CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, May 8, 2011

மரணகானா விஜி - சந்திப்போமா - 3

குறிப்பு: உதிரிப்பூக்களாய் இருட்டுலகில் வாழ்ந்து மறையும் இதயங்களின் இடியோசையே இப்பதிவு. அருவருப்புகளையும், அதிர்ச்சிகளையும் தாங்க விரும்பாத அன்பர்கள் தயவு செய்து இப்பக்கத்தை தவிர்க்கவும்.


                                                                         

தொடர்ந்து கொண்டிருந்த பேட்டியில் மேலும் சில அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் விஜி.

"ஒரு நாள் பொதுமருத்துவமனையில் எனக்கு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு பெரியவர் வாசலில் கிடத்தப்பட்டு இருந்தார். அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மருத்துவர்கள் என எவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தனர். அவ்விடம் குப்பைகளால் சூழப்பட்டு இருந்தது. அந்நேரம் சர்க்கரை பொட்டலத்தை ஒருவர் பெரியவர் இருந்த இடத்தின் அருகே போட்டுவிட்டு சென்றார். அதை மொய்க்க வந்த எறும்புகள் பெரியவரையும் விடவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். கிட்டத்தட்ட 500 - க்கும் மேற்பட்ட எறும்புகள் அவரின் இரு கண்களையும் குடைந்துகொண்டு இருந்தன.

உடனே என் இடுப்பில் இருந்த துணியை கழற்றி அவர் கண்களை சுத்தம் செய்தேன். உள்ளாடை இல்லாததால் அவ்விடத்தில் நிர்வாணமாக இருந்தேன். அதைக்கண்டு ஒருவன் சொன்னான்: "அந்த கிழவனை விட நீ கேவலமாக இருக்கிறாய்". எப்படி இருக்கிறது பாருங்கள் இந்த சமூகம். அதைப்பற்றி நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை. எறும்புகளை நீக்கிக்கொண்டு இருந்தேன். ஆனாலும் சில எறும்புகள் அவரின் கண்ணை இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தன. அதை எடுக்கையில் பெரியவரின் கண்ணில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அப்போதும் எவரும் உதவவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். இம்மக்களை எண்ணி என் மனம் கொதித்தது. வேறு மாற்றுத்துணி என்னிடம் இல்லாததால் ரிக்சாவில் ஏறி நிர்வாணமாக சென்றேன். என்னை கண்டு கேலி செய்த மக்கள் அனைவரும் ஆடையின்றி தெரிந்தனர் என் கண்களுக்கு."


"இது போல் எத்தனையோ நிகழ்வுகள். சென்ற வருடம் விஜய் டி.வி.க்காக கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியை முடித்த சில நிமிடங்களில் எனக்கு ஒரு போன் வந்தது. அது ஒரு பெண்ணின் குரல். என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். காரணத்தை சொன்னால்தான் பார்க்க முடியும் என்றதற்கு அவள் சொன்ன பதில் "அழகான தாய்க்கும் அசிங்கமான பேய்க்கும் பிறந்தவள் நான். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை". அவளை பார்க்க சென்னையில் இருந்த பூங்காவிற்கு சென்றேன். ஏன் அப்படி சொன்னாய் என்றதற்கு அவள் சொன்ன காரணம்:

"போனில் சொன்னேன் அல்லவா. என் பிறப்புக்கு காரணம் என் தாய். அந்த ஆண் யார் தெரியுமா? "

"யார்? "

"என் தாயின் தம்பி. இப்போது சொல்லுங்கள் நான் யார்? இந்த அசிங்கத்தை சுமந்து கொண்டு நான் இன்னும் உயிர்வாழ வேண்டுமா?"

என்ன சொல்ல. என்னால் முடிந்த அறிவுரைகளை கூறி அவளுடைய முடிவை மாற்ற வைத்தேன். இக்கணம் வரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். 

.............................................................................

இடைவெளி இன்றி இத்தனை அதிர்வுகளை கேட்க சக்தி இல்லாத இளகிய மனதுக்காரன் என்பதால் நான் சற்று நேரம் அமைதியானேன். ஏற்கனவே அம்மணம் ஆன 'நல்ல' மனம் கொண்டவர்களை  துகில் உரிக்க என்ன இருக்கிறது என்று எண்ணினேன். உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இத்தகைய செயல்களை கேள்விப்பட்டு பொங்கிய எனக்கு நிஜத்தின் சூடு சற்று அதிகமாகவே பட்டது. 

விஜி மீண்டும் பேச ஆரம்பித்தார்.
...........................................................................

"எனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று. நேப்பியர் பாலத்தின் அருகே உள்ள இரண்டாம் உலகப்போர் நினைவு சின்னத்தின் அருகே ஒரு இரவு நேரம். சினிமாப்பட போஸ்டர் ஒன்றை போர்வையாக போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென என் முகத்தில் வெந்நீர் ஊற்றப்பட்டது போல் ஒரு உணர்வு. முகத்தை துடைத்துக்கொண்டு பார்த்தேன்.

அது ஒன்றுமில்லை. 

சக மனிதன் ஒருவன் என் முகத்தில் பாய்ச்சிக்கொண்டிருந்த சிறுநீர். எதற்கு இப்படி செய்கிறீர்கள். நானும் ஒரு மனிதன்தானே என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில்:

'தே*#@ பை*. நீயெல்லாம் ஏண்டா எங்க வந்து தூங்கற?'

"எங்களைப்போன்ற வீடில்லா அனாதைகள் வேறு எங்குதான் தூங்குவது. அதற்குக்கூட சுதந்திரம் இல்லையா?" எனக்கேட்டார் விஜி.  

அடுத்து சராசரி வாழ்க்கை வாழும் சமூகத்தை நோக்கி தன் பார்வையை திருப்பினார்.

"இச்சமுதாயத்தில் மூன்று வகையான மக்களை பிரித்து வைத்து உள்ளனர். அதுதான் A,B,C. அதாவது பணக்காரன், நடுத்தரவாசி, ஏழை. இந்த மூன்று வகை வர்க்கங்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியும். ஆனால் D என்று ஒரு வர்க்கம் இதே சென்னை மாநகரில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

"அது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார் விஜி. 

அது என்ன ஒரு தனி உலகம்? 


அதிர்வுகள் தொடரும்.
.............................................................

My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:

..............................................................
              

6 comments:

செங்கோவி said...

அதிர வைக்கின்றன உண்மைகள்..

Unknown said...

உண்மைகள் கற்பனைகளை விட கொடூரமானதுனு சொல்லுவாங்க அது சரியாகத்தான் இருக்கு

ஜெகதீஸ்வரன்.இரா said...

இந்த தொடரை படிக்க படிக்க கண்களில் விசும்பல்கள் தவிர்க்க முடியாததாகிறது.
வாழ்வின் விழிம்பில் வாழும் மனிதர்களாலேயே வாழ்கையின் அர்த்தம் உணரவைக்க முடியும்...!!
உங்களின் எழுத்து நடை அருமை.

raja said...

”என்னை கண்டு கேலி செய்த மக்கள் அனைவரும் ஆடையின்றி தெரிந்தனர் என் கண்களுக்கு."

நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிரோம் இந்த உலகில் மனுசன் சொல்லிக்கிட்டு

Unknown said...

மாப்ள உண்மை எனும் முகம் எப்போதுமே அழகாக இருப்பதில்லை என் செய்வது!

N.H. Narasimma Prasad said...

என்றுமே உண்மை சுடத்தான் செய்யும்.

Related Posts Plugin for WordPress, Blogger...