CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, May 1, 2011

'மரணகானா' விஜி - சந்திப்போமா - 1

'மரணகானா' விஜியுடன் ஒரு சந்திப்பு:

(உழைப்பாளர் தின சிறப்பு நேர்காணல்) 


                                                                              

பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். விஜியை பற்றி பல பத்திரிக்கைகளில் நீங்கள் படித்து இருப்பீர்கள். இதுவரை படிக்காதவர்களுக்காகவும், விஜியின் மனதில் உள்ள எண்ணங்களை மேலும் பகிரவே இப்பதிவு. இதை படிக்கும் முன்பாக தயவு செய்து இவருடைய இணைய தளத்தை ஒரு முறை பார்வை இடுங்கள். அதில் உள்ள காணொளிகள் மற்றும் இவருடைய வாழ்க்கை போராட்டங்களை உள்ளடக்கிய புத்தகங்களான 'நான் சந்தித்த மரணங்கள்' மற்றும் 'சுடுகாடும் சில சுந்தரிகளும்' ஆகியவற்றை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து பக்கங்களும் நன்றாக ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளன. நம்மில் பலருக்கு அறிமுகம் இல்லாத, இதயத்துடிப்பை எகிற வைக்கும் நிஜ அனுபவங்கள் உள்ளதால் மனதிடம் உள்ளவர்கள் மட்டும் அவற்றை படிக்கவும். தயவு செய்து அதை படித்து முடித்ததும்/காணொளியை பார்த்து முடித்ததும் இப்பேட்டியை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான லிங்க்:   மரணகானா விஜி
......................

"சிவகுமார், நான் பூங்காவில் காத்திருக்கிறேன். வர முடியுமா?" என்றது விஜியின் குரல். சீறிப்பாய்ந்தது ஆட்டோ.  படத்தில் உள்ள அதே தோற்றத்துடன் பூங்காவில் அமர்ந்திருந்தார். "வணக்கம் விஜி. எப்படி இருக்கீங்க?" என்றேன். என்னைப்பார்த்த விஜி, அவருடன் இருந்த மைக்கேலை (ராணி வார இதழில் விஜியின் வாழ்க்கைத்தொடரை எழுதிய நண்பர்) பார்த்து "சிவகுமாரை பார்த்தால் எனக்கு நண்பன் பீட்டரின் நினைவு வருகிறது. அதே உருவ அமைப்பு மற்றும் குரல்" என்றார். பீட்டர் யார் என்பது விஜியின் இணைய தளத்தில் உள்ள புத்தகத்தில் எழுதியுள்ளார். எனக்கு காண்பிக்க ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து வந்திருந்தார் விஜி. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவரைப்பற்றி எழுதி இருந்த கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தது அந்த ஆல்பம். நான் வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார். "உழைப்பாளர் தின பேட்டி எடுக்கவும், சக பதிவர்களுக்கு தங்களை பற்றி மேலும் பல தகவல்களை தரவும் எண்ணினேன்" என்றேன். வலைப்பூவின் தாக்கத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். பேட்டி தொடங்கியது.


கேள்வி: தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பற்றி படிக்கையில் பிதாமகன் படத்தின் நினைவு வருகிறதே. அப்படதிற்கும் தங்கள் வாழ்விற்கும் நிறைய சம்மந்தங்கள் உள்ளதா?

பதில்: இல்லை. ஒரு சில சம்பவங்கள் மட்டுமே அதில் நிஜம். அசலான விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை பிதாமகனில் கம்மியாகவே உள்ளது.

கேள்வி: திருமணம் ஆகி விட்டதா?

பதில்: (ஒரு புன்முறுவலுடன்) இல்லை. திருமணத்தில் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு மணம் ஆகிவிட்டதா?

நான்: இல்லை.

பதில்: அதனால்தான் இப்படி நிம்மதியாக பேட்டி எடுக்கும் சுதந்திரம் உள்ளது. திருமணம் செய்து கொள்ளாதீர்கள் (சிரிக்கிறார்).

கேள்வி: தங்கள் கல்வித்தகுதி என்ன?

பதில்: எதை கல்வி என்கிறீர்கள். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதா?

கேள்வி: இல்லை. எங்களைப்போன்ற சராசரி மனிதர்களால் கற்பனை கூட செய்ய முடியாத ரணங்களை இளம் வயதிலேயே அனுபவத்தின் மூலம் படித்தவர் நீங்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். கானா பாடலில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறும் எண்ணம் உள்ளதா?

