CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 27, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (27/02/11)
 பாயும் புலி:


                                                                   
.................................................

யாவரும் நலம்: 

சென்ற சனிக்கிழமை சென்னை கே.கே. நகரில் நடந்தது பதிவர் சந்திப்பு. பல பிரபல பதிவர்கள் ஆஜர். இயக்குனர் சீனு ராமசாமி (தென்மேற்கு பருவக்காற்று)  அவர்களுடன் உரையாடல் மற்றும் சென்னை பதிவர் குழுமம் அமைப்பது பற்றி நடந்த கூட்டத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரை சில பதிவர்கள் அடித்த நகைச்சுவை கமன்ட்டுகள்தான் சபையை கலக்கிக்கொண்டு இருந்தன. தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குனர். பதிவர்கள் எழுதும் திரை விமர்சனங்கள் பெரும்பாலும் நடுநிலையாக இருப்பதாக கூறினார். சிங்கப்பூர் பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் ஒரு நபரின் உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைக்காக பதிவர்கள் ரூ.30 லட்சத்தை திரட்டி தந்ததை பற்றி குறிப்பிட்டார். உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 


                                                                    

முதன் முறை உண்மைத்தமிழன் அவர்களை காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் எழுதிய பதிவுகள் குறித்து சில விசயங்களை கேட்டேன். அப்போது அவர் சில பதிவர்களின் வலைப்பூ பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார். "என்னய்யா புதுசு, புதுசா இருக்கு..சிங்கம், புலி..இன்னும் என்னன்னவோ.." என்று புருவத்தை உயர்த்தி கேட்டார். தற்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எந்த அளவு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது அவர் பேசும் தொனியிலேயே தெரிந்தது. சர்க்கஸ் சிங்கம் எனும் பெயரில் வலைப்பூ ஒன்றை  எழுதும் பதிவர் அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் விதத்தில் பேசினார். இயக்குனர் சீனு ராமசாமிக்காக 100 துணை இயக்குனர்களை அழைத்து வந்து போராட்டம் செய்ய தயார் என்றார். மொத்தத்தில் சிரிப்பொலியில் களை கட்ட ஆரம்பித்த மீட்டிங் இறுதி வரை சுருதி குறையாமல் தொடர்ந்தது. சென்னை புத்தக கண்காட்சியில் நடந்த சந்திப்பிற்கு பிறகு நடந்த நிறைவான சந்திப்பாக இதுவும் அமைந்தது மகிழ்ச்சியே! 

சந்திப்பு நடந்த டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்களுக்காக சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் தரப்படும் எனக்கூறினர்.  

முகவரி:
டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை
முதல் மாடி, மேற்கு கே.கே.நகர் 
(பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
சென்னை - 78

......................................................

பொக்கிஷம்:

கிழக்கு பதிப்பகம் நம் அறிவுத்தேடலுக்கு மேலும் ஒரு வசதியை செய்து தந்துள்ளது. தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகக்கண்காட்சிகளை நடத்தியுள்ளது இம்முன்னணி பதிப்பகம். அலுவலகங்கள், அபார்ட்மென்ட், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை, 
சென்னை - 18.
போன்: 044 4200 9601.
செல்: +91 95000 45611 (ஹரன் பிரசன்னா).
www.nhm.in email: support@nhm.in
........................................................

போக்கிரி ராஜா:

சமீபத்தில் வந்த செய்தி. கச்சத்தீவு அருகே எண்ணை நிறுவனம் அமைக்க இங்கிலாந்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த செய்தி மக்கள் தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பினர். இதன் மூலம் தமிழகம் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கூறினர். அதே நேரத்தில்தான் மயிர் கூச்செறியும் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தது. நாளை முழுக்க ஊடகம் மற்றும் மொத்த நாட்டிலும் ஆட்டம் TIE ஆனதுதான் தலைப்பு செய்தியாக இருக்கும். எத்தனை தமிழன் DIE ஆனா நமக்கென்னன்னு....நடத்துங்க உங்க வியாபரத்த!
..........................................................
      
தாயே நீயே துணை!

மனதை கவர்ந்த டி சர்ட் வாசகம்:..................................................                                 
                                  
 மதராசப்பட்டினம்:

சென்ற வாரம் சைதையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தை திறந்து வைக்க முதல்வர் வந்திருந்தார். அவரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த வாசகங்கள்:

"புதியதாக கட்டப்பட்டுள்ள புதுக்கட்டிடத்தை திறக்க வரும்.."

"ஓய்வரியா சூரியனே"

உடன்பிறப்புக்களே, பிழை சரி செய்ய சீக்கிரம் குழு ஒன்றை அமையுங்க. 
.....................................................

