CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 13, 2010

சாருமெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி! 

ஸ்டார்ட்டர்: 
அனைவருக்கும் வணக்கம். சாரு அவர்கள் எந்திரன் பற்றி விமர்சித்ததை சமீபத்தில் படித்தேன். உபயம் 'உண்மைத்தமிழன்'. ஏற்கனவே அது பற்றி நன்கு விவாதிக்கப்பட்டாலும், எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நான் சினிமா பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டவன் கிடையாது.  சற்று தரமான படங்களை பார்க்கும் ஒரு பாமர ரசிகன்.  சாரு ரஜினி, கமலை தாக்குவதிலோ, சாருவை மற்றவர்கள் தாக்குவதிலோ...அது நியாயமாகவும், Constructive-ஆகவும் இருக்கும் பட்சத்தில் என்னை போன்ற பாமரர்களுக்கு அதில் தலையிட உரிமை கிடையாது. ஆனால், இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று வேறு திசை நோக்கி பயணிக்கையில் குரல் எழுப்புவதில்  தவறில்லை என நினைக்கிறேன். இதோ சாரு அவர்கள் எழுதிய எந்திரன் விமர்சனம் http://charuonline.com/blog/?p=1210. (உபயம் 'உண்மைத்தமிழன்'). அதற்கு இந்த சிற்றறிவு படைத்த பாமரனின் கருத்துக்கள் கீழே. 

சாப்பாடு: 
வணக்கம் சாரு சார். உங்கள் எழுத்துக்களை சில வருடங்களாக படித்து வருகிறேன்.  ஞானி, பாமரன் மற்றும் உங்களுடைய  எழுத்துக்களை பிரபல பத்திரிக்கை மற்றும் வலைகளில் படித்து இருக்கிறேனே தவிர,  புத்தகங்களை வாசித்ததில்லை. வேலைப்பளு. நடுத்தர குடும்பத்து ஆண்மகன் என்பதால் உங்கள் நண்பர் மிஷ்கினை போல் புத்தகத்தை நீண்ட நேரம் வாசிக்கும் கால அவகாசத்தையோ, லட்சகணக்கில் அதை வாங்கும் வசதியையோ இறைவன் என்னை போன்ற இளைஞர்களுக்கு தரவில்லை. இனி விசயத்திற்கு வருகிறேன். 


                                                     
"தலைப்பை கேட்டாலே சும்மா அதிருதில்ல" என்ற வசனம்தான் என் நினைவிற்கு வந்தது, தங்கள் தலைப்பு :"எந்திரன்: பேராசையின் ஆபாசக்கனவு".  வெறும் ஒரு பொழுதுபோக்கு படத்திற்காக தற்கொலை செய்ய எண்ணிய அந்த  பிரபல(?) நடிகரையும், தங்களையும் என்னவென்று சொல்ல. இதை படிக்கையில் இனமான தமிழன் முத்துக்குமார் நினைவிற்கு வந்தான். "என் தமிழ் இனம் அழிகிறதே.. அதை கண்டும் செய்வதறியாது கையறு நிலையில் இருக்கிறேனே" என எண்ணிப்புழுங்கி அந்த அறிவுச்சுடர் தற்கொலை செய்தது..  அது வீர மரணமென வரலாற்றில் நிலைபெற்று விட்டது. ஆனால், கற்றறிந்த தாங்களோ எந்திரனுக்காக "தற்கொலை" எனும் வார்த்தையை பிரயோகித்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை? கமர்சியல் திசையில் ரஜினி படம் வர ஆரம்பித்ததில் இருந்தே பெரிதாக லாஜிக் இல்லாவிடினும் ஒரு மாஜிக் இருந்ததை யாரும் மறுக்க இயலாது. அது தெரிந்தும் அதை பார்த்துவிட்டு சபிப்பது எந்த வகையில் நியாயம்? பார்த்து விட்டு திட்டுவது வேறு.. திட்டுவதற்காகவே பார்ப்பது வேறு. எனக்கு விவரம் தெரிந்த நாள்(உழைப்பாளி வந்த காலகட்டம்) முதல் இன்று வரை ரஜினி படங்களை திரை அரங்கில் பார்த்ததில்லை. காரணம் ஒன்றும் பெரிதில்லை. மெட்ராஸ் பவன் ஓனர் என்பதால் எனக்கு நித்தம் ஒரு வகை உணவு உண்டால்தான் திருப்தி. உதாரணத்திற்கு, Inception, Children of heaven, Finding Nemo, seven samurai, உதிரிப்பூக்கள், தில்லுமுல்லு, தாரே ஜாமீன் பர் என சொல்லிக்கொண்டே போகலாம். அதை ரஜினியின் திரைப்படங்கள் தருவதில்லை என்பதால்தான் நான் அவருடைய கமர்சியல் படங்களை திரை அரங்கில் காண்பதில்லை. அதற்காக அவரை கொண்டாடும் ரசிகர்களை என்னால் தவறாக மதிப்பிட முடியாது. எனக்கு பிடித்த ரஜினி முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல்,அவர்கள் போன்ற படங்களில் வாழ்ந்தார். அவர்களுக்கு பிடித்த ரஜினி அதனுடன் சேர்த்து பில்லா, பாட்சா, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து மனதில் இடம் பெற்றார். நான் முதல் முறை திரையில் பார்த்த ரஜினி படம் எந்திரன். முதல் பாதி சிட்டி நடிப்பு அரங்கில் அனைவராலும் பாராட்டப்பட்டது என்பதை மறுக்க இயலாது. ஏதோ தங்களால் முடிந்த அளவு கிராபிக்ஸ் செய்து இருந்தனர். அதை சிலர் "அவதார்" அளவுக்கு இல்லை என 'கேனைத்தனமாக' ஒப்பிட்டு எள்ளி நகையாடினர். 150 கோடியில் அவதார் எடுத்து இருந்தால் அது எந்த அழகில் இருந்திருக்கும் என்பது சொன்னவர்களுக்கே வெளிச்சம். 

