CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 31, 2010

2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்!!

என்று தீரும் இந்த கொடுமை!!

அய்யா உசிதமணிகளே!!

ஒரு நிமிடம்............

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லி பொன்னான பொழுதுகளை இவ்வாண்டும் வீண் அடித்தீர்கள்..!!

பயன் ஏதுமின்றி கழிந்த கூட்டத்தொடர்களின் ஒவ்வொரு மணித்துளியும் குபேரர்களின் வரிப்பணம் மட்டுமல்ல..

80 வயதிலும் சுயமரியாதை இழக்காமல் இட்லி விற்று பிழைக்கும் பாட்டியின் பணம்.
உச்சி வெயிலில் எலும்பு தேய வண்டி இழுக்கும் முதிய குடிமகனின் பணம்.
குடும்பத்துடன் ஒரு நாளாவது இனிமையாக செலவு செய்த வாழ நினைத்து அது கை கூடாமல் வாழ்ந்து வரும் நடுத்தர குடும்ப அப்பாவிகளின் பணம்!!


                                                              

உங்கள் உயிர் காக்க தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி இதுதானா?????
வெள்ளுடையில் ஒரு துளி கறை பட்டால் கூட பொறுக்காத தங்களுக்கு எப்படி தெரியும்...
உடல் முழுக்கு சிகப்பு ரத்தம் வெளியேற உயிரை விட்டவனின் வலி..


                                                                

வரும் ஆண்டாவது கோடான கோடி மக்களின் சாபத்திற்கு ஆளாகாமல்..
வளர்ச்சிப்பணியில் செலவிடுங்கள் தங்கள் நேரத்தை.
வெளியே உள்ள குப்பையை என் சக குடிமகன் சுத்தம் செய்து விடுவான்..
நேரம் தவறாமல்.
தங்கள் மனதின் உள்ளே மண்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றிவிடுங்கள்...
வரும் ஆண்டேனும்...
சாது மிரண்டால் காடு கொள்ளாது.. தங்களுக்கா தெரியாது!!
..................................

Pics: Google Images.
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.


My other site: nanbendaa.blogspot.com


            

Wednesday, December 29, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 7

                                              
>>> சிறந்த தயாரிப்பாளர்: கல்பாத்தி அகோரம் 


இவ்வாண்டு வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராசபட்டினம், மைனா 
போன்ற வித்யாசமான படங்களை பொருட்செலவு பாராமல் தமிழ் ரசிகர்களின் 
பார்வைக்கும், ரசனைக்கும்  விருந்தளித்தார் அகோரம். ரெட் ஜெயண்ட் இப்படங்களை வாங்கி வெளியிட்டது எனினும், இவற்றை தயாரிக்க முதலில் முனைந்தவர் அகோரம் என்பதால் இவர் இவ்விருதுக்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணுகிறேன். >>> சிறந்த எழுத்தாளர்: ஜெயமோகன் (அங்காடித்தெரு) 


                                   
                                 
நான் கடவுளை தொடர்ந்து, அங்காடித்தெருவிலும் அசுர உழைப்பு.  வருடம் ஒரு படம் போதும். ஜெயமோகனின் பேனா, கோடம்பாக்கத்தின் கரங்களை இலகுவாக பற்றி சிகரத்தை நோக்கி அழைத்துச்செல்லும். தங்கள் பணி மேலும் தொடர வேண்டும் என்பது 
பலரது விருப்பம். >>> சிறந்த இயக்குனர்: வசந்தபாலன் 


                            
                                        
பெரும்பான்மை மக்களால் புரட்டப்படாத 'ஆல்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையில் அடியெடுத்து வைத்தார் வசந்தபாலன். ஒரு இயக்குனருக்கு முதல் படமே தோல்வி அடைந்தால் அதன் வலி...அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மூன்று வருட இடைவெளி. பிறகு வந்த 'வெயில்' இவரின் பயணத்தில் குளுமையை தந்தது. விருதுகளை வென்றது. எனினும் வணிக ரீதியில் பெரிய  வெற்றியை பெறவில்லை. ஆல்பத்திற்குள் மறைந்திருந்த வசந்தபாலனை வெளிச்சம் போட்டுக்காட்டியது வெயில். பசுபதி சம்மந்தப்பட்ட தியேட்டர் காட்சிகள் எனக்கு cinema paradiso படத்தை நினைவு படுத்தியது. அந்த உறுத்தலை தவிர்த்துவிட்டு பார்த்தால் வெயில் நல்ல படம்தான். இந்த வருடம் அங்காடித்தெரு எனும் உன்னத படைப்பின் மூலம் தன் தடத்தை மிக அழுத்தமாகவே பதித்துள்ளார் இயக்குனர். சில வருடங்களுக்கு முன்பு அங்காடித்தெருவில் குறிப்பிடப்படும் பெரிய கடைக்கு பொருள் வாங்க சென்றிருந்தேன். அங்கு வேலை செய்யும் சில சகோதர, சகோதரிகள் முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியா சோகம். நாம் கேட்கும் பொருளை இன்முகத்துடன் எடுத்து தராமல் சற்று களைப்புடன் இருந்தனர். நான் கூட என்னடா இது வாடிக்கையாளர்களை மதிக்காமல் இருக்கிறார்களே என வெறுப்பாகி வெளியே வந்துவிட்டேன். பல வருடங்கள் அங்கு செல்வதை தவிர்த்து வந்தேன்.  அதன் மூலகாரணத்தை 'அங்காடித்தெரு' மூலம் புரிய வைத்து விட்டார். 

வணிகரீதியான வெற்றி, அனைத்து தரப்பு மக்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து பாராட்டு போன்றவற்றை ஒரு படத்தின் மூலம் பெறுதல் எளிதான காரியம் அல்ல. அதை தன் மூன்றாவது படத்தின் மூலம் முழுமையாக பெற்றார் வசந்தபாலன். முதல் மூன்று படங்களுமே படிப்படியான வளர்ச்சியாக அமைந்தது அவருக்கு. அடுத்து 'அரவான்' மூலம்
மேலும் ஒரு படி முன்னேறுவார் என்பது உறுதி.  
         


