். 

டென்னிசில் பொதுவாக ஒரு செட்டில்  6 அல்லது 7 கேமை ஒருவர் எடுத்தாலே அந்த செட்டை வென்று விடுவார். உதாரணத்திற்கு 6-4 அல்லது 7-5. வெகு அரிதாக எப்போதாவது 10 கேம் வரை கூட ஆட்டம் நீளும். அதாவது எதிரில் ஆடும் வீரரை விட இரண்டு கேம் அதிகம் வென்றால் மட்டுமே ஆட்டம் முடிவுக்கு வரும். உதாரணம்: 10-8 அல்லது 12-10 இப்படி. விம்பிள்டனில் மட்டுமே இந்த விதி. மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்ட்ரேலியன் ஓப்பன்,யு.எஸ்.ஓப்பன் போன்றவற்றில் க்ளைமாக்ஸ் செட்டான ஐந்தாம் செட்டில் இரு வீரர்களும் தலா ஆறு கேம்களை வென்று சமமாக முட்டிக்கொண்டு நின்றால் (அதாவது 6-6) உடனே டை பிரேக்கர் விதி அமலுக்கு வரும். இறுதியில் 7-6 என்ற கணக்கில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 

ஆனால் இஸ்னர் - மாஹட் மோதியது விம்பிள்டன் போட்டி என்பதால் இரண்டு கேம் வித்தியாசத்தில் வெல்பவரே வின்னர் என்று எற்றுக்கொள்ளப்படுவர் என்ற நிலை. இங்கிலாந்து நேரப்படி செவ்வாய் மாலை (22/06/11) அன்று இவர்கள் ஆட்டம்..சாரி போராட்டம் தொடங்கியது. இருள் கவ்வ துவங்கியதால் சில கேம்கள் ஆடியதும் மறுநாளைக்கு ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியே இயற்கை சதி ஒருபுறம், விடாக்கண்டன் கொடாக்கண்டான் என ஆடும் இவர்கள் மறுபுறம். ஒரு வழியாக வியாழன் மாலை 4.48 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி செட்டை 70-68 எனும் கணக்கில் வென்றே விட்டார் இஸ்னர். டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் ஆடப்பட்ட ஆட்டம் எனும் சாதனை படைக்கப்பட்டது. 

மழை, இருள், வெள்ளுடை: 
                                                                  
விம்பிள்டன் போட்டியை நடத்துபவர்கள் சில விஷயங்களில் ஆண்டாண்டு காலமாக பிடிவாதம் பிடித்துவரும் விசயங்களில் சில: ஆட்டக்காரர்கள் வெள்ளை உடையத்தான் அணிய வேண்டும். போட்டி நடைபெறுகையில் சூரிய ஒளி மங்கத்துவங்கினால் டென்னிஸ் கோர்ட்டில் லைட் போடமாட்டார்கள். மறுநாள்தான் ஆட்டம் துவங்கப்படும். அதேபோல ஆட்டம் நடைபெறுகையில் மழை பெய்தால் மேற்கூரை வசதி கிடையாது. மழை நிற்கும்வரை ஆட்டம் தடை செய்யப்படும்.           

விம்பிள்டன் சென்டர்  கோர்ட் 
                                                                                                       
ஆனால் இந்த குறைகள் எதுவும் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இல்லை. ஸ்கூல் பசங்க மாதிரி வெள்ளை யூனிபார்ம் தேவை இல்லை. கலர் கலராக அசத்தலாம். விடிய விடிய லைட் வெளிச்சத்தில் ஆடலாம். மழை அடித்தாலும் கவலை இல்லை. மேற்கூரை உண்டு. இதையெல்லாம் பார்த்த விம்பிள்டன் நிர்வாகம் தனது பிடிவாதத்தில் இருந்து கீழே இறங்கி, மழை அடித்தாலும் தொடர்ந்து ஆட வசதி செய்துள்ளது(படம் மேலே).

உலகின் பணக்கார கிராண்ட் ஸ்லாம் எது என்பதில் போட்டா போட்டி நடப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பரிசுத்தொகையை உயர்த்திக்கொண்டே போகின்றன ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள். இவ்வாண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டதை வெல்லும் ஆட்டக்காரருக்கு கிடைக்கப்போகும் தொகை, நம் நாட்டு பணத்தில்  கிட்டத்தட்ட எட்டே கால் கோடி ரூபாய். பாவம் இந்தியாவின் சானியா மிர்சா. தற்போது நடந்து வரும் விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோற்று விட்டார். சோம்தேவ் எப்படியோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்டார்.                                           
........................................................................

காலப்பெட்டகம்:                                        

ஆட்டம் தொடரும்!
..........................................................................

My other site:

.........................................................................


Monday, June 20, 2011

விம்பிள்டன் - 1
விம்பிள்டன்.... உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டென்னிஸ் ஆடும் அனைவரின் லட்சியக்கனவு. டென்னிஸ் வரலாற்றில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியன் ஓப்பன், பிரெஞ்ச் ஒப்பன், யு.எஸ். ஓப்பன் மற்றும் விம்பிள்டன் ஆகியவை மிக முக்கியமானவை. அவற்றுள் மிகவும் புகழ்பெற்றதும் , 125 ஆண்டு கால பாரம்பரியம் உடையதும்தான் இந்த விம்பிள்டன் போட்டி. வருடாவருடம் லண்டன் நகரில் ஜூன் மாத இறுதியில் இரண்டு வாரங்களுக்கு களைகட்டும் இந்த போட்டியை இவ்வாண்டு யார் வெல்லப்போகின்றனர் என்பது அடுத்த ஞாயிறு அன்று தெரிந்து விடும். இன்று முதல் துவங்குகின்றன முதல் ரவுண்ட் ஆட்டங்கள். 

நான் டென்னிஸ் பார்க்க துவங்கிய காலத்தில் ஆண்கள் பிரிவில் இவான் லேண்டிலும், மகளிர் பிரிவில் மார்டினா நவ்ரதிலோவாவும் என்னுடைய அபிமான ஆட்டக்காரகளாக திகழ்ந்தனர். இருவரும் செக்கஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்தவர்கள். உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்த லெண்டில் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்ற போதிலும், கடைசி வரை விம்பிள்டனை வெல்ல முடியாமல் ரிடயர்ட் ஆகி விட்டார். ஆனால் மார்டினா வென்றதோ 9 விம்பிள்டன் கோப்பைகள். அந்த சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க இயலவில்லை.  ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் போட்டியில் பல ஆண்டுகாலம் கோலோச்சியவர் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ். லென்டிலுக்கு பிறகு டென்னிசில் எனது 'தல' என்று சொல்லலாம்.     90-களில் அசைக்க முடியாத நம்பர் 1 வீரராக இருந்த இவர் வென்றதோ 7 விம்பிள்டன் போட்டிகள். ஏஸ் போடுவதில் சூரர். களத்தில் சோதனையான கட்டம் வந்தாலும் முகத்தில் கோபத்தை காட்டாமல் அமைதியாக ஆடி வெல்லும் கில்லி. 