கற்றது தமிழ்:

அம்மா பிறந்த நாளை முன்னிட்டு வீட்டருகே வைக்கப்பட்ட பேனரில்:

ன்பின் ஆருயிரே

ற்றல் உள்ள சிங்கமே

னிய உள்ளம் கொண்ட புதுமையே 

கைப்பண்பு கொண்ட தங்கமே 

ள்ளம் எங்கும் உதவும் எண்ணம் கொண்ட பதுமையே 

க்கம் தரும் உற்சாகமே 

ழுச்சிமிகு நாயகியே 

ற்றம் தரும் சீற்றமே 

க்கியம் ஆனவர்களை அரவணைக்கும் தாயே 

ப்பிலா சிகரமே 

டி வந்து உதவும் உன்னதமே 

ஒளவையார் வழிநடக்கும் தாரகையே  

கு போன்ற உறுதி கொண்ட தாயே 


என்னா எமோசன்ரா....ங்கப்பா!
..................................................

எந்திரன்:   

கெட் ரெடி போல்க்ஸ்! மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாட்டு தேர்தல் தேதிய அறிவிக்க போறங்களாம். நம் எந்திரர்கள் படை தயாராகட்டும். ஓட்டு போட்டு மேலும் பல கோடீஸ்வரர்களை உருவாக்க வேண்டாம்? அப்புறம் எப்புடி வல்லரசு ஆகுறது.
..........................................................

வரவு எட்டணா. செலவு பத்தணா

திங்கள் காலை இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி சொல்லப்போகுது மத்திய அரசு. பெரிய பெரிய லட்டுகளை பல பெருச்சாளிகள் முழுங்கியது போக மிச்சம் உள்ள பூந்திய வச்சி நெல்லிக்கா சைசில் நமக்கு தக்குனூன்டு லட்டு தருவாங்க.  120+ கோடி பேரும் அடிச்சிக்காம சாப்புடனும். ஓக்கே? நீங்க சும்மா இருந்தாலும் ஓக்கேதான். அவங்க முடிவு பண்ணியாச்சி!
.............................................................

தலைவன் இருக்கின்றான்:
                         
உலக கோப்பை பாக்குறது தப்பில்ல. ஆனா அதுக்காக சோறு கூட திங்காம பிரம்மரிஷி மாதிரி டி.வி. முன்னாடி தவம் இருந்து பாக்குறது தப்புதான. அப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு தலைவர் சொன்ன கலக்கல் கம்மன்ட்: 
யூ ட்யூப்பில் பார்க்க: http://www.youtube.com/watch?v=tf47C60dcHI
...........................................................


My other site: nanbendaa.blogspot.com
...........................................................


Monday, February 21, 2011

மீளாத்துயில்

                                                                   

தமிழ் ஈழத்தலைவர்  பிரபாகரனின்  தாயார் நோயுடன் போராடி இறந்த செய்தி வேதனை அளிக்கிறது.  உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சார்பாக அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

sms:
From my rotting body, flowers shall grow and I am in them and that is eternity. 
 ~Edvard Munch
.......................
                                                              

                                                                

அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அஜ்மல் கசாப்பிற்கு இன்று தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவிருக்கின்றனர் கசாப் தரப்பினர். விரைவு நீதி மன்றம் மூலமாக துரித தீர்ப்பு வழங்க வேண்டும் என மீடியாக்கள் உட்பட பலர் வலியுறுத்த துவங்கி உள்ளனர். 

sms:
Death is a distant rumor to the young.  ~Andrew A. Rooney
.............................................


                                                                  

காலத்தால்  அழிக்க முடியாத பல அற்புதமான பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய பாணியில் இதுவரை எவராலும் பாட இயலாதது அக்குரலின் தனிச்சிறப்பு என்பதை அறிவோம். நடிப்பிலும் தனி முத்திரை பதித்தை வாசுதேவன் சில வாரங்களுக்கு முன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் திரைத்துறையை சார்ந்த வெகு சிலரே தன்னை பார்க்க வந்ததாக கூறினார். முரளி, ஸ்வர்ணலதா,  தற்போது வாசுதேவன் வரை தமிழ் சினிமா தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவது வேதனையானதே. இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சிறப்பானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

அதில் நம் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் சில பாடல்கள்:

* ஒரு கூட்டுக்கிளியாக (படிக்காதவன்) 
* ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
* காடு.. பொட்டக்காடு (கருத்தம்மா)
* பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)

sms:
If I had a single flower for every time I think about you, I could walk forever in my garden.  ~Claudia Ghandi
http://www.youtube.com/watch?v=9hgnW6jbwTU
..............................

Pics,Video: Google, Youtube.

  

Tuesday, February 15, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(15/02/11)

                                                            
 ....................................................................      

அதான் நாகேஷ்!
கமலுடன் நாகேஷ் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலம். சூட்டிங் ஸ்பாட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தார் கமல். சிக்கன் பிரியாணி லெக் பீஸில் நிறைய சாதம் ஒட்டி இருந்ததால் அதை தட்டில் பலமாக சில முறை தட்டுகிறார். அப்போது அவரை கடந்து செல்லுகையில் நாகேஷ் சொன்னது:
"என்ன கமல், கோழி சரியா சாகலையா?"
....................................................................