>>> சிறந்த திரைப்படம்: அங்காடித்தெரு 


            
                                                     
இப்படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனத்தை பாராட்டியே தீர வேண்டும். எந்திரன் கை நழுவினாலும்,  அங்காடித்தெரு மூலம் நிறுவனத்தின் புகழை நிலைநாட்டி இருக்கிறார்கள். பெருமைமிகு படைப்பு.  அடுத்த ஆண்டு இவர்களின் படைப்பில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது தங்கர் பச்சானின் 'களவாடிய பொழுதுகள்'.      >>> சிறப்பு பார்வை: அம்பேத்கர் 


                                                             
இவ்வருடம் வெளியான 'அம்பேத்கர்' திரைப்படம்தான் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விருதுகளையும் பெற தகுதியான படம். எனினும் இப்படம் பல வருடங்களுக்கு முன்பே தணிக்கை செய்யப்பட்டும், பல உயரிய விருதுகளை வென்றும் இருந்ததால் இப்பட்டியலில் இணைக்கவில்லை. என் வாழ்நாளில் பார்த்த 10 சிறந்த படங்களில் 'அம்பேத்கர்' என்றும் நிலைத்திருக்கும். மம்முட்டி....மகா கலைஞன். பார்க்காதவர்கள் எப்படியேனும் பார்த்து விடுங்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் காவலன் பற்றிய அதி உன்னத காவியம். 

இந்த சாமான்யனின் விருது வழங்கும் படலம் இத்துடன் நிறைவு பெறுகிறது. புதியவர்களை ஊக்குவிப்பது அல்லது ஒருதலை பட்சமாக விருதளிப்பது போன்றவற்றில் என் எண்ணம் செல்லவில்லை. ஏனெனில், என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. முடிந்த அளவு மனதில் 'சரி' என்று தோன்றியதையே, விருது பற்றிய ஏழு பாகங்களிலும் எழுதி உள்ளேன்.  இது குறித்து தங்கள் மேன்மையான கருத்தை எதிர்பார்க்கிறேன். 


விரைவில்... 2010 தமிழ் படங்கள்.... ஒரு அலசல்!!
.........................................................................
Pics Courtesy: Google Images.

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

மன்மதன் அம்பு விமர்சனம் படிக்க....
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com
                                                                        

Tuesday, December 28, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 6>>> சிறந்த நடிகர்... ஒரு பார்வை
சிறந்த நடிகர் விருது என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது தாரே ஜாமீன் பர் படத்தில் நடித்த சிறுவன் தர்ஷீல். 2007 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது அவனுக்கு வழங்கப்பட்ட போது அவன் அதை வாங்க மறுத்தான். அவ்வாண்டு சிறந்த நடிகராக ''சக் தே இந்தியா"வில் நடித்த ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்படார். ஏன் நான் சிறந்த நடிகன் விருதுக்கு தகுதியற்றவனா என தர்ஷீல் கேட்டதை கண்டு வாயடைத்து போனது திரையுலகம். நியாயமான கேள்வி. ஒரு வழியாக அவனுடைய குரு ஆமிர்கான் சமாதானம் செய்ததும் சாந்தம் அடைந்தான். 

 பொதுவாக சிறந்த நடிகர் விருது ஒரு திரைப்படத்தின் நாயகனுக்குத்தான் வழங்கப்படுகிறது. அந்த நடிகர் குறிப்பிட்ட திரைப்படத்தில் அதிக காட்சிகள் தோன்றி இருப்பார். ஆனாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்க மாட்டார். அப்படி இருந்தும் சில சமயங்களில் அவருக்கு அவ்விருது வழங்கப்படும். என்னைப்பொருத்தவரை சிறந்த நடிகர் என்பவர் நாயகனாக இருக்க வேண்டிய அவசியமோ அல்லது திரையை ஆக்கிரமித்து இருத்தலோ முக்கியமில்லை. அவர் திரையில் வந்து சென்ற தருணங்கள் நம் மனதில் பலகாலம் நிலைத்திருக்க வேண்டும். விருது பெற தகுதியான நடிப்பு அவ்வருடத்தில் எவருக்கும் இல்லையெனில் 'சிறந்த நடிகர்' எனும் விருதை தரமால் இருப்பதால் ஒன்றும் நட்டமில்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து பிரிவுக்கும் பொருந்தும் என்பதும் என் எண்ணம்.


>>> சிறந்த நடிகர் விருதுவெங்கடேஷ்:


                
                                                  
வெங்கடேஷ் இப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று எவரும் நினைத்திருக்க மாட்டோம். சூப்பர்வைசர் கருங்காலி வேடத்தில் கனகச்சிதமாக பொருந்தி, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அங்காடி தெருவில் அவர் தோன்றும் காட்சிகளில் நமக்கு உள்ளூர ஏற்பட்ட ஒருவித பயம் ஒன்றே போதும். வசந்தபாலனின் மிகச்சரியான தேர்வு. வெங்கடேஷ் அவர்களுக்கு இவ்விருது தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!!


>>> சிறந்த நடிகை... ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த நடிகைகள் வந்து கொண்டே இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. சாவித்திரி, மனோரமா முதல், சுஜாதா, ஷோபா, சரிதா போன்றவர்களை தொடர்ந்து ஜோதிகா வரை. ஆனால் சில ஆண்டுகளாக சிறந்த நடிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதையும் பார்த்து வருகிறோம். இனி எப்படி என்பதை பொருது இருந்து பார்ப்போம். 


>>> சிறந்த நடிகை.. அஞ்சலி:


                                                                      
அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த அஞ்சலி இவ்விருதை பெற முற்றிலும் தகுதி உடையவர் என்பது பெரும்பான்மையான மக்களின் கருத்து. வரும் காலங்களில் இன்னும் பல விருதுகளை பெறும் தகுதி உள்ளவர் என்பதில் ஐயமில்லை. படம் பார்த்த அனைவருக்கும் அவருடைய நடிப்புத்திறன் பற்றி தெரியும் என்பதால் நான் புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. 


