CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 24, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (25/04/2011)

தனிப்பிறவி:
.........................................................

மர்ம யோகி:

இந்த வார ஆனந்த விகடன் பேட்டியில் வழக்கம்போல் சீறி இருக்கிறார் இயக்குனர் அமீர். Tsotsi படத்தை அலேக் செய்து என்று யோகி படத்தில் நடித்தாரோ அன்றே எனக்கு அமீரின் மீதிருந்த மரியாதை போய்விட்டது. அதை உறுதி செய்தது இந்த பேட்டி. அமீருக்கு இத்தேர்தலில் சினிமா சிரிப்பு நடிகர்கள் செய்த கேலிக்கூத்துகள் எல்லாம் பிடிக்கவில்லையாம். ஆனால், அரசியல் பலம் உள்ளவர்கள்  தமிழ் சினிமாவில் கால் பதித்து இன்று அசுரர்களாக வீற்றிருப்பது பற்றி வாய் திறக்கவில்லை இவர். அரசாங்கம் மதுவை  ஊற்றிக்குடுத்தால் அதை குடிப்பதில் தவறில்லை என்று ஒரு புரட்சி வாதத்தை முன் வைக்கும் அதே வேளையில், 'மாணவ மறுமலர்ச்சி திட்டம்' எனும் இயக்கத்தை ஆரம்பித்து ஊழலை எதிர்க்க போகிறாராம். 2016 - அரசியலில் கால் வைக்க போகிறாராம். 

காரிலும், கண்ணிலும் இருக்கும் கருப்பு கண்ணாடியை இறக்கிவிட்டு நமது தமிழக தெருக்களையும் சற்று பாருங்கள் பருத்தி வீரரே. 15 வயது விடலைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் 2016 - இல் உங்கள் இயக்கத்திற்கு வரும் மாணவன் எந்த நிலையில் இருப்பான். தங்கள் பருத்தி வீரன் நாயகனை போல் அன்றாடம் குடித்து விட்டு ரோட்டில் புரள வேண்டும் என்பதால்தான் மது குடிப்பதை ஆதரிக்கிறீர்களா? ஏதேனும் ஒரு பக்கம் பேசுங்கள். ரௌத்ரம் பேசுகிறோம் பேர்வழி என்று நீங்களும் உங்கள் தம்பி சசியும் பத்திரிக்கைகளில் அர்த்தமற்ற எதிர்மறை விசயங்களை பேசுவதை தவிருங்கள். சினிமாவில் புகுந்த அரசியலை எதிர்க்க சேரன், நீங்கள் மற்றும் உங்கள் சக 'ஜிகிரி' தோஸ்த் இயக்குனர்கள் பம்முவதை ஒவ்வொரு பேட்டியிலும் பார்த்து வருகிறோம். அது உங்கள் விருப்பம். அதே சமயம் மக்களை குழப்பாமல் ஏதேனும் ஒரு பக்கம் நின்றால் நன்று. 

சமீபத்தில் யுவன் இசை நிகழ்ச்சியில் இளையராஜா தங்களை பார்த்து "உன் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன். நீ ரத்தம் மற்றும் கத்தியுடன் அலையும் நாயகர்களை கொண்டு இயக்குகிறாய்" என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொன்னதை மறக்க வேண்டாம். இனி தாங்கள் இயக்கவிருக்கும்  படங்களிலாவது இளைய சமூகத்தை சீரழிவிற்கு கொண்டு செல்லாமல் எடுக்கவும். பிறகு உங்கள் இயக்கத்திற்கு மாணவர்கள் தானாக வருவார்கள்.  

யோகி......மன்னிக்க. Tsotsi பட ட்ரைலர் கீழுள்ள லிங்க்கில்:

.................................................................

துள்ளாத மனமும் துள்ளும்:

வெயிலில் வறுபட்ட வெறுப்பில் சூரியனை முறைத்து என்ன பயன். இன்னும் கொஞ்சம் கறுப்பாவும், கடுப்பாவும் ஆகப்போறதுதான் மிச்சம். வாங்க கொஞ்ச நேரம் தண்ணில விளையாடலாம். கீழே உள்ள 'தண்ணிக்கு தண்ணி காட்டுங்க' இணைப்பை அழுத்துங்க. படத்துல வர்ற தண்ணி மேல உங்க மவுசை மூவ் பண்ணுங்க. ஆசை தீர ஆடி முடிச்சதும், வலது பக்கம் உள்ள arrow மார்க்கை அழுத்தி ஒவ்வொரு இடமா விளையாடுங்க. என்சாய்:


முடிச்சாச்சா? சரி உடனே  கட்டணத்தொகை 101 ஐ எனக்கு மறக்காம மணி ஆர்டர் பண்ணிடுங்க. 
.......................................................................

தாமரை நெஞ்சம்:


                                                                 

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டுக்கொள்ள ஒரு செய்தி. உலகின் சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து ஐ.நா. வெளியிட்டு உள்ள பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குஜராத். முதல் இடத்தை ஜெர்மனி வென்றுள்ளது. 10 வருடத்திற்கு முன்பு உலக வங்கிக்கு 50,000 கோடி கடன்பட்டு இருந்த குஜராத், இன்று உலக வங்கியில் 1 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. இதற்கு காரணமான முதல்வர் மோடி மற்றும் அனைவருக்கும் ஆயிரம் நன்றிகள். குஜராத்தில் மின் தடை மற்றும் மதுக்கடை இரண்டும் இல்லை(தமிழகம் கூட இந்தியாவில் உள்ளதாக கேள்விப்பட்டேன்). அம்மாநிலத்தில் பெண்கள் 100% கல்வியறிவு பெற்று உள்ளனர். இந்தியாவின் பங்குச்சந்தை 30% குஜராத்தை நம்பியே உள்ளது. 


                                                                        
       
என் தாய் தமிழகம் இதற்கு நேர் மாறான திசையில் சென்றுகொண்டிருப்பதை காணுகையில் உள்ளம் குமுறுகிறது. என்று விடியுமோ?
........................................................................

அவன்- இவன் - யுவன்:

அவன் இவன் படப்பால்களை சமீபத்தில் கேட்டேன். எல்லா பாடல்களையும் நா.முத்துகுமார் எழுதி உள்ளார். 

*  'ஒரு மலையோரம்' பாடல் மனதை தாலாட்டுகிறது. பிரியங்கா, ஸ்ரீனிஷா (சூப்பர் சிங்கர் குட்டி என்று நினைக்கிறேன்), நித்யஸ்ரீ மற்றும் விஜய் யேசுதாஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி. 

* முத்துக்குமாரின் இயல்பான வரிகளில் 'ராசாத்தி' பாடல் (குரல் ஹரிசரண்) டீக்கடை மற்றும் எப்.எம்மில் பெரிய ரவுண்ட் வரும் என்று தோன்றுகிறது. பாடல் முழுதும் யுவன் ராஜாங்கம். 

*  'முதல் முறை' பாடலில் முத்துக்குமார் விஸ்வரூபம் எடுத்துள்ளார். அவரின் பேனா சுழற்றிய அற்புத வரிகள்:

- 'கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்'
- 'இன்று வந்த பின்னாலும் நேற்று சென்று மிதக்கிறேன்'.

 குரல்: விஜய் பிரகாஷ். 
........................................................................

தங்கப்பதக்கம்:


                                                                     
சமீபத்தில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் நம் நாட்டை சேர்ந்த ரொஞ்ஜன் சோதி. இவர் ஏற்கனவே 2010 ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஆவார்.  ஒலிம்பிக்கிலும் இவரது சாதனை பயணம் தொடர வாழ்த்துவோம். 
.............................................................................