 எஸ்.எம். எஸ்: 
"எல்லா வகையான கிரீட்டிங் கார்டும் இங்க இருக்கா"
"இருக்கு சார்"
" 'நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்' அப்டின்னு எழுதி இருக்குற கார்ட்?"
"அதுவும் இருக்கு"
"அதே மாதிரி 12 கார்ட் குடுங்க"
.........................


                                                                        
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் 'THE FOODIE'. குணால் விஜய்கர் இதை தொகுத்து வழங்குகிறார். கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்துவிட்டார். ரோட்டோர கடைகள், அரண்மனைகள், கோவில்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், இல்லங்கள் என பல இடங்களுக்கு பயணித்து, அங்கு சமைக்கப்படும் உணவுகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். பல வெளிநாடுகளும் இவர் பயணத்தில் இடம் பெற்றுள்ளது. ஞாயிறு காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
..............................................

சீன நாட்டு இணைய தளத்தில் பார்த்த புகைப்படம்:


                                                                                                                            
.. ................................................
Pics: Google
                                                        

Monday, February 14, 2011

'என்ன சித்தப்பு சாப்டீங்களா?'

                                                          
"அண்ணன் கவுண்டர் பேர்லயும், என் பேர்லயும் ரசிகர் மன்றமா?? யார் இத செஞ்சி இருப்பாங்க?  கண்ட எடத்துல நின்னு 'என்ன சித்தப்பு சாப்டீங்களா?' அப்டின்னு கேட்டதுக்கு யாருன்னா பழி வாங்குறாங்களா? இல்ல நம்ம தலைய ப்ளீச் பண்ணி காதலர் தினத்துல நெறைய பொண்ணுங்கள மயக்கிடுவோமொன்னு பொறாமைல ஆப்பு வக்க பாக்குறாங்களா??"

அண்ணே, நீங்களே இந்த லிங்க்கை போயி பாருங்க.

கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம்
Saturday, February 12, 2011

"பயணம்" - விமர்சனம்!ராதா மோகன்....மென்மையான குடும்ப படங்களை மட்டும் இயக்குபவர். இது நேற்று காலை 'பயணம்' திரைப்படத்தின் முதல் காட்சிக்கு முன்பு வரை அவருக்கு இருந்த பிராண்ட் நேம். அந்த இமேஜை தகர்த்து எறிந்து, தன்னால் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தை அசத்தல் ஒன் லைன் நகைச்சுவை காட்சிகளுடன் எடுக்க இயலும் என்பதை நிரூபித்து இருக்கிறார். குறை சொல்ல வேண்டிய விஷயங்கள் மிகவும் குறைவு. அடுத்த வருடம் விருதுகளின் பட்டியலில் 'பயணம்' குழுவிற்கு பிரதான இடம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. பிரகாஷ் ராஜ்...தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதை இதற்கு மேலும் நிரூபிக்க தேவையில்லை. 

எங்கே முதல் காட்சியில் பயணிகள் வீட்டில் இருந்து கிளம்புகையில் "நான் போயிட்டு வர்றேன்" போன்ற வசனங்கள்  இருக்குமோ என்று எண்ணினால், நேராக விமான நிலையத்தில் கதையை துவக்கி படத்தை ஜெட் வேகத்தில் டேக் ஆப் செய்தார் இயக்குனர். ட்ரைலர்  பார்க்கையில் செண்டிமெண்ட் காட்சிகள் சற்று அதீதமாக இருக்குமோ என்றெண்ணி 'பயணத்தை' சற்று தள்ளிப்போடலாம் என்று யோசித்தேன். ஆனால் ராதா மோகன் மீதுள்ள நம்பிக்கையில் இறுதிக்கட்டத்தில் 'ரிசர்வ்' செய்தேன்.  வெகு அரிதாக வெளிவரும் "நகைச்சுவை கலந்த த்ரில்லர்" படத்தை தந்து அசத்தி விட்டார். பொதுவாக ஏகப்பட்ட கேரக்டர்கள் வரும் படங்களில் பல நடிகர்கள் அர்த்தமின்றி வந்து செல்வதும், நல்ல துணை நடிகர்கள் வீணடிக்கப்படுவதும் மரபாக இருக்கும்.  'காதல்' திரைப்படத்திற்கு பிறகு அனைத்து நடிகர்களையும் இயல்பாக நடிக்க வைத்த பெருமையை தட்டி சென்று விட்டார் இயக்குனர் ராதா மோகன் என்றால் அதில் மிகை இல்லை. 

'சைனிங் ஸ்டார்' சந்திரகாந்த் ரோலில் வரும் பப்லுவை நக்கல் அடிக்கும் வசனங்கள், இரண்டாம் பாதியில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள், அவ்வப்போது கையால் ஆகாத அரசாங்கத்தை வெளுக்கும் இடங்கள் போன்றவை திரை அரங்கில் 'பயணம்' செய்வோரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. அடங்கப்பா மாஸ் ஹீரோக்களே... தயவு செஞ்சி நாகார்ஜுனா நடிப்பை பாருங்க. அதுதான் ஹீரோயிசம். என்ன வரம் வாங்கினாரோ. மனிதர் அநியாத்திற்கு இளமையாகவே இருக்கிறார். தமிழில் நடிகர் முரளி போல், தெலுங்கில் நாகார்ஜுனா. எவர் யூத். பயணிகளை எப்படி விடுவிப்பது என கலந்தாலோசனை செய்கையில் பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கோபப்படும் காட்சி. அவருக்கு தேசிய விருது தந்தது முற்றிலும் தகும் என்பதற்கு இது ஒரு சான்று. பாடல்கள் இல்லாத, காதல் இல்லாத, நேர்மையான, தரமான படத்தை தந்த 'பயணம்' குழுவிற்கு ஹாட்ஸ் - ஆப். 