                                                   ரபேல் நடால் - ரோஜர் பெடரர்

வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான் இவ்வையகத்தில்? சாம்ப்ராஸின் விம்பிள்டன் ஆதிக்கத்தை வீழ்த்தி கோட்டையை கைப்பற்றினார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர். இதுவரை 6 முறை இப்போட்டியை வென்று இவ்வாண்டு சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார் இவர். இதை முன்பே சாதிக்க இவருக்கு வாய்ப்பு நெருங்கியது. ஆனால் அந்தக்கனவில் இரண்டு முறை(2008, 2010) மண்ணை போட்டவர் இன்றைய நம்பர் 1 வீரர் ரபேல் நடால்(ஸ்பெயின்). இவ்வாண்டு நீயா நானா என இருவரும் கோப்பைக்கு சண்டை போட்டாலும் இவர்களை அவ்வளவு எளிதாக வெல்ல விடாமல் கடும் சவாலை தர தயாராக உள்ளனர் செர்பியாவின் டோஜோவிக்கும், இங்கிலாந்து மண்ணின் மைந்தன் ஆண்டி முர்ரேவும். 

இந்தியாவின் சார்பில் சானியா மிர்சா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் களத்தில் உள்ளனர். பலதவை முயன்றும் கிராண்ட் ஸ்லாம்  போட்டிகளில் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வி அடைந்து வீடு திரும்பி விடுகிறார் சானியா. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரமேஷ் கிருஷ்ணன், மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பிறகு உலக அரங்கில் தடம் பதித்த  வீரர்கள் இதுவரை இல்லை என்றே சொல்லலாம். லியாண்டர் பெயஸ் கூட ஒற்றையர் பிரிவில் பெரிதாக சோபிக்கவில்லை.ஆனால் சோம்தேவ் சமீபகாலமாக தன்னை விட ரேங்கிங் பட்டியலில் பல இடங்கள் முன்னே உள்ள வீரர்களை வென்று வருவது பெரிய நம்பிக்கையை தருகிறது. ஆசியாவில் இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஒருவர் கூட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றதில்லை என்ற மிகப்பெரிய குறையை சமீபத்தில் போக்கியவர் சீன வீராங்கனை லீ நா. அது போல் ஒரு நாள் இந்தியாவும் தனது பெயரை நிலைநாட்டுமா என்று காத்திருக்கும் அனைவருக்கும் இப்போதைய ஒரே நம்பிக்கை சோம்தேவ் மட்டுமே. 

                                                                                                                  
இரட்டையர் பிரிவில் கூட களம் இறங்கும் சோம்தேவ், ஜப்பான் வீரர் கெய் நிஷிகொரியுடன் கைகோர்க்கிறார். இன்று மாலை இந்திய நேரம் 4.30 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஒரு காலத்தில் விம்பிள்டன் போட்டிகளை கால் இறுதி சுற்றில் இருந்தே நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது தூர்தர்சன். அப்போது எங்கள் வீட்டில் டி.வி. இல்லாததால் பக்கத்துக்கு வீட்டு அங்கிள்கள்  டென்னிஸ் பார்த்தால் அவர்களுடன் அமர்ந்து சில வருடங்கள்  ஓசியில் பார்த்தேன். ஒருவழியாக டி.வி. வாங்கும் நிலை எனக்கும் வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அனைத்து விம்பிள்டன் போட்டிகளையும் இன்று வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருவதால் பல போட்டிகளை காணும் வாய்ப்பை இழந்து விட்டேன்.   ஜிம்பாப்வே உடன் ஆடும் மொக்கை கிரிக்கெட் போட்டியை கூட லைவாக போடும் தூர்தர்சன், டென்னிசை சுத்தமாக ஒதுக்கி விட்டது. அரசு கேபிள் வந்தால் விளையாட்டு சேனல்கள் தெரியுமா? அல்லது DTH-க்கு     மாறினால்தான் வேலைக்கு ஆகுமா? என்று தெரியவில்லை. அரசின் ஆணைக்காக காத்திருக்கிறேன். விம்பிள்டனில் மழை எப்போது நிற்கும், ஆட்டம் எப்போது துவங்கும் என காத்திருக்கும் டென்னிஸ் ரசிகர்களைப்போல. 

விம்பிள்டன் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து தருகிறேன். லவ் ஆல்!!

.............................................................................
My other site: 

............................................................................
                   
                                                                

Saturday, June 18, 2011

அவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்
நான் கடவுளுக்கு பிறகு அடுத்து வழக்கம்போல ஒரு கனமான படைப்பை தரலாம் என பாலா எண்ணியபோது அவருடைய நலம் விரும்பிகள் "ஒரே மாதிரி வேண்டாம். காமடியா ஒரு படம் பண்ணுங்க" என்று வற்புறுத்தியதன் விளைவாகவே அவன்- இவன் படத்தை எடுத்தார் என்று ஓர் இதழில் படித்தேன். அதுவும் சரிதான், எத்தனை தடவைதான் மார்க்கமான(மூர்க்கமான)  நாயகன், கிராமம், பேஸ்மென்ட்டை நடுங்க வைக்கும் குரூர கொலைகள் என ஒரே சாயலில் பாலாவின் படத்தை பார்ப்பது. காமடி படம் என்பதால் குறைந்தபட்சம் லொடுக்கு பாண்டி, ஸ்ரீமன், 'பிதாமகன்' சூர்யா அல்லது நான் கடவுள் பிச்சைக்காரர்களின் நையாண்டி லெவலில் ஒரு 50% ஆவது இயக்குனர் நம்மை சிரிக்க வைப்பார் என நம்பி முன்பே ரிசர்வ் செய்துவிட்டு இன்றைய காட்சிக்காக காத்திருந்தேன். 

வெள்ளி முதலே கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களிடம் இருந்தும் நெகடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்ததும் வயிறு லேசாக கலங்க ஆரம்பித்தது. அதுவும் நடுநிலையாக விமர்சிக்கும் பதிவர்களின் எச்சரிக்கை மணி என்றால் சொல்லவே வேண்டாம். என் கெட்ட நேரம் ஒத்தை டிக்கட்டை மட்டும் எடுத்து இருந்தேன். யார் தலையிலாவது டிக்கட்டை கட்டி விடலாம் என்றால் எல்லா பயலுவளும் உஷாராகி விட்டார்கள். கூட ஒரு டிக்கட் இருந்திருந்தால் தாஜா செய்து எஸ்கேப் ஆகி இருப்பேன். பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது என்று தெரிந்த பிறகு..வேறென்ன செய்ய முடியும். 

