மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!
ஸ்டார்ட்டர்:
பெருத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அம்பேத்கர் திரைப்படத்தை இன்று காலை திரையில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பாரதி திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே போல் ஒரு புதுமுகம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என படம் பார்ப்பதற்கு முன் எண்ணி இருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து தன்னை இந்தியாவின் சிறந்த நடிகன் என மீண்டும் நிரூபித்து விட்டார் மம்முட்டி. ஒவ்வொரு இந்தியனும் தவறாமல் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் ஜப்பார் படேல் மற்றும் கலை இயக்குனர் நிதின் சந்திரகாந்த் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்!
சாப்பாடு:
ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களை காட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது படம். நடக்கையில் கூட முதுகில் துடைப்பம் கட்டிக்கொண்டு தெருவை சுத்தம் செய்தல், எச்சில் தரையில் துப்பாமல் இருக்க கழுத்தில் பாத்திரம் கட்டப்பட்டுதல் என ஆதி காலத்தில் அல்லல்பட்ட மக்களின் நிலையை காண்கையில் இதயம் அதிர்கிறது. பரோடா சமஸ்தான மன்னரின் பொருளுதவியுடன் அயல்நாட்டில் சட்டம் மற்றும் பொருளாதாரம் படிக்கும் அம்பேத்கர் பாரதம் திரும்பி 'கீழ் ஜாதி' என அழைக்கப்பட்ட மக்களுக்காக போராடும் காட்சிகளுடன் நகர்கிறது 'அம்பேத்கர்'. அவர் பாரதம் திரும்பி தன் மக்களுக்காக களத்தில் இறங்குதல், இல்வாழ்வில் படும் துயரங்கள், மற்ற மத பிரமுகர்களிடம் போராடுதல் என பல காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியுடன் அம்பேத்கர் கருத்து மோதல் புரியும் காட்சிகளில் அனல் பறக்கிறது. படம் முழுக்க ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இடிமுழக்கமாக வசனங்கள் ஒலிக்கின்றன. பல வசனங்களுக்கு அரங்கில் கைதட்டல். அவற்றில் சில:
அம்பேத்கரின் தோழர்: "மகாத்மா நம்மை ஏன் பேச அழைக்கிறார்"
அம்பேத்கர்: "நம் இன மக்களை மந்தைகள் ஆக்க".
காந்தியின் கொள்கைகளை அம்பேத்கர் ஏற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டு முன் போராடும் காந்தியின் ஆதரவாளர்களிடம் அம்பேத்கர்:
"உங்கள் தலைவர்களுக்கு அன்றாட வாழ்வு ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் உழைத்தால்தான் எனக்கு சோறு. தொந்தரவு செய்யாதீர்கள்"
வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதை எதிர்த்து ஆங்கில உடமைகளை எரித்து காந்தி போராட்டம் செய்யப்போவதாக நண்பர் சொல்கையில் அம்பேத்கர்:
"காந்தி எரிக்க வேண்டியது நிறைய இருக்கிறது(வர்ணாசிரம எண்ணம்)"
லண்டனில் படிக்கையில் அங்கு அவர் இடது கையில் உணவு உண்பதை கண்டு ஆங்கிலேயர்கள்: "உங்கள் நாட்டில் இடது கையால் உண்டு, வலது கையால் அடி பாகத்தை கழுவுபவர்கள் நிறைய இருக்கின்றனராமே?"
அம்பேத்கர்: "உங்கள் நாட்டில் வாரம் ஒரு முறைதான் குளிப்பீர்கள் என கேள்விப்பட்டேனே? "
இந்து மதவாதிகள்: "இந்து மதத்தில் இருந்து கீழ் ஜாதி மக்கள் பிரிந்து செல்வதால் நாட்டில் பிரிவினை உண்டாகும்".
அம்பேத்கர்: "நீங்கள் தானே எங்களை அசுத்தமானவர்கள் என்று சொன்னீர்கள். நாங்கள் விலகுவதால் உங்கள் மதம் சுத்தம் அடையுமே".
மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருக்கையில், அம்பேத்கர் அவரிடம்:
"புனித யாத்திரை, உண்ணாவிரதம் எல்லாம் சரிப்பட்டு வராது. அரசியல் உரிமை பெறுவதே எங்களுக்கு ஒரே தீர்வு. தாங்கள் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதை குறைத்து கொள்ளுங்கள். உடல் நலத்திற்கு கேடு" (அரங்கில் அதிக கரவொலியை அள்ளிய வசனம் இது).
"கீழ்சாதிக்காரன் ஒருவனை சங்கர மட தலைவனாக்கி..ஆயிரக்கணக்கான பிராமணர்கள் நித்தம் அவன் காலில் விழ செய்வீர்களா? "
நண்பர்களுடன் ஆலோசனை செய்துகொண்டிருக்கையில், வேலை ஆளிடம் அம்பேத்கர்:
"தேநீரில் சர்க்கரை கலக்காதே"
நண்பர்கள்: "உனக்கு சர்க்கரை வியாதியா" அம்பேத்கர்: "ஆம்"
இந்து சாமியார்: "சர்க்கரை வியாதி என்றால் தினமும் வேப்பிலையை நீரில் கலந்து குடி. ஆனால் கசப்பாக இருக்குமே?"
அம்பேத்கர்: "என் வாழ்நாள் முழுக்க கசப்பைத்தானே பார்த்திருக்கிறேன்"
இப்படி மேலும் பல நறுக்கு தெறிக்கும் வசனங்கள். சுதந்திர இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பும் தன் கொள்கைகள் முழுமை அடையாத வெறுப்பில் பதவியை துறக்கிறார் அம்பேத்கர். இறுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் புத்த மதத்தை தழுவும் காட்சியுடன் நிறைவு பெறுகிறது 'அம்பேத்கர்'. இப்படிப்பட்ட படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்தால் அவர்களின் நடிப்புத்திறனை முன்னிறுத்தி கதாபாத்திரத்தின் இயல்பு பின்னுக்கு தள்ளப்படும். ஆனால் மம்முட்டி அம்பேத்கராக வாழ்ந்து இருக்கிறார் என்பது நூறு சதவீதம் உண்மை. இப்படிப்பட்ட நல்ல படைப்புகள் திரைக்கு வரும் முன் எத்தனை சோதனைகளை சந்திக்கின்றன. சத்யம் போன்ற முன்னணி திரை அரங்குகள் இத்திரைப்படத்தை பிரதான காட்சி நேரத்தில் குறைந்தது ஐம்பது நாட்கள் ஓட்டினால், அது நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் ஒரு சமுதாய தொண்டாகவே இருக்கும். ஆனால், இந்த உன்னத படைப்பு முற்றிலும் ஒதுக்கப்பட்டு அதிகாலை காட்சிகளாக ஓரிரு நாட்கள் மட்டும் திரையிடப்படும் கொடுமையை என்ன சொல்ல.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனின் படமும் ஒதுக்கப்படுகிறதே, இதை தட்டி கேட்க கலியுக 'அம்பேத்கர்கள்' எவரும் இல்லையோ?. அதனால் என்ன, நள்ளிரவு ஒரு மணி காட்சி போட்டால் கூட 'அம்பேத்கர்' படம் பார்க்க குறிப்பிட்ட அளவில் நல்லோர் கூட்டம் கண்டிப்பாக வரும் என்பது என் திண்ணமான எண்ணம். அதற்கு அரங்கில் பலமுறை 'அம்பேத்கரின்' வசனங்களுக்கு கிடைக்கும் கைதட்டல்களே சாட்சி!
