CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 27, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (03/27/11)
பாசமலர்:


                                

                                 
பொல்லாதவன்:

                                     

..................................................

நேருக்கு நேர்: 

                                                                     

நண்பர் ராஜாராமன்(விந்தைமனிதன்)  சனிக்கிழமை அன்று ம.தி.மு.க. வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை 'தமிழ் வெளி' இணைய தளம் சார்பாக பேட்டி எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். அவருடன் சேர்ந்து 'தாயகம்' செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அஞ்சா சிங்கம் செல்வினும் எங்களுடன் வந்திருந்தார். அரசியல் தலைவர் ஒருவரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியது புதிய அனுபவமாக இருந்தது. ராஜாராமின் பல்வேறு கேள்விகளுக்கு தங்கள் கட்சி எடுத்துள்ள முடிவுகளை சம்பத் அவர்கள் எடுத்துரைத்தார். நான் எந்த கட்சிக்கும் அபிமானி இல்லை எனினும்..என் நண்பர்கள் சிலர் கேட்கச்சொல்லிய கேள்விகள் மற்றும்   நான் கேட்க விரும்பிய கேள்வி ஆகியவற்றை முன்வைத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பதில் அளித்தார். பேட்டியின் முழுவிபரமும் விரைவில் தமிழ்வெளியில் வெளியாக உள்ளது. பேட்டி நடந்து கொண்டிருக்கையில் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். நாஞ்சில் சம்பத் அறிமுகம் செய்து வைத்ததும்தான் தெரிந்தது, அவர் ஆனந்த விகடனில் பணியாற்றி வரும் பா. திருமாவேலன் என்று. அவருடைய எழுத்துக்களையும் மற்றும் பிரபலங்களை அவர் சந்தித்து எடுத்த பேட்டிகளையும் நம்மில் பலர் படித்திருப்போம்.  அவரை சந்தித்ததும் கூடுதல் மகிழ்ச்சியே!
...................................................

சங்கமம்: 

இன்று (ஞாயிறு) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸில் கேபிள் சங்கர் எழுதிய 'கொத்து பரோட்டா' மற்றும் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' , உலகநாதன் அவர்கள் எழுதிய 'சாமானியனின் கதை' மற்றும் 'வீணையடி நீ எனக்கு'  ஆகியவற்றின் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வழக்கறிஞர் சாமிதுரை உள்ளிட்ட பலர் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து பேசினர். நேசமித்ரன் அவர்கள் சங்கரின் 'கொத்து பரோட்டா' வில் வரும் சாப்பாட்டுக்கடை எனும் பகுதியில் பெரும்பாலும் நகரம் சார்ந்த உணவுகளே உள்ளன என குறிப்பிட்டார். அநேகமாக கிராமம்/தென் தமிழக பகுதிகளில் சங்கர் அவர்கள் ஜாகையை மாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். பணம் படுத்திய பாடு பற்றி செந்தில் அவர்கள் எழுதிய புத்தகத்தை முன்பே படித்து இருந்த சிலர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். பதிவர்களின் புத்தகங்களுக்கு ஆதரவு தரும் 'ழ' பதிப்பகத்திற்கு நன்றி. 
.........................................................

வாய்க்கொழுப்பு:

டாக்டர்:  "உங்க பல்லு எப்படி விழுந்துச்சி?"
ராகுல்: "அதை யார் கிட்டயாவது சொன்ன மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா"
........................................................

கௌரவம்:

சென்னை வந்திருந்த நண்பர் 'இரவுவானம்' அவர்களும், நானும் எக்ஸ்பிரஸ் அவின்யு மற்றும் மற்றும் ஸ்பென்சர் ஆகிய இடங்களை ஒரு ரவுண்ட் அடித்தோம். பாவம் ஸ்பென்சர். வார இறுதி நாட்களில் களைகட்டி பரபரப்பாக இருந்த அந்த இடம் தற்போது டல் அடித்து போய் இருக்கிறது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்ப்ரஸ் அவென்யு கவர்ந்து சென்று விட்டது. என்னதான் இருந்தாலும் பொருட்களின் விலை ஸ்பென்சரில் குறைவாகத்தான் உள்ளது. குறிப்பாக சாட் உணவங்களின் விலைகள் சாமான்ய மனிதனுக்கும் ஏற்ற வகையில் இருப்பதால்,  நடுத்தர மக்களின் 'பட்ஜெட்' வளாகமாக ஸ்பென்சர் திகழலாம். பணம் படைத்தவர்கள் பெரும்பாலும் எக்ஸ்ப்ரஸ் அவின்யுவிற்கு படை எடுக்க ஆரம்பித்துவிட்டதால்..ஸ்பென்சர் இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை. 
 ......................................................