நீங்கள் கேட்டவை: (sms)

தயாரிப்பாளர்: "நம்ம எடுக்கப்போற ஹாலிவுட் படத்தோட பேரை கேட்டாலே ஸ்கூல், காலேஜ் மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் சும்மா அதிரணும். அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க சார்" 

இயக்குனர்: "Sunday - Working Day."

............................................................................

அழகிய தமிழ்மகன்:     

தான் சார்ந்த துறையில் உச்சத்தை எட்டினாலும் சபையில் எப்படி அழகிய தமிழில் பேச வேண்டும், உயர்ந்த பண்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு இதோ கீழே உள்ள இரு காணொளிகளே சாட்சி. அப்துல் ஹமீத் அவர்களுக்கு சிம்மக்குரலோன் சிவாஜி அளித்த பேட்டி. 
                                                           
http://youtu.be/c8xZ1n3eLxI

இன்று ஒரு ஹிட் குடுத்தாலே எகிறி குதிக்கும் தளபதிகளே... நடிகர் திலகத்தின் பண்பையும், திரை உலகம் சார்ந்த ஆழ்ந்த அறிவையும் எப்படி வளர்த்து கொள்ளவேண்டும் என்று இனியாவது கற்றுக்கொள்ளுங்கள்.
..................................................................................

My other site: nanbendaa.blogspot.com
.................................................................................
Thursday, April 21, 2011

கோ - விமர்சனம்நண்பர் ஒருவர் நேற்று மதியம் போனில் அழைத்து 'கோ' படத்தின் பிரிமியர் காட்சிக்கான டிக்கட் இருப்பதாக கூற, சென்னையில் உள்ள இயக்குனர் பிரியதர்சனின் 4 பிரேம்ஸ் ப்ரிவியு தியேட்டருக்கு விரைந்தேன். ஆர்.பி. சௌத்ரி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் படம் பார்க்க வந்திருந்தனர். நண்பன் பட ஷூட்டிங் இருப்பதால் ஜீவா வெளியூரில் இருப்பதாக தன் உறவினரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ரமேஷ். படம் தொடங்கும் முன் ரஜினியின் 'ரானா' படத்தின் ஒரு நிமிட ட்ரைலரை போட்டனர். கொடூரமான வில்லன் கெட்டப்பில் வந்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு போகிறார் ரஜினி. ஷூட்டிங் எடுத்த ஒரு சில காட்சிகளுடன் முடிகிறது ட்ரைலர். 


இதற்கு முன் அயன் மூலம் விஸ்வரூபம் எடுத்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இம்முறை அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். சவுத் வியு எனும் முன்னணி பத்திரிக்கையின் நிருபர்களாக இருப்பவர்கள்தான் ஜீவா மற்றும் கார்த்திகா. சவாலான இடங்களில் புகைப்படம் எடுக்கும் துணிச்சல் மிக்க ஹீரோவாக வலம் வருகிறார் நாயகன். வழக்கம்போல் அவர் மேல் காதல் வருகிறது நாயகிக்கு. முதல் 20 நிமிடம் மட்டும் நகைச்சுவையாக நகரும் படம் அடுத்து தேக்கடியில் நடிக்கும் ஒரு கொலையை நோக்கி மையம் கொள்கிறது. படத்தில் அஜ்மல் ரோல் பெரிதாக பேசப்படும். அதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் வில்லனாக பிரகாஷ் ராஜ். இவர் வந்ததும் படம் டாப் கியரில் பறக்கிறது. வழக்கமான பாத்திரத்தில் இருந்து மாறுபட்டு நடித்து உள்ளார் பிரகாஷ் ராஜ். மதுரை உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சமயத்தில் ஜீவாவுக்கும், பிரகாஷ் ராஜ் ஆட்களுக்கும் நடக்கும் கார், பைக் சேஸ் சீன்கள் ஆங்கில படத்துக்கு இணையான விறுவிறுப்பு. 


'என்னமோ ஏதோ பாடல்' ஆடியோவில் ஹிட் ஆனது போல், படக்காட்சிகளும் நன்றாக உள்ளதால் மேலும் பேசப்படும். 'வெண்பனியே' பாடலில் பா.விஜய் பேனா தன் திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளது. 'அமளி துமளி' பாடலை மிகவும் வித்யாசமான வெளிநாட்டு லொக்கேசன்களில் படம் ஆக்கி உள்ளனர். சைனாவின் இயற்கை அழகை இதுவரை எவரும் இப்படி அசத்தலாக எடுத்ததில்லை என்று சொல்லலாம். 'அக நக' பாடல் அக்மார்க் ஹாரிஸ் படைப்பு. அசத்தல் இசை. இந்தப்பாடலில் சூர்யா, கார்த்தி, பரத், ஜெயம் ரவி, ஹாரிஸ் மற்றும் கே.வி. ஆனந்த் என அனைவரும் தலைகாட்டி விட்டு போகிறார்கள். டாப் ஆங்கிளில் புதுமையான முறையில் படம் ஆக்கி உள்ளார் இயக்குனர். மீண்டும் ஒரு முறை பார்க்கத்தூண்டும் கேமரா வொர்க்.  


                                                                             

* ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்து கொண்டிருப்பதாக கூறும் வில்லன் பிரகாஷ்ராஜ் கார் செல்லும் ஒரு இடத்தில் காஞ்சிபுரம் பெயர்பலகை மின்னல் என வந்து செல்கிறது. என்ன ஆச்சி கே.வி. ஆனந்த் சார். 

* இடைவேளைக்கு முன் ஜீவா மற்றும் கார்த்திகா காதல் காட்சிகள் சற்று பொறுமையை சோதிக்கின்றன. அம்மணி நடிப்பு அசத்தலாக இருப்பதால் தமிழ் சினிமாவில் பெரிதாக ஒரு வலம் வருவார். பியா என்று ஒரு நடிகையை காரணம் இன்றி ஆங்கிலத்தில் பேசவைத்து பொறுமையை சோதிக்கிறார்கள். 

* ஜீவா வழக்கம்போல் தன்னால் முடிந்த உழைப்பை தந்திருக்கிறார். சூர்யா எப்படி சிங்கம் மூலம் கோடையில் வெற்றிக்கொடி நாட்டினாரோ அதை இம்முறை ஜீவா ரிப்பீட் செய்துள்ளார். சீன நெடுஞ்சுவரில் வில்லன் ஒருவனை துரத்தும் காட்சியில் நகைச்சுவை கலந்து இவர் செய்யும் முகபாவங்கள் அரங்கில் பெரும் கைதட்டலை பெற்றன. 

* பெரியதாக கதையில் ரிஸ்க் எடுக்காமல் அயன் ஸ்டைலில் கமர்சியல் விருந்து படைக்க கே.வி. ஆனந்த் எண்ணி இருந்தாலும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம். அது போல் அஜ்மல் தேக்கடியில் பேசும் வசனம் படத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பது சிறு உறுத்தல். 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் பிரிமியர் ஷோ பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், டிக்கட் ஏற்பாடு செய்த நண்பருக்கு பெரிய நன்றியை  சொல்லிவிட்டு விடைபெற்றேன். மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் படம்தான் கோ. நிஜமாகவே வரும் ஞாயிறு அன்று காலையில் படம் பார்க்க இருப்பதால் அன்று இரவு விமர்சனம் போடுகிறேன். சி.பி. செந்தில்குமார் போன்றவர்கள் வெள்ளி ஆனால் போதும் உடனே படம் பார்த்து விட்டு விமர்சனம் போட்டுவிடுவதால் இந்த முறை முதல் (டுபாக்கூர்) விமர்சனத்தை போட்டே தீருவது என்று முடிவு செய்ததன் விளைவே இப்பதிவு. பார்க்காத படத்தை பற்றி விமர்சனம் போட எவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டி இருக்கு. பொய் சொல்றதோட வலி இப்பதான் புரியுது. சினிமா பிரியர்களே, கோடை வெயிலில் கோபம் கொள்ள வேண்டாம். நரம்பு புடைக்க என்ன அடிக்க கிளம்ப வேண்டாம். நான் இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறேன். தமிழகம் வரும் வரை காத்திருக்கவும். 
..............................................................

my other site: nanbendaa.blogspot.com
.............................................................
                                                                      

Sunday, April 17, 2011

காதலெனும் காட்டாறு - 2


"நான் சொன்ன ஜோக் எப்படி" என்று ராகவன் சொன்னதை கேட்ட ராம் 'மொதல்ல ஜோக் எங்க இருக்குன்னு சொல்லு. அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்றேன்' என எண்ணி "கிளம்பலாமா சார்" என்று சொல்ல ஆமோதித்தார் ராகவன். இல்லம் சேர்ந்தனர் அனைவரும். 

