CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 3, 2011

நல்ல புள்ள


"தண்ணி குஸ்ட்டு போடா"...என்று செம்பை நீட்டினால் ராஜம், பட்டப்படிப்பு முடித்துவிட்டு  தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லப்போகும் தன் மகன் பாபுவிடம். வக்கற்ற குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட நாள் முதல்  புதைந்தொழிந்த புன்னகை இன்றுதான் அவளின் பாலைவன உதட்டில் மீண்டும் வேர்விட்டது. "சாந்தரம் ஆறு மணிக்கு வந்துருவேன். சாவிய சுந்தரி அக்கா ஊட்ல குத்துரு" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் பாபு. வேகமாக  ஒரு மாதம் உருண்டோடியது. சம்பள நாளும் வந்தது. நாலு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை  ஏ.டி.எம். தன் வாயில் இருந்து கொப்பளித்தது. "எல்லாமே நூர் ரூவா நோட்டா வந்து தொலையக்கூடாது" என்று சலித்துக்கொண்டு வீட்டை  நோக்கி நடக்கத்தொடங்கினான். "எல்லா செலவும் போக கைல 400 ரூவா இருந்தாலே பெர்சு. இன்னா பண்ணலாம்..நாலு வர்சத்துக்கு முன்னால பழைய தேட்டர்ல அம்மாவை கூட்டிக்கினு மொத வர்சைல படம் பாத்ததோட சரி. அதுக்கப்புறம் எங்கயும் கூட்டிட்டு போல. இந்த வாட்டி எங்கயாச்சும் கூட்டிட்டு போனும்"...வீட்டை அடைந்தான். "வூட்டு கிட்ட இருக்குற முருகன் கோயிலுக்கு சுந்தரி அக்காவோட நெறிய வாட்டி போயிட்டு வன்ட்டேன். நீ ஏண்டா வர மாட்ற?"  அப்டின்னு அம்மா ரொம்ப வாட்டி சொல்லி இருக்கு. நாளிக்கி நாயித்தி கேம. அம்மாவை கோயிலுக்கு கூட்டினு போய்ட்டு அப்டியே எக்ஸ்ப்ரஸ் அவென்யூவ சுத்தி காமிச்சி கூட்டிட்டு வந்துரலாம்". 


மறுநாள் காலை. "யம்மா கோயிலுக்கு போலாம் வரியா?" என்றான். "இன்னாடா சொல்ற" என்று அதிசயித்தாள் ராஜம். "ரவ நேரம் இர்ரா. குளிச்சிட்டு டப்புன்னு  ஓடியாந்துர்றேன்". அம்மா முகத்தில் ஏற்பட்ட பரவசத்தை கண்ட பாபு "அம்மா இப்படி சந்தோசமா இருந்து பாத்ததே இல்லியே. இத்தனை வர்சம் இது கூட செய்யாம என்ன கருமத்துக்கு நான் உயிரோட இருந்தேன்" என நெற்றியில் கையை வைத்து அழுத்தினான். மொத்தம் இருந்த ஆறு பழைய புடவைகளில் ஓரளவு புதிது போல் இருந்த ஒன்றை எடுத்து உடுத்தியவாறு சுவற்றில் படமாக சிரித்துக்கொண்டு இருந்த கணவனை பார்த்து "அடப்பாவி. எம்மவன் கூட கொஞ்ச நாள் இருக்காம போயிட்டியே" என நொந்தாள் அவள். தன் வாழ்நாள் தோறும் துரத்தி வந்த பேய்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீதியில் நடக்கத்தொடங்கினாள். அக்னி வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும் மகனுடன் வெளியே செல்லும் உற்சாகத்தில் இருந்தவளின் உச்சந்தலைக்கு அடர்ந்த மேகம் ஒன்று குடை பிடித்தவாறு பின்தொடர்ந்தது வந்தது.  

