CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 17, 2011

காதலெனும் காட்டாறு - 2


"நான் சொன்ன ஜோக் எப்படி" என்று ராகவன் சொன்னதை கேட்ட ராம் 'மொதல்ல ஜோக் எங்க இருக்குன்னு சொல்லு. அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்றேன்' என எண்ணி "கிளம்பலாமா சார்" என்று சொல்ல ஆமோதித்தார் ராகவன். இல்லம் சேர்ந்தனர் அனைவரும். 

காலை 10 மணி. ஆண்கள் வெளியே சென்றுவிட, சத்யா மற்றும் ராமின் மனைவி ரூபா இருவரும் வீட்டில் கரண்ட் கட் ஆனதால் பக்கத்து வீட்டில் 'பின்னிப்பிணைந்த மலர்கள்' சீரியல் பார்க்க சென்று விட்டனர். வாட்ச்மேன் சபாபதி, நாயர் கடையின் காய்ந்து போன மெதுவடையை கவ்வ நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். வாசலுக்கு வந்து மாடியை மெல்லமாக எட்டிப்பார்த்தான் நந்தா. அவனுக்காகவே காத்திருந்த ப்ரீத்தி கீழே இறங்கி வந்தாள். சபாபதி கண்ணில் படாமல் ஏதோ சமிக்ஞை செய்தான் நந்தா. புரிந்து கொண்டு மேலே சென்றாள். நேரம் கடந்துகொண்டே இருந்தது. இரவு 8 மணி. ராம் மற்றும் ராகவன் இருவரும் இன்னும் வரவில்லை. பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சபாபதி வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதுதான் தருணம். கேட் அருகே வந்து நின்றான் நந்தா. மெல்ல அடி எடுத்து வைத்து வாசலை நெருங்கினாள் ப்ரீத்தி. "அய்யய்யோ என் மக வீட்டை விட்டு ஓடிப்போராளே. அவன் நாசமா போக" என்று ஒரு அலறல் சத்தம் ஏரியா முழுக்க கேட்டதும் ரத்தம் சுண்டி விட்டது இருவருக்கும். "சல்யூட், ராம்ராஜ் வேஷ்டிக்கு சல்யூட்" என்று அடுத்ததாக விளம்பரம் ஒலித்ததும்தான் புரிந்தது    முதலில் கேட்ட ஓலம் மெகா சீரியலின் உபயம் என்று. பயத்தில் படபடத்த காதல் இதயங்கள் இரண்டும் சில நொடிகளுக்கு பிறகு சகஜநிலைக்கு வந்தன. தெருவில் யாரும் இல்லை. மொத்த காலனிவாசிகளும் ராம்ராஜ் வேஷ்டிக்கு சல்யூட் அடித்துக்கொண்டு இருந்தது நல்லதாய் போயிற்று. வேக வேகமாக நடக்க தொடங்கினர் இருவரும். தெருமுனையில் இவர்களை பார்த்த ராகவன் கண்கள் சிவந்தது. அவர்களை துரத்த ஆரம்பித்தார். புயல் வேகத்தில் ஓடி மறைந்தனர் நந்தாவும், ப்ரீத்தியும். இதை எதிர்பாராத ராகவன் ராமுக்கு உடனே தகவலை தெரிவித்தார்.

போலீசுக்கு தகவல் பறந்தது. தொப்பையில் சறுக்கு மரம் ஆடிக்கொண்டு இருந்த மகனை இறக்கினார் இன்ஸ்பெக்டர் பிலிப். "கவலைப்படாதீங்க ராம். நான் பாத்துக்கறேன். உடனே அங்க வர்றேன்" என்று எழுந்தார். ஐ.பி.எல். போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா அணி தோற்கும் என்று சொன்ன நண்பனின் கபாலத்தை கல்லால் அடித்து ஓப்பன் செய்த கேசில் சிக்கிய பாலுவை ஒரு எத்து எத்திவிட்டு பைக்கில் ஏறி பறந்தார் பிலிப். சாந்தி காலனியை அடைந்தார்.
"ரெண்டு பேரும் ஓடுறவரை எப்படி சார் பாத்துகிட்டு இருந்தீங்க" என்று கேட்டார் ராமையும், ராகவனையும். "எந்த பக்கம் ஓடுனாங்க?", ஓடிய திசையை காட்டினார் ராகவன். 