என் இனிய நண்பர்களே, உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:
அம்பேத்கர் திரைப்படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டுகிறேன். தாங்கள் வாழும் இடங்களில் இத்திரைப்படம் வராவிடினும் அதிகாரபூர்வ குறுந்தகடு வெளிவரும் நாளில் அதை வாங்கி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமின்றி உங்கள் வலைப்பதிவில் இத்திரைப்படத்தை காண மற்ற நண்பர்களுக்கும் கோரிக்கை விடுங்கள். என்னைப்போன்ற புதிய பதிவர்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை கையளவே உள்ளதால், பிரபலமான பதிவர்கள் இதை முன் நின்று செய்தால் என் வாழ்நாள் முழுதும் நன்றி உடையவனாக இருப்பேன். மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு கருத்துரை இடும்போதும் இப்படத்தை காண பரிந்துரை செய்ய வேண்டுகிறேன். ஜாதி பெயரால் இன்றும் பல இந்திய கிராமங்களில் ஒதுக்கப்பட்டு அடிமைகளாக வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒரு சிறு ஒளி ஏற்றி வைக்கும் வாய்ப்பை ஏற்குமாறு தலைவணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் வாழ்நாளில் பார்த்த உன்னதமான படமாக இது இருக்கும் என உறுதி அளிக்கிறேன். மீண்டும் சந்திப்போம். நன்றி!
...........................................................
சென்னையில் 'அம்பேத்கர்' :
ஆல்பர்ட்: 11.30 AM
A.G.S : 10 AM
மாயாஜால்: 11.30 AM
P.V.R - 9 PM
அம்பத்தூர் ராக்கி: 11.30 AM & 10 PM
சந்திரன்: 11.30 AM
சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், அபிராமி அரங்குகளில் இன்று மட்டும் காலை காட்சி போடப்பட்டது. இனி எப்படி என்று தெரியவில்லை.
.........................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
12 comments:
அதிவேகத்தில் எழுதிவிட்டீர்கள் போல... நானும் எழுதிவிட்டேன்... ஆனால் நாளை காலையே வெளியிடுவேன்...
அனைத்து வசனங்களை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பது மிகவும் கடினம்... அதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்...
படத்தை முடிந்த அளவு வேகமாக நண்பர்களிடம் கொண்டு சேர்க்க எண்ணியதால்தான் பார்த்தவுடன் பதிவிட்டேன், பிரபா! உங்கள் பதிவை விரைவில் வெளியிடுங்கள்!
வசனங்கள் ஒவ்வொன்றும் பாராட்ட வைக்கிறது.
அருமையான விமர்சனம் தந்தற்கு நன்றிங்க.
இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு, இங்கே எனக்கு இன்னும் அமையவில்லையே என்ற வருத்தம் உண்டு.
....
You have a very nice blog. Best wishes! (following)
ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர் யாராவது ஒரு தலைவரைச் சந்திக்க விரும்புகின்றார்.அந்த நேரத்திலே யாரையும் சந்திக்க முடியாது.அம்பேத்கர் ஒருவர்தான் விழித்திருப்பார் என்றதும் அவரைச் சந்திக்கின்றார்.சிறிது நேரமே என்பது நீண்டு கடைசியில் வெளிநாட்டர் கேட்கின்றார்.மற்றத் தலைவர்கள் எல்லாம் தூங்கிவிட்டார்களே,நீங்கள் மட்டும் ஏன் இப்படி விழித்து உழைக்கின்றீர்கள் என்று.பாபாசாகேப் பதில் சொல்கிறார்"அவர்களுடைய மக்கள் விழித்திருக்கின்றார்கள் ஆகவே தலைவர்கள் தூங்குகின்றார்கள். என்னுடைய மக்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்,அதனால் நான் விழித்திருக்க வேண்டியுள்ளது".அம்பேத்கர் பிறந்தநாளான இன்று பல்ர் விழிக்க ஆரம்பிப்போம்.
மிக்க நன்றி சிவா.. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..! இதுவே சிறப்பானதுதான்.. போதுமானதுதான்..! இதுபோல் நிறைய எழுதிப் பழகுங்கள்.. எங்களது ஜோதியில் ஐக்கியமாகிவிடுவீர்கள்..!
வாழ்த்துக்கள்..!
என் பதிவிற்கு ஊக்கம் குடுத்த உண்மைத்தமிழன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
>>>சித்ரா, தமிழன் இருவருக்கும் என் நன்றி! >>>
மிக அருமையான் பதிவு
மெட்ராஸ் பவன் நகேஷ் பார்த்ததுமே சிரிப்பு அள்ளுது, அருமையான நகைச்சுவை நடிகர்
ஊக்கம் தந்த ஜலீலா அவர்களுக்கு என் வணக்கம்!
Post a Comment