CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, May 15, 2011

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்
                                                                     

பொதுவாக இந்திய திரைப்படங்களை பார்க்கையில் எனக்கு ஏற்படும் சலிப்பு என்னவெனில் படத்தின் முன்னணி கேரக்டர் ஏன் ஒரு முதியவராகவோ அல்லது விடலைகளாகவோ இருப்பதில்லை என்பதுதான். அவர்களுக்கான அல்லது அவர்களின் வாழ்வை சொல்லும் படங்கள் இங்கு வருவது வெகு அரிதாகவே இருக்கும் அவலம் இன்று வரை தொடர்கிறது. அப்படியே ஒரு சில படங்கள் வந்து இருந்தாலும் அவை விருதுக்கான படங்கள் எனும் வட்டத்துக்குள் அடைபட்டு போய்விடுகின்றன. இல்லாவிடில் ராம.நாராயணன் ஸ்டைலில் கிச்சு கிச்சு மூட்டி புல்லரிக்க வைக்கும் குட்டிப்பிசாசு போன்ற உன்னத படங்கள் வந்து தொலைக்கின்றன. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் உலகப்புகழ் பெற்ற சில்ட்ரென் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், பாரன் போன்ற படங்கள் இந்தியாவில் வருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கிடைத்த விடைதான் தாரே ஜாமீன் பர். அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆசியரான அமோல் குப்தேவின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது வந்துள்ள அசத்தல் படம்தான் 'ஸ்டான்லி கா டப்பா'. 


சில்ட்ரென் ஆப் ஹெவனில் எப்படி மஜீத் ஒரு காலணியை வைத்து கதை சொன்னாரோ அதுபோல் 4-வது படிக்கும் மாணவர்களின் டிபன் பாக்சை மட்டும் மையமாக வைத்து படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அமோல். படத்தின் நாயகன் பெயர் ஸ்டான்லி(நிஜப்பெயர் பார்த்தோ). லஞ்ச் நேரத்தில் வீட்டில் இருந்து உணவு கொண்டு வராமல் பிற மாணவர்களிடன் வாங்கி தின்பதுதான் அவன் வேலை. அவனைப்போல்தான் ஹிந்தி ஆசிரியர் கதூஸ் கேரக்டரும். சக ஆசிரியர்கள் உணவு தரும்வரை பாடி அறுப்பார். அதற்கு பயந்தே அவர்கள் டிபன் பாக்சை அவருக்கு தந்து விடுவர். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து பாடங்களும் நிறைவு செய்யப்படாததால் நித்தம் மூன்று பீரியட்கள் அதிகம் வைத்து இலக்கை எட்ட முடிவு செய்கிறது நிர்வாகம். எனவே இரு வேலை உண்பதற்கு ஏதுவாக சற்று அதிகமான உணவை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறது. அடுத்த நாள் முதல் டிபன் பாக்ஸ்கள் வந்து குவிகின்றன. அமன் எனும் பணக்கார மாணவன் கொண்டு வரும் நான்கு அடுக்கு கேரியர் உணவு எப்படி ஸ்டான்லி மற்றும் ஹிந்தி ஆசிரியர் வாழ்வை மாற்றி அமைக்கின்றன என்பதுதான் கதை.  


                                                                 

ஸ்டான்லியாக வரும் பார்த்தோவின் நடிப்பு 'அடேங்கப்பா' ரகம். தாரே ஜாமீன் பர் படத்தில் தர்ஷீல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் உச்சத்தை தொட்டிருக்கிறான் இந்த இளம்புலி. முதல் காட்சியில் முகத்தில் அடிபட்டதற்கு ஆசிரியரிடம் காரணம் சொல்லும் இடம் ஒன்று போதும். இந்திய சினிமாவில் அடுத்த உலக நடிகன் தயார் என்றே தெரிகிறது. ஆசிரியர் தேர்வு அனைத்தும் அருமை. குறிப்பாக அறிவியல் ஆசிரியராக வரும் ஸ்ட்ரிக்ட் டீச்சர் தூள். ஸ்டான்லி உடன் படிக்கும் மாணவர்களாக வரும் சுட்டிகள் மட்டும் சும்மாவா. அவர்கள் அனைவரும்  பின்னி பெடல் எடுக்கின்றனர். படத்தின் டைட்டிலிலேயே கதையின் ஒன் லைனை நகைச்சுவையாக சொல்கிறார் இயக்குனர்.