*  தலைவாசல் விஜய் ஷூவில்  துண்டுச்சீட்டு ஒட்டிக்கொள்ளும் காட்சி. தீவிரவாதி அவரின் காலை நகர்த்த சொல்கிறான். அதிர்ஷ்டவசமாக ஷூவிலேயே அந்த காகிதம் ஒட்டிக்கொள்கிறது. அவன் சென்றுவிடுகிறான். ஷூவை தூக்கி காட்ட சொல்லி செக் செய்யாமல் செல்லும் அளவிற்கு ஒரு கூமாங்கு தீவிரவாதியா? 

* யூசுப் கான் எனும் தீவிரவாதியாக நடிக்க ஒரு இளைஞனை நாகர்ஜுனா அழைத்து வருகிறார். அப்போது அவன் பேசும் வசனம் "சார், என்ன விட்ருங்க. நான் பெருமாள் கோவில்ல புளியோதரை சாப்டுட்டு நிம்மதியா இருந்துடறேன்' . இன்னும் எத்தனை நாள் தயிர்சாதம், மாவடு, புளியோதரை என குறிப்பிட்ட இனத்தை கிண்டல் அடிப்பார்களோ. நீங்களுமா ராதா மோகன்??? எதிர்பார்க்கவில்லை. 

* விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ. 

* லடாக் பகுதியில் நடக்கும் சண்டை காட்சி வெகு தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருந்தது. 

* நிஜ தீவிரவாதிக்கு பதில் 'டூப்' போட்டு அனுப்புவதாக காட்டி உள்ளனர். இது போதும். இனி நிஜ வாழ்க்கையில் எல்லா தீவிரவாதியும் தங்கள் ஆள் ஒரிஜினிலா அல்லது நகலா என்பதை சோதித்தே தீருவார்கள். 'பயணம்' படம் அவர்கள் கண்ணில் பட்டால். 

* வசனங்கள் கிட்டத்தட்ட அனைத்தும் நன்றாக இருந்த போதிலும், மிகவும் பிடித்ததில் சில:  நடிகராக வரும் பப்லூவிடம் "என்ன சார். என்னை அடிக்க போரீங்களா? அடிங்க. டெய்லி என் பொண்டாட்டி அடிக்கறா. நாலு வயசு பையன் கூட அடிக்கறான். அடிங்க"  என சக பிரயாணி ரவுசு விடுவது, தீவிரவாதி ஒருவன் "ஏன் கத்துகிறீர்கள். விமானத்தில் இருக்கும் பெண்களுக்கு எங்களால் ஆபத்து வந்ததா? உங்கள் நாட்டு போலீசிடம் ஒரு பெண்ணை மூன்று நாட்கள் தனியாக விட்டால் அவளுக்கு பாதுகாப்பு உண்டா?" என சொல்லும் சுளீர் வசனம். ஒளிப்பதிவாளர் குகன் மற்றும் இசையமைப்பாளர் பிரவின் மணி இருவரும், நாம் படம் பார்க்கும் சூழலை தவிர்த்து நிஜ கடத்தலை கண் முன் பார்ப்பதுபோல் ஒரு உணர்வை உருவாக்கி உள்ளனர். சபாஷ்! 


                                                         பிர(ம்)மா(னந்)தம்!
                           

* எம்.எஸ். பாஸ்கர் போன்ற சிறந்த கலைஞர்கள் 'காவலன்' படத்தில் வீண் அடிக்கப்பட்டு இருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அந்த லிங்க்: காவலன். இனியாவது இவரை வைத்து இயக்குபவர்கள் மொழி, வெள்ளித்திரை, பயணம் போன்ற படங்களில் தரப்பட்ட முக்கியத்துவத்தை தர வேண்டும். What an Actor!  தலைவாசல் விஜய், இளவரசு, எம். எஸ். பாஸ்கர் போன்ற கலைஞர்களை மட்டும் பிரதானமாக வைத்து எடுக்கப்படும் படம் கண்டிப்பாக அந்த இயக்குனரின் பெயர் சொல்லும். அந்த நாளும் வந்திடாதோ?

* இடைவேளையில் 'ஆரண்ய காண்டம்' ட்ரைலர் போட்டனர். ஏற்கனவே சென்சார் போர்டில் கிட்டத்தட்ட 50 வெட்டு வாங்கி பிரச்சனையில் இருக்கிறது இப்படம் என செய்திகள் வந்துள்ளன. ட்ரைலர் வித்யாசமாக இருந்தது. தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் 'ஏ' சர்டிபிகேட் வாங்க தயாராகி விட்டாராம். மக்கள் தயாரா என்பது இனிதான் தெரியும்.


