பாட்சாவுக்கு பிறகு தியேட்டரில் நான் பார்த்த ரஜினி படம் எந்திரன். பூவே உனக்காக.. நான் பார்த்த கடைசி விஜய் படம். அதற்குப்பிறகு ஏனோ பார்க்கவில்லை. நேரம் அமையவில்லை. மற்றபடி ஒரு குறிப்பிட்ட நடிகரின் படங்களை பார்க்காமல் அடம் பிடிப்பவனல்ல. பிரியமுடன், பிரியமானவளே, கில்லி போன்ற படங்கள் எனக்குப்பிடித்த விஜய் படங்கள். சமீபகால விஜய் படங்களை பார்த்து மக்கள் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடியதை கேள்விப்பட்டேன். ஆனால் காவலன் படம் வரும் முன்பே விஜய்யை பற்றி மட்டமாக விமர்சித்து பல எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டன. இப்படி பல்முனை தாக்குதலில் சிக்கிய விஜய் காவலன் 'பூமிநாதனாக' ஜெயித்தாரா என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால், காவலன் நல்ல பொழுதுபோக்கு படமாக இருந்ததா என்று கேட்டால் முதல் பாதி ஆம் இரண்டாம் பாதி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயக்குனர் 'சித்திக்'கால் இரண்டாம் பாதி ஆமை வேகத்தில் நகர்ந்து ஒரு வழியாக முடிகிறது. அம்மா தாயே அசின்...உன்னை மறக்கவே முடியாது.
குடும்பத்துடன் மக்கள் கூட்டம் காவலனை பார்க்க வந்ததற்கு 'சித்திக்' எடுத்த 'பிரெண்ட்ஸ்' படம் முக்கியமான காரணம். ஒரு மாஸ் ஹீரோ காமெடி காட்சிகளிலும் கலக்கினால்தான் அவன் நிலைத்திருக்க முடியும். அந்த வகையில் காவலன் படத்தில் நகைச்சுவை விருந்து படைக்கிறார் விஜய். கூடவே வடிவேலும். ரஜினிக்கு பிறகு குழந்தைகள் ஏகமனதாக மிகவும் ரசிப்பது விஜய் மற்றும் வடிவேலு ஆகிய இருவரை மட்டும்தான் என்பதை அரங்கில் ஒலித்த மழலைகளின் சிரிப்பொலி நிரூபித்தது. அசினுடன் கல்லூரிக்கு செல்லும் காட்சியில் பேசிக்கொண்டே லேடிஸ் டாய்லட்டில் நுழைவது, வடிவேலுவை மிரட்டும் காட்சிகள் என துறு துறுவென விஜய் செய்யும் அட்டகாசங்கள் கலக்கல். வடிவேலு ஓரளவு சிரிக்க வைக்கிறார். விஜய்யிடம் மொபைலை கொடுத்து விட்டு வடிவேல் சொல்லும் டயலாக் "யாரோ பார்வதி நம்பியாராம் சார்" அதற்கு விஜய் "டேய் லூசு, அது பார்வதி நம்பியார் இல்ல. 'ப்ரைவேட் நம்பர்' டா" என சொல்லும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. டிஸ்யூம் படத்தில் 'அமிதாப்' எனும் ரோலில் வரும் குள்ளமான மலையாள நடிகர் அறிமுகாகும் காட்சி நல்ல நகைச்சுவை. அவரை வரவேற்று மாலை போட, அதனுள் புகுந்து வெளியே வந்து அவர் சொல்லும் வசனம் "மாலையா..ஆர்ச் என்று நினைச்சேன்". நல்ல வசனம்.
காவலன் கண்டிப்பாக விஜய்க்கு மீண்டும் ஒரு மலர்ச்சியை தரும் என நம்பி இருக்கையில், இரண்டாம் பாதியில் அசின் கிளிசரின் மழை பொழிந்து சொதப்புகிறார். மேடம் கஷ்டப்பட்டு நடிக்க முயற்சி செய்கிறார். நடக்கவில்லை. விஜய்யின் காதலை சோதிக்க அசின் மேடம் ப்ளட் டெஸ்டை தவிர எல்லா டெஸ்டும் வைக்கிறார். நமக்குதான் ப்ளட் கொதிக்கிறது. இயக்குனர் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டதால் படம் நன்றாக ஓடுமா என தெரியவில்லை. வேலாயுதம் வெற்றி பெறலாம். சீமானின் 'கோபம்' விஜய்க்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என நினைக்கிறேன். பார்ப்போம்.