விஷாலை விட ஜி.எம்.குமார் சிறப்பாக நடித்துள்ளார் என்று பாலா சொன்னார். ஆனால் படத்தின் துவக்கத்தில் ஜமீன்தாரான அவர் விஷாலின் ஆட்டத்திற்கு இருக்கையில் படுத்தவாறு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கியதுமே எனது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் தன் நண்பரிடம் "என்னடா இது?" என்று சலிக்கத்தொடங்கினார். பாலா படங்களில் வரும் டிஸ்கவரி சேனல் க்ரியேச்சர் கெட்டப்பை இந்த முறை ஆர்யா (செம்மண் புழுதி)தலைவணங்கி  ஏற்றுக்கொண்டார். அவருடைய வசன உச்சரிப்பு கதை நடக்கும் இடத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது.விஷாலாவது நம்மை காப்பாற்றுவார் என்று பார்த்தால்..ம்ஹூம். மாறுகண் வைத்து ஏதோ தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார். அதை பாராட்டியே தீர வேண்டும் எனினும் விஷாலின் கேரியரில் திருப்புமுனையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. 

தாமிரபரணி ரிலீஸ் ஆன சமயம் ஆனந்த விகடன் நடத்திய போட்டியின் மூலம் விஷாலை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன். அது "புகை, மது பழக்கும் உள்ள கேரக்டரில் நடிப்பதை தவிர்ப்பீர்களா? சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா?". அதற்கு அவர் சொன்ன பதில்கள்: "கெட்ட பழக்கம் உள்ள கேரக்டர் கதைக்கு தேவை என்றால் நடிப்பேன். நீங்கள் சொன்ன இயக்குனர்களிடம் பணி புரியும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.". அந்த தருணம் தற்போது அவருக்கு அமைந்தும் அது பாலாவின் முந்தைய நான்கு படங்களின் நாயகர்களுக்கு ஈடாக இல்லை என்பதற்கு அவன் - இவனே சாட்சி. சூர்யா வரும் காட்சியில் தன் முகத்தில் நவரசங்களை காட்டும் விஷாலின் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க வேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...பாவம் ப்ரொட்யூசர்ஸ். 

தந்தைக்கு இரு மனைவிகள். ஆளுக்கொரு பிள்ளையாக அவனும் இவனும். திருட்டு குலத்தொழில். பாசக்கார ஜமீனை கொல்பவனை இருவரும் சேர்ந்து பழி தீர்ப்பது, அவ்ளோதான் கதை. படம் நெடுக போலீசை காமெடி பீஸ் ஆக்கி இருவரும் நக்கல் செய்வது, தண்ணி அடிப்பது, அவ்வப்போது இயற்கை உபாதைகளை பற்றி கப்பு அடிக்க பேசுவது, அம்பிகா ஆண்ட்டி பீடி அடிப்பது, அவருடைய சக்களத்தியாக வரும் ஆண்ட்டி தனது உத்தமபுத்திரன் ஆர்யாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது, க்ளைமாக்சில் வழக்கம்போல பாலாவின் ஸ்பெஷல் 'ருத்ரதாண்டவம்'.  அட போங்க... பாலா சார்...

பாவம் ஜனனி பொண்ணு.  நடிக்க முயற்சி செய்துள்ளார். டப்பிங்...ஸ்ஸ்ஸ். சேதுவில் விக்ரமின் அண்ணி, பிதாமகன் லைலா, சங்கீதா போன்றவர்கள் மனதில் நிற்பதை போல இல்லாவிடினும், கொஞ்சம் சுமாராகவாவது நடித்து இருக்கலாம். ஆர்யா ஜோடியாக வரும் மது ஷாலினி இன்னும் பாவம்.  நாயகிகளை சகட்டு மேனிக்கு நாயகர்கள் அடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் பாலாவுக்கு அப்படி என்ன அலாதிப்பிரியமோ? இன்னும் எத்தனை படங்களில். அவ்வ்!
                                                                      
                                                                
யுவனின் பாடல்கள் ஆடியோவில் சுமாராக இருந்தாலும், படமாக்கிய விதம் அதையும் ரசிக்க வைக்க மறுக்கிறது. வெயில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஜி.எம்.குமாரின் 'அவன் இவன்' நடிப்பை பற்றி பாலா வெகுவாக சிலாகித்து பேசி இருக்கும் அளவிற்கு பெரிதாக இல்லை. பல இடங்களில் அவர் காமடி செய்தாலும் உதடுகள் சிரிக்க மறுக்கின்றன. ஆர்.கே.விடம் அடி வாங்கும் காட்சியில் மட்டும் அவர் மேல் ஓரளவு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், மனதில் பதிய மறுக்கிறது. 

மாடுகளை கடத்தும் ஆர்.கே.வை சூழ்ந்துகொண்டு மீடியா, ப்ளூ க்ராஸ் நபர்கள், போலீஸ் எல்லோரும் நிற்கையில் அவர் சொல்லும் வசனம் ஒன்று "எங்களை பிடிக்க மட்டும் வந்துடறீங்க. குர்பானிக்காக ஒட்டகங்களை கொல்றாங்களே. அங்க மட்டும் போய் கேக்க மாட்டீங்களா? ".  வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம்?பாலாவின் கடவுள் மறுப்புக்காக மட்டுமே சொருகப்பட்டதாக தெரிகிறது.  காதல், பருத்திவீரன் படங்களில் வரும் சிறுவர் பாத்திரங்கள் பெருமளவில் பேசப்பட்டன. ஆனால் முழுநீள நகைச்சுவை படமாக அவன் இவன் இருப்பினும், இதில் வரும் சிறுவனின் நடிப்பு சுமார்தான். 

படம் முடிந்து வெளியே வருகையில் தன் தோழியிடம் ஒரு பெண் சொன்னது; "நான் வரமாட்டேன்னு அப்பவே முட்டிக்கிட்டேன். எல்லாம் உன்னால". முழு நீள நகைச்சுவை படத்தை எடுப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் நகைச்சுவை ஜாம்பவான்கள் தொன்று தொட்டே ஆட்சி செலுத்தி வரும் தமிழ் சினிமாவில் இது இயக்குனர்களுக்கு மிகப்பெரிய சவால். அதில் சிக்சர் அடித்த படங்களில் குறிப்பாக சபாபதி, சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை,தில்லுமுள்ளு,சதிலீலாவதி,உள்ளத்தை அள்ளித்தா(சபாஷ்  மீனாவின் ஜெராக்ஸ் ஆக இருப்பினும்), சென்னை -28  (அப் கோர்ஸ் விருதகிரி, வீராசாமி)  போன்றவற்றை சொல்லலாம். பாலாவின் படங்களில் பெரிய அளவில் கதை இல்லாவிடினும்(சேது தவிர)  ஹீரோக்களின் அசர வைக்கும் நடிப்பு ஒன்றே பிற குறைகளை மறக்கடித்து விடும். ஆனால் காமடி படத்தில் லாஜிக் இல்லாவிடினும் நகைச்சுவை மேஜிக்காவது இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் அவன் இவனில் அதுவும் வெகு சுமார்தான். 