                                                                       
ரஹ்மானின் இசை இந்த படத்தில் வெறும் சத்தமாக இருந்தது என்றீர்கள். தயவு செய்து 'கிளிமஞ்சாரோ' பாடலை ஒரு முறை தனிமையில் கேட்டுப்பாருங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு தன் வேலையை பார்த்துகொண்டு இருக்கிறார் இசைப்புயல். "இறைவன் அன்பு, வெறுப்பு இரண்டில் எது வேண்டுமென கேட்டபோது அன்பை தேர்ந்து எடுத்த" அந்த கலைஞனை எத்தனை சீண்டினாலும் அவன் சிகரங்களை எட்டிக்கொண்டேதான் இருக்கப்போகிறான். கடந்த வெள்ளி அன்று அமெரிக்காவில் வெளியான 127 Hours படத்தில் ரஹ்மானின் இசை பற்றி பிரபல விமர்சகர்கள் பாராட்டியதை rottentomatoes.com - இல் படித்து இருப்பீர்களா என்று தெரியவில்லை. ஸ்லம்டாக் படத்தின் இசை நமக்கு வேண்டுமானால் பழையது போன்று இருக்கலாம். ஆனால் அது அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு புதிய உணர்வை தூண்டியதன் வெளிப்பாடாகவே ஆஸ்கார் வழங்கப்பட்டது என்பது என் கருத்து. தன்னை எத்தனை பேர் தூற்றினும் எதிர்வாதம் செய்யாத பண்பு மிக்க தமிழன் ரஹ்மான்  பேசிய பேச்சு கீழே:

காதல் அணுக்கள் பாடல் இடம் பெற்ற இடம் படு செயற்கையாக இருந்தது என்பது தங்களின் அடுத்த குற்றச்சாட்டு. உங்கள் கருத்துதான் செயற்கையாக இருந்ததென நினைக்கிறேன். ஷங்கர் படத்தில், பாடலில் பெருமளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்லவே? ஷங்கர் முதல் மரியாதையோ அல்லது உதிரிப்பூக்களோ எடுக்கவில்லையே, இயற்கையாக பாடல்களை படமாக்க. இதற்கு போய் எதற்கு 'ஜெர்க்' விடுகிறீர்கள்  என்று தெரியவில்லை. அடுத்து நீங்கள் சொன்னது கிளிமஞ்சாரோ பாடல் பற்றி.  மைசூர் அரண்மனையில் எடுத்தால் பார்த்து சலித்த இடம் என்பீர்கள். மாச்சு பிக்சுவில் எடுத்தால் கேவலமாக உள்ளது என்று சொல்கிறீர்கள். மவுண்ட் ரோட்டில் அல்லது நிலவில் எடுத்தாலும் கூட கண்டிப்பாக திட்டியே தீருவீர்கள் போல. ரஜினிக்கு ஐஸ் குடுத்த கிஸ் சகிக்கவில்லை என்றீர்கள். இன்னொரு முறை பாருங்கள். செம ஹாட்டாக இருக்கிறது. கருப்பும் வெள்ளையும் கலக்கும் கலக்கல் காம்பினேசன் சார் அது. இதை நான் சொல்லவில்லை. இந்த வாரம் வந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அபிஷேக் பச்சனே சொல்லி விட்டார். அவர் பார்த்ததிலே, ஐஸுக்கு பொருத்தமான திரைப்பட ஜோடி ரஜினிதான் என்று. அவருக்கே இல்லாத கவலையை நீங்கள் படுவது ஏன் என்று தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்று 16-ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் அவர்தான் இந்திய இளைஞர்களின் அபிமான அழகியாக திகழ்கிறார். அவர் ஒரு நல்ல திறமைசாலி என அவருடன் பணியாற்றிய பலர் சொன்னதே அதற்கு சான்று. மற்றபடி பிறரின் தனி மனித ஒழுக்கத்தை அளவுக்கி மீறி குடைவது நாகரீகமல்ல. இயேசு சொன்னது போல் "உங்களில் யார் உத்தமனோ அவர் இந்த பெண் மீது கல்லெறியுங்கள்" 