காலை 10 மணி. ஆண்கள் வெளியே சென்றுவிட, சத்யா மற்றும் ராமின் மனைவி ரூபா இருவரும் வீட்டில் கரண்ட் கட் ஆனதால் பக்கத்து வீட்டில் 'பின்னிப்பிணைந்த மலர்கள்' சீரியல் பார்க்க சென்று விட்டனர். வாட்ச்மேன் சபாபதி, நாயர் கடையின் காய்ந்து போன மெதுவடையை கவ்வ நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். வாசலுக்கு வந்து மாடியை மெல்லமாக எட்டிப்பார்த்தான் நந்தா. அவனுக்காகவே காத்திருந்த ப்ரீத்தி கீழே இறங்கி வந்தாள். சபாபதி கண்ணில் படாமல் ஏதோ சமிக்ஞை செய்தான் நந்தா. புரிந்து கொண்டு மேலே சென்றாள். நேரம் கடந்துகொண்டே இருந்தது. இரவு 8 மணி. ராம் மற்றும் ராகவன் இருவரும் இன்னும் வரவில்லை. பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சபாபதி வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதுதான் தருணம். கேட் அருகே வந்து நின்றான் நந்தா. மெல்ல அடி எடுத்து வைத்து வாசலை நெருங்கினாள் ப்ரீத்தி. "அய்யய்யோ என் மக வீட்டை விட்டு ஓடிப்போராளே. அவன் நாசமா போக" என்று ஒரு அலறல் சத்தம் ஏரியா முழுக்க கேட்டதும் ரத்தம் சுண்டி விட்டது இருவருக்கும். "சல்யூட், ராம்ராஜ் வேஷ்டிக்கு சல்யூட்" என்று அடுத்ததாக விளம்பரம் ஒலித்ததும்தான் புரிந்தது    முதலில் கேட்ட ஓலம் மெகா சீரியலின் உபயம் என்று. பயத்தில் படபடத்த காதல் இதயங்கள் இரண்டும் சில நொடிகளுக்கு பிறகு சகஜநிலைக்கு வந்தன. தெருவில் யாரும் இல்லை. மொத்த காலனிவாசிகளும் ராம்ராஜ் வேஷ்டிக்கு சல்யூட் அடித்துக்கொண்டு இருந்தது நல்லதாய் போயிற்று. வேக வேகமாக நடக்க தொடங்கினர் இருவரும். தெருமுனையில் இவர்களை பார்த்த ராகவன் கண்கள் சிவந்தது. அவர்களை துரத்த ஆரம்பித்தார். புயல் வேகத்தில் ஓடி மறைந்தனர் நந்தாவும், ப்ரீத்தியும். இதை எதிர்பாராத ராகவன் ராமுக்கு உடனே தகவலை தெரிவித்தார்.

போலீசுக்கு தகவல் பறந்தது. தொப்பையில் சறுக்கு மரம் ஆடிக்கொண்டு இருந்த மகனை இறக்கினார் இன்ஸ்பெக்டர் பிலிப். "கவலைப்படாதீங்க ராம். நான் பாத்துக்கறேன். உடனே அங்க வர்றேன்" என்று எழுந்தார். ஐ.பி.எல். போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா அணி தோற்கும் என்று சொன்ன நண்பனின் கபாலத்தை கல்லால் அடித்து ஓப்பன் செய்த கேசில் சிக்கிய பாலுவை ஒரு எத்து எத்திவிட்டு பைக்கில் ஏறி பறந்தார் பிலிப். சாந்தி காலனியை அடைந்தார்.
"ரெண்டு பேரும் ஓடுறவரை எப்படி சார் பாத்துகிட்டு இருந்தீங்க" என்று கேட்டார் ராமையும், ராகவனையும். "எந்த பக்கம் ஓடுனாங்க?", ஓடிய திசையை காட்டினார் ராகவன். 

"ராம் பின்னால உக்காருங்க. ராகவன் கொஞ்சம் நேரம் இருங்க. வந்துடறோம்". ஏரியாவை வலம் வந்தது பைக். "யாரும் இல்லாதவன்னு இரக்கப்பட்டு நான் இத்தனை வருசம் கூட வச்சிருந்துக்கு புத்திய காட்டிட்டான் பாருங்க சார்" என அழுதார் ராம். "காதல் எல்லாம் யார் சொல்லியும் வராது சார். நீங்க கூட வீட்ல சண்டை போட்டுக்கிட்டு காதல் கல்யாணம் பண்ணவங்கதான" என்றார் பிலிப். "அது இல்ல சார். ராகவன் ஜாதின்னு வந்துட்டா விட்டு குடுக்கவே மாட்டார். ரொம்ப மோசமான ஆளு. அதான்" என மீண்டும் அழுதார். "நான் இருக்கல்ல. டோன்ட் வொர்ரி" என ஆறுதல் சொன்னார் பிலிப்.  

"ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது.." என ராமின் மொபைல் ஒலித்தது. "என்னங்க ரெண்டு பேரும் சிக்கிட்டாங்க. நம்ம எதிர்வீட்டு ரஹீம் பாய்தான் புடிச்சி இழுத்துட்டு வந்தார். உடனே வாங்க" என ரூபா அலற, பைக்கை யூ டர்ன் போட்டு சீறிப்பாய்ந்தார் பிலிப். ராமின் வீட்டில் காலனி மக்கள் பலர் குழுமி இருக்க உள்ளே நுழைந்தனர் பிலிப்பும், ராமும். கட்டிப்போட்ட நிலையில் வெட வெடத்து போய் இருந்தான் நந்தா. "அவள எங்கடி காணும்?"  "ராகவன் நல்லா உதச்சி மேல பூட்டி வச்சிருக்கார்". மேலே சென்றனர் ராமும் பிலிப்பும். 

பிலிப் ராகவனை பார்த்து "நீங்க ரெண்டு தட்டு தட்டி இருக்கலாம். பாவம் பெண் புள்ள. பூட்டி வைக்காதீங்க?" என்றார். "சும்மா இருங்க சார். ப்ரீத்தி ஒண்ணும் தெருவுல சுத்துற நாய் இல்ல. லண்டன்ல இருந்து முப்பதாயிரம் குடுத்து ஸ்பெசலா வாங்கி இருக்கேன். இவ இப்படி செய்யலாமா?" என்று கோபமாக கத்தினார். அதற்கு ராம், "நீங்க சொல்றது சரிதான் சார். அது அந்த நந்தா பயலுக்கு தெரியுமா. அழகா இருக்காளேன்னு தப்பு பண்ணிட்டான். ரெண்டு பேருக்கும் கால் கட்டு போட்டா எல்லாம் சரி ஆயிடும்" என்றார். "காலைல சங்கிலி வாங்கி முதல் வேலை அவளுக்கு கால் கட்டு போடுறதுதான். நீங்களும் அதையே செய்ங்க" என்று அட்வைஸ் செய்தார் ராகவன். தானும் காலையில் சங்கிலி வாங்கிவிட்டுதான் வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தார் ராம்.