படத்திற்கு டைட்டிலை வைக்கும்போதே "பேரு எதுவா இருந்தா என்ன? பேசாம  'அவன் - இவன்'னு வச்சா போகுது என்று பாலா அசால்ட்டாக யோசித்ததின்  விளைவு இப்பட ஷூட்டிங் முடியும் வரை இருந்திருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது. போதும் பாலா சார். கொஞ்ச வருசத்துக்கு உங்க ட்ரேட்மார்க் எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டு(ஜுராசிக் பார்க் ஹீரோக்கள், சித்ரவதை கொலைகள் etc), (பெரு)நகரம் சார்ந்த கதைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை, பீரியட் பிலிம் போன்ற மாறுபட்ட தளத்திற்கு வர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை என வெவ்வேறு தளங்களில் பயணித்து வரும் இயக்குனர் சுசீந்தரனைப்போல. The ball is in your court, Bala.  

சேவாக் எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல, பாலா படங்கள் ஒவ்வொன்றும் பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லை.அதற்கு முற்றிலும் தகுதியான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் மூலம், காலை இரண்டடி பின்னே வைத்து ஒரு பவுண்டரியாவது அடிக்கலாம் என்று எண்ணி ஹிட் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். தயாரிப்பாளருக்கும் 'ஹிட்' அவுட் ஆகும் என்பது தியேட்டரை விட்டு பெருமூச்சுடன் வெளியே வந்த அம்பயர்களின்(ரசிகர்கள்) முகத்தில் தெரிகிறது!!  நல்லவேளை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் என்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி.   அப்பாவி தயாரிப்பாளராக இருந்திருந்தால் கிளீன் போல்ட்தான் போல. 

அவன் - இவன் லெக் பீஸ் இல்லாத வெகு சுமாரான பிரியாணி! 

........................................................................................

My other site: 

........................................................................................ 

சமீபத்தில் எழுதியது:


........................................................................................


                                                                           

Tuesday, June 14, 2011

வினவு VS வெங்கட்
                                                         

ஜூன் 9 அன்று வினவு தளத்தில் திருப்பதி வெங்கட் எனும் தலைப்பில் ஒரு பதிவை படிக்கும் புண்ணியம் கிட்டியது. கடவுளை எதிர்ப்பை கொள்கையாக கொண்டவரின் கைவண்ணத்தில் இருந்தது அப்பதிவு. கடவுள் உண்டு என்று சொல்ல உரிமை உள்ளது போல இல்லை என்று சொல்லவும் உரிமை உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முன்னணி வலைத்தளம் என்று பெயர் பெற்ற வினவும் ஒருசில கசப்பான வார்த்தைகளை பயன்படுத்தி ஏன்  எழுதினார்கள் என்பதுதான் கேள்வி. வெங்கட்டை (அவர்கள் பாஷையில்)  கிழிப்பதாக(!) எண்ணிக்கொண்டு எழுதப்பட்டிருந்த பதிவில் தி.நகர் திருப்பதி பிராஞ்ச் கோயிலில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததெனவும், சீமான் (நாம் தமிழர் சீமான் அல்ல) மற்றும் சீமாட்டிகள் வரிசையில் நின்று ஜாம் செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார் அல்லது கூறினர்.

அதே தி.நகரில்தான் வெவரம் தெரிந்த நாள் முதல் திரிந்து கொண்டு இருக்கிறேன். சீமான், சீமாட்டிகளின் எண்ணிக்கையை விட நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பெருமளவில் தரிசனம் செய்வதை ஏனோ வினவு குறிப்பிடவில்லை. ஸ்க்ரீன்ப்ளே சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் அதை கட் செய்து இருக்கலாம். அமுதம் காலனி, சி.ஐ.டி. நகர் மற்றும் தி.நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான சாதாரண மக்களும் அக்கோயிலில் வழிபடுவது அங்குள்ள அனைவருக்கும் தெரியும். பாவம் அன்று மட்டும் அவர்கள் எங்கு மாயமாக மறைந்தார்களோ?

சிதிலம் அடைந்த கோயில்களில் 'டுபாக்கூர்' ஐயர்கள் இருப்பதாக வேறு ஒரு அரிய கண்டுபிடிப்பை பற்றி எழுதி இருந்தனர். ஐயர்களை டுபாக்கூர் என்று கண்டுபிடிக்கும் 'நவீன மிஷின்' எங்கு விற்கிறது என்று தெரியவில்லை. வெங்கி ஸ்காட்ச் குடிக்கிறாராம். கேப்டன் பாஷையில் "நீ பக்கத்தில் இருந்து ஊத்தி குடுத்தியா?" என்று கேட்க வெங்கியால் முடியாது என்று தெரிந்த பின்பு இப்படி எழுத யாருக்குதான் தைரியம் வராது. 

வெங்கியிடம் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி கணக்கை கேட்டால் அவர் லிபர்ட்டி தியேட்டரில் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். வாரே வா!!  அப்படி என்றால் வினவுக்கு நன்கொடை மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் சர்ப் எக்சலில் துவைக்கப்பட்ட வெள்ளை வெளேர் பணம் என்று எதை வைத்து நம்புவது? கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் ஆத்திகர்கள்/இந்துக்கள் அதிலும் குறிப்பாக வெங்கட் பக்தர்கள் எங்களுக்கு நன்கொடை தர வேண்டாம் என்று இதுவரை ஏன் அறிவிக்கவில்லை. சாரே, ஒரு திருத்தம்: லிபர்ட்டி தியேட்டரை என்றோ மூடி விட்டார்கள். சத்யம் தியேட்டர் என்று நீங்கள் எழுதி இருக்கலாம். பணக்கார தியேட்டர். நல்ல வருமானம் வரும். வாசலில் உட்கார்ந்தால்.  தங்கள் ஆருடம் பலிக்குமா என்பதை காலம் தீர்மானிக்கும்.  

