CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, May 3, 2011

மரணகானா விஜி - சந்திப்போமா - 2
அருவருப்புகளையும், கோர நிகழ்வுகளையும் படிக்க விரும்பாத அன்பர்கள் இப்பதிவை தயவு செய்து தவிர்க்கவும்.

முதல் பேட்டியின் தொகுப்பை படிக்க கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்:

விஜியின் பேட்டி தொடர்கிறது.....   


விஜியிடம் பேசுகையில் நான் மிகவும் வியந்தது அவர் பேசும் தூய தமிழும், வாழ்வை பற்றிய ஆழமான பார்வையும். தமிழ், ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியில் கூட ஆளுமை இன்றி இன்று பல இளைஞர்கள் இருப்பதை பார்க்கையில் விஜியின் மொழி ஆளுமை மிகவும் போற்றப்பட வேண்டியதாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. தன் கண்முன் நடந்த சில அதிர்ச்சியான (நமக்கு. அவருக்கு அது ஒன்றுமில்லை) விசயங்களை பகிர்கிறார்:

"உங்களுக்கு சென்னையில் உள்ள ஒரு பிரதான பேருந்து நிலையத்தை பற்றி என்ன தெரியும்?" என என்னிடம் கேட்டார். நான் அந்த பகுதிக்கு பெரும்பாலும் செல்வதில்லை என்றேன். "சென்னையில் தவறான தொழில் நடக்கும் முக்கியமான இடத்தில் அதுவும் ஒன்று" என்றபடி தொடர்ந்தார். "சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த பஸ் ஸ்டாண்டில் பெண் குழந்தையுடன் பாத்திமா எனும் பெண் அத்தொழிலில் ஈடுபட்டு வந்தாள். நான் அவ்வழியே செல்கையில் தனக்கும், தன் குழந்தைக்கும் உண்ண உணவு வாங்கித்தருமாறு என்னை அவ்வப்போது கேட்பாள். என்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தில் பாலும், ரொட்டியும் அவர்களுக்கு வாங்கித்தருவேன். இரவு நேரங்களில் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தினுள் அவள் தொழில் துவங்கும். தன் கண் முன்னே அப்பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஆண்மகனுடன் இருப்பாள். இதைக்கண்ட நான் ஒருமுறை அவளிடம் 'உன் மகளை என்னிடம் ஒப்படைத்து விடு. வேறு எங்காவது சேர்த்து விடுகிறேன்' என்றேன். அதற்கு அவள் 'அவளை விட்டு பிரிந்தால் பிறகு நான் என்ன செய்வேன். சொல்' என்றாள். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. ஏனெனில் பாத்திமாவின் ஒரே உலகம் அவளது மகள். 

"உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்லட்டுமா?" எனக்கேட்டார் விஜி.

"சொல்லுங்கள்"

"எங்களைப்போன்ற தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் உலகில் கிட்டத்தட்ட எந்த பெண்ணுக்கும் கற்பு என்பதே இல்லை"

"எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்" என ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

"அதுதான் உண்மை. அனாதை சிறுமியாக கடற்கரையோரம் அலைபவள் எல்லாம் கடற்கரையில் காமப்பசியுடன் அலையும் ஆண்மகனின் வெறிக்கு ஆளாகி விடுகிறாள். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். முன்பு ஒரு முறை கடற்கரை பக்கம் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுமி என்னருகே வந்து நின்றாள். என்ன வேண்டும் என்றேன். அதற்கு அவள் சொன்னாள்: 

"அண்ணா, என் பின்புறத்தை உபயோகித்து கொண்டு பத்து ரூபாய் மட்டும் தாருங்கள்..... என் இதயம் வெடித்தது. இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு? யார் பொறுப்பு? இரு கால்கள் இல்லாமல் வறுமையில் செத்து செத்து பிழைத்த என்னால் அந்த தருணங்களில் இவளைப்போன்ற பிஞ்சுகளுக்கு  என்ன செய்துவிட இயலும் என்று நினைக்கிறீர்கள். உரக்க கத்தி அழுவதை விட??" என என்னை கேட்டார் விஜி.

என்ன பதில் சொல்ல? தெரியவில்லை. அவர் கண்களை உற்று பார்ப்பதை விட.

மீண்டும் பாத்திமா பற்றி சொல்ல ஆரம்பித்தார். 

"ஒரு நாள் அந்த அதிர்ச்சி சம்பவத்தை காண நேர்ந்தது. இரவில் ஆண்மகனை அழைக்க பாத்திமா தன் பாவாடையை சிறிது தூக்கி காட்டுவாள். இதை பார்த்து பழகிய அவளுடைய ஆறு வயது பெண்ணும் பசி ஏற்படுகையில் தன்னை கடந்து செல்லும் ஆண்களை பார்த்து ஆடையை தூக்கி காட்ட துவங்கினாள். இது யார் குற்றம்? சொல்லுங்கள். அப்போது என் மனநிலை என்னவாக இருந்து இருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? 

நாட்கள் கடந்தன. 

ஒரு நாள் பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டமாக இருந்தது. என்னவென்று பார்த்தேன். ஒரு குழியில் 19 கத்தி குத்துகளுடன் நிர்வாணமாக உயிரை விட்டிருந்தாள் பாத்திமா. என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் குழந்தையை தேடினேன். சற்று தொலைவில் கன்னத்தில் கை வைத்து நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தது அந்தப்பிஞ்சு. அப்போது அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்?"