பதில்: இல்லை. கருப்பு உலகில் வறுமையில் வாடும் மனிதர்களை நான் நிஜ வாழ்வில் பலமுறை ஆராய்ந்திருக்கிறேன். இதைவிட சமூகம் குடுக்கும் பட்டம் எதற்கு?

கேள்வி: 'நான் சந்தித்த மரணங்கள்' புத்தகத்தில் பீட்டரின் தங்கை தற்கொலை செய்து பிணவறையில் இருந்த சமயம். பிணவறை காப்பாளர் தங்களுக்கு உண்ண டீ மற்றும் போண்டாவை தந்த சமயத்தில், மிகுந்த பசியில் இருந்த காரணத்தால் அதை நீங்கள் உண்ண நேர்ந்தது. அதைக்கண்ட பீட்டர் "என் தங்கை இறந்து கிடக்கையில் உண்கிறாயே" என்று தங்களிடம் கடுமையாக கோபித்து கொண்டதாக சொன்னீர்கள். அன்றோடு அந்த நட்பு தொலைந்து போனதாகவும் கூறி இருந்தீர்கள். இன்று இருக்கும் விஜிக்கு அதே நிலை மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால்?

பதில்: கண்டிப்பாக அதையேதான் செய்வேன். பசி எடுத்தால் என்ன செய்வது. இறந்து போனவர் போனதுதானே. அவனுக்கு(பீட்டர்)  அவள் தங்கை. ஆனால் எனக்கு சடலம்தானே? இதை ஏன் சமுதாயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

கேள்வி: உறவுகள் மற்றும் கடவுள்  மீதான தங்கள் பார்வை என்ன?

பதில்: இளம் வயதிலேயே பல கொடுமைகளை கண் எதிரே பார்த்தவன் என்பதால் உறவுகள், பாசம் போன்றவற்றில் பெரிதாக செண்டிமெண்ட் எனக்கு இருப்பதில்லை. அதுபோல் கடவுள் நம்பிக்கையும் இல்லை. நான் எந்த கட்சி சார்பான நிலைப்பாடு கொண்டவனும் இல்லை. திராவிடர் கழகம் அழைப்பை ஏற்று சில நிகழ்ச்சிகளை செய்து வந்தாலும், நான் நடுநிலை எண்ணம் கொண்டவனே.

பேச்சினூடே சிறு இடைவெளி விட்டு அலைபேசியில் ஒரு தோழியிடம் பேசுகிறார். "சொல்லும்மா, எப்படி இருக்க. நண்பர் ஒருத்தர் இருக்கார். பேசு" என்று அலைபேசியை என்னிடம் தந்தார். "ஹலோ, எப்படி இருக்கீங்க?" என்று விசாரித்து பேச ஆரம்பித்தார் அப்பெண். தங்கை இல்லாத குறையை சில நொடிகள் தீர்த்து வைத்தது தெளிவையும், பண்பையும் உள்ளடக்கிய அக்குரல். "மதுரைப்பெண். மூன்று வருடமாக அலைபேசியில் அவ்வப்போது பேசுவாள். இதுவரை சந்தித்ததில்லை" என்றார் விஜி. அவர் அப்பெண்ணிடம் பேசிய தொனி ஒரு அண்ணனின் பாச வெளிப்பாடாகவே இருந்தது. இப்படி முகம் தெரியாத பல பெண்கள் தன்னிடம் பேசுவதாக சொன்னார். அப்பெண்களால் வெளியில் விவரிக்க முடியாத சோகங்களுக்கு விஜியும் அவரது பாடலும் ஒரு வடிகாலாக அமைந்து வருகிறது என்பதை உணர்ந்தேன். 

BBC தொலைக்காட்சியில் தான் அளித்த பேட்டி பற்றி கூறினார். அதன் வீடியோ தொகுப்பு தன்னிடம் இல்லை என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த வீடியோ பதிவை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை. BBC சேனலை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ள பதிவுலக அன்பர்கள் யாரேனும் இதற்கான முயற்சியை மேற்கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும்.   