சிறுமி ஒருத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபட்ட சமயத்தில் வெங்கி எதை பிடுங்கிக்கொண்டிருந்தார் எனும் வார்த்தைகள் வேறு. முன்னணி வலைப்பூவில் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் பெயரில் நடக்கும் மூட நம்பிக்கைகள், பண விரயங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் எனக்கும் கண்டிப்பாக உடன்பாடு உண்டு. அதே சமயம் எழுத்தில் நாகரிகம் இன்றி இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது பதிவுலக பெரியவர்களுக்கு அழகா என்பது மட்டுமே என் கேள்வி. அடுத்து வரும் இளைய/புதிய பதிவர்களுக்கு இப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் தேவையா?

கடவுளை மறுப்பவர்கள் ஆனா ஊனா என்றால் பெரியாரை துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.அந்த மாமனிதர் கடவுள் பெயரால் மூட நம்பிக்கையில் ஊறி திளைத்த மக்களை வீட்டு திண்ணையில் அமர்ந்தவாறு  பகடி மட்டும் செய்து கொண்டா இருந்தார். அவருடைய தியாகங்களும், போராட்டங்களும் சர்வ சாதரணமானவையா? அப்படிப்பட்ட மனிதரை பின்தொடர்பவர்கள் அவரின் பொதுவாழ்வை சற்றேனும் பின் தொடர்ந்து விட்டு பிறகு நாத்திகம் பேசலாம். சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் போலி நாத்திகவாதிகள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் பகுத்தறிவு அஞ்சி பைசாவுக்கு கூட அருகதை இல்லாத வெத்து வெட்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்  (வசன உபயம்: வினவு).  

பிட்டு படம் பார்ப்பவனை கடவுளாக எப்படி ஏற்பது என்று வேறு கூறி  உள்ளனர். அதாவது 'கலாய்ச்சிட்டாங்கலாம்'. நாத்திகவாதம் செய்பவர்கள் ஆண்டாண்டு காலமாக சொல்லும் வசனங்கள் 'கடவுள் இருக்காரா காட்டு. ஹே..ஹே', 'நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க'. இதன் மூலம் எத்தனை பேரை திருத்தி விட முடியும். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் சோம்பேறியாக இருப்பவர்கள், ஒவ்வொரு விசயத்திற்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவர்கள், ஒரு ஏழை குழந்தைக்கு கல்வி உதவி செய்யாமல் லட்சக்கணக்கில் பணத்தை உண்டியலில் போடுபவர்களை எதிர்ப்பதில் எந்தவிதத்தவறும் இல்லை. அது கண்டிக்கப்பட வேண்டிய செயலே. கடவுள் எதிர்ப்பு குறித்து பொறுப்புள்ள முறையில் எழுத்துக்களை பயன்படுத்தாமல் தெருவில் நடந்து செல்பவர்களை உரண்டைக்கு இழுக்கும் மனிதர்களைப்போல வினவின் பதிவு இருப்பது எவ்வகையில் நியாயம்? 

உடனே, 'டேய் நீயெல்லாம்...' என்கிற ரீதியில் வரிந்து கட்டிக்கொண்டு வரும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான். இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை பத்திரிக்கையில் சொன்ன விஷயம் "நான் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவன்தான். அதே சமயம் பிறரின் மத உணர்வுகளை புண் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை", இவர்தான் நாத்திகவாதி. கமல், சத்யராஜ், கலைஞர் போன்றவர்களைப்போல இந்து மதத்தை மட்டும் கிண்டிப்பார்க்கும் குழுவில் வினவு இணைந்தது ஏன்? 

பகுத்தறிவு பாசறையில் வந்தவர்களின் பணம் சுவிஸ் பேங்கில் எத்தனை கோடி உள்ளது என்பது பெரியாருக்கே வெளிச்சம். அதேபோல் இனி யாரும் திருப்பதி செல்லாதீர்கள். நேராக படகில் ஏறி சுவிட்சர்லாந்து செல்லுங்கள். அந்த வங்கிகளின் முன்பு நின்று கொண்டு வெறிக்க வெறிக்க பாருங்கள். ஊரை அடித்து உலையில் போட்ட நாத்திகவாதிகளின் பணத்தை எல்லாம் மூட்டை கட்டி உங்கள் கையில் கொடுப்பார்கள். நம் நாட்டின் பசி, பட்டினி எல்லாம் உடனே தீர்ந்து விடும். 

போலி ஆத்திக மற்றும் நாத்திகவாதிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்:http://youtu.be/H1eQmWShRf4


அய்யா கடவுள் எதிர்ப்பாளர்களே, எங்களில் பலர் பகுத்தறிய தெரியாத பதர்களாகவே இருந்து விட்டுப்போகிறோம். ஆனால் மருத்துவர்களும், ராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் கூட தலையில் திருநீறு பூசிக்கொண்டு கடவுளை வழிபடுவது ஏன்? அர்த்தம் இல்லாமலா செய்கிறார்கள்?  உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள்: "நான் எத்தனையோ ஆராய்ச்சிகளை செய்திருப்பினும் அதையும் மீறி உலகில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நம்புகிறேன்".  அதை கடவுள் என்று ஒரு தரப்பு நம்புகிறார்கள். அவ்வளவுதான். கடவுளை தனி மனிதராக எண்ணி எள்ளி நகையாடுவதை விட அனைத்து மதங்களிலும்  சொன்ன போதனைகளை மட்டும் பின்பற்றுவதே சாலச்சிறந்தது.அந்த பக்குவம் தங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் வராதது வருத்தமே!

இதே ரேஞ்சில் இன்னும் நாலு பதிவு போடுங்கள். (வெங்கி எதை பிடுங்கினார், பிட்டுப்படம் போன்ற வார்த்தைகளை சொன்னேன்).வருங்கால பதிவுலகம் சீரும் சிறப்புமாக இருக்கும். இப்படி கடவுளுக்கு ஓவராக ஜால்ரா தட்டுகிறாயே நீ எப்படிப்பட்டிவன் என்று கேட்பவர்களுக்கு: கடவுள் உண்டு என்பதை  நம்புகிறவன். உணர்ந்தவன். அதே சமயம் நினைத்த காரியம் நடக்க பெரும்பணத்தை உண்டியலில் கொட்டுதல், எல்லாம் இறைவன் செயல் என்று முயற்சி செய்யாமல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பொற்காசு கொட்டுமா என பார்த்தல், ஏகாதசி,  அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் கோயில் சென்று இறைவனை வேண்டுதல், மாலை ஆறு மணிக்கு பிறகு பணத்தை செலவு செய்தால் வீட்டில் குபேரப்பார்வை இருக்காது என எண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபடாதவன். இப்பதிவின் மூலம் நான் முக்கியமாக சொல்ல விரும்புவது ஒன்றே: சற்றேனும் சபை நாகரீகம் கருதி முன்னணி பதிவர்களின் எழுத்துக்கள் இருத்தல் வேண்டும் என்பதே.