                                                                

பயணம் - இந்த ஆண்டு மட்டுமல்ல. இதுவரை தமிழில் வந்த சிறந்த படங்களின் வரிசையில் தனி இடம் பெற்றுவிட்டது என்பது என் கருத்து! 
                                                                                                    

..................................................


                                                        

இவ்வாண்டு ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள INSIDE JOB ஆங்கில படத்தின் விமர்சனம் என் மற்றொரு தளத்தில்: nanbendaa.blogspot.com


                                                             

Monday, February 7, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (07/02/11)
                                                                      


இடியாப்பம்(ஒரே சிக்கல்ப்பா) :

தற்காலிக அரசு வேலைக்கு கணக்கு வாத்தியார்கள் தேவை:


வாழை 'இலை' சோறு போட்டு 'கை' நிறைய சம்பளம் தரப்படும். 'சூர்யோதயத்திற்கு' முன் வேலைக்கு வரவேண்டும். வேலை நேரத்தில் பம்பரம் விளையாடி சேட்டை எதுவும் செய்யப்படாது. 


மேலும் வெவரம் வேணுமா....லுக் டவுன்: (டூ இன் ஒன் கமண்ட்). 

                                                                                                                                         
 .............................................................               


சாம்பார்:
சென்ற வாரம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்கார பெண்மணியின் போன் கால். எடுத்து பேசினேன். (இங்கிலீஷ்லதான்). "ஹல்லோ, யார் வேணும்". அவிங்க சொன்னாங்க " ஐ வான்ட் டு ஸ்பீக் வித் ராஜா, டெல்லி". நான் "சாரி, இது பெங்களூர் பிராஞ்ச். நீங்க டெல்லிக்கு கால் செய்ங்க". அந்த பெண் மீண்டும் "இல்லை நான் இதற்கு முன் இந்த எண்ணில் பேசி உள்ளேன். ராஜா டில்லியை கூப்பிடுங்கள்". நான் சற்று குழம்பினேன். என்னடா இது. சென்னைக்கு போன் செய்துவிட்டு டில்லி நபரை அழைக்கிறாரே.  நம் அணியில் ராஜா என்று ஒருவர் உள்ளார். ஒருவேளை அவராக இருக்குமோ என்று ராஜாவிடம் போன் தந்தேன். கடைசியில் அவர்தான் அந்த பெண் எதிர்பார்த்த நபர். என் நண்பனிடம் விவரம் கேட்டேன். அவன் "மாப்பு, ராஜாவோட அப்பா பேரு டில்லி. அது தெரியாமா நீ பல்ப் வாங்குனியே. ஹே... ஹே.." என்று கொக்கரித்தான். விட்ரா விட்ரா..சிவா. சண்டைனா சட்ட கிழியத்தான செய்யும். இல்லன்னா தொழில் பண்ண முடியுமா..
..................................................................................                                                     

(பப்)படம்:
(பழசா இருந்தாலும் மொறு மொறுன்னு இருக்குல்ல) 

........AND THE OSCAR GOES TO.....
                                                             

http://www.youtube.com/watch?v=_HT5fiTOzF0
....................................................................


ஆப் பாயில் :


பக்கிரி: "டேய், அண்ணனுக்கு ஒரு முட்ட போட்டுட்டு போ"
420:  "யாரு நீ. ஒனக்கு எதுக்கு நா முட்ட போடணும்?"
பக்கிரி: "யாரா? ஜெயிலுக்கு புதுசா நீ. ஆமா, நீ பாக்கெட் போட்ட பணத்துல எத்தன சைபர் இருக்கும்?"
420: "பத்தாயிரம். அப்ப நாலு சைபர்"
பக்கிரி: "ஹே ஹே.. நா அடிச்சா பணத்துக்கு அஞ்சி சைபர். இப்ப என்ன சொல்ற"
420: "இந்தாங்கண்ணே...என் முட்ட"
பக்கிரி: "அது. கெளம்பு. அது யாரு புதுசா இன்னொருத்தரு? அல்லோ...எக்கீஸ் மீ...என் தட்டுல உங்க முட்டைய போட்டுட்டு கெளம்புங்க?"
840:  "யாருடா நீயி?"
பக்கிரி: "என்னாது..நா யாரா. பாம்ப் பக்கிரி. ஒரே ஒரு குண்டு. பொறி உருண்ட சைசுல. அப்படி லேசா சுண்டி விட்டேன். ஒரு இன்ஸ்பெக்டர், நாலு பி.சி. ஸ்பாட் அவுட்"
840: "ஓ"
பக்கிரி: "ஓ..வா. ஏன்யா இவ்ளோ லென்க்தா டயலாக் பேசி இருக்கேன். ஒரே வார்த்தைல ஆப் பண்ணிட்ட. ஆமா ஆப்ட்ரால் நீ என்ன பண்ணி இருப்ப. நீ அடிச்ச பணத்துல மிஞ்சிப்போனா எத்தனை சைபர் இருக்கும். ஒண்ணு, ரெண்டு, நாலு, ஏழு....??"
840: " 1,760,000,000,000.  நீயே எண்ணிக்க "   
பக்கிரி: "அய்யாடி! பத்து முட்டயா???  பிரதர்...இனிமே நீங்கதான் தலைவர். நான் உங்க அடிம. இனிமே நீங்க ஒரு கோடு போட்டு நிக்க சொன்னா அந்த இடத்துலயே கெடையா கெடப்பேன். இந்தாங்க இது என் முட்ட. நீங்க சாப்டுங்க. கார்டன்.. சாரி வார்டன் கூப்புடறாரு..நான் கெளம்பறேன். அவ்வ்..."
........................................பாயசம்: 