>>> சிறந்த நகைச்சுவை நடிகர்... ஒரு பார்வை:

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நகைச்சுவை மிகச்சிறந்த கலைஞர்களை நாம் பார்த்து வருகிறோம். இந்திய சினிமாவில் வேறெந்த மொழியிலும் இத்தனை சிறந்த கலைஞர்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறிவோம். வரும் காலங்களில் இத்துறையில் நல்ல நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்படாது இருத்தல் வேண்டும் எனபது அவா.


>>> சிறந்த நகைச்சுவை நடிகர் சந்தானம்


                       
                                             
வடிவேலு, விவேக் இருவரின் ஆதிக்கம் இறங்கு முகத்தில் இருக்கும் சமயம் மளமளவென முன்னேறி இன்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார் சந்தானம். பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன், வட்டார வழக்கு போன்ற பல தகுதிகளை கஷ்டப்பட்டு வளர்த்துக்கொண்டு முன்னணி இடத்தை பிடித்தனர் நகைச்சுவை முன்னோடிகள். சந்தானம் புதிதாக என்ன செய்ய போகிறார் என எண்ணினர் சினிமா ரசிகர்கள். சாமர்த்தியமாக அவர் செய்தவற்றில் குறிப்பிடத்தக்கவை:  தனி ட்ராக்கை தவிர்த்து கதையுடன் நகரும் நகைச்சுவை, அதிக வசன ஜாலங்கள் இன்றி, அன்றாடம் நாம் பேசும் வார்த்தைகளை பிரயோகித்தல் போன்ற அஸ்திரங்களை தேர்ந்து எடுத்து சரியாக இலக்கை தொடுகிறார் சந்தானம். பாஸ் என்கிற பாஸ்கரனில் எனக்குப்பிடித்த வசனங்கள் : "டேய், நீங்க ரெண்டு பேரும் அரியர்ஸ் எழுதுற மக்கு பசங்கதானடா".   "என்ன அண்ணே என் குடும்பம் நடு தெருவுக்கு வர்றத, ஏதோ கும்பகோணம் எக்ஸ்ப்ரஸ் நாலாவது பிளாட்பாரத்துக்கு வர்ற மாதிரி அடிக்கடி சொல்றீங்க".  சிரிப்பு எனும் அற்புத மருந்தால் மக்களுக்கு வைத்தியம் செய்யும் சந்தானம் மேலும் வளர வாழ்த்துகள்!! இரட்டை அர்த்த வசனங்கள், கவுண்டமணி வசனங்கள் இரண்டையும் பெருமளவு தவிர்த்தால்....சில வருடங்களுக்கு தமிழ் திரையில் உங்கள் ஆட்சிதான்....தலதளபதி!!  


>>> சிறந்த துணை நடிகர்: ரமேஷ் அரவிந்த் (மன்மதன் அம்பு) 


        
                                                             
கமலின் திரைப்படங்களில் அவ்வப்போது தலைகாட்டும் ரமேஷ் அரவிந்த், மன்மதன் அம்பு திரைப்படத்தில் சதிலீலாவதியில் நடித்ததற்கு நேர் எதிர் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என் எதிர்பாக்கவில்லை. நோயாளியாக ஓரிரு காட்சியில் வந்தாலும் பாராட்டும்படியாக இருந்தது அவருடைய நடிப்பு. 


........................................


பாகம் - 7 விரைவில்....

Photo Courtesy: Google.
.............................................................................................                         
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.


மன்மதன் அம்பு விமர்சனம் படிக்க....
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com

Sunday, December 26, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 5

                
                    

                                           >>> சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துகுமார்(அங்காடித்தெரு, பையா)
>>> சிறந்த பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.                                                        
தமிழ் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை இவரது பாடல்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தை பிடித்து வருவதை அறிவோம். திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர்.  பட்டர்பிளை எனும் ஐ.டி. வைத்திருப்பார். அப்போது எனக்கு தெரியாது இவர் தன் பேனா மூலம் தமிழ் திரையை ஆளப்போகிறார் என்று. பட்டர்பிளை என்பதுதான் வண்ணத்துப்பூச்சி எனும் நூல்வடிவாக மாறியது. செல்வராகவன்-யுவன் மற்றும் முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றன என்பதை அறிவோம். இவ்வருடம் வந்த பாடல்களும் அவ்வாறே. அங்காடித்தெருவில் வரும் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல் அவர் எழுதிய பாடல்களில் சிறப்பான ஒன்று. பெண்களை தேவதை, மலர் என ஒரு காலத்தில் வர்ணித்து வந்த தமிழ் கவிகள், சமீபகாலமாக சரக்கு, கட்டை என வர்ணிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். ஆனால், சாதாரண தோற்றமுள்ள பெண்களை பற்றி ஒரு பாடல் எழுதி அவர்களை ஆராதித்துள்ள முத்துகுமாரின் இப்பாடல் வரிகள் அனைத்தும் இனிமை.  'அவள் அப்படி ஒன்றும் கலரில்லை' என எழுதியதற்கு தமிழ் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனராம், கலர் எனும் ஆங்கில சொல்லை பயன்படுத்தியதற்கு. யதார்த்த வாழ்க்கையில் ஒரு இளைஞன் 'நிறமில்லை' என்பதற்கு பதில் 'கலரில்லை' எனும் வார்த்தையைத்தான் பிரயோகிப்பான். அதைத்தான் அவர் அப்பாடலில் கையாண்டுள்ளார் என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் 'நா. முத்துகுமார்' எனும் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.>>> சிறந்த இசையமைப்பாளர்:  யுவன் (பையா)


                                                              
சிறந்த சினிமா பாடல் ஆல்பம் சில வருடங்களாக ஹாரிஸ் ஜெயராஜிடம் இருந்தே வந்து கொண்டிருந்த நேரத்தில், இவ்வருடம் அவ்விடத்தை 'பையா' மூலம் கைப்பற்றியுள்ளார் யுவன். அனைத்து பாடல்களுமே அசத்தல் ஹிட். எனக்கு மிகவும் பிடித்த பாடல்......