நான் "தெரியவில்லை" என்றேன் ஒருவித அதிர்ச்சியுடன். 

தொடர்ந்தார் விஜி "தான் கண் விழித்ததும் உணவு தர தாய் வருவாள் என்று ஒரு நம்பிக்கையில்தானே அந்த குழந்தை இவ்வளவு நிம்மதியாக உறங்க முடியும்?". 

விஜியை பார்த்து சில நொடிகள் மௌனம் சாதித்தேன். பேச்சு வரவில்லை. 

"பாத்திமா கொடூரமாக வெறியர்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்த நான் சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி பார்க்கையில் அச்சிறுமி அங்கு இல்லை. மனது வருந்தியது. ஒன்றும் செய்வதற்கில்லை. வருடங்கள் ஓடின"
                                                                      

"ஒரு நாள் எனக்கு பாண்டிச்சேரி ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு விரைந்தேன். சிறிது நேரம் ஆசிரம ஆட்களிடம் பேசிவிட்டு அங்கிருந்த குழந்தைகளை காணச்சென்றேன். ஒவ்வொரு குழந்தையிடமும் 'வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டுக்கொண்டே வந்தேன். "டாக்டர், இஞ்சினியர்" என்று ஆளாளுக்கு தங்கள் ஆசையை சொன்னார்கள். இன்னொரு குழந்தையிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் "நான் கன்னியாஸ்திரியாக விரும்புகிறேன். மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்". அதற்கு நான் "நல்ல எண்ணம். நீ அப்படி ஒரு நிலையை அடைந்தால் எனக்கு பாவமன்னிப்பு தருவாயா?" என கேட்டேன். 

"தரமாட்டேன்" என்றாள். 

"ஏன்? "  

"நீங்கள் பாவமே செய்யவில்லையே" 

"நான் பாவம் செய்யவில்லை என்று உனக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் பாவம் செய்யவில்லை"

"எப்படி மீண்டும் உறுதியாக சொல்கிறாய்?"

"பசியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் பல முறை பாலும் ரொட்டியும் வாங்கி தந்தீர்களே... அந்த பாத்திமாவின் மகள் நான்தான். இப்போது சொல்லுங்கள்..உங்களுக்கு நான் ஏன் பாவ மன்னிப்பு தரவேண்டும்?"

விஜியின் மனது எதிர்பாராத ஆச்சர்யத்தில் நிலைகுலைந்து போனது. அவரை கட்டிப்பிடித்து அழுதால் பாத்திமா மகள். அவரது சட்டை அவளின் கண்ணீர் துளிகளால் ஈரமாகிப்போனது. 

இதை சொல்லி முடித்த விஜி என்னைப்பார்த்தார். சில நிமிட மௌனங்கள். 

"என்ன சிவா எதுவும் பேசவில்லை"

"என் தந்தை மற்றும் சகோதரன் மரண செய்தியை கேட்டபோது கூட ஏற்படாத அதிர்வு இந்நிகழ்வை கேட்டதும் என் மனதை என்னமோ செய்கிறது" என்றேன்.

"இது போல் பல அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் சந்தித்திருக்கிறேன். அதையும் சொல்கிறேன்" என்றார் விஜி. 


அதிர்வுகள் தொடரும்....


.....................................................................

My other site: nanbendaa.blogspot.com

.....................................................................


                                                                     

11 comments:

Unknown said...

ரைட்டு!

Unknown said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை சிவா, இந்த கமெண்ட் நான் என்ன மனநிலையில் போடுகிறேன் என உங்களுக்கு தெரிந்திருக்கும் :-(

MANO நாஞ்சில் மனோ said...

மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேச வார்த்தைகள் இல்லை

சக்தி கல்வி மையம் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மனசுக்கு கஷ்டமா இருக்கு...

செங்கோவி said...

உருப்படியான காரியம் செய்கிறீர்கள்..தொடரட்டும்!

டக்கால்டி said...

Endru thaniyum intha Samooga kururangal?

RVS said...

சிவா! அந்தப் பிஞ்சு....சொல்லொனாத் துயரம் என் மனதை குடைகிறது சோகம் சிவா! வேண்டாம்... வேண்டாம்... ;-(((

Nagasubramanian said...

கானா விஜியின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். அந்த கட்டுரை இன்று வரை என் மனதில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சொன்ன நிஜ கதை ஒன்றை என் வலைப்பூவில் "அங்கீகரிக்கப்படாத பெண்மை" கட்டுரையின் ஒரு பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2010/10/blog-post_17.html

! சிவகுமார் ! said...

பதிவை படித்து மனதில் இருந்ததை எழுத்தாக வெளிப்படுத்திய நண்பர்கள் குமார், சுரேஷ், மனோ, ரமேஷ், கருன், செங்கோவி, டக்கால்டி, ஆர். வி. எஸ். அனைவருக்கும் என் நன்றிகள்!

! சிவகுமார் ! said...

தகவலுக்கு நன்றி நாகா. தங்கள் பதிவை படித்து கருத்தை சொல்கிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...