எதற்கெடுத்தாலும் அமிதாப், அமிதாப் என என்பதும், அவரை போல் நல்ல, வயதுக்கு தகுந்த வேடங்களில் ரஜினி நடிப்பதில்லை என்பதும் தானா உங்கள் குற்றச்சாட்டு? வெரி சாரி சாரு சார். அதையெல்லாம் என்றோ ரஜினி செய்து முடித்துவிட்டார் என்பதை நாமறிவோம்.. மன்னிக்க...நாங்கள் அறிவோம். உதாரணம்: முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், தில்லு முள்ளு, 16 வயதினிலே, ஆறிலிருந்து அறுபது வரை...இன்னும் பல. தான் ஏன் அந்த ரூட்டை மாற்றி கமர்சியல் ரூட்டை பிடித்தேன்  என்பதைத்தான் அவர் தெளிவாக கமலின் 50-ஆண்டு சினிமா விழாவில் சொல்லி விட்டாரே?  இதோ உங்களுக்காக அந்த "சூப்பர்" லிங்க்:


எந்திரனை குப்பை என்று அசால்ட்டாக சொல்லிவிட்டீர்கள். அது உங்கள் கருத்து. ஆனால், ஒரு படத்தையே ஒட்டு மொத்தமாக குப்பை என்பது குப்பையில் சேரவேண்டிய கருத்து என்பது என் கருத்து. ரஜினி, அல்லது ஷங்கர் மீது 'காண்டு' இருந்தால் அவர்களை விமர்சியுங்கள். அதை தடுக்கவா முடியும்? ஆனால் படத்தையே குப்பை என்கிறீர்கள். அதில் எத்தனை உழைப்பாளிகளின் பங்கு இருந்திருக்கும் என்பதை மறந்து. உணவளிக்கும் ப்ரொடக்சன் பாய், வாகன ஓட்டுனர், லைட்மேன், தையல்காரர், உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்டன்ட் மேன் என பலருடைய உழைப்பையும் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லி விட்டீர்களே..இனி அத்தகைய வார்த்தைகளை பிரயோகிப்பது சரியா என நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  சமீப கால தமிழ் சினிமாவில்(சில விதிவிலக்கு படங்கள் உண்டு) நொட்டிக்கொண்டு வரும் கேடு கெட்ட  ஆபாசம், ரத்தம் தெறிக்கும் வன்முறை, பரட்டை தலையும், நாறும் லுங்கியும் கட்டிக்கொண்டு மதுரையில் அருவாளுடன் வலம் வரும் வெட்டி நாயகன்...சாரி தமிழ் கலாசார வில்லன்..போன்ற எந்த காட்சி/பாத்திர அமைப்பும் இன்றி வெளிவந்த எந்திரன் குப்பை என்றால் அதை என்னவென்று சொல்வீர்கள்?????  ரஜினி சிகரெட் பிடிப்பதை கண்டு இளைய சமூகம் கேட்டது என்று சான்றோர்கள் கூவினர். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், குசேலன் போன்ற படங்களில் அதை தவிர்த்து விட்டார் ரஜினி. ஆனால், அடுத்த தலைமுறை குவார்ட்டர் கட்டிங் அடிக்க ஆரம்பித்து விட்டது. ரஜினி மீது இருந்த பாய்ச்சலில் பாதியாவது இத்தகைய சீர்கேடுகளின் மீது காட்டியதுண்டா?? மீனா, ஸ்ரேயா போன்ற மகள் வயது பெண்களுடன் ஆட்டம் போடுகிறார் என்று தாவி குதித்