இவ்வாண்டின் சிறந்த ஆண்/பெண் பாடகர் ஆகியோர் பற்றி எழுத இயலவில்லை. நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்த இவ்வருடத்தில் அவற்றில் சிறந்த குரலை தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இவ்வருடம் வெளியான நான் கடவுள் படத்தில் வரும் 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' எனும் பாடலைப்பாடிய மது அவர்களின் குரல் சிறப்பாக இருந்தது. ஆனால், நான் கடவுள் சென்றே ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு, பல உயரிய விருதுகளை பெற்றதால்..இவ்வாண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.

>>> சிறந்த திரை அரங்கம்(சென்னை மட்டும்: சத்யம்.                           
                                             
சத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது. பெங்களூரில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் வெற்றி பெற்ற கால கட்டத்தில் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் அந்த முயற்சியில் இறங்கவில்லை. அந்த என்ணத்தை மாற்றி சத்யம் அரங்கை மல்டிப்ளெக்ஸ் ஆக மாற்ற அதன் உரிமையாளர் எத்தனிக்கையில் பலர் அவரிடம் "இம்முயற்சி பலன் தராது.. சென்னை மக்கள் பெரும்பாலும் தமிழ் படங்களை மட்டுமே விரும்புவர், அதிகபட்சம் ஒரு சில ஆங்கில படங்கள். ஏனைய மொழிப்படங்கள் இங்கே வரவேற்பை பெறுவது சந்தேகமே" எனக்கூறினராம். ஆனால், அதை ஏற்காமால் துணிந்து அம்முயற்சியை தொடங்கி இன்று சென்னையில் மட்டுமல்லை, இந்தியாவில் குறிப்பிடத்தக்க திரை அரங்குகளில் ஒன்றாக சத்யத்தை மாற்றினார் அவர். அதற்கு அவரின் தொலைநோக்கு பார்வையே காரணம். சென்னை ஐ.டி துறையில் பெரும் வளர்ச்சி காண தொடங்கிய சமயத்தில் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கு குடிபுகுவர் அல்லது அடிக்கடி வந்து செல்வர். அதை உணர்ந்ததன் விளைவே இந்த வெற்றியின் ரகசியம். இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற திரை அரங்கம் சத்யம் என்பது குறிப்பிடத்தக்கது.  சில வருடங்களுக்கு முன்பாக சிறந்த திரை அரங்கம் விருதை ஆல்பர்ட் தியேட்டர் வென்று வந்ததாக பத்திரிக்கைகளில் படித்தேன்.


                                           எஸ்கேப் அரங்கம் (எக்ஸ்பிரஸ் அவென்யு)


இந்த வருடம் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது சத்யம் குழுமம்...கோடிகளை இறைத்து... எஸ்கேப் எனும் அதிநவீன திரையரங்கை தொடங்கியதன் மூலம். உணவுப்பொருட்களின் விலை பணக்காரர்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். ஒரு வெஜ் சமோசா அறுபது ரூபாய். சர்வதேச தரத்திலான RDX ஒலி அமைப்பு, தெள்ளத்தெளிவான திரை, உயர்தர இருக்கைகள், ரசிகர்களின் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் டிக்கட் பதிவு முறைகள், பன்மொழி திரைப்படங்கள், மாதம் ஒரு முறை வெளியாகும் 'சிம்ப்லி சத்யம்' எனும் இதழ், உணவு விடுதிகள், கேம் ஜோன், அரங்கிற்கு வரும் ரசிகர்களை மரியாதையுடன் நடத்தும் விதம், டிக்கட்டை நாமே எடுத்துக்கொள்ள டச்ஸ்க்ரீன் வசதி என பல்வேறு சிறப்புகளின் மூலம் அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது சத்யம்.

                                                           எஸ்கேப்.. இருக்கைகள்

 தரமான அரங்கங்கள் இது தவிர பல உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி தனக்கென உள்ள சினிமா ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது சத்யம்.
....................................................


பாகம் - 6 விரைவில்....

Pics and Videos: Thanks to Google & Youtube.
...................................................


முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:

பாகம் - 1        பாகம் - 2         பாகம் - 3        பாகம் - 4

..................................................

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com


                            
        

Saturday, December 25, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 4

                      

                
            
                                                                      

>>> சிறந்த ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா


                                                                            
தமிழ்படம், மதராசபட்டினம் மற்று 'வ'  என வெவ்வேறு சவாலான களங்களை தேர்வு செய்து சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் பாராட்டுக்களை பெற்றார் நீரவ் . மதராசபட்டினம் படத்தில் சென்ட்ரல் நிலையம் உள்ளே ஆர்யா மற்றும் எமியை ஆங்கிலேயர்கள் தேடும் காட்சியை மிக நன்றாக படம் பிடித்து இருந்தார் எனலாம்.