நெஞ்சம் மறப்பதில்லை:

காமராஜ்...இத்திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சமயம். சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தேன். அரங்கில் ஒரு சில வரிசைகள் மட்டுமே நிரம்பி இருந்தன. பெரும்பாலும் வயதானவர்கள். காமராஜ் மீது பேரன்பு கொண்டவர்கள் என்று முகங்களே கூறின. ஏற்கனவே காமராஜ் பற்றிய தொடரை தொலைக்காட்சியில் பார்த்திருப்பினும், அதில் இல்லாத பல காட்சிகளை படத்தில் இணைத்திருந்தனர். இப்பேற்பட்ட உன்னத தலைவன் ஆண்ட மாநிலம் இன்று?.  அவ்வப்போது தி.நகரில் உள்ள திருமலை சாலையை கடந்து போகையில் காமராஜ் இல்லத்தை பார்த்துக்கொண்டே செல்லத்தவறியதில்லை நான். 

இப்படத்தில் என்னை மிகவும் நெகிழ வைத்த காட்சி..காமராஜை சந்திக்க விருந்தினர் ஒருவர் வருவார். அவருக்கு அசைவ விருந்தளிக்க முடிவு செய்யும் தலைவர் தன வேலையாளிடம் முட்டை வாங்கி வர சொல்வார். "முதல்வர் வீட்டு விருந்தாயிற்றே? மட்டன், சிக்கன் இல்லையா?" என்று  விருந்தாளி கேட்பார்.  அதற்கு அய்யா சொல்லும் பதில்...நீங்களே பாருங்கள்:                                                                                                             

இவர் ஆண்டது நாம் வாழும்(!) தமிழ்நாட்டை என்கிறார்கள். நம்பினால் நம்புங்கள். 

"நல்லதோர் தமிழகம் படைத்தேன். அதை நலங்கெட புழுதியில் எறிந்ததார்? சொல்லடி சிவசக்தி? "   கர்மவீரரின் அசரீரி கேட்கிறது.   
...........................................................

My other site: nanbendaa.blogspot.com


Sunday, March 20, 2011

முத்துக்கு முத்தாக

                                                                      
                
இளவரசு...இந்த அற்புதமான நடிகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற ஒரே காரணம்தான் என்னை 'முத்துக்கு முத்தாக' படத்தை பார்க்கத்தூண்டியது. வெற்றிக்கொடி கட்டு, தம்பி, இம்சை அரசன், சென்னை - 28 மற்றும் பல தமிழ் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்த இவர் நேற்று வெளியான முத்துக்கு முத்தாக படத்தில் 5 பிள்ளைகளின் தந்தையாக தன்னால் முடிந்தவரை இயல்பாக நடித்திருந்தார். ஆனால் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மணிவண்ணனுக்கு நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு இப்படத்தில் இளவரசுக்கு பெருமளவு கிடைக்காதது வருத்தமே. சரண்யா எனும் சிறந்த நடிகையை இன்னும் எத்தனை நாள்தான் அடுப்பு ஓடுவது, அழுது வடிவது போன்ற ஸ்டீரியோடைப் ரோலில் தொடர்ந்து நடிக்க வைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனியும் சரண்யாவை இதே போன்று நடிக்க வைத்தால் சலிப்பு தட்டிவிடும் என்பதே உண்மை. 


மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ரீப்ளே மாதிரி உள்ளது இப்படம். 5 ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை மணம் செய்து வைத்தபின் மருமகள்களால் படும் துயரமே கதை. இயக்குனரின் ஆஸ்தான நடிகர்களான ராஜ்கபூர், சிங்கப்புலி, விக்ராந்த்  உள்ளிட்ட பலரும் 'உள்ளேன் ஐயா'. இதுபோக வையாபுரி, சிசர் மனோகர் மற்றும் பலர். மயில்சாமி ஆப்சன்ட். அவர் படத்தில் இருந்திருந்தலாவது ஓரளவு நகைச்சுவை இருந்திருக்கும். சற்று அழுத்தமான சப்ஜெக்டில் நகைச்சுவை காட்சிகள்தான் பெரும்பாலும் வலி நிவாரணியாக இருக்கும். ஆனால் இதில் தலைகீழ். சிங்கப்புலி அண்ட் கோ மொக்கை போட்டு தள்ளுகிறார்கள். கெட் அப்பை சிங்கப்புலி  படத்துக்கு படம் மாற்றினாலும் வசன உச்சரிப்பு மட்டும் மாறவே இல்லை. 'திண்டுக்கல், சின்னாளப்பட்டி' என்று அடிக்கடி கூவி அறுக்கிறார். ரூட்ட மாத்துங்க பாஸ். ஐந்து ஆண் பிள்ளைகளும் அடிக்கடி அழ முயற்சி செய்கின்றனர்...நடிப்பு வரவில்லை. மாயாண்டி குடும்பத்தாரில் கதாபாத்திர தேர்வை கச்சிதமாக செய்த இயக்குனர் இப்படத்தில் (வெற்றிக்)கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது. 

                                                  
                                                      இயக்குனர் இராசுமதுரவன்


உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தாக்கம் சினிமாவின் வசூலை பாதிக்கும் என்பதற்கு அரங்கில் இருந்த கூட்டமே சாட்சி. 25% மட்டும் நிரம்பி இருந்தது. மல்டிப்ளக்ஸில் இப்படம் வெற்றி பெறுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. 'என்னாங்கிற' எனும்  பாடலில் ஆண்கள் அனைவரும் வேட்டியை தோளில் போட்டுக்கொண்டு டிரவுசருடன் ஆடும் ஆட்டம்...ஹய்யோ ஹய்யோ. நாயகிகள் மோனிகா ஒரு சில காட்சிகளில் சிரித்துவிட்டு கடைசி காட்சியில் மனது நெகிழ ஒரு வசனம் பேசிவிட்டு செல்கிறார். களவாணி ஓவியா மனதை திருடவில்லை.  சில க்ளோஸ் அப் ஷாட்களில் நம்மை பயமுறுத்துகிறார். மா.குடும்பத்தாரில் பெண்கள் அனைவரும் நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தி இருந்தனர். இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எவரும் இல்லை. முதல் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெளிவாக இல்லை. இரண்டாம் பாதிதான்  படத்தை கரையேற்றி உள்ளது. 


நட்ராஜ் தன் பெற்றோருக்கு பேருந்து நிலையத்தில் இட்லி வாங்கி தந்து விட்டு பேசும் இடம் மனதை நெகிழ வைக்கிறது. கவி பெரியதம்பி பின்னணி இசை என்ற ஒன்றை மறந்து விட்டாரோ?. ஒளிப்பதிவில் அப்படியே மா. குடும்பத்தார் படத்தின் சாயல். அடிக்கடி படத்தில் கறிச்சோறு தலை காட்டிக்கொண்டே இருக்கிறது. குடும்பப்படம் என்றால் அதில் ஒரு மினி மாநாடு நடக்கும் அளவிற்கு ஆட்கள் இருந்தே தீர வேண்டும் எனும் மூட நம்பிக்கையை இனி வரும் காலத்தில் இயக்குனர்கள் கை விட்டால் தேவலை. பப்பே சாப்பாட்டில் அனைத்து உணவுகளையும் ஓரளவு ருசி பார்த்துவிட்டு எதையும் முழுதாக சாப்பிட்ட திருப்தி இல்லாமல் போவது போல், பல கதாபாத்திரங்கள் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங்குமாக இருக்கின்றன. இயக்குனர் இராசுமதுரவன் விரைவில் சிட்டி சப்ஜெக்டிற்கு ஒரு டிக்கட் எடுக்க வேண்டும். ரொம்ப நாட்களாக கிராமத்து பஸ்ஸில் பயணம் செய்து வருகிறார். 

மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்கும் படமாகவோ முத்துக்கு முத்தாக இல்லாவிடினும் தரத்தில் தாழ்ந்து போகவில்லை என்பது உண்மை. ஆனால் விறுவிறுப்பு இல்லாதது பெரிய குறையாக இருந்தது. உலகக்கோப்பை சுனாமியில் இப்படம் தாக்குப்பிடிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


முத்துக்கு முத்தாக - மெகா ஸ்க்ரீனில் ஒரு மெகா சீரியல். 

...............................


இவ்வாண்டு நான் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் முக்கியமான ஒன்று இயக்குனர் சுசீந்தரனின் அழகர்சாமியின் குதிரை.  நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் இயக்குனராக செம உண்டைக்கட்டி வாங்கிய கௌதம், இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பெருமைப்பட்டு கொள்ள ஒரு வாய்ப்பு. சமீபத்தில் இப்படத்தை பற்றி இளையராஜா சொன்னது "இப்படத்தில் நான் இசை அமைத்த ஏதேனும் ஒரு இடத்தில் கூட உங்களுக்கு கண்ணீர் வரவில்லை என்றால்..இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்".                                                                      
கதாநாயகனாக களம் இறங்கும் 'வெண்ணிலா கபடி குழு' அப்புக்குட்டிக்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றே தெரிகிறது. காத்திருப்போம்.                                                                 

....................

My other site: nanbendaa.blogspot.com


Sunday, March 13, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (13/03/11)
வெற்றிக்கொடி கட்டு:
குட்டி:...............................................

பயணம்:

மாநகரப்பேருந்து நிலையம்...பாரிமுனை செல்லும் குளிர்சாதனப்பேருந்து ஒன்றில் சிலர் மட்டும் இருந்தனர். வண்டி கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. என் பின் வரிசையில் இருந்த மூன்று வயதுப்பெண் குழந்தை தன் தாயிடம் கேள்வி ஒன்றை வைத்தாள் "அம்மா இந்த பஸ்சுல ஏ/சி ரொம்ப கம்மியா இருக்கு". அம்மா "கரெக்டா இருக்கு". அவள் விடவில்லை "இல்ல. அதிகமா வக்க சொல்லு" என்று நுகர்வோர் பிரதிநிதியாக கலக்கிக்கொண்டு இருந்தாள். பிறகு மழலைக்குரலில் விஜய்யின் பாடலை ரீமிக்ஸ் செய்தாள்.."வாடா மாப்புள்ள..வாழப்லா தோப்புல.வாளிப்லா ஆடலாம் வா". அதை ரசித்து கொண்டிருந்த வேளையில் நடந்தது ஒரு சம்பவம்...

நடுத்தர வயதுடைய தம்பதியர் சற்று முன்னே அமர்ந்திருந்தனர். நாவறட்சி காரணமாக தன் கணவரிடம் தண்ணீர் பிடித்து வருமாறு பாட்டிலை நீட்டினார் மனைவி. அதற்கு அந்த பொறம்போக்கு சொன்ன பதில் "பாட்டில்ல எச்சி துப்பி தர்றேன். குடிக்கறியா. போன்ல பேசிட்டு இருக்கல்ல. நீ போய் தண்ணி புடிக்க மாட்டியா". இப்படி ஏசிவிட்டு தன் நண்பரிடம் போனில் இளித்துக்கொண்டு இருந்தான் ஈரவெங்காயம். அந்த பெண்மணியின் முகம் பலர் முன்னிலையில் நேர்ந்த அவமானத்தால் துவண்டு போனது.  தானே தண்ணீர் பிடிக்க சென்றார். இதை பார்த்த மற்றொரு பெண் தன்னிடம் இருந்த நீரை வழங்கினார். அதை பருகிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தார் அப்பெண்மணி.