இரவு 9 மணியை நெருங்கியது. "நந்தா, பாலாவது குடிச்சிட்டு தூங்கு" என்று ராம் மற்றும் ரூபா பலமுறை கெஞ்சியும் கேட்கவில்லை அவன். முகத்தை கடுப்பாக சுவற்றின் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டான் நந்தா. "வந்துட்டான். வந்துட்டான் காளை. இனி ஆட்டாத இவன்கிட்ட வாலை" என்று சிம்புவின் பாட்டு நாயர் கடையில் அலறிய திசையை நோக்கி மிகவும் கோபமாக நான்கு முறை கத்திவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் நந்தா. ஒருவரின் ஆதரவும் இல்லாத இந்த இந்த அப்பாவி இளைஞனின் காதல் நிறைவேறுமா?  காத்திருப்போம். 

காதல் என்பது காட்டாறு. அதை அழிக்க நினைப்பவனுக்கு என்றும் கிடைக்காது ஒரு பிடி சோறு.  

...........................................................

இரு பாகங்களையும் பேராவலுடன் வாசித்த இனிய உள்ளங்களுக்கு காதலர் சார்பாக உள்ளம் நிறைந்த நன்றி. 


...............................................................
My other site: nanbendaa.blogspot.com
...............................................................

      

                                                                      

காதலெனும் காட்டாறு

                                                              

"டேய் நந்தா..ஷூவ எடுத்துட்டு வாடா" என அதட்டினார் ராம். பெற்றோரை இழந்த நாள் முதல் ராமின் இல்லத்தில் தஞ்சம் புகுந்து இன்றோர் இளைஞனாக வளர்ந்து நிற்பவன்தான் நந்தா. சென்னை அண்ணா நகரின் சாந்தி காலனியில் உள்ள இந்த வீடுதான் அவனது உலகம். மாதம் ஒரு நாள் கடற்கரை அல்லது பூங்கா..அதுவும் ராமின் மனைவி விரும்பினால்தான் இவனும் செல்ல முடியும். பேசும் திறனை இழந்த அப்பாவி. ராமுக்கு ஷூவை எடுத்து தந்து விட்டு வாசலில் வந்து நின்றான் நந்தா. மேலே உள்ள வீட்டில் குடியேற சாமான்களை இறக்கிக்கொண்டு இருந்தது ஒரு குடும்பம். "ப்ரீத்தி..மாடில பாத்து ஏறு" என்று ராகவன் சொன்னதும் உடனே மாடியை நோக்கினான் நந்தா. முகத்தை பார்க்கும் முன், தொகுதி எம்.எல்.ஏ போல வேகமாக படி ஏறி மறைந்தாள் ப்ரீத்தி.  

படிக்கட்டுகளுக்கு கூட தன் காலடி அழுத்தத்தை உணர விடாமல் இலவம் பஞ்சு பாதங்களை கொண்டிருந்தாள் ப்ரீத்தி. இளம் பெண்களின் தரிசனமே கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் போலிச்சாமியார் போல் வெறுப்பில் இருந்த நந்தாவின் மனதில் இன்றுதான் காவிரி கரைபுரண்டு ஓடியது. கிரிமினல் வக்கீல் ராகவன், மனைவி சத்யா இருவரும் இவனை மேலும் கீழும் பார்த்தவாறு மேலே ஏறினர். ராமின் குடும்பத்திற்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள் இவர்கள். "ப்ரீத்தி முகத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே" என்று கடுப்பில் கால் அருகில் கிடந்த டென்னிஸ் பந்தை எட்டி உதைத்தான். மாலை கடந்து இரவும் வந்தது. அவள் ஒரு முறை கூட வெளியே வரவில்லை. 

ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் "என்ன கலர், நாளைக்கி எப்போ, நான் எப்படி?" என்று மணிரத்னம் டயலாக்கை மனதினுள் ஓட விட்டான். அந்நேரம் திடீரென ஒரு அசரீரி கேட்டது. "விருதகிரி பார்ட் - 2 படத்தை இந்த வீட்டு தம்பி பாக்கப்போவுது. அதனால அந்த புள்ள உசுருக்கு ஆபத்து வருது, ஆபத்து வருது...டுர்ர்.. டுர்ர்..". இதயத்துடிப்பு நின்று விடும் போல இருந்தது. அதிர்ந்து வாசலுக்கு ஓடினான். "ச்சீ..வெறும் பிரமைதானா. என்னைக்கோ ஒரு நாள் சந்தோசமா இருக்கும்போது அபாய ஒலி கேக்குதே" என்று நடுங்கியவாறு உறங்க ஆரம்பித்தான்.

"கொக்கர கொக்கரக்கோ...சேவல் கொக்கரக்கோ. சேவல் கூவகுல்லே ரெண்டு கோழி கொக்கரக்கோ" என்று அதிகாலையில் நாயர் கடை ரேடியோ அலறியதும் எரிச்சலான ஏரியா சேவல் ஒன்று "கொக்கோ ரக்கோ" என்று ஒரு தரம் மட்டும் கூவி விட்டு மீண்டும் ரெஸ்ட் எடுத்தது. ராம் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. "வாங்க ராகவன், என்ன ஜாக்கிங் கெளம்பியாச்சா?", "ஆமா சார். நீங்க எப்பிடி?"  "நானும் வர்றேன். ஒரு நிமிஷம் உக்காருங்க". நந்தாவை மீண்டும் ஒரு முறை ஏறிட்டு பார்த்தார் ராகவன், "என்ன ஜாதியோ" என்று மனதிற்குள் எண்ணியவாறு வீட்டை நோட்டமிட்டார். "டேய், நந்தா நீயும் வா" என்று ராம் அழைத்தார். உடனே துள்ளி ஓடினான் நந்தா. "என்னங்க, கொஞ்சம் நில்லுங்க. ப்ரீத்தி உங்க கூட வருவேன்னு அடம் பிடிக்கிறா" என கத்தினாள் சத்யா. மிகவும் செல்லமாக வளர்ந்தவள். வேறு வழியில்லை. இல்லாவிடில் பிரச்னை செய்வாள். அவளையும் சேர்த்து நால்வராக நடக்க தொடங்கினர்.   

ப்ரீத்தியை கண்ட உற்சாகத்தில் இருப்பு கொள்ளாமல் மிதந்தான் நந்தா. சிவந்த உதட்டில் இவ்வளவு மின்சாரத்தை இவள் பதுக்கி வைத்திருந்தால் ஏன் நாட்டில் மின் தட்டுப்பாடு வராது? சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரே பிரதிநிதியாக வெண் புஷ்பமாக நடந்து வந்தாள் ப்ரீத்தி. இரண்டு ஜோடி முடிகள் அவள் முகத்தை முழுதாய் பார்க்க அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை ஒதுக்கி விட்டாலும் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அவள் நெற்றியில் ஒற்றைக்காலில் நடனமாடிக்கொண்டே இருந்தன. ப்ரீத்தி நம்மை ஏறிட்டாவது பார்ப்பாளா என்று எண்ணிய வேளையில் ஒரு பைக் அசுர வேகத்தில் அவளை நோக்கி மிக அருகில் வந்ததை பார்த்த நந்தா, ப்ரீத்தியை பார்த்து கத்தினான். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. பைக்கை நிறுத்தி அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார் ராகவன். ஒன்றும் பேசமால் சென்று விட்டான் அந்த இளைஞன். 