பெரும்பாலும் நகைச்சுவையாக நகரும் படத்தின் இறுதியில் மனதை உலுக்கும் காட்சிகள் கொண்டு நிறைவு செய்துள்ளார் அமோல். படத்தில் குறை என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அமன் எனும் மாணவனின் சாப்பாடை தேடி ஹிந்தி ஆசிரியர், பள்ளியை சுற்றி ஓடும் காட்சி சற்று மிகையாக படுகிறது. படத்தின் பலம் என்று சொல்லப்போனால் ஆரம்பம் முதல் இறுதி வரை டிபன் பாக்சை மட்டுமே வைத்து காட்சிகளை எடுத்திருப்பது என்று சொல்லலாம். படம் பார்க்கும் முன் வயிறாற சாப்பிட்டு விட்டு செல்வது நலம். இல்லை என்றால் தியேட்டரை விட்டு வெளியே சென்று ஹோட்டலில் அறுசுவை உணவை உடனே உண்டே தீர வேண்டும் எனும் அளவிற்கு நாக்கில் எச்சில் ஊற வைத்திருக்கிறார் அமோல். நல்லவேளை நான் தப்பித்தேன். வயிற்றை நிரப்பி விட்டே சென்றேன்.


                                                                   

முக்கியமான மேட்டர் தெரியுமா?  படத்தின் நாயகன் பார்த்தோ வேறு யாரும் அல்ல. இயக்குனர் அமோல் குப்தேவின் மகன்தான். அந்த ஹிந்தி ஆசிரியராக வருபவர்...? படத்தின் இயக்குனர் அமோல் குப்தேதான். அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர். சர்வதேச விழாக்களில் பெரிய ரவுண்ட் வரும் இந்த 'ஸ்டான்லி கா டப்பா'.

ஹிந்தி தெரியாது என்ற காரணத்திற்காக இப்படத்தை தவிர்க்க வேண்டாம். காட்சிகளே கதையை சொல்லும். ஒரு அற்புதமான திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு. டோன்ட் மிஸ்.


ஸ்டான்லி கா டப்பா - நீங்கள் படித்த 4 -ஆம் வகுப்புக்கு ஒரு பாஸ்போர்ட்!

..............................................................................


சென்னையில் 'ஸ்டான்லி கா டப்பா':

ஐநாக்ஸ் - 12:25 PM, சத்யம் - 4.15 PM, எஸ்கேப் - 7:20 PM, ஈகா - 6: 30 PM
PVR (Skywalk) - 7.30 PM, மாயாஜால் - 2:05 PM.


ட்ரைலர்:
   
http://youtu.be/VZaL32aLYWc

................................................................................

இப்பதிவை வாசித்த உள்ளங்களே, அப்படியே கீழே உள்ள இணைப்பை ஒரு முறை அழுத்தி பாருங்கள்:


படத்தின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் Tree of Hope எனும் லிங்க்கை க்ளிக் செய்தால் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் பண உதவி செய்தல், தொண்டு செய்தல் அல்லது ஸ்பான்சர் செய்தல் என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம் நண்பர்களின் இ-மெயில் முகவரி தந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை பகிர்கிறார்கள். 


                                                                       

குழந்தைத்தொழிலுக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும் வழி வகுக்கிறது இந்த இணைய தளம்.  STANLEY எனும் பெயரை டைப் செய்து 57827 எனும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.  குழந்தைகள் படும் சித்திரவதைகளுக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும். 

..........................................................................

என்னடா இவ்ளோ எழுதிட்டு 'பசங்க' தமிழ் படத்தை பத்தி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகுற அப்டின்னு நினைக்கும் நெஞ்சங்களே. அடுத்து வரும் பதிவில் அப்படம் குறித்தும், குழந்தைகள் சினிமா மற்றும் ஸ்டான்லி கா டப்பா குறித்தும் மேலும் சில விசயங்களை கண்டிப்பாக அலசுவோம். நன்றி ! 

விருப்பம் இருந்தா மேலே சொன்ன மேட்டருக்கு மறக்காம எஸ்.எம்.எஸ். அனுப்பிடுங்க. மீண்டும் சந்திப்போம். 

..................................................................

My other site: nanbendaa.blogspot.com

.................................................................

சமீபத்தில் எழுதியது: 


.................................................................

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர்.//

விமர்சனம் சிந்திக்க தூண்டுகிறது...

செங்கோவி said...

நல்ல அறிமுகம் சிவா..பார்த்திடுவோம்.

rajamelaiyur said...

Padatha pathuduvom

RVS said...

எக்சலேன்ட் விமர்சனம். பன்மொழிப்படங்கள் பார்த்து ரசிக்கும்படி விமர்சனம் எழுதுகிறீர்கள். தொடருங்கள். ;-))

Unknown said...

எனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் பார்க்க முயற்ச்சிக்கிறேன் ,மதுரைல எங்க ரிலிஸ் ஆகிருக்குனு தெரியல

Unknown said...

ரைட்டு!

ரஹீம் கஸ்ஸாலி said...

ரெண்டு டிக்கெட் புக் பண்ணுப்பா பார்த்திடுவோம்

CS. Mohan Kumar said...

அற்புதம் நண்பரே. இறுதியில் தந்துள்ள குறிப்புகள் மிக அருமை. வெறும் விமர்சனம் என்கிற அளவில் இல்லாமல் சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தகவல் சொன்னது அருமை.

அப்புறம் நானும் என் பதிவில் டப்பா என மாற்றி விட்டேன் நன்றி :))

Related Posts Plugin for WordPress, Blogger...