வினவு அன்பரே, சென்னையில் எங்கேனும், வேண்டுமெனில்  வெங்கி கோயில் அருகில் கூட எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நேரடி விவாதத்திற்கும் தயார். அவ்விவாதம் மூலம் எனக்கு நல்ல போதனை கிடைத்தால் பேருவகை கொள்வேன்!!  

madrasminnal@gmail.com      
...................................................................

My other site:

nanbendaa.blogspot.com

சமீபத்தில் எழுதியது:

ஆரண்ய கண்டம்? - பாக்காத படத்துக்கு வெமர்சனம்!

..................................................................

Monday, June 6, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (06/06/11)நெத்தியடி: 


                                                               
"நம்ம கட்சிய தமிழ் நாட்ல ஓவரா பம்ப் அடிச்சிட்டாங்களே... சீக்கிரம் அங்க இருக்குற கிராம குடிசைகளுக்கு போயி கஞ்சி குடிக்கிறது, ஓடுற வண்டில இருந்து பொசுக்குனு எறங்கி ரோட்ல போற ஏழை பசங்களுக்கு குச்சி ஐஸ் வாங்கி தர்றதுன்னு ஒரு 'சிலுப் சிலுப்' காட்டுனாத்தான் சரிப்படும்"
..................................................................................

அதிரடிப்படை: 

"என்னா மாப்ள.. தெருவுல போற பொம்பளை புள்ளைகள இப்பல்லாம் ஒரண்ட இழுத்தா நம்மள நக்கல் பண்ணிட்டு போகுதுக..அப்ப நம்மல்லாம் நமுத்த பட்டாசா தெரியுறமா அவளுக கண்ணுகளுக்கு?"

"கலி முத்திருச்சிடா. அந்தா பாரு ஊர் பெரியவுக ரெண்டு பேரு போராக. வேணும்னா அவுக கிட்ட லந்தக்குடு"

"ஆமா. இப்பத்திக்கி பொழுது போனா சர்தான். ஹூய்..சித்தப்பு, எங்க ஊரு மவராசனே எங்க போறீரு?"

"ஏண்டா பாண்டி, எதுக்கு பெரிய மனுசன அவனே இவனேன்னு கூப்புடுற"

"அட என் பெரியப்பனே, நீ ஏன் கொந்தளிக்கற?"

"எலேய், என்னைய ஏகவசனத்துல லந்து பண்ணதும் இல்லாம, அவரையும் ஏன்டா வம்புக்கு இழுக்குற?"

"அட சும்மா இரு சித்தப்பா. ஆட்சில இருக்ரவுகளுக்கே நாங்க அன்னம் தந்த தாயே, அன்பின் மறு உருவம் நீயே. வாழும் வள்ளுவரே, எதிரிகளை ஓட ஓட விரட்டும் கும்கி யானையே அப்டின்னு 'யே' போட்டுதான் பேனரே வக்கிறோம்.  நீங்க ஊருக்கு என்னாத்த செஞ்சிப்புட்டீக. ஓட்டு போடுற அன்னிக்கி கூட பஞ்சாயத்து டி.வி.ல ராஜாதி ராஜா படத்த பத்தாவது வாட்டி பாத்துப்புட்டு, பேசுறீங்க பேச்சு. நடைய கட்டுங்க. நடைய கட்டுங்க".
................................................................................

சகலகலா வல்லவன்:

                                                                       
பவர் ஸ்டாரின் அடுத்த உயரிய படைப்பான 'ஆனந்த தொல்லை' படத்தின் பாடல்கள் (நடுநிலையான)  விமர்சனம்:

அஜ் அலிமிர்ஜாக் இசையில் மொத்தம் ஆறு தேனாறுகள் பாடலாக கரை புரண்டு.. புரண்டு ஓடுகின்றன. 'செல்லப்பேயே' பாடல் கேட்பதற்கு இதமாக உள்ளது. இரைச்சல் இன்றி இசை இருப்பதால், வரிகள் அனைத்தும் புரிகின்றன. அபோவ் ஆவரேஜ் சாங். 'கண்ணாமூச்சி'  பாடல் இரண்டு முறை வருகிறது.  முதல் பாடல் சுமார் ராகம். இரண்டாம் பாடல் நன்று.  'நீயேன்பதே அழகு, உன் பார்வையே நிலவு' என்ற அடுத்த பாடல் வரிகளை கேட்டதும் பவர் ஸ்டார்  நாயகியை புகழ்ந்து பாடும் வரிகள் என்று நினைக்க வேண்டாம். அப்படியே ரிவர்ஸ். அதில் வரும் அசத்தல் வரிகள் "சேரன்,சோழன்,பாண்டியன் ஆற்றலை உன்னில் பார்த்தேனே, மூன்று கோடி ஆணில் நீதான் என்னை வென்றாயே, சட்டை போட்ட தீயாய் உன்னை பார்த்தேனே'' (எப்டி!). இதுவும் அபோவ் ஆவரேஜ் பாடல்தான். 'செய் செய்யாரோ' பாடல் மொக்கை.  'வாடா மச்சி' பாடல் செம பாஸ்ட் பீட். பவர் அண்ணன் இதில் ரணகளப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது.மொத்தத்தில் செம யூத்தாக அனைத்து பாடல்களையும் நமக்கு பரிசளிக்க கடும் முயற்சி செய்துள்ளனர். கேட்க சுமாராக இருப்பினும் திரையில் பார்ப்பவர்களுக்கு 'பிம்பிளிக்கி பிலேப்பி' என்று சொல்லியா தெரிய வேண்டும்.      

இந்த சங்கீத கம்மாயில் உடனே நீந்த கீழே கிளிக்கவும்: 

.........................................................................................

பட்டியல்:

ஒருவழியாக ஐ.பி.எல். முடிந்ததும் தமிழ் படங்கள் பல வேகமாக வரத்தயார் ஆகிவிட்டன. ஜூன் 10 'ஆரண்ய காண்டம்'. சென்சாரில் செம குத்து வாங்கிய படம். எஸ்.பி.பி. சரண் தயாரிக்க, ஹிந்தி ஸ்டார் ஜாக்கி ஸ்ராப் நடிப்பில் இந்த வாரம் வெளியாகிறது. ஜூன் 17 அன்று 'தெய்வத்திருமகன்', ஜூன் 25 சித்தார்த் நடிப்பில் சத்யம் தியேட்டரின் சொந்தப்படமான '180'. அவன் இவன் இம்மாதமே வெளியாகலாம் என்று தெரிகிறது. ஆங்கிலத்தில் ஜூன் 24 அன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் படமான 'கார்ஸ் - 2' ரிலீஸ் ஆகிறது. 
..........................................................................................