>>> சிறந்த அறிமுக ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் மரியநாதன்  


                        
"நான் 18 வயது இருக்கையில் முதன் முறை ரங்கநாதன் தெருவிற்கு சென்றேன். ஜன நெரிசலை பார்த்து, இனி அந்த பக்கமே செல்லக்கூடாது என முடிவு செய்தேன்" என்று சொன்ன  ரிச்சர்டின் முதல் படமே ரங்கநாதன் தெருவை மையமாக கொண்ட 'அங்காடித்தெரு'  படமாக அமைந்து விட்டது. பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்திடம் உதவியாளராக சிவாஜி, செல்லமே போன்ற படங்களில் பணி செய்தவர் இவர். 25 கிலோ எடை கொண்ட கேமராவை தோளில் சுமந்து கொண்டு 100 நாட்களுக்கும் மேலாக ரங்கநாதன் தெருவின் இயல்பு நிலையை படம் பிடித்திருக்கிறார். பானா காத்தாடியும் இவர் ஒளிப்பதிவு செய்த படமே. தன் குரு ஆனந்தின் இயக்கத்தில் 'கோ' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் நம்பிக்கை தரும் நாளைய 'ஒளிவிளக்கு' ரிச்சர்ட்.  
>>>  சிறந்த அறிமுக வில்லன்: திருமுருகன்


                                                                       
துணை இயக்குனராக திரை உலகில் பயணம் செய்து கொண்டிருந்த இவர், 'களவாணி'  பட இயக்குனர் சற்குணத்தின் கோரிக்கையை ஏற்று வில்லனாக திரையில் தோன்றினார். ஆரம்ப காட்சியே அதிரடியாக இருந்தது. வழக்கமான வில்லன்களை போல இல்லாமல் கதையை ஒட்டி நடிப்புத்திறனை கூடுமானவரை நன்றாகவே  வெளிப்படுத்தி இருந்தார் என எண்ணுகிறேன். அடுத்து வசந்தபாலனின் அரவான் படத்தில் முக்கிய வேடத்திலும், மற்றொரு படத்தில் நாயகனாகவும்   நடிக்கவிருக்கிறார். அதே நேரத்தில் இயக்குனராக அடுத்த வருடம் அறிமுகம் ஆவேன் என்று திண்ணமாக கூறுகிறார் திருமுருகன்.


>>>  சிறந்த கலை இயக்குனர் வி.செல்வகுமார்


                                                

                                                                
புராதன சென்னையின் அழகை புகைப்பட கண்காட்சிகள் மட்டுமே பார்த்து வந்த நமக்கு அதை திரைவடிவில் கொண்டு வந்த செல்வகுமார் அவர்களின் பங்கு இத்திரைப்படத்தில் மிக முக்கியமானது. இயற்கை, ஈ, பேராண்மை படங்களை தொடர்ந்து இவருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது 'மதராசபட்டினம்'.


>>>  சிறந்த திரைக்கதை மற்றும் அறிமுக இயக்குனர் : சற்குணம் 


                                                                  
கதை மற்றும் கதாநாயகனின் பாத்திரம் போன்றவை எதுவும் புதிதாக இல்லாவிடினும், திரைக்கதையின் மூலம் 'களவாணி'யை சுவாரஸ்யமான கோர்வைகளுடன் நகர்த்தி இருந்தார் சற்குணம். வெட்டி ஹீரோ பள்ளி செல்லும் பெண்ணை காதலித்தல், ஒரு தரப்பு மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்தது என்னவோ உண்மை. அதற்கு சற்குணத்தின் விளக்கம் என்னவென்று தெரியவில்லை. மற்றபடி, பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வசூலையும், ஊடகங்களின் பாராட்டையும் பெற்றது  'களவாணி'. இதே அணியை கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளார்  சற்குணம் என்பது செய்தி.
.....................................................................................

பாகம் - 5 விரைவில்...

முந்தைய பதிவுகளை படிக்க:

 பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3
.............................


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com                  

          
                  

Friday, December 24, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 3

                                          

                                          
                                                       ஹிந்தி திரைப்படங்கள்

அவ்வப்போது சில ஹிந்தி படங்கள் பார்க்கும் வழக்கம் உள்ளவன் நான். பில்ம்பேர் போன்ற பிரபல விழாக்களில் சிறந்த படம் விருது பெற ராஜ்நீதி, மை நேம் இஸ் கான், பீப்ளி லைவ், லவ், செக்ஸ் அவுர் தோகா, கேலே ஹம் ஜீ ஜான் ஸே  போன்ற படங்கள் போட்டியிடும் என கருதுகிறேன்.  நான் பார்த்த படங்களை பற்றி சிறு அலசல்..உங்கள் பார்வைக்கு:

>>> சிறந்த திரைப்படம் மை நேம் இஸ் கான் 
>>> சிறந்த நடிகர் ஷாருக்கான் 

                                                                  
சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வெகுசிறப்பாக நடித்திருந்தார் ஷாருக்கான். செப்டெம்பர் 9/11 - க்கு பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களை எப்படி தவறாக கையாண்டது  என்பதை விரிவாக சொன்ன படம். சக் தே இந்தியா, மை நேம் இஸ் கான் போன்ற படங்களை தமிழில் எடுத்தால், இங்குள்ள முன்னணி நாயகர்கள் ஷாருக் போன்று ஆர்ப்பாட்டமின்றி நடிப்பார்கள் என்பது சாத்தியமே இல்லை. மேக் அப்பிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு மாறுவேடம் போட்டு நடிப்பதை விட, எத்தகைய பூச்சும்  இன்றி நடிப்பை முகத்தில் வெளிப்படுத்தும் திறமை வெகு சிலருக்கே உண்டு. அவர்களில் ஷாருக் குறிப்பிடத்தக்கவர் என்பதை அறிவோம். படத்தில் இயக்குனர் கரண் ஜோகர் சறுக்கிய இடம் என்று சொல்லப்போனால், இறுதிக்காட்சியில் ஷாருக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் காட்சி. தேவையற்ற ஹீரோயிசம். அதை தவிர்த்து பார்த்தால் இது இவ்வாண்டின் சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை.                                                          
                                                         

http://www.youtube.com/watch?v=xihYMq_oRfw&feature=related


>>> பீப்ளி லைவ்

                                                                  
அமீர்கானின் தயாரிப்பு என்ற ஒரே காரணத்திற்காக படம் பார்க்க சென்றேன். வறுமையின் பிடியில் விவசாயிகள் இருக்கும் கிராமம்தான் பீப்ளி. வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான் ஒரு விவசாயி. அதன் மூலம் அரசாங்கம் தரும் பணம் தன் குடும்பத்திற்காவது உதவட்டுமே என்று. ஆனால் இந்த விஷயம் அரசாங்கம், பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் என பலருக்கு தெரிய வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவன் தற்கொலை செய்து கொண்டால் ஆளும் கட்சி தோற்க வாய்ப்பு இருப்பதால் அதை தடுக்க நினைக்கிறது அரசாங்கம். ஆனால் எதிர்க்கட்சி அவன் இறப்பதையே விரும்புகிறது.