இயக்குனர் 'சித்திக்' அவர்களே:
* சமீபகால தமிழ் சினிமாவை நீங்கள் பார்த்திருப்பின் காவலனில் கண்டிப்பாக மாற்றங்கள் செய்திருப்பீர்கள். காவலன் நல்லதொரு குடும்பப்படம் என்பது உண்மையே. ஆனால் ஆரம்பத்தில் இருந்த வேகம் போகப்போக குறைந்து கொண்டே செல்கிறது. பாடிகார்ட் ஆக வரும் விஜய் அசினுடன்(அம்முகுட்டி) லவ் செய்யும்போது, அவரையும் ஒரு பாடிகார்ட் வைத்து கண்காணித்து இருக்கலாம்.
* விஜய்யை ஏமாற்ற டாய்லட்டில் இருந்து வெளிவரும் அசின் இஸ்லாமிய பெண்களின் உடையான 'பர்தா' போட்டு வருவது போல் காட்டுகிறீர்கள். தங்கள் முகத்தை மறைக்க சில நடிகைகள் கோர்ட் வாசலில் பர்தா போட்டு செல்வதை இஸ்லாமிய மக்கள் கடுமையாக ஆட்சேபித்ததை கேள்விப்பட்டீர்களா இல்லையா?? அதுவும் டாய்லட்டில் இருந்து அந்த உடையை ஒரு பெண் போட்டு வருவதாக காட்டியது எதற்கு??
* ராஜ்கிரண் போன்ற நடிகர்களை 'காட்பாதர்' அல்லது ஊர் பெரியவர் என்று காட்டுவதை கொஞ்ச காலத்திற்காவது நிறுத்துங்கள். அதை செய்ய பலருண்டு. தவமாய் தவமிருந்து, முனி போன்ற படங்களையும் மனதில் கொண்டு அவரை உபயோகப்படுத்துங்கள்.
* அதே போல்தான் எம்.எஸ். பாஸ்கரும். நின்றபடி தூங்கும் சிரிப்பு வராத ரோலில் இப்படி ஒரு சிறந்த கலைஞனை விட்டால் வேறு ஆள் இல்லையா. வெள்ளித்திரை, மொழி போன்ற வேடங்களில் அவரை நடிக்க வையுங்கள்.
* அசினின் தோழி திடீரென விஜய் மனைவி ஆவதும், ராஜ்கிரண் சொன்னதும் விஜய் அசினை அழைத்து செல்வதும்..என்னவோ போங்க.
* குத்துப்பாட்டு, ஆபாசம், வன்முறை இல்லை. அது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதே சமயம் படமும் சுவாரஸ்யமாக தொய்வின்றி செல்ல வேண்டுமே? இன்று படம் பார்க்கும் மக்கள் ஐந்து நிமிடம் மொக்கையாக இருந்தாலே டென்சன் ஆகி விடுகின்றனர். அதை கருத்தில் கொள்ள வேண்டாமா.
காவலன் படத்தை பொறுத்தவரை விஜய் தன்னால் முடிந்த 'பெஸ்ட்' ஐ கொடுத்து இருக்கிறார். இயக்குனர் தவறினால் அவர் பொறுப்பாக முடியாது.
காவலன்: விஜய் கலக்கல். அசின் சொதப்பல். சித்திக் சறுக்கல்.
தியேட்டர் நொறுக்ஸ்:
சென்னை சத்யம் தியேட்டரில் தம்மாதூண்டு வெஜ் பப் 30 ரூபாய். அவர்கள் சொந்தமாக தயாரிக்கும் உணவுகளே(குளிர்பானம் தவிர) காண்டீனில் பெருமளவு விற்கப்படுகின்றன. இரண்டு வாங்கினேன். சிறிது சாப்பிட்டதும் என் தாய் சொன்னது "ரொம்ப உப்பா இருக்கே". கடுப்பாகிவிட்டது. படம் முடிந்ததும் காண்டீன் நிர்வாகியிடம் பேசினேன். "வெளில பத்து ரூவாக்கு விக்கிற வெஜ் பப் இங்க 30 ரூவா. தரம் இல்லையே. இதை தயார் செய்கிற Chef ஒரு சில சாம்பிள்களை சாப்பிட்டுவிட்டு விற்பனைக்கு விட அனுமதித்தால் நல்லது. வெளியே இருந்து கொண்டு வரும் உணவையும் அனுமதிக்க மறுக்கிறீர்கள். இது சரியா?? " என்று கேட்டேன். கண்டிப்பாக சரி செய்கிறோம் என்றனர். "அடுத்த காட்சிக்கு மக்கள் வரும் முன்பாவது வெஜ் பப்களை மாற்றுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்து ஒரு மெயில் கூட அவர்களுக்கு போட்டுவிட்டேன். பல வருடம் சத்யம் தியேட்டரில் படம் பார்த்ததுக்கு நன்றியாக அவர்கள் போட்ட 'உப்பை' தின்ன இது ஒரு சந்தர்ப்பம். விதி வலியது.