இதே வார்த்தைகளை அந்தப்பெண் தன் கணவரிடம் பேசி இருந்தால் நம் சமூகம் அவருக்கு வைக்கும் பெயர் "கொழுப்பு எடுத்த பொம்பள", "இவ எல்லாம் பொம்பளையா?". நாகரீக உலகில் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள், வீட்டுக்கு அடங்காமல் நடக்கிறார்கள் என்பதும், ஊடகங்களில் இன்னும் மனைவி 'பூரிக்கட்டையால் கணவனை அடித்தாள்' என்பது போன்ற அலுத்துப்போன  ஜோக்கை போடுவதும் ரசிக்க நன்றாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில்  பெரும்பான்மையான பெண்கள் பொது இடங்களில் கூட எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. இந்த மாதிரி செய்யுற புருசனுங்கள எல்லாம் வாயில செருப்ப கவ்வ குடுத்து அடிக்கணும்!
............................................

ஆடுகளம்:


                                                           

உட்டா ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகமே நடத்துவாங்க போல இருக்கே. கிரிக்கெட்ட தவுற வேற விளையாட்டு எதுவுமே கண்ணுக்கு தெரியாதா? மத்த விளையாட்டுக்கும் மரியாத குடுங்கப்பா. ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள....... 
...................................................

  அந்தரங்கம்:


 "வேலு சார். உங்களை மேனேஜர் கூப்புடறாரு"

"கூப்டீங்களா சார்?"

"யெஸ். ப்ளீஸ் சிட் டவ்ன். உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? "

"புரியலையே சார்"

"நீங்க வேலைய  ராஜினாமா செஞ்சிட்டு அரசியல்ல சேரப்போறதா எல்லாரும் சொல்றாங்க. நிஜமா? "

"இல்லையே சார்"

"பொய் சொல்லாதீங்க. நேத்து கூட நீங்க உண்ணாவிரதம் இருந்தீங்க"

"அய்யய்யோ. இது என்ன புது புரளி"

"நானே பாத்தேன். லஞ்ச சாப்புட்டு முடிச்சதும் 10 செகண்ட் உண்ணாவிரதம் இருந்ததுக்கு அப்புறம்தானே தண்ணியே குடிச்சீங்க"

"இதுக்கு பேரு உண்ணாவிரதமா?"

"அதுதான இப்ப பேஷன். சரி அத விடுங்க. 63 மூவர் பத்தி எனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னீங்களே? ஏன்?"

"சார். நான் மைலாப்பூர் ஆளு. 63 மூவர் உலா வருசா வருஷம் பாப்பேன்"

"அந்த 63 ஆ..ஓகே. 'ஓ போடு..ஓ போடு'ன்னு 49 தரம் ஏன் பாடுனீங்க? எல்லாரும் 49 ஓ போடணும்னு நீங்க பண்ண பிளான்தான அது? "

"என்ன கொடும சார் இது? "

"நேத்து சாப்புடும்போது சங்கர் கிட்ட கூட்டு வச்சிக்கங்கன்னு சொன்னது"

"நான் கொண்டு வந்த கூட்டை எடுத்துக்கங்கன்னு சொன்னேன் சார்"

"என்னவோ சொல்றீங்க. பாத்துக்கங்க. உங்களுக்கு வேலைதான் முக்கியம். சொல்லிட்டேன்"

"நான் அரசியலுக்கு போக மாட்டேன் சார். உங்க ஓட்டு...."

"என் ஓட்டா? அது யாருக்கு போடணும்னு எனக்கு தெரியும். நான் இவ்ளோ சொல்லியும்..."

'சார்...சார்.. அய்யய்யோ.. உங்க ஓட்டு வீடு ஒண்ணு சும்மா பூட்டி இருக்கே. அதை எப்ப வாடகைக்கு விடப்போறீங்கன்னுதான் கேட்டேன். ஆள விடுங்க. மயக்கம் வருது".

.........................................................

நான் கடவுள்:


                                                                
..........................................................


ஒளிவிளக்கு
                                                    
நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனைத்தமிழர்கள் நரேன் கார்த்திகேயன், ரூத் மனோரமா மற்றும் ஓடந்துறை சண்முகம் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
.....................................


ஹவுசிங் போர்ட் வீட்டில் ஒரு உலக சாம்பியன்!

படிக்க என் மற்றொரு தளத்திற்கு வரவும். இணைப்பு கீழே: 

My other site: nanbendaa.blogspot.comRelated Posts Plugin for WordPress, Blogger...