இவர்களின் அன்புத்தொல்லையால் வீட்டில் இலவச பொருட்கள்  ஒரு புறமும், தொலைக்காட்சி  நிறுவனங்கள் பேட்டி  எடுக்க  மறுபுறமும்  குவிகின்றன. இறுதியில்  அவன்  என்ன ஆனான் என்பதே கதை. இது மிகவும் சீரியஸ் ஆன படம் என்று எண்ணிப்போனால் படம் முழுக்க நகைச்சுவையாக இருந்தது. நாட்டின் முதுகெலும்பான விவசாயியின் வாழ்வை இப்படி எடுத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. வழக்கம்போல், அரசாங்கம் அமீர்கான் படம் என்றே ஒரே காரணத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுவும் கடும் போட்டியை தந்த அங்காடித்தெருவை ஓரம் கட்டிவிட்டு. வடக்கு வாழ தெற்கு தேய்தல் புதிதல்லவே... லகான், தாரே ஜமீன் பர்(அற்புதமான படம்தான்) ஆஸ்காருக்கு சென்று 'பல்ப்' வாங்கிக்கொண்டு வந்தன. அமீர்கானும் விடுவதாய் இல்லை. கிடைத்தாலும் கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

 >>> தபங்

                                                                
மூன்று 'கான்'களில் இவ்வாண்டு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த கான் சந்தேகமே இன்றி சல்மான்கான்தான். 'தபங்' எனும் மசாலா படம் மூலம் வசூலை அள்ளிக்குவித்தது அவரின் குடும்ப தயாரிப்பு நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு செம மாஸ் படம். நானும் களத்தில் இருக்கிறேன் என மற்ற இரு 'கான்'களுக்கும் இப்படத்தின் பெரும் வெற்றியின் மூலம் நிரூபித்து இருக்கிறார் சல்மான்.

தபங் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'..... தபங் 

>>> கேலே ஹம் ஜீ ஜான் ஸே

                                                      

இந்த வருடம் நான் பார்த்த ஹிந்தி படங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு படம். 1930 - ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய புரட்சி வீரர்களின் உண்மைக்கதை. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் மற்றும் கலை அமைப்பு கொண்ட படம்.

 இப்படம் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'...

 கேலே ஹம் ஜீ ஜான் ஸே

இவ்வளவுதான் எனக்குத்தெரிந்த 2010 ஹிந்தி படம் பற்றிய விஷயம். பல்வேறு பிரிவுகளில் அரசும், பிரபல ஊடகங்களும் தரப்போகும் விருதினை பொறுத்திருந்து பார்ப்போம். பதிவை வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றி, தோழர்களே!
..................................................................
photos & videos: Thanks to Google & Youtube.


முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே: 

பாகம் - 1

பாகம் - 2 

பாகம் - 4 
.....................................


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com                        
                                                  2010 திரைவிரு(ந்)து பாகம் - 2                                                        ஆங்கில திரைப்படங்கள்


உலகம் முழுதும் வெளியாகும் ஆங்கில திரைப்படங்களுக்கென கோல்டன் க்ளோப், ஆஸ்கார் போன்ற மிகப்பிரபல விருதுகள் அடுத்த மாதம் அணிவகுக்க இருப்பதால் அதை அனைவரும் ஆவலுடம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆங்கில சினிமா பற்றி ஒரு சிட்டிகை அளவே அறிவு உடையவனின் பார்வையாக இப்பதிவு இருக்கும். ஏதோ நண்பர்களின் தயவில் சிட்டி ஆப் காட், சில்ட்ரன் ஆப் ஹெவென், செவென் சாமுராய், நோ மேன்ஸ் லான்ட், சவுண்ட் ஆப் ம்யூசிக் போன்ற வெளிதேச படங்களை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். ஆழமான சிந்தனையுடன் எழுத தெரியாது, நண்பர்களே. இனி,  இவ்வருட படங்கள் பற்றி இந்த பாமரனின் கருத்து,  உங்கள் பார்வைக்கு:

>>> சிறந்த திரைப்படம் இன்சப்சன் 

                                                             
இப்படியும் படம் எடுக்க இயலுமா?  முடியும் என நிரூபித்து இருக்கிறார் இந்த 40 வயது இயக்குனர்.  தங்கள் வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த படம் இது என்பது உலகம் முழுதும் கண்டுகளித்த பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும். நானும் அதை வழிமொழிகிறேன். ஒவ்வொரு கட்டத்திலும்  நம் மூளைக்கு சவால் விட்டு காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கனவுலகை வைத்து கதக்களி ஆடியிருக்கிறார் நோலன்.  ஐந்து முறை பார்த்தும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கையிலும் புதுப்புது விஷயங்கள் புலப்படுகின்றன. படம் வெளியான முதல் வாரமே சென்று பார்த்தேன். படம் முடிந்து இயக்குனரின் பெயர் போட்டதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி பாராட்டினர். ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் தவிர்க்கவே முடியாத இடத்தில் இருக்கிறது இன்சப்சன்.  http://www.youtube.com/watch?v=66TuSJo4dZM>>> இவ்வருடம் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த பிற படங்கள்:


                                                            
                                                        
                                                      
* சோசியல் நெட்வொர்க் -  நாயகன் ஜெஸ்ஸே எய்சென்பெர்கின் நடிப்பு அசத்தல்.