"சிவகுமார்.. தங்களிடம் கூறிய விசயங்களை ஏற்கனவே ஊடகங்களில் நான் சொல்லி இருக்கிறேன். இன்னும் சற்று மாறுபட்டு கேட்க முடியுமா? ஏனெனில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் குறித்து சில விசயங்களை பகிர விரும்புகிறேன்"  என்றார் விஜி. 

நான் "ஆமாம் விஜி. பத்திரிக்கைகளில் பலர் படித்து இருப்பினும் வலையுலக நண்பர்கள் அனைவரும் தங்கள் பேட்டிகளை படித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. எனவேதான் இக்கேள்விகளை முன் வைத்தேன்" என்றேன். 

"அப்படி என்றால் தாராளமாக சொல்கிறேன். வலைப்பூவில் எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது" எனக்கேட்டார். வலைப்பூ எழுதும் நண்பர்கள் பலர் கட்சி அல்லது நடிகனை சாராமல் நடுநிலையுடன் பதிவு எழுதுவதால் தங்களை கண்டிப்பாக திரும்பி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றேன். மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார் விஜி.  

"சரி, விளிம்பு நிலை மனிதர்களின் கருப்பு உலகத்தில் நான் கண்ட சில அனுபவங்களை சொல்லட்டுமா?" என்றார். சமுதாயத்தை சம்மட்டியால் ஓங்கி அடிக்கும் நிஜங்கள் அவர் மனதில் இருந்து கொதிக்கும் வெந்நீராய் இந்த அளவுக்கு பொங்கிப்பாயும் என அப்போது நான் எண்ணவில்லை.

முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் அந்த அதிரவைக்கும் அனுபவங்களை நாளை காலை இதே தளத்தில் வெளியிடுகிறேன். 

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களில் பல மரணங்களை கண் முன் பார்த்து அதில் இருந்து வாழ்க்கையை கற்று இன்று சமூகத்தில் தனக்கென ஒரு மதிப்பை பெற்றிருக்கும் நண்பர் விஜியை பற்றி படித்த உள்ளங்களுக்கு நன்றி. 


அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள். உழைப்போம். உயர்வோம்.


                                                           
  
விஜியை தொடர்பு கொள்ள:

அலைபேசி: 99411 63468

மின்னஞ்சல்: mganaviji@gmail.com
.......................................................................

சந்திப்போமா எனும் பகுதி மூலம் பலதரப்பட்ட மனிதர்களின் பேட்டிகளை நேரம் மற்றும் சந்தர்ப்பம் அமைந்தால் இத்தளத்தில் அவ்வப்போது வெளியிட முயற்சிக்கிறேன். அதற்கான முதல் முயற்சிதான் விஜியின் பேட்டி. மீண்டும் சந்திப்போம்.

இந்த சந்திப்பிற்கு உதவிய விஜியின் சகோதரர்கள் தமிழ் பிரபா, மைக்கேல் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
.....................................................................


மே 19 ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் தோழர் மரணகானா விஜியின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: 

ஜெர்மன் அரங்கம், 
17, பிரகாசம் சாலை,
தி.நகர், சென்னை - 17.

நுழைவுச்சீட்டு கிடைக்குமிடம்:

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம், 
பெரியார் படிப்பகம், 
73, லாயிட்ஸ் சாலை, 
ராயப்பேட்டை, சென்னை - 14.

அலைபேசி எண்கள்: 

99411 63468
98847 54080
..............................................................

சமீபத்தில் எழுதியது:My other site: nanbendaa.blogspot.com
..............................................................

8 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

செங்கோவி said...

அருமையான பதிவு நண்பா! தொடர்ந்து இதுமாதிரி பேட்டிகளை வெளியிடவும்!

ரஹீம் கஸ்ஸாலி said...

இல்லை. கருப்பு உலகில் வறுமையில் வாடும் மனிதர்களை நான் நிஜ வாழ்வில் பலமுறை ஆராய்ந்திருக்கிறேன். இதைவிட சமூகம் குடுக்கும் பட்டம் எதற்கு?
நச் பதில்

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பேட்டி, சவுக்கடி பதில்கள்...

Unknown said...

சூப்பர் நண்பா, உழைப்பாளார் தினத்தில் நல்ல உழைப்பாளியை அறிமுகபடுத்தி வைத்துள்ளீர்கள், நன்றி

! சிவகுமார் ! said...

கருத்திட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி!

Nagasubramanian said...

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நாகா!

Related Posts Plugin for WordPress, Blogger...