                                                            
 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மகுடம் சூடப்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது விஜய் டி.வி.யில் செய்து வரும் 'அது இது எது'  எனும் நிகழ்ச்சியை சமீபகாலமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிமிக்ரி மூலம் புகழ் பெற்றவர்கள்  ஒரு மணி நேரம் தொய்வின்றி, குறிப்பாக மிமிக்ரி செய்யாமல்  வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துவது சுலபமல்ல. அதை இவர் செய்து வருவது பாராட்டத்தக்கது. தான் அனைவரையும் கிண்டல் அடிப்பது, தன்னை மடக்க நினைப்பவர்களிடம் 'கோல்' வாங்காமல் பெரும்பாலும் தப்பிப்பது, 'சிரிச்சா போச்சி' சுற்றில் வரும் கலைஞர்கள் சற்று போர் அடிக்க ஆரம்பித்தால் "ஹலோ, அதெல்லாம் சரி. கான்சப்ட் எங்கே?" என்று வாருவது என வாரா வாரம் அசத்துகிறார் மனிதர். என்று வெள்ளித்திரையில் கால் பதிக்க போகிறார் என்று தெரியவில்லை. நாயகன்/நகைச்சுவை நடிகர் இரண்டுக்குமான தகுதி இவருக்கு உள்ளது என்று நம்புகிறேன். இவரைப்போலவே திறமை உள்ள ஆதவன்('கலக்கப்போவது யாரு' வெற்றியாளர்), மேலும் உயரத்தை தொடும் நாள் படைப்பாளிகள் கையில்தான் உள்ளது.   

.............................................
Pics,Video: Google,Youtube.
..............................................


Saturday, February 5, 2011

ஆடுகளம் படு தோல்வி - சந்தேகமே இல்ல!எரிமலை எப்படி பொறுக்கும்!
கலின்ஜர் /ஸ்டாலின் அண்ணன்/ மேயர் சாரு அல்லாருக்கும் ஒரு கட்தாசி!

இன்னாங்க இது?  பள்ளிக்கூடம், கல்லூரி, வேல செய்ற எடம் இப்படி எங்க போனாலும் எங்க பின்பக்கம் தேய நெருப்பு பத்திக்கிற வரைக்கும் ஒக்கார்றோம். அது எங்க விதி.  படிக்க போற புள்ளைங்க நேரம் கெடச்சா மெரினால கிரிக்கட்டு வெளாடின்னு குஜாலா இருந்தானுவோ. கொஞ்ச நாளிக்கி முன்னாடி எந்த மவராசன் கண்ணு உறுத்திச்சின்னு தெர்ல, அங்க   புள்ளைங்க ஆடக்கூடாதுன்னு சட்டம்  போட்டாங்க. காச வச்சிகினு என்ன பண்றதுன்னு தெரியாம கண்டதையும் தின்னுட்டு தொப்பை கரைய  குறுக்கயும், நெடுக்கையும் ஓடுற ஒண்ணு ரெண்டு பெரும் புள்ளிங்க பத்த வச்ச வேலையான்னு சந்தேகம் வருது. கேட்டா பந்து இங்க படுது, அங்க படுதுன்னு புகார் குடுக்றாங்க.  இல்லாதவன் வூட்ல இருந்து ஒரு சச்சின், சேவாக் வந்தா உங்களுக்கு இன்னாப்பா காண்டு. ட்ரிப்லிகேணி,சேப்பாக்கம் சுத்தி இருக்ற புள்ளைங்க எங்க போய் வெளாடும்?