நன்றியுடன் நந்தாவை பார்த்து சிரித்தார் ராகவன். மகிழ்ச்சி தாளவில்லை அவனுக்கு. அருகில் உள்ள பூங்காவில் நுழைந்தனர் நால்வரும்.  பள்ளிக்காலத்தில் தான் செய்த படு மொக்கை சாகசங்களை ராமிடம் சொல்லி சுனாமியை வரவழைத்து கொண்டிருந்தார் ராகவன். சற்று தள்ளி ஓரிடத்தில்  தனியே நின்று கொண்டிருந்தான் நந்தா. அதைக்கண்ட ப்ரீத்தி அவனருகில் சென்றாள். சில நிமிட மௌனம். லேசாக தலையை உயர்த்தினான் அவன். ப்ரீத்தியின் கண்களை உற்று நோக்கிக்கொண்டே இருந்தான் நந்தா. அவனுடைய கன்னத்தை வருடினாள் ப்ரீத்தி. காதலுக்கு சம்மதம் தெரிவிப்பது போல் அவனை பார்த்தன கண்கள். என்னடா இது லாஜிக் இல்லா மாஜிக் என்று குதூகலித்தான் நந்தா. என்னை எப்படி காதலிக்க ஒப்புக்கொண்டாள். 'வாழ்க பைக் ஓட்டி' என்று எண்ணியவாறு அவளை மீண்டும் பார்த்தான்.

பிறகென்ன. பிரைவேட் ஜெட் பிடித்து வேக வேகமாக வந்து இறங்கியது காதல். மேல்சாதி பெண் என்பதால் இவளை நந்தாவுடன் சேர ராகவன் விடப்போவதில்லை. காதலிப்பது என்று முடிவான பிறகு இன்றென்ன, நாளை என்ன. இன்றிரவே வீட்டை விட்டு ஓடி விட முடிவு செய்தனர் இருவரும். 


தொடரும்...

...............................................................
My other site: nanbendaa.blogspot.com
...............................................................

சமீபத்தில் எழுதியது:.............................................................

Wednesday, April 13, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(13/04/11)
ரத்தக்கண்ணீர்:
ரட்சகன்:...........................................
      
ஆண் பாவம்:           

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சவ ஊர்வலத்தை கண்ட பிலிப் தன் காரை விட்டு இறங்கினான். இரண்டு சவப்பெட்டிகள் செல்கின்றனவே. பாவம் உறவினரை பறிகொடுத்த நபருக்கு  ஆறுதல் சொல்வோம் என்று கூட்டத்தை கடந்து சாமின் அருகே சென்று அவன் தோள் மீது கை வைத்து "சாம், இரண்டு உயிரை இழந்த சோகம் புரிகிறது. மனதை தேற்றிக்கொள். அவர்கள் உனக்கு என்ன உறவு?" என கேட்கிறான். அதற்கு சாம் "ஒன்று என் மனைவி. மற்றவர் எனது மாமியார்" என்று சொல்கிறான். உரையாடல் தொடர்கிறது..

"உன் மனைவி எப்படி இறந்தாள்"              

"என்னை கொஞ்ச வந்த செல்ல நாயை திட்டினாள். அது கோபத்தில் கடித்து குதறியதால் இறந்து போனாள்"

"அய்யகோ. என்ன கொடுமை. உங்கள் மாமியார் எப்படி இறந்தார்"

"எனக்கு ஏன் சோறு போடவில்லை என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் டி.வி. பார்த்தாள். கோபத்தில் என் நாய் அவளையும் கொன்றுவிட்டது"

"சாம். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா"

"என்ன"

"எத்தனை லட்சம் ஆனாலும் பரவாயில்லை. உன் நாயை எனக்கு விற்று விட முடியுமா? "

"அதை ஏலத்தில் எடுக்கத்தான் இத்தனை ஆயிரம் பேர் வரிசையில் வந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து நீயும் வரிசையில் வா".
................................................................................

வெற்றிக்கொடி கட்டு: 

(மெயிலில் வந்த படம்) 


                                                            
.......................................................
                       
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். 

(இதுல எந்த அரசியலும் இல்லீங்கோ)"அக்கா, தமிழ் ரொம்ப சீரியஸா இருக்கானே. பொழச்சிக்குவானா?"

"இன்னைக்கு குளுக்கோஸ் ஏத்த போறாங்க. அடுத்த மாசம்தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்றாங்க"

"நல்ல டாக்டர்தானா? "

"இந்த ஊர்ல இருக்குற ஒரே டாக்டர். வேற வழி இல்ல. ஓ.சி.ல மாத்திரை குடுத்துட்டு ரூம் வாடகை மட்டும் 1000 ரூபா டெய்லி புடுங்கிக்கறாரு. இந்த நர்சக்காவை நினைச்சாலும் பயமாத்தான் இருக்கு. ரொம்ப கோவமா பேசுது. இங்க ஒரே நர்சுதான். என் மவன் தமிழை பாத்துக்க அதை விட்டா ஆளு இல்லை."

"வாசல்ல உன் பேராண்டி பம்பரம் உட்டு வெளையாடிட்டு இருக்கான். ஏண்டா உங்க அப்பனை பாக்க மாட்டேங்குறன்னு கேட்டேன். நர்சக்கா பிஸ்கட் தரேன்னு சொல்லி சொல்லி ஏமாத்திடுச்சாம். அதான் உள்ள கால் வைக்க மாட்டேன்னு அழுவறான். வர்ற நோயாளிங்க காதுல 'இந்த நர்சக்கா சரியில்ல. நீங்க இங்க இருந்தா பொழைக்குறது சந்தேகம். எதுவா இருந்தாலும் டாக்டர் கிட்டயே சொல்லுங்கன்னு' அப்டின்னு சொல்லிட்டு திரியறான்"

"அடப்பாவி. ஆமா நீ எங்க இந்த பக்கம்"

"நர்ஸோட தம்பி தவசி எனக்கு உறவு முறை. அடிக்கடி வாய்ல கோளாறு வருதுன்னு இங்க சேத்துருக்கேன்"

"அவனா... போன வாரம் கூட கூகிள் பஸ்சுல டிக்கட் எப்ப குடுப்பீங்கன்னு ஓனர் கிட்ட நாக்கை கடிச்சி தகராறு பண்ணான். அப்பவே நெனச்சேன்"

"அவன பாத்தா நர்சே நடுங்குது. பேருக்குதான் அக்கா தம்பி. ஆனா வீட்ல கூட பேசிக்க மாட்டாங்க. எதுனா பேசணும்னா ரோட்டுல போறவங்கள உள்ள கூப்புட்டு 'இதை அக்கா கிட்ட சொல்லிடுங்க', இதை தம்பி கிட்ட சொல்லிடுங்க' அப்டின்னு தொந்தரவு செய்வாங்க. தம்பி கிட்ட அக்கா மாட்டிக்கிட்டாளா இல்ல அவ கிட்ட இவன் மாட்டிக்கிட்டானா அப்டிங்கறது இன்னைக்கி முடிவு ஆயிடும். பாப்போம். நம்ம தமிழ் ஒடம்பு சரியாகி வீட்டுக்கு வந்தா சரி"

"அதுதான் முக்கியம். ஆபரேசன் சக்சஸ். பேசன்ட் அவுட்டுன்னு அடிக்கடி இந்த ஆஸ்பத்திரில சத்தம் கேக்குது. அதை நினைச்சாத்தான் பயமா இருக்கு"
...........................................................................

காசேதான் கடவுளடா: 


(இன்னைக்குன்னு பாத்து இந்த பாட்டை அடிக்கடி கேக்கனும்னு தோணுது)


தேச ஞானம் கல்வி எல்லாம் காசு முன் செல்லாதடி. குதம்பாய் காசு முன் செல்லாதடி.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே. குதம்பாய் காசுக்கு பின்னாலே. காட்சி ஆன பணம் கைவிட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடி.
குதம்பாய் சாட்சி கோர்ட் ஏறாதடி. பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி. குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது. குதம்பாய் நாடு மதிக்காது. கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே. குதம்பாய் வெள்ளி பணமடியே.