* லெஜன்ட் ஆப் தி கார்டியன்ஸ்


* டெஸ்பிகப்ல் மீ


* ஷ்ரெக் பாரெவர் ஆப்டர்


  இம்மூன்று அனிமேசன் படங்களும் அற்புதமாக இருந்தன.


* பிரின்ஸ் ஆப் பெர்சியா - ஹாலிவுட்டில் கூட இப்படி ஒரு 'மசாலா' படமா?
   நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.

>>>  ஓரளவு சுமாரான படம் :


* அயன் மேன் - 2


>>> பார்க்கத்தவறிய முக்கியமான படங்கள். (விரைவில் பார்க்கவுள்ளேன்).* ஷட்டர் ஐலன்ட்


* அலைஸ் இன் வொண்டர்லான்ட்


* ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன்


* தி கராத்தே கிட்


* டாய் ஸ்டோரி - 3


>>> அரங்கில் பார்க்கையிலேயே கொட்டாவி விட வைத்த படங்கள்:

                                                                                                                     
                                                                
*  நைட் அண்ட் டே - டாம் க்ரூஸை நம்பி சென்ற என் புத்திய.....
   என் சினிமா பயணத்தில் முதன் முறை அரங்கில்(தேவி பாரடைஸ், சென்னை)
   கொட்டாவி விட வைத்த ஆங்கிலப்படம்.        
   
*  அன்ஸ்டாப்பப்ள் - ஸ்பீட் ஏற்கனவே பார்த்தால் இது ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை.
    பலர் ரசித்ததாக கேள்விப்பட்டேன். தேவி பாரடைசில் நன்றாக தூங்கினேன். ஆங்கில
    படங்களை இனி தேவி பாரடைசில் பார்ப்பதாக இல்லை. வாஸ்து சரியில்லை.


* ரெசிடென்ட் இவில் 4  - ஒன்றும் சொல்வதற்கில்லை. 3D என்றார்கள். அப்படி ஒன்றும்
   இல்லையே. அடுத்த பார்ட் எடுக்காமல் இருந்தால் சரி.


>>> ஏகப்பட்ட பில்ட் அப் குடுத்தும் நான் எஸ்கேப் ஆகிய படங்கள்:


* தி லாஸ்ட் ஏர்பெண்டர்


* பிரிடேடர்ஸ்


* சால்ட் - ஏற்கனவே டாம் க்ரூஸை நம்பி மொய்வைத்த பாதிப்பு. ஏஞ்சலினா ஜோலியாக
   இருந்தாலும்.... ஐ ஆம் எஸ்கேப்!!


* சா - 7    முதல் பாகம் பார்க்கவே நேரம் கூடவில்லை. இதில் ஏழாவது பாகமாம்.
   பாரத்தால் வெளங்கிடும் என்பதால்..டீலில் விட்டு விட்டேன். படம் மொக்கை என்று
   கேள்விப்பட்டதும் ஒரு ஆத்ம திருப்தி. காசு மிச்சம்.


* வாலெண்டைன்ஸ் டே -  என்னாது காதல் படமா...அதுவும் ஆங்கிலத்திலா.. அதுவும்
   திரை அரங்கிலா.. ஆள உடுங்கடா சாமி.


>>> சிறப்பு மரியாதை:


                                                                  
சென்ற வருடத்தின் இறுதியில் வந்து இந்த வருடம் வசூலில் உலக சாதனை செய்த அவதார் திரை வரலாற்றில் ஒரு மைல்கல். ஜேம்ஸ் கேமரூன்....என்னா மனுசய்யா நீ! தலைவணங்கி வாழ்த்துகிறேன்.

>>> அடுத்த வருடம் இந்தியாவில் வெளியாகும் படங்களில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது:

                                                              
                                                              
*  127 ஹவர்ஸ் - டான்னி பாய்ல் - ரஹ்மான் கூட்டணியோடு அடுத்த ஆஸ்கரை குறி
    வைத்து வந்துள்ள படம். இசைப்புயல் மீண்டும் வெல்வாரா...காத்திருப்போம்.
    கோல்டன் க்ளோப் விருதுக்கு ரஹ்மான் இப்படத்தின் மூலம் போட்டியிடுவது
    மகிழ்ச்சியை தருகிறது.


                                                                


*  டான்கல்ட் - டிஸ்னியின் சிறந்த படைப்பாக பேசப்படுகிறது. விரைவில்
    இங்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.


>>> நான் பதிவிட்டவை (படங்களின் பெயரினை அழுத்தி பதிவினை படிக்கவும்) :

*    சோசியல் நெட்வொர்க்


*   லெஜன்ட் ஆப் தி கார்டியன்ஸ்


*   டெஸ்பிகப்ல் மீ


*   127 ஹவர்ஸ்       
    

பல ஆங்கில படங்களை தவற விட்டிருக்கலாம். என் பார்வைக்குட்பட்ட படங்களை பற்றி மட்டுமே இங்கு பதிவிட்டுள்ளேன். வாசித்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
.........................................................................
Photos & video:
Thanks to Google & Youtube


முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே: 

பாகம் - 1

பாகம் - 3

பாகம் - 4

.................................................................

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com                  

2010 திரை விரு(ந்)து - பாகம் 1

                                                                                   

                                                     
      
மெட்ராஸ் பவனுக்கு வருகை தரும் அன்புள்ள பதிவுலக இதயங்களை பணிவுடன் வரவேற்கிறேன்! பல்வேறு ஊடகங்கள் ஒவ்வொரு வருடமும் திரைவிருதுகளை அறிவிக்கையில் நாம் எண்ணிய படங்கள் சில அவற்றை வெல்லும். மற்ற சில அவற்றை தவறவிடும். "இந்த படத்திற்கு தராமல் விட்டுவிட்டார்களே. நான் குழுவில் இருந்தால் அந்த படத்தையோ/கலைஞரையோ தெரிவு செய்து இருப்பேன்" என சினிமா பிரியர்கள் நினைப்பதுண்டு. நானும் அப்படி என்னும் ஒருவன்தான். சினிமா பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு உள்ள தகவல் அறிவுடன்..முக்கியமாக மனசாட்சிப்படி நடுநிலையுடன் இவ்விருது பட்டியலை வெளியிடுகிறேன்.  இசை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் நுட்பமான சிந்தனை இல்லாதவன் என்பதால், அப்பிரிவுகளில் இதயம் தொட்ட மற்றும் மனதில் பட்ட படங்களுக்கு/கலைஞர்களுக்கு  விருது தந்துள்ளேன்.  அவற்றை வரும் பதிவுகளில் விரைவில் வெளியிடுகிறேன். இன்று முதல் துவங்கும் 'விருதுகள் 2010' தொடர் பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னித்தருள்க! 