"யக்கோவ்...பாபுவ காத்தால எங்க இட்டுக்குனு போற" என உரக்கக்கூவினான் பாபுவின் நண்பனாகிய ஆட்டோ ஓட்டும் டில்லி..."இன்னாது கோயிலுக்கா போறானா? அவன் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல. நல்ல புள்ளைக்கு எல்லாம் கோயில் தேவ இல்ல" என உச்ச ஸ்ருதியில் இருவரையும்  ஓட்டத்தொடங்கினான். "சொம்மா இருக்க மாட்ட. வடபழனி கோய்லுக்கு வண்டிய விடு" என அரற்றினான் பாபு. சாமி தரிசனம் முடிந்தது. "யம்மா...படம் பாக்க டிக்கட்டு எத்துருக்கேன். ஓட்டல், தேட்டர், ஏசிக்கடைங்க எல்லாமே ஒரே எடத்துல இருக்குது. போலாம் வா" என்றான் பாபு. உடனே ராஜம் "காசு கீதுன்னு ரொம்ப செலவு பண்ணாத பாபு. எனக்கு அதெல்லாம் ஒன்னியும் வேணாம்" என்றாள். "என்னிக்கோ ஒரு நாள்தான. கெளம்பும்மா".  ஆட்டோ எக்ஸ்ப்ரஸ் அவின்யுவை சென்றடைந்தது. "மச்சி நீ இப்ப கெளம்பு. நாலு மணிக்கா வந்துரு" என டில்லியை கிளப்பினான் பாபு. 


"இன்னாடா இம்மாம் பெருசா இருக்கு. பெரிய ஊட்டு ஆளுங்க வந்து போற எடத்துக்கு கூட்டியாந்துக்கிறியே" என கண்களை அகல விரித்து கேட்டாள்.  "நான் இருக்குறல்ல. சொம்மா வாம்மா" என தாயின் கரம் பற்றி அழைத்து சென்றான். "எஸ்கேப் தேட்டர் எங்க இருக்கு சார்"...பாபுவை சற்று அலட்சியமாக பார்த்த மனிதர் "மூணாவது ப்ளோர்" என்று கையை காட்டினார். அவனுக்கும் இது முதல் முறை என்பதால் அம்மாவை எப்படி எஸ்கலேட்டரில் அழைத்து செல்வது என யோசித்தான். சரிப்படாது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். அங்கும் இங்கும் தேடி ஒரு வழியாக லிப்டை கண்டுபிடித்தான். லிப்டில் இவர்கள் இருவரையும் கண்ட குபேரர்களில் சிலர் வேற்றுகிரகவாசிகளை பார்ப்பது போல் ஒரு பார்வை பார்த்தனர். சொந்த உழைப்பில் காய்கறி வியாபாரம் செய்து தன்னை படித்து ஆளாக்கிய தாயை ஒரு நொடிப்பார்வையில் அலட்சியமாக பார்த்த அந்த நபர்களின் கண்களை கோபம் மேலிட பார்த்தான் பாபு. அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு தரையை பார்த்தன அவர்களின் கண்கள். 


மகனின் கையை பற்றியவாறு திரை அரங்கினுள் நுழைந்தால் ராஜம். "இன்னாடா தேட்டர் மாதிரியா கீது. ராசா வூட்டு கணக்கா வச்சிருக்கானுங்க" என வியப்புடன் பார்த்தாள். இடைவேளை வந்தது. "இன்னா சாப்புர்ற". "எனக்கு ஒன்னியும் வோணாம். வெல ஜாஸ்தியா இருக்கும். நீ வேணா சாப்டுக்க". "அய்ய..காச பத்தியே பேசினு இருக்காத. உனக்கு பாத்ரூம் போனுன்னா சொல்லும்மா". அரங்கின் அதிகபட்ச குளிரில் இயற்கை உந்துதல் இருப்பினும் கூச்சப்பட்டாள் ராஜம்.."இல்லடா. போய்ட்டு வா". படத்தினூடே நகைச்சுவை காட்சி ஒன்று வந்தது.  மெல்லிய அலை சப்தம் போல அரங்கில் இருந்தவர்கள் சிரித்த அதே நேரத்தில் வெள்ளந்தியாக மனம் விட்டு சிரித்தாள் ராஜம். "ப்ச்..ப்ச்" என்று லேசான முனகல். பின்னால் இருந்த இருக்கையில் இருந்து. சடக்கென தன் சிரிப்பை நிறுத்தி விட்டாள் ராஜம். மனம் ஒடிந்தான் ராசு.  படம் முடிந்தது.  "இவ்ளோ ஏசிய ஏன் போடறாங்க" என பொருமியவாறு வெளியே வந்தாள் ராஜம். "குடிக்க தண்ணி வோனுண்டா" வளாகம் எங்கும் தேடிப்பார்த்தான். குடிநீர் இருக்கும் இடம் காணவில்லை. பணம் குடுத்து தண்ணி பாட்டிலை வாங்கி வந்தான். "இன்னாடா இது. குடிக்க தண்ணி கூட வைக்காத எடத்துக்கா ஆயிரக்கணக்குல செலவு செய்ய இத்தனை கூட்டம் வர்து?" என வினவினாள். "இங்க எல்லாம் அப்படித்தான்" உரைத்ததான் பாபு.  மாலை நேரத்தில் இல்லத்தை அடைந்தனர் இருவரும். 