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே. காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே. காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே. 

முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே.

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே....பிணத்தை கட்டி அழும்போதும்
தாண்டவக்கோனே..பணப்பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே.
........................................................

பொற்காலம்:  

ராஜ்ய சபா, மந்திரி சபை கூட்டம், ராஜினாமா நாடகம், மொழிப்பிரச்சனை என இக்காலத்திற்கும் பொருந்தும் அரசியலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்து தொங்கவிட்ட சோ வின் முகம்மது பின் துக்ளக் படத்தில் இருந்து சில காட்சிகள்:
.................................................

சமீபத்தில் எழுதியது:  

படிக்க கீழுள்ள லிங்கை அழுத்தவும்:


.................................................

My other site: nanbendaa.blogspot.com
..................................................

          
                                          

Monday, April 11, 2011

பொன்னர் - சங்கர்
                                                                  

கொங்கு நாட்டில் தங்கள் மண்ணை காக்க போராடிய இரு சகோதரர்கள்தான் பொன்னர் - சங்கர். இன்றும் கொங்கு மக்கள் இரட்டை ஆண் குழந்தைகள்  பிறப்பின் இவர்கள் இருவரின் பெயர்களை சூடும் அளவுக்கு ஓங்கி நிற்கிறது இவர்களின் புகழ். இரு சாதியை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பகை போராக மாறுகிறது. அதில் அண்ணன்மார் ஜெயித்த கதையை சொல்கிறது இப்படம். மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் இடத்தில் இன்றும் இவர்களுக்கு பொங்கல் வைத்து மக்கள் பூஜை செய்து வருகின்றனர். இந்த வரலாற்றின் திரை வடிவம்தான் பொன்னர் - சங்கர். இவ்விரு வீரர்களின் வரலாறு சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா. இது குறித்து சான்றோர் பெருமக்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் சில நாட்களில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அதுவரை காத்திருப்போம். இப்படத்தில் நடித்தவர்கள், வசனங்கள் மற்றும் இன்ன பிற விசயங்களை பற்றி மட்டும் இவ்விமர்சனத்தில் காண்போம். 


சிவனே என்று வீட்டில் இருந்த என்னை இப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று அழைத்தவர் பிலாசபி பிரபாகரன். எனக்கு நேரமில்லை என்று பல முறை சொல்லியும் "உங்க கால் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறேன். திவ்யா பரமேஸ்வரன் எனும் பேரழகி இப்படத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக மட்டுமாவது நான் பார்த்தே ஆக வேண்டும்" என்று கதறி அழுததால் வேறு வழி இன்றி சம்மதித்தேன். பதிவுலக நண்பர் கஸாலி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் இணைய, அரங்கில் போய் அமர்ந்தோம். ஆரம்பத்தில் கலைஞர் படம் குறித்து பேச தொடங்கியதும் ஒரு விடலை "தலைவா.." என்று வீறிட்டான். நல்லா வருவீங்க தம்பி. அவனை விட விஜயகுமார் எட்டுக்கட்டையில் வசனம் பேசும் இடங்களில் விசில் பறந்தது. நெப்போலியன், குஷ்பு, போஸ் வெங்கட் என்று சூர்ய வம்ச ஆட்கள் அனைவரும் ஆஜர். 

பெயர் போடுகையில் என்னை பிரமிக்க வைத்த விசயங்களில் முக்கியமானது 'விஷுவல் எபக்ட்ஸ் டைரக்டர் - பிரசாந்த்' என்று போட்டதுதான். அடுத்து 'காஸ்ட்யூம்ஸ்' - ப்ரீத்தி தியாகராஜன். அது என்ன ஒரு படத்தோட காஸ்ட்யூம் டிசைனர்ஸ் எல்லாரும் ஹீரோ அல்லது டைரக்டருங்களோட மனைவி இல்லைன்னா தங்கச்சியாவே இருக்காங்க. 'பேமிலி கோம்போ' சம்பளம் தர்றதுதான் இப்ப பேஷன் போல. கலைஞர் வசனத்துல பக்கம் பக்கமா வசனம் பேசாம உதட்டை மூடியே வச்சிருக்காரு பிரசாந்த். காதலி என்றால் மட்டுமே உதடுகள் (டூயட் பாட) பிரியும். வசனம் என்றால் உதடுகள் பிரியாது என்று முடிவோடதான் இருந்துக்காங்க ரெண்டு பிரசாந்தும். பேப்பர்ல  "பிரசாந்த் நடிக்கும்" அப்படின்னு போட்டதை நம்பி போனேன். கடைசி வரைக்கும்..எனக்கு மாமா பிஸ்கோத்து கதிதான்.  கோல்கேட் பேஸ்ட்டை 50% தள்ளுபடியில் தந்த மாதிரி படம் முழுக்க சிரிச்சிட்டே இருக்காங்க பூஜாவும், திவ்யாவும். பாட்டு எல்லாமே ஓரளவு சுமாரா இருக்கு. இசை இளையராஜா? நம்ப முடியவில்லை. கடைசி பாட்டுல வர்ற வரிகள் "இன்னும் முடியல..இன்னும் முடியல". ரெண்டு நாயகிகள் அவ்ளோ சொல்லியும் யாரும் கேக்கல.  நான் மட்டும் கடைசி வரை நின்னு "எ பிலிம் பை தியாகராஜன்" அப்டின்னு போடுறதை பாத்துட்டுதான் போனேன். 


பிடிக்காதது:

* ராஜ்கிரண் எல்லா இடத்திலும் "பொன்னர் - ங்கர்" அப்டின்னு தப்பா வசனம் பேசுறாரு. "பொன்னர் - ங்கர்"ன்னு சொல்ல சொல்லி யாரும் ட்ரைனிங் தரலை.

* ஒரு பாட்டுல 'தாமிரபரணி' பானு ஆடுன (உ)டான்ஸ் இருக்கே. அந்த காலத்துல சரோஜாதேவி பரதநாட்டியம் அப்டிங்கற பேருல குடுத்த இம்சைக்கு ஈக்வலா இருந்துச்சி பானுவோட ஆட்டம். 

* சினேகா, ரியாஸ்கான், நெப்போலியன், சீதா, டெல்லி கணேஷ் எல்லாம் இருந்தாங்க. ஆனா இல்ல. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்துல வர்ற தாத்தா மாதிரி நாசர் வேற வந்துட்டு போறாரு. நாசர் கமல் கூட நடிச்ச மாதிரி மறுபடியும் எப்ப நடிப்பாரோ.  சீக்கிரம் சண்டைய மறந்துட்டு சேருங்க ரெண்டு பேரும்.  

* போர் நடக்குற சீன் எல்லாத்துக்கும்  செம செலவு செஞ்சி இருக்கோம்னு சொன்னாங்க. ஆனா அதோட பிரம்மாண்டம் காட்சில பெருசா தெரியல. லாங் மற்றும் மிடில் ஷாட் வச்சி போர்ப்படையை பெருசா காட்டாம பிரசாந்துக்கு க்ளோஸ் அப் வச்சியே நெறைய சீன் எடுத்து இருக்காங்க. 

* அண்ணன்மார் கதைய நெகிழ்ச்சியோட இன்னும் அழகா படம் ஆக்கி இருந்து இருக்கலாம். தியாகராஜன் மிஸ் பண்ணிட்டார். தியேட்டரை விட்டு வந்ததும் படம் மனசு நிக்கல. 