சத்யம் தியேட்டரின் மாத இதழான 'சிம்ப்லி சத்யம்' ஒன்றை வாங்கினேன். அட்டையில் சுருதிஹாசன். மூன்றாம் பக்கத்தில் 'கஸ்டமர் இஸ் கிங்' எனும் பகுதியில் யாரோ பாராட்டி கடிதம் போட்டிருக்கிறார். வெஜ் பப் சாப்பிடாமல் 'எஸ்கேப்' ஆனவரோ? கடைசி பக்கத்தில் சுகாசினி எழுதும் தொடர் கட்டுரை. அக்கா அடிக்கடி லண்டன், கொரியா என பல ஊரு பிலிம் பெஸ்டிவல் பற்றி எழுதுவார். நமக்கு உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க தெரியாது. உலக லெவலுக்கு முடியுமா. ஒரு முறை ஜெயா டி.வி. 'ஹாசினி பேசும்' படம் நிகழ்ச்சியில் இவர் பேசியது என்னை கடுப்பேற்றியது. அவர் சொன்னது "நம்ம ஜனங்க சத்யம் தியேட்டர்ல கூட படம் பாக்கும்போது நடுவுல செல் போன்ல பேசி டிஸ்டர்ப் பண்ணுவாங்க". அது என்ன "சத்யம் தியேட்டர்ல கூட". 120 ரூவா குடுத்தா யார் வேண்டுமானாலும் அங்கு படம் பார்க்கலாம். பணக்காரன் மட்டும்தான் அங்கு படம் பார்க்கனும்னு கோர்ட்ல தீர்ப்பு சொல்லி இருக்காங்களா என்ன? பேசினால் பேசட்டுமே. தனக்கு தெரிந்த நபரிடம் சில நிமிடம் பேசுவதை சகித்து கொள்வதில் தவறில்லையே. நம்மை டிஸ்டர்ப் செய்யும் வண்ணம் சத்தமாக பேசினால் அவர்களிடம் சொல்லி புரிய வைக்கலாம். அதற்காக சத்யம் தியேட்டரை தூக்கி வைத்து பேசவேண்டுமா? நம் மக்களை நக்கல் அடிக்க என்ன அவசியம். மேடம், மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும்
சில மேல்தட்டு மக்களை விட, டென்ட் கொட்டாயில் படம் பார்க்கும் ரசிகன் பயங்கர புத்திசாலி. அவன் ரசிக்காமல் நீங்கள் இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது. மற்ற அனைவரும் கூட. சரிதானே?
பொங்கல் ரேஸ்..வென்றது யார்?
வெற்றி(மாறனின்)
பொங்கல்!
ரீமேக் படங்களான சிறுத்தை மற்றும் காவலன் இரண்டும் முதல் பாதியில் நல்ல நகைச்சுவையுடன் இருந்தாலும், இரண்டாம் பாதியில் சோர்வடைய வைத்து விட்டன. ஆடுகளம் ஓரிரு சறுக்கல்களுடன் இருந்தாலும், பொங்கல் ரேசில் சேவல் சிறகடித்து பறக்கிறது என்றே சொல்லலாம். சேவற்கொடியை பறக்கவிட்ட வெற்றி மாறன் மற்றும் தனுஷ் இருவருக்கும் சினிமா ரசிகர்கள் சார்பாக
THUMBS - UP.
எச்சரிக்கை:
இளைஞன் படம் பற்றி விமர்சனம் போடலையே என்று கேட்காதீர்கள். படம் இன்னும் பார்க்கவில்லை. அப்படி என்றால் ஆடுகளம் தான் சிறந்த படம்னு எப்டி சொல்ற என்று கிளறாதீங்க. உங்க ப்ளான் என்னனு எனக்கு தெரியும். நீங்க பாத்துட்டு சொல்லுங்க. சன் பிக்சர்ஸ் படம் பொங்கலில் சிறந்த படம் என்றால் இளைஞன் டீம் கோபித்து கொள்ளாது. அனைவரும் ஒரு குடும்பம்தானே. என்ன விட்ருங்க... சாமியோ!!
.........................
Photos: Google.
My other blog:
nanbendaa.blogspot.com
...............................