ஜல்லிக்கட்டுக்காளை:

                                         நேற்று வென்ற கோப்பையுடன் நடால் 

உலகின் மிகவும் சவாலான டென்னிஸ் போட்டியான 'பிரெஞ்சு ஓப்பன்' ஆண்கள் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்தது உள்ளார் நம்பர். 1 வீரர் நடால். நேற்று இரவு(IST) நடந்த பைனலில் பரம வைரி பெடரரை வீழ்த்தி களிமண் களத்தில் அசைக்க முடியாத காளையென மீண்டும் நிரூபித்து உள்ளார் நடால். சைனாவின் 'லீ நா' சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் பெண்கள் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் ஆசியா கண்டம் முதன்முறையாக வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ளது.  
....................................................................................

இதய தீபம்:

வரும் 26 ஆம் தேதி சென்னை மெரினாவில் போரில் இறந்த தமிழீழ மக்கள் மற்றும் கடலில் சுடப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிகழ்வு நடைபெற இருப்பதால்,அதற்கு ஆதரவு தருமாறு விருப்பம் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரம் அறிய இங்கே அழுத்தவும்:  மௌன அஞ்சலி.
.....................................................................................       

திருடாதே:

                                                              
மேற்கு வங்கத்தில் கல்லூரி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை வெறும் 63 லட்ச ரூபாய்க்கு வளைத்துப்போட்டார் கிரிக்கெட் 'தாதா' கங்குலி. அதன் நிஜ மதிப்பு 45 கோடியாம். அந்நிலத்தை 'பிரின்ஸ் ஆப் கல்கத்தா'வான கங்குலிக்கு தாரை வார்த்து தந்தது புத்தாதேவின் அப்போதைய அரசு. இதை எதிர்த்து சமீபத்தில் NGO ஒன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நிலத்தை உரியவர்களிடமே இரண்டு வாரத்திற்குள் திருப்பித்தருமாறு 'தாதா' தலையில் 'நங்'கென கொட்டி தீர்ப்பு அளித்துள்ளது உச்சநீதிமன்றம். "ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா. ஒனக்கே சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதி இருக்கா?"
................................................................................................

மாயா பஜார்: 
                                                                                                       
சர்வதேச மேஜிக் வல்லுனர்கள் சொசைட்டி வழங்கி வரும் 'மேஜிக் ஆஸ்கர்' விருதை இவ்வாண்டு வென்றுள்ளார் இந்தியாவின் கோபிநாத். மொத்தம் 37,000 மேஜிக் நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர் இந்த அமைப்பில். ஆசியாவின் முதல் மேஜிக் அகாடமியை 1996 ஆம் வருடம் கேரளத்தில் துவங்கிய கோபிநாத், பி.சி.சர்காருக்கு பிறகு ஆஸ்கரை வெல்லும் இந்தியர் எனும் பெருமையை தேடித்தந்துள்ளார். இக்கலையில் 35 வருட அனுபவம் உள்ள இவருக்கு வரும் 23 ஆம் தேதி ஆஸ்கர் விருது தந்து கவுரவிக்க உள்ளனர். 

                                                                           
                      சிக்கிமில் 14,400 அடி உயரத்தில் சீன வீரர்களுடன் கோபிநாத்.

2007 ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேருந்து மற்றும் லாரியில் 24,500 கி.மீ.தூரம் பயணம் செய்து இந்தியாவிற்காக போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்த கோபி மேற்கொண்ட அசாத்திய  முயற்சிதான் இப்படம் சொல்லும் செய்தி.         
.......................................................................................                                                          

மக்கள் என் பக்கம்:                                                                                                  .....................................................................................

My other site: nanbendaa.blogspot.com

சமீபத்தில் எழுதியது:

.....................................................................................Saturday, June 4, 2011

அழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல!
                                                               
அண்மையில் 'அழகர்சாமியின் கழுதை'  என்ற தலைப்பில் ஒரு திரை  விமர்சனத்தை பிச்சைப்பாத்திரம் எனும் வலைப்பூவில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுரேஷ் கண்ணன் அவர்கள் இரு பதிவுகளில் அப்படத்தை குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருந்தார். இப்படத்தை நானும் பார்த்தேன். அந்த அளவிற்கு ஒன்றும் மோசமான படம் இல்லை என்பது என் கருத்து. எனவே அவர் எழுதியதில் புருவத்தை உயர்த்த வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என் தனிப்பட்ட கருத்தை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அளவிற்கு சினிமா ஞானம் இல்லாத ஒரு சராசரி ரசிகன் என்பதால், எழுத்தில் ஆழமும் நுட்பமான புரிதலும் நிறைய இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால்..என் எண்ணங்களை பகிர வேண்டும் எனும் முனைப்பே இப்பதிவு எழுத காரணம். இத்திரைப்படம் மூலக்கதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது எனும் விவாதத்திற்கு நான் வரவில்லை. ஏனெனில் அக்கதையை நான் படிக்கவில்லை. அதேபோல குதிரை பற்றிய கெமிஸ்ட்ரி அல்லது பிசிக்ஸ் எதுவும் எனக்குத்தெரியாது. கிண்டி ரேசை நிறுத்தியதன் நினைவாக சென்னை ஜெமினி பாலத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கழுதை..சாரி..குதிரை மட்டுமே அவ்வப்போது கண்ணில் படும். ஆதலால், அ.குதிரையை வெறும் படமாக மட்டுமே முன்வைத்து சில விசயங்களை இங்கு பகிர விரும்புகிறேன். 

முதல் பாகத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் இப்படத்தை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது. ஊடகங்களும் விமர்சகர்களும் வேண்டுமானால் கொண்டாடி இருக்கலாம். ஆனால் ரசிகர் கொண்டாடினர் என்று எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு இப்படம் வியாபார ரீதியில் வெற்றிப்படமும் அல்ல. இப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் 'அற்புதமான படைப்பு. பார்த்தே தீர வேண்டும்' என்று சொன்னதாக தெரியவில்லை. 'நல்லா இருக்கு' என்று வேண்டுமானால் சொல்லி இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை தமிழில் ஒரு வித்யாசமான முயற்சி எப்போது வந்தாலும் அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்து இருந்தால் வெகுவாக சிலாகிக்கும் மைன்ட் செட் உள்ளவர்கள் சொன்னதை மனதில் கொண்டு சுரேஷ் அவர்கள் அவ்வரிகளை எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. 