பிடிச்சது:

* நீளமான, அலுப்பூட்டும் வசனங்களை குறைச்சி இருக்கார் கருணாநிதி. 

* வரலாற்று படம் என்றாலே செம்மண் அல்லது பிரவுன் கலர் டோனை யூஸ் பண்ணி வர்ற நேரத்துல, கண்ணை உறுத்தாம இயல்பா சீன்களை பதிவு செஞ்ச ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ். 

* உளியின் ஓசை படத்துல வர்ற மாதிரி 'கிச்சு கிச்சு' செட் போடாமல், பாஸ் மார்க் வாங்கிட்டாரு ஆர்ட் டைரக்டர். 

என்னோட கருது என்னன்னா:

ரெண்டு வேஷத்துல இளைய தளபதி நடிச்சி இருந்தாருன்னா மாஸுக்கு மாஸு, காசுக்கு காசும் பாத்து இருக்கலாம் பட மொதலாளி. பாவம். அவருக்கு கொடுத்து வக்கல. 

ஆயிரம்தான் சொல்லுங்க. ராஜா வேஷம்னா இனிமே நம்ம ஆளுதான் நடிக்கணும். வேற யாரு. அது என்னைக்குமே நம்ம அண்ணன் பவர் ஸ்டாரு. 

                                                       
                                                                    
                                                              
..........................................................

சமீபத்தில் எழுதியது:...........................................................
my other site: nanbendaa.blogspot.com
............................................................


                     

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேஊழல் அரசியலுக்கு எதிரான போராட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் குரலுக்கு செவி சாய்த்துள்ளது இந்திய அரசாங்கம். தேசம் முழுக்க இளைஞர்களின் பேராதரவுடன் ஊழலை களைய அன்னா நடத்திய   97 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. லோக்பால் மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதாக கூறி உள்ளார் பிரதமர். அன்னா அவர்களின் பின்னால் இதுவரை தேசம் காணாத அளவிற்கு இளைஞர்களின் எழுச்சியை கண்டு மிரண்டு போய் உள்ளனர் ஊழல் பெருச்சாளிகள். சிறுவர் சிறுமியர், இல்லத்தரசிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஓங்கி குடுத்த குரல் அரசாங்கத்தை நன்றாக அசைத்து பார்த்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மொத்தம் மூன்று முறை இவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இறுதியாக லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய இசைந்துள்ளது அரசு. 


                                  அன்னா உண்ணாவிரதத்தை முடித்த காட்சி            


உண்ணாவிரதம் முடிந்ததும் அன்னா அளித்த பேட்டியில் "இது நம் தேசத்தின் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. அதே சமயத்தில் நமது பொறுப்பு மேலும் கூடி இருக்கிறது. நம் நிஜமான போராட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. கடக்க வேண்டிய பாதை இன்னும் அதிகம். லோக்பால் மசோதாவை அரசு தாக்கல் செய்ய தாமதம் செய்தால் நாம் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தியாவின் தேர்தல் முறையில் பெருமளவு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது என் எண்ணம்" என்று கூறி உள்ளார். 


ஊழலை களைவதற்கான குழுவை நியமிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. அதன்படி இக்குழுவில் சமுதாயத்தில் நேர்மையான ஐந்து பேர், ஐந்து  அமைச்சர்கள் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோர் இருப்பர்.  


லோக்பால் ஒரு பார்வை:

* லோக்பால் குழு என்பது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போல சுதந்திரமாக செயல்படும். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தவறான பரிந்துரைகளை ஏற்காது. 

* ஊழல் செய்ததற்காக அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவர் கொள்ளை அடித்த பணம் கைப்பற்றப்படும். 

* ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பாதுகாக்கும்.

* லோக்பால் குழுவில் இருப்பவர்களின் நடவடிக்கை தவறாக இருப்பின் அவர் மீதான புகாரை தீர விசாரித்து இரண்டு மாத காலத்திற்குள் அவரை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

* அரசே ஊழல் பெருச்சாளிகளை லோக்பால் குழுவில் நியமித்தால் என்ன செய்வது? அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், குழுவில் இருக்கும் நபர்கள் அனைவரையும் நீதிபதிகள், மக்கள் மட்டுமே தேர்ந்து எடுப்பர்.

* மக்களுக்கு சரியாக சேவை செய்யாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். அரசு ஊழியர் செய்த தவறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். 


இப்படி பல நல்ல விசயங்களை உள்ளடக்கி உள்ளது இந்த லோக்பால்.


இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் வேறு வழிகளில் எப்படி ஊழல் செய்யலாம் என்று பல பெருச்சாளிகள் இப்போதே திட்டம் தீட்ட துவங்கி இருக்கும். அதை தடுத்து நிறுத்துவதே இந்த போராட்டத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும். 


                            அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக இளைஞர் படை       


இந்திய இளைஞர்கள் என்றால் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் பார்த்து விட்டு வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஊழலை பற்றி பெரிதாக கவலைப்படாதவர்கள் என்று இது நாள் வரை கொள்ளை அடித்து திரிந்த பொறம்போக்குகள் அனைவரும் கிலி அடித்து போய் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இதே போன்ற சவுக்கை இளைஞர்கள் சுழற்ற ஆரம்பித்தால் நம்மை பிடித்த பேய்கள் அனைத்தும் தலை தெறித்து ஓடிவிடும். அன்னா அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த இந்திய இளைஞர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

"நீ ஒருத்தன் போராடுனா எல்லாம் சரி ஆய்டுமா. எதுவும் நடக்காது. உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இல்லையா" என்று இந்தியாவின் ஆஸ்தான 'பஞ்ச்' டயலாக்கை பேசிவிட்டு மருந்தளவிற்கு கூட நல்ல எண்ணங்களை மனதில் ஏற்றாமல் திரியும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு 73 வயது மாமனிதர் அன்னா ஹசாரே புகட்டி உள்ள பாடம் தான் இந்த போராட்டத்தின் வெற்றி. 


இந்தியா தனது இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கான முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது.  முதலில் லோக்பால் அவைகளில் தாக்கல் செய்யப்பட வேண்டும். பிறகு அது வெற்றிகரமாக செயல்பட வேண்டும். கொள்ளைக்கார கூட்டம் சிறையில் அடைபட வேண்டும். அதைக்கண்டு அடுத்து வரும் அரசியல்வாதிகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

ஆம்...அன்னா சொன்னதை போல கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இது வெறும் ஆரம்பம்தான்!!

..........................................................


                                
                                                                     

Tuesday, April 5, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் - (05/04/11)

பாட்டி சொல்லை தட்டாதே: 

பல வருடங்களுக்கு முன் (1981) வெளியான 'இன்று போய் நாளை வா' இன்றும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நம்ம ஆளு கே.பாக்யராஜ். பாய்ஸ், சென்னை - 28 போன்ற யூத் வரிசை படங்களுக்கு எல்லாம் முன்னோடியான இப்படத்தின் கலக்கல் காட்சியை காண கீழ் உள்ள லிங்க்கை அழுத்தவும்:  

http://youtu.be/iH7_PIAkhCM

.........................................................