ஒரு தபா போலீஸ்கார் ஒருத்தர் என் தோஸ்த பாத்து "மெரினால ஆடாத" அப்டின்னு மொறப்பா சொல்ட்டாரு. பையன் சூடான ஆளாச்சா, இன்னா பண்ணான் தெர்மா? "இங்க தான ஆடக்கூடாது. கடல்ல போய் ஆடுறேன்" அப்டின்னு சொல்லிக்கினு ரெண்டு அடி தூரம்தான் கடலுக்குள்ள போனான்.  திடீர்னு "டுமீல், டுமீல்" சத்தம். "இன்னாடா, ஓடியாந்துட்ட" ன்னு கேட்டா, "ஜெயசூரியா நாட்டு போலீஸ்கார் சுட்ராறு"ன்னு கத்துனான். இப்பல்லாம் கடல்ல லேசா கால் வச்சாலே "டுமீல்" சத்தம் கேக்குதே. பேசமா எங்க பாட்டன் சொத்து மெரினாவை அந்த நாட்டு ஆளுங்களுக்கு வித்துட போறேன். எதுக்கு எப்ப பாத்தாலும் வம்பு. கொஞ்ச நாளா கடற்கரை வாலிபால் அப்டின்னு புதுசா ஆரம்பிச்சி கீறாங்க. வெள்ளைக்கார பொண்ணுங்க எல்லாம் தம்மா தூண்டு துணி கட்டினு ஆடுது.  வாய்ல காக்கா கக்கா போறது கூட தெரியாம நெறிய பேரு பொளந்துகினு பாக்ரானுவ. அதுக்கு மட்டும் அனுமதி தர்றீங்க.  என்னாப்பா. ஒரு நியாய, தர்மம் வேணாமா? பாத்து செய்ங்க.

                                             மெரினால ஆடுற நம்ம வூட்டு புள்ளங்க!

அடுத்து இந்த தி. நகர் வெங்கட்நாரயணா சாலைல கீற மைதானம். அங்க கூட பெரிய வூட்டு ஆளுங்க பாண்டி பஜார் வர்ற சொல்லோ வண்டிய நிறுத்த எடம் இல்லைன்னு இந்த மைதானத்துல வண்டி விட எடம் வளைக்க நெனச்சீங்க. பகீர்னு ஆய்ருச்சி. அந்த சுத்துவட்டார பசங்க விளையாட இருக்குற ஒத்த எடத்துக்கும் வேட்டு வச்சிடுவாங்களோன்னு படா குமுறலா போச்சி. நல்ல வேலை, பஞ்சாயத்து தலைவர்(உச்ச நீதிமன்ற நீதிபதி ஐயா) தீர்ப்பால தப்பிச்சது அந்த எடம்.  ஒரு காலத்துல நிம்மதியான நடந்து போக வாக்கான எடமா இருந்த வெங்கட்நாரயணா சாலை இப்போ ஏகப்பட்ட கடைங்க தொறந்ததால, கொச கொசன்னு இக்குது. இதுக்கு எதாச்சும் பண்ணுங்க வாஜ்யாரே! எங்க கொள்ளு பாட்டன் சொத்து பெசன்ட் நகர் பீச்சுல வேணும்னா இலவச வண்டி நிறுத்த எடம் தர்றேன். பெரிய வூட்டு ஆளுங்க அங்க வேணும்னா வந்திங்கள ஓரம் விடட்டும். ரங்கநாதன் தெருவை அனுமார் சஞ்சீவி மலைய தூக்குன மாதிரி அலேக்கா தூக்கி பெசன்ட் நகருக்கு மாத்திருவோம்.

                                    வெங்கட்நாரயணா ரோடு - மாநகராட்சி கிரவுண்டு.

ரெண்டு நாளைக்கு முன்ன உங்க ஆளுங்க செஞ்சத பாத்து செம கடுப்பு  ஆயிருச்சி தலிவா. சைதாப்பேட்ட  டீச்சர்ஸ் காலேஜ்(ஆசிரியர் பள்ளி) மைதானத்துல ஆளும் கட்சி கூட்டம்.  மொத்த மைதானத்தையும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. "போதும் விடுங்க. ரொம்ப தோண்ட வேணாம்" அப்டின்னு சொன்னா "சும்மா இரு. இன்னும் கொஞ்சம் தோண்டுனா சோசியலிசம் கெடச்சாலும் கெடைக்கும்"ன்னு சொல்றாங்க. வறுமையின் நெரம் செவப்பு.. அவங்களும் பாத்துட்டாங்க போல. சும்மா ஈடன் கார்டன் கணக்கா பப்பரப்பேனு இருந்த மைதானம். நாயித்து கெளம ஆனா தி.நகர், சைதாப்பேட்ட, கோட்டூர்புரம், தேனாம்பெட்ட ...இன்னும் நெறிய எடத்துல இருந்து வயசு பசங்க, பெரியவங்க அல்லாரும் வந்து ஆடி சந்தோசமா இருந்த எடம். கொஞ்ச வர்சம் முன்னாடி பேருந்து நிலையம் கட்ட மைதான நிலத்தை கொஞ்சம் லவட்டுனாங்க. போன மாசம் இன்னாடான்னா 'மெட்ரோ' ரயிலுக்கு சொந்தம் அப்டின்னு பலகை வச்சிட்டாங்க.