"ராம் பின்னால உக்காருங்க. ராகவன் கொஞ்சம் நேரம் இருங்க. வந்துடறோம்". ஏரியாவை வலம் வந்தது பைக். "யாரும் இல்லாதவன்னு இரக்கப்பட்டு நான் இத்தனை வருசம் கூட வச்சிருந்துக்கு புத்திய காட்டிட்டான் பாருங்க சார்" என அழுதார் ராம். "காதல் எல்லாம் யார் சொல்லியும் வராது சார். நீங்க கூட வீட்ல சண்டை போட்டுக்கிட்டு காதல் கல்யாணம் பண்ணவங்கதான" என்றார் பிலிப். "அது இல்ல சார். ராகவன் ஜாதின்னு வந்துட்டா விட்டு குடுக்கவே மாட்டார். ரொம்ப மோசமான ஆளு. அதான்" என மீண்டும் அழுதார். "நான் இருக்கல்ல. டோன்ட் வொர்ரி" என ஆறுதல் சொன்னார் பிலிப்.  

"ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது.." என ராமின் மொபைல் ஒலித்தது. "என்னங்க ரெண்டு பேரும் சிக்கிட்டாங்க. நம்ம எதிர்வீட்டு ரஹீம் பாய்தான் புடிச்சி இழுத்துட்டு வந்தார். உடனே வாங்க" என ரூபா அலற, பைக்கை யூ டர்ன் போட்டு சீறிப்பாய்ந்தார் பிலிப். ராமின் வீட்டில் காலனி மக்கள் பலர் குழுமி இருக்க உள்ளே நுழைந்தனர் பிலிப்பும், ராமும். கட்டிப்போட்ட நிலையில் வெட வெடத்து போய் இருந்தான் நந்தா. "அவள எங்கடி காணும்?"  "ராகவன் நல்லா உதச்சி மேல பூட்டி வச்சிருக்கார்". மேலே சென்றனர் ராமும் பிலிப்பும். 

பிலிப் ராகவனை பார்த்து "நீங்க ரெண்டு தட்டு தட்டி இருக்கலாம். பாவம் பெண் புள்ள. பூட்டி வைக்காதீங்க?" என்றார். "சும்மா இருங்க சார். ப்ரீத்தி ஒண்ணும் தெருவுல சுத்துற நாய் இல்ல. லண்டன்ல இருந்து முப்பதாயிரம் குடுத்து ஸ்பெசலா வாங்கி இருக்கேன். இவ இப்படி செய்யலாமா?" என்று கோபமாக கத்தினார். அதற்கு ராம், "நீங்க சொல்றது சரிதான் சார். அது அந்த நந்தா பயலுக்கு தெரியுமா. அழகா இருக்காளேன்னு தப்பு பண்ணிட்டான். ரெண்டு பேருக்கும் கால் கட்டு போட்டா எல்லாம் சரி ஆயிடும்" என்றார். "காலைல சங்கிலி வாங்கி முதல் வேலை அவளுக்கு கால் கட்டு போடுறதுதான். நீங்களும் அதையே செய்ங்க" என்று அட்வைஸ் செய்தார் ராகவன். தானும் காலையில் சங்கிலி வாங்கிவிட்டுதான் வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தார் ராம்.


இரவு 9 மணியை நெருங்கியது. "நந்தா, பாலாவது குடிச்சிட்டு தூங்கு" என்று ராம் மற்றும் ரூபா பலமுறை கெஞ்சியும் கேட்கவில்லை அவன். முகத்தை கடுப்பாக சுவற்றின் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டான் நந்தா. "வந்துட்டான். வந்துட்டான் காளை. இனி ஆட்டாத இவன்கிட்ட வாலை" என்று சிம்புவின் பாட்டு நாயர் கடையில் அலறிய திசையை நோக்கி மிகவும் கோபமாக நான்கு முறை கத்திவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் நந்தா. ஒருவரின் ஆதரவும் இல்லாத இந்த இந்த அப்பாவி இளைஞனின் காதல் நிறைவேறுமா?  காத்திருப்போம். 

காதல் என்பது காட்டாறு. அதை அழிக்க நினைப்பவனுக்கு என்றும் கிடைக்காது ஒரு பிடி சோறு.  

...........................................................

இரு பாகங்களையும் பேராவலுடன் வாசித்த இனிய உள்ளங்களுக்கு காதலர் சார்பாக உள்ளம் நிறைந்த நன்றி. 


...............................................................
My other site: nanbendaa.blogspot.com
...............................................................

      

                                                                      

2 comments:

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்..http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_21.html

RVS said...

அடேங்கப்பா! என்ன ஒரு க்ளைமாக்ஸ். ப்ரீத்தி ஒன்னும் தெருநாய் இல்லை... ஒரே ஒரு லைன்ல வச்சுருக்கீங்க... கதை... சூப்பெர்ப். ;-))

Related Posts Plugin for WordPress, Blogger...