இரு வல்லவர்கள்:                            சனிக்கிழமை வென்ற மியாமி மாஸ்டர்ஸ் கோப்பையுடன் 


இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற அதே நாளில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர்.1 இடத்தை பிடித்து சாதனை படைத்தனர் லியாண்டரும் மகேசும்.  இந்த நொடிவரை கிரிக்கெட் வெற்றியை மட்டுமே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு இருக்கின்றன செய்தி சேனல்கள். இந்த இருவரை  பற்றி அதிகபட்சம் நாம் பார்த்தது ஒரு சில நொடி கிளிப்பிங் அல்லது ஒரு வரி செய்தி. பத்து பதினைந்து நாடுகள் மட்டுமே பார்க்கும் கிரிக்கெட்டுக்கு நாலு நாள் கவரேஜ். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆடும் மிகவும்  பிரபலமான டென்னிஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்த நம் மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு சில நொடிகள் மட்டுமே செய்தி ஒதுக்கும் தாராள பண்பு கொண்ட இவர்கள் இனி தயவு செய்து தங்களை தேசிய செய்தி சேனல்கள் என்று சொல்லிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் விளையாட்டை ரசிக்கும் ஒவ்வொரு மனிதரும் இந்தியர் ஒருவர் உலக விளையாட்டு அரங்கில் சாதனை செய்தால் அதை பாராட்டும் மனம் கொண்டவர்களே. ஆனால் அமெரிக்காவில் நடந்த மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி டென் ஸ்போர்ட்சில் நள்ளிரவு ஒளிபரப்பானது. அதை பார்க்கும் வாய்ப்பு பலருக்கு சாத்தியமில்லை. இறுதி ஆட்டத்தில் டேனியல் நெஸ்டர் மற்றும் மாக்ஸ் மிரின்யி (இருவரும் அசகாய சூரர்கள்) ஜோடியை 6-7, 6-2, 10-5 எனும் செட் கணக்கில் கடுமையாக போராடி வென்றனர் பெயஸும், பூபதியும். இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த ப்ரியன் சகோதரர்களை பின்னுக்கு தள்ளி இன்று உலக நம்பர். 1 ஜோடியாகி உள்ளனர் நம் வீரர்கள்.  

டேவிஸ் கோப்பை மட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஒரு பைசா கூட பரிசு கிடைக்காது. அதனால் பல உலகின் முன்னணி வீரர்கள் இவற்றில் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தேசத்திற்காக ஆட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பல ஆண்டு காலம் இப்போட்டிகளில் ஆடி சாதனை செய்துள்ளார் பெயஸ். இதன் மூலம் அவர் இழந்தது பல கோடி ரூபாய். மகேசும் அவ்வாறே. இடையில் பல ஆண்டு காலம் பெயஸுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, டேவிஸ் கோப்பை போட்டிகளில் அவருடன் சேர்ந்து ஆடாமல் இருந்ததில்லை. 

இன்று இவர்கள் மீண்டும் சேர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். அடுத்த வருடம் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இருவருக்கும் வாழ்த்துகள்!!
.....................................................

நாளைய செய்தி:  

கிரிக்கெட் உலகக்கோப்பை முடியும் வரை காத்திருந்த தமிழ் படங்கள் இனி பொறுப்பதில்லை என ரிலீசுக்கு தயார் ஆகி விட்டன. ஐ.பி.எல். பற்றி எந்த பயமும் இன்றி. ஆனால் உலகக்கோப்பை வென்றதன் மூலம் ஐ.பி.எல். மேலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி இருப்பதால் படங்களின் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. 

வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்:

ஏப்ரல் - 8   ---  மாப்பிள்ளை.  தனுஷ், ஹன்சிகா.  

ஏப்ரல் - 15 ---  கோ. ஜீவா, கார்த்திகா.  
                        பொன்னர் சங்கர் - பிரசாந்த்+பிரசாந்த் (அவ்வ்வ்வ்!)

ஏப்ரல் - 22 ---  அழகர்சாமியின் குதிரை. அப்புக்குட்டி, சரண்யா. 

ஏப்ரல் - 29 ---  எங்கேயும் காதல். ஜெயம் ரவி, ஹன்சிகா.

மே - 6        ---   வானம்.  சிம்பு, பரத், அனுஷ்கா ((அவ்வ்வ்வ்!)

மே - 13      ---   180.  சித்தார்த், மௌலி.

மே - 20      ---   அவன் இவன். ஆர்யா, விஷால்.

மே - 27      ---   தெய்வத்திருமகன். விக்ரம், அமலா பால், அனுஷ்கா, சந்தானம்.  


                                                                     
                                                       
விக்ரம்..?? நம்ப முடியவில்லை.  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..
.........................................................

சொல்ல மறந்த கதை:  

இப்பகுதியை வழங்குவோர்:  மெமரி பிளஸ்...


* கேப்டன் எத்தனை ரவுண்ட் தண்ணி அடித்தார் என்று கணக்கு சொல்லும் கைப்புள்ள ஒரு எடத்துல கூட டாஸ்மாக் பத்தி வாய தொறக்கலியே??

* இதுவரை நடந்த பிரச்சாரத்துல ஒரு வாட்டி கூட கேப்டன் வாய் திறந்து "ஜெயலலிதா" என்றோ அம்மா வாயால "விஜயகாந்த்" என்றோ சொல்லவே இல்லியே. நண்பேன்டா. நண்பேன்டா!! 

* ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கொடுக்கும் பில்ட் அப்பை விட விஜய் பிரசாரத்துக்கு வருவாரா என்ற பில்ட் அப் ரொம்ப ஓவராத்தான் இருக்கு. 
ஹல்லோ பாஸ்..மறந்துட்டீங்களா..? வீ ஆர் வைட்டிங். 

* பா.ஜ.க. எத்தனை தொகுதில நிக்கறாங்க? எங்க பிரச்சாரம் பண்றாங்க? ஒரு பயபுள்ளையும் செய்தி போட மாட்றானுங்க. "நான் நிக்கறேன். நிக்கறேன்".
..................................................... 

நீதிக்கு தண்டனை:

"டேய் தம்பி.. இங்க வா"

"என்ன சார்"

"பாக்கெட்ல எவ்ளோ பணம் வச்சிருக்கே"

"ஒரு ரூபா"

"பாத்தா ப்ரீ கே. ஜி. பையனாட்டம் இருக்க. உன் கைல ஏதுடா இம்புட்டு பணம்"

"பல்லி முட்டாய் வாங்க சித்தப்பா குடுத்தது சார்"

"நம்ப மாட்டேன். மரியாதையா சொல்லு. இந்த ஒரு ரூபாவை சில்லறை மாத்தி உங்க ஸ்கூல் பசங்க எல்லாருக்கும் குடுக்க போறன்னு எனக்கு தெரியும்"

"சத்தியமா இல்ல சார்"

"டேய்..யார ஏமாத்தற. நாளைக்கி உங்க கிளாஸ்ல லீடர் போஸ்டுக்கு தேர்தல் நடக்குதுன்னு நேத்தே எனக்கு தெரியும்"

ஓட்டம் எடுக்கிறான் பையன்.  "டேய் நில்லுடா. ஓடாத. விட மாட்டேன்"

...........................................................

மாவீரன்:  (sms) 

பாகிஸ்தான் தீவிரவாதிகிட்ட கேப்டன் செம டுப்பாக்கி சண்ட போட்டுக்கிட்டு இருக்காரு. கேப்டன் அவனை சுட துப்பாக்கிய அழுத்தறாரு..ஆனா தர்மத்துக்கு அந்த நேரம் பார்த்து ஒரு சோதனை. புல்லட் எல்லாம் தீந்து போச்சி. ஆனாலும் கேப்டன் அசரல. தில்லா எதிரிய நோக்கி நடந்து போறாரு. அவன் காது கிட்ட போயி ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்றாரு. அடுத்த செகண்ட் அவன் துடி துடிச்சி செத்துட்டான். 

என்ன சொன்னார் கேப்டன்???
.
.
.
.
.
.
.
.
.
.
.

"டுமீல்".

                                                                  ***********
........................................................

My other site: nanbendaa.blogspot.com
.........................................................

சமீபத்தில் எழுதியது.... 

.........................................................                                                                                                 
Related Posts Plugin for WordPress, Blogger...