ஒங்க கட்சி கூட்டம் முடிஞ்ச பொறவு "மச்சி பிட்ச் நாசமா போச்சி. ஆடுகளம் படு தோல்வி - சந்தேகமே இல்ல" அப்டின்னு என் சகல பொங்குனான். என்னதான் இனிமே மண்ணு போட்டு மூடுனாலும் முன்ன மாதிரி வருமா. ஒரு பிட்ச் ரெடி பண்ணவே எத்தன நாள் ஆவுது. அங்க ஒரு ஒரு அணிக்கும் ஒரு ஒரு பிட்ச். ஆச, ஆசையா வேர்வ சிந்த உழுதது. அந்த பிட்ச நம்பி எப்பயாச்சும் ஒண்ணு ரெண்டு சிக்ஸ் அடிச்சி பொழப்ப ஓட்டிட்டு இருந்தேன். அதுவும் போச்சி. இனிமே அடுத்த ஆட்டத்துல எதிராளி என் மூஞ்ச பாத்து பந்த வீசுவானுங்களே..நெனச்சாலே பொறி கலங்குது. இலவச கவசம் வழங்கும் திட்டம் எதுனா கீதா???  தயவு செஞ்சி இனிமே ஏழை, நடுத்தர வூட்டு புள்ளங்க வெளையாட தடை போடாதீங்க வாஜ்யாரே! நாளைக்கி வேலைக்கி போக ஆரம்பிச்சிட்டான்னா, அப்புறம் கல்யாணம், புள்ளகுட்டி.. பேய் அறஞ்ச மாதிரி திரியப்போறான். இப்பயாச்சும் குஜாலா இருக்கட்டுமே. விட்ருங்க!

சைதாப்பேட்ட பிட்ச் சரி ஆவ ரொம்ப நாள் ஆவும். உங்க தொகுதில கீற  சேப்பாக்கம் மைதானத்துல வெளையாடலாம்னா.. ஒலக (மகா) கிர்கேட் கோப்பை நடத்துற பயலுவ முன்பதிவு பண்ணிட்டானுவ. இப்ப எங்க போயி வெளையாடுவேன்??  சரி, நேரு உள் வெளயாட்டு அரங்கத்துல பசங்கள கூட்டிக்கினு போய் ஆடலாம்னு பாத்தா, அங்க எப்ப பாத்தாலும் அந்த விழா, இந்த விழான்னு சொல்லி துண்டு போட்டு எடம் புடிச்சுடறாங்க. ஒன்னியும் புரியல....ஒரே குஷ்டமப்பா..!!
.......................................................................
                                         
                                                           


Tuesday, February 1, 2011

மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்


                                                                        
கொத்துபரோட்டா, சாண்ட்வெஜ், பிரபா ஒயின்ஷாப் என்று பல பெயர்களில் பதிவர்கள் கலவைப்பதிவு இட்டு வருவது போல் நாமும் செய்தால் என்ன என்று பல நாட்களுக்கு முன்பே யோசித்ததுதான். தற்போதுதான் நேரம் அமைந்தது. என்ன பெயர் வைக்கலாம்?? மெட்ராஸ்பவன் என்று வலைப்பூவின் பெயர் இருக்கையில் நமக்கென்ன கவலை. அதனால் "மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்" என வைத்து விட்டேன். நம் ஹோட்டல் என்றுமே சுத்தமான சைவம்தான். எல்லாரும் வரலாம்.   
........................................

ஒளி...மாயம்-1  (SMS) 

தன் 24 வயது மகனுடன் ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார் ஒரு தந்தை. ஜன்னலோரத்தில் இருந்த மகன் உற்சாகமாய் கத்தினான் "அப்பா, இங்கே பாருங்கள் மரங்கள், செடிகள் எல்லாம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கின்றன". பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர்கள் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். அவன் மீண்டும் கத்தினான், "அப்பா, அதோ பாருங்கள் மேகங்கள் நம்மை பின் தொடர்ந்து வருகின்றன" . இதை கேட்ட ஒரு நபர் அவன் தந்தையிடம் "இவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்க்கலாமே? ". அதற்கு அவரின் பதில் "அவன் மருத்துவமனையில் இருந்துதான் வருகிறான். இன்றுதான் அவனுக்கு கண்பார்வை கிடைத்தது". 
..................................................
ஒளி...மாயம்-2  (SMS) 

கால்ப் விளையாட்டு போட்டியில் கண் பார்வையற்ற நபர் ஒருவர் வேகமாக முன்னேறி வருவது கண்டு பொறமை அடைந்தார் ஒரு முன்னணி வீரர். அவரிடம் சென்று "நாளை நாம் இருவரும் ஒரு போட்டியில் மோதிக்கொள்வாமா?" என்றார். அதற்கு பார்வை அற்ற நபர் சொன்ன பதில் "கண்டிப்பாக. ஒரே ஒரு நிபந்தனை. போட்டியை இரவில் வைத்து கொள்ளலாம்".
...........................................

என் கமன்ட்:

                                                                   
............................................

இந்த வார நிழற்படம்:


                                            உன் ஆட்சிக்காலத்தில் நாங்கள் வாழாதது
                                                     சாபக்கேடின்றி வேறென்ன....

.....................................

பயாஸ்கோப்:
( யூட்யூபில் என் கண்ணில் பட்டது)  

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்???????????
                                                                  

..............................................
Pics,Video: Google, Utube.
................................................

 'நெறைய பேர் சாப்புட்டா' தொடர்ந்து பரிமாறப்படும். மீண்டும் சந்திப்போம். 

Related Posts Plugin for WordPress, Blogger...