இரண்டாம் பாகத்தில் சில விசயங்களை அழகாக எழுதி இருந்தார். மக்களிடம் சிரிப்பை பிடுங்க வலிய திணிக்கப்படும் காட்சிகள் குறித்து. அது முற்றிலும் நியாயமான விவாதமே. படம் நெடுக நகைச்சுவையை தூவினால் மட்டுமே ரசிகனை சீட்டில் உட்கார வைக்க முடியும் என கருதி தேவையற்ற இடங்களில் கூட அத்தகைய காட்சிகளை இயக்குனர்கள் தொடர்ந்து சொருகி வருவது தமிழ் சினிமாவை உலக சினிமாவின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பெரிய தடைக்கற்களாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வகையில் என்னை கடுப்பேற்றிய படம் அமிர்கானின் 'பீப்ளி லைவ்'. விவசாயி ஒருவன் வறுமை காரணமாக தற்கொலை செய்ய முயல்வதை நகைச்சுவை காட்சிகளால் நிரப்பி இருப்பார்கள். எனவேதான் அப்படத்திற்கு ஆஸ்கர் கதவுகள் மூடப்பட்டனவோ என்னவோ. 

ஊர் பெரியவர்கள் காமடி செய்யும் 'இத்துப்போன கிராமம்' எனும் வார்த்தையை பிரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அசாதாரண விஷயங்கள் எதுவுமே படத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது யதார்த்த சினிமா அல்ல என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சரண்யா - அப்புக்குட்டி இருவருக்குமான காட்சிகள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை என்பது என்னவோ நிஜம். ஆனால் அழகான பெண்கள் சுமாரான ஆண்களை காரணம் இன்றி மணம் செய்ய மாட்டார்கள் என்று கூறி இருப்பது சத்தியமாக பிடிபடவில்லை. நம் அன்றாட வாழ்விலேயே அழகான பெண்ணும்  சுமாரான ஆணும் தம்பதியர்களாக வாழ்வதை பக்கத்துக்கு வீடுகளிலும், வெளி இடங்களிலும் பார்த்து வருகிறோம். அப்பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு கணக்கு போட்டுக்கொண்டுதான் அந்த ஆணை கைப்பிடித்து இருப்பார்கள் என்பது சற்று அபத்தமாகவே படுகிறது.  

ஊர் பெரியவர் ஒருவர் 'தாழ்த்தப்பட்ட சாதி' பெண்ணை என் மகன் மணம் செய்துவிட்டானே என்று சொல்லும் காட்சியில் அவர் ஏன் சாதியின் பெயரை குறிப்பிடாமல் 'தாழ்த்தப்பட்ட' எனும் வார்த்தையை பிரயோகித்து இருக்கிறார் என்று சுரேஷ் கேட்டதுதான் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்கான  பதிலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியே சுரேஷின் வலைப்பூவில் தந்து விட்டார் என்பதால் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் குப்பை என்று அவர் கூறி இருப்பது எதை வைத்து என்று தெரியவில்லை. கண்டிப்பாக ஒரு சில விதிவிலக்குகள் ஆவது உண்டு என்பது தமிழ் சினிமாவை பற்றிய அடிப்படை புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். 

இளையராஜா பற்றி சொல்கையில், அவர் யாரையும் பேச விடுவதே இல்லை என்பதால் அவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் விலகியதாகவும், ரஹ்மான் எனும் மகத்தான கலைஞன் தோன்றியதும் இக்காலத்தில்தான் என்றும் கூறி உள்ளார். அதே சமயம் இன்று இளம் இயக்குனர்களுக்கு இசை அமைத்து ஊக்குவிப்பதில் இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஷங்கர் மற்றும் மணிரத்னத்தின் படங்களுக்கு மட்டுமே இனி ரஹ்மானின் கீ போர்ட் வேலை செய்யும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் பல சுமாரான படங்களுக்கு கூட தன் சிறப்பான இசையின் மூலம் பாடல்களை தந்த ரஹ்மான் இன்று எத்தனை புது இயக்குனர்களின் நல்ல கதைகளுக்கு செவிமடுத்து உள்ளார்? அண்மையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ராஜா இருந்த மேடையில் இயக்குனர் அமீரும் உடன் இருந்தார். அப்போது தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டதற்கு ராஜா சொன்ன பதில் "கண்டிப்பாக இசை அமைக்க மாட்டேன். உன் படத்தில் வரும் நாயகர்கள் கத்தியும், ரத்தமுமாக அலைகிறார்கள். அது எனக்கு சரிப்பட்டு வராது" என்றார். நெத்தியடியான பதில். இது போன்ற சம்பவங்களை வைத்துக்கொண்டு அவரை மொத்தமாக 'தலைக்கனம்' பிடித்தவர் என்ற வட்டத்திற்குள் அடைப்பது தவறு. அதே சமயம் அவர் இசையில் வந்த சில பாடல்கள் 'சுய தம்பட்ட' வகையை சார்ந்தவை என்பதும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு ஒருவித வெறுப்பை கிளப்பின என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது ராஜாவிடம் அம்மாதிரியான விசயங்களில் பெரிய மாற்றம் வந்துள்ளதை வரவேற்க வேண்டும். ஹங்கேரி இசையை ராஜா பயன்படுத்தி இருப்பது குறித்து சுரேஷின் கருத்துக்கள் நியாயமானவையே. 

உலகப்படத்தை நோக்கி தமிழ் சினிமாவின் பயணம் மெதுவாக ஊர்ந்து கொண்டு செல்கிறது என்பதே இன்றைய நிலை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பது இளம் படைப்பாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் பொருளாதார நிர்ப்பந்தங்கள் முற்றிலும் சுதந்திரமான படைப்பை தர மறுக்கின்றன என்று அவர்கள் சொல்வது முற்றிலும் நிதர்சனம் எனினும், அக்காரணம் ஒரு திரைப்படத்தை நடுநிலையாக அணுகும் ரசிகனுக்கு கண்டிப்பாக அவசியமான விஷயம் இல்லை என்பதே உண்மை. அதுதான் சுரேஷின் வாதமாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு சுரேஷ் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால், 'அன்புள்ள சாமியின் புஷ்பக விமானம்' என்ற பெயரில் ஒரு படம் வந்தால் கூட அதை 'அ.சா. காகித ராக்கெட்' என வர்ணித்து பதிவிடுவார் என நம்புவோமாக!!

சுசீந்திரனும், பாஸ்கர் சக்தியும் பொத்தி வளர்த்து சந்தைக்கு கொண்டு வந்த அழகிய குதிரை சுரேஷின் பார்வையில் கழுதையானது சற்று வருத்தமாக இருப்பினும், ஒரு திரைப்படத்தை எப்படி பூதக்கண்ணாடி வைத்து அதன் நிறை குறைகளை நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கு பிச்சைப்பாத்திரம் வலைப்பூவின் இவ்விரு பதிவுகளும் ஒரு உதாரணம். 

இறுதியாக ஒன்று, படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது (அழகர்) சாமி!!
..............................................................................

My other site:


.............................................................................

சமீபத்தில் எழுதியது:


............................................................................Related Posts Plugin for WordPress, Blogger...