ஏசி குளிர் அவள் உடலை பதம் பார்த்ததன் விளைவு...உள்ளே நுழைந்ததும் முடங்கி படுத்துக்கொண்டாள். ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டில்லியிடம் நடந்ததை விவரித்தான் பாபு. "நீ என்னமோ ஆசையாத்தான் ஒங்க அம்மாவை கூட்டிகினு போன. ஒம்மேல தப்பில்லை மச்சி. ஆனா வயசான ஆளுங்கள, அதுவும் பொம்பளைங்கள இந்த மாறி எடத்துக்கு எல்லாம் கூட்டி போ சொல்லோ நாலஞ்சி தடவ யோசிச்சிட்டு கூட்டிட்டு போனும். புர்தா. நம்ம ஆம்பிளைங்க. அவசரத்துக்கு பாத்ரூம் வந்தா டக்குனு ரோட்டோரம் இருந்துட்டு வந்துருவோம். அவுங்க இன்னா செய்வாங்க சொல்லு. ரொம்ப நேரம் ஒரே எடத்துல அதுவும் ஏசில. இந்த காசுல ஒங்க அம்மாக்கு ஒரு பொடவயாவது  எடுத்து கொடுத்து இருக்கலாண்டா" என்றான் டில்லி. பாபு சில நொடிகள் மௌனம் காத்தான்.

 "அடுத்த வாட்டி கண்டிப்பா வாங்கி தந்துருவண்டா". 

"அதை செய்யி மொதல்ல. மச்சி உங்கம்மா பொறந்தா நாள் என்னிக்கிடா?" கேட்டான் டில்லி.  பாபுவின் இதயத்தை கிழித்துப் பாய்ந்தது அந்த கேள்வி. 

"தெர்லடா" என்றான் பாபு. 

"நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல" பாடலை மீண்டும் பாடியவாறு ஆட்டோவை நோக்கி நடந்தான் டில்லி. 

                                                                        **********

................................................

மிக்சர் கடைக்கு செல்ல கீழே 'க்ளிக்'கவும்: >>> 
................................................

மேலும்:          

5 comments:

pichaikaaran said...

"தன் வாழ்நாள் தோறும் துரத்தி வந்த பேய்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீதியில் நடக்கத்தொடங்கினாள்". "
உச்சந்தலைக்கு அடர்ந்த மேகம் ஒன்று குடை பிடித்தவாறு பின்தொடர்ந்தது வந்தது. "

போன்ற வரிகள் சூப்பர்..
கதை சொல்லும் விஷயமும் , உணர்வுகளும் அருமை

””அக்னி வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும்
குளுர் காலத்துல கூட இவ்ளோ ஏசிய ஏன் போடறாங்க" ””

கதை நடப்பது குளிர்காலமா வெயில்காலமா?

இயல்பான வசனங்கள் பிளஸ்..
அவசரமான நடை மைனஸ்

மொத்தத்தில் நிறைகள் அதிகம்...

Unknown said...

அருமை சிவா, நல்ல நெகிழ்ச்சியான கதை, இயல்பான விளக்கங்கள், நீங்கள் எந்த மனநிலையில் ந்ழுதி இருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது, வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

சிவா இந்த இடுகை ஏன் இரண்டு நாட்களாக என் கண்ணில் படவில்லை என்று யோசிக்கிறேன்... ஏதேதோ சொல்ல நினைத்தாலும் எதுவும் சொல்ல முடியவில்லை...

RVS said...

மெட்ராஸ் பாஷையில் ஒரு கதை.
நல்லா இருக்கு.
சினிமா காமிச்ச காசுல ஒரு புடவை எடுத்துக் கொடுத்திருக்கலாம். அற்புதம். ;-))

! சிவகுமார் ! said...

நிறை குறைகளை சுட்டிக்காட்டிய பார்வையாளன் அவர்களுக்கு மிக்க நன்றி!


@இரவு வானம்

எல்லாம் நம்ம பார்த்த அனுபவம்தான் சுரேஷ்!

@பிரபாகரன்

புரிந்து கொண்டேன் பிரபா.

@RVS

ஊக்கத்திற்கு நன்றி ஆர்.வி.எஸ் !

Related Posts Plugin for WordPress, Blogger...