இந்த விருது லோகோ டிசைனில் நான் ப்ரூஸ் லீ படம் மற்றும் பைட் மாஸ்டர்ஸ் என்ற வார்த்தையை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் உண்டு. திரை உலகில் எத்தனை கலைஞர்கள் இருப்பினும் தம் உயிரை பணயம் வைத்து அன்றாடம் செத்து பிழைக்கும் சண்டைக்கலை வீரர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அக்கலையில் உலகம் முழுதும் பட்டித்தொட்டி வரை அனைவரும் அறிந்த ப்ரூஸ் லீ இந்த லோகோவில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில் 33 வயதிலேயே மர்மமாய் இறந்த இந்த மாவீரன் வெறும் சண்டைக்கலைஞன் மட்டுமல்ல. இயக்குனர், தயாரிப்பாளர், நாயகர், கதாசிரியர்......குறிப்பாக மாபெரும் தத்துவ ஞானி.  எனவே அவருக்கு என்னாலான மரியாதையை செலுத்தி உள்ளேன்.! இன்று விருது வழங்குதலின் முதல் பாகத்தை தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக மேலும் சில பாகங்களை வழங்க உள்ளேன். தங்கள் மேன்மையான கருத்துகளை ஆவலுடன்  எதிர்பார்க்கிறேன். 


இனி விருதுகள்:

தமிழ் திரையில் சாதனை புரிந்த பெருங்கலைஞர்கள் பலருண்டு. அதில் இவ்வருடம் இருவருக்கு இவ்விருதை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


>>> வாழ்நாள் சாதனையாளர் விருது-1  நடிகர் திலகம் 
                                                        

                                                          
                                                     
ஏற்காத வேடங்களா, பேசாத வசனங்களா...இந்த மகா கலைஞனை பற்றி சொல்ல எத்தனை பதிவு போட்டாலும் சலிக்காது. ஒரு தேசிய விருது கூட தர மனது வரவில்லை மத்திய அரசுக்கு. பல்லாண்டு காலம் கலை உலகில் கோலோச்சிய ஒரு கலைஞன் மனம் எப்படி ரணமாகி இருக்கும் என்பது சக கலைஞனுக்குத்தான் நன்கு தெரியும். ஓவர் ஆக்டிங் என்று சிவாஜியை ஏளனம் செய்தவர்கள் உண்டு. அதற்கு தகுந்த பதிலை அவர் தன் சுயசரிதை புத்தகத்திலேயே தந்திருக்கிறார். ஒன்றும் தெரியாதவன் அடிக்கடி ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், எல்லாம் தெரிந்தவன் சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. இயல்பான நடிப்பில் சிவாஜி நடித்த ஹரிச்சந்திரா, முதல் மரியாதை  போன்ற பல படங்களே அதற்கு சாட்சி. அரசு விருது தராவிடினும், அதை விட பல நூறு மடங்கு உயர்ந்த விருதை தன் இறுதி ஊர்வலத்தில் வாங்கிவிட்டுத்தான் இறைவனடி சேர்ந்தார் சிம்மக்குரலோன் சிவாஜி.

அன்னை இல்லத்தில் இருந்து அவர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகையில் எங்கிருந்தோ ஒரு சராசரி ரசிகனின் கதறல் குரல்தான் அவர் பெற்ற உயரிய விருது.

அது..... "இருந்தது ஒரே ஒரு நடிகன். அவரும் போய்விட்டாரே"

இதோ, நடிகர் திலகம் ஒரே டேக்கில் தெள்ளுத்தமிழ் பேசி சாதனை செய்த வசனம் உங்கள் பார்வைக்கு: படம் - ராஜா ராணி. 
>>> வாழ்நாள் சாதனையாளர் விருது-2  நடிகையர் திலகம் 


                                                                
சோகம், மகிழ்ச்சி, வெகுளித்தனம், காதல், குறும்பு...எத்தனை முகபாவங்கள். நடிப்பில் சாவித்திரியுடன் போட்டி போட்டு சக நடிகர்கள் தோற்ற கதை பல உண்டு. நடிகர் திலகமே கூட "இந்த பெண்ணிடம் உஷாராக இருக்க வேண்டும். இல்லாவிடில் நடிப்பில் நம்மை ஏப்பம் விட்டு சென்று விடுவாள்" என்று கூறுவாராம். மிஸ்ஸியம்மா, மாயாபஜார், நவராத்திரி எத்தனை படங்கள். அந்த மகா நடிகைக்கு என்னால் ஆனா சிறு சமர்ப்பணமே இவ்விருது. 


இதோ நடிகர் திலகத்துடன் சரி சமமாக நடித்து அசத்திய நடிகையர் திலகத்தின் பிரபலமான காட்சி: படம் - நவராத்திரி. 
பல விருது வழங்கும் விழாக்களில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற பெருங்கலைஞர்கள் மேடையேருகையில் கீழே உள்ளே சில நல்லவர்கள் தொகுப்பாளர் சொன்னால்தான் எழுந்து நிற்கின்றனர். இந்நிலை என்று மாறுமோ?முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே: 


...........................................................
Photo/videos:
Thanks to youtube & Google.


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
Photo Courtesy: Google

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.comRelated Posts Plugin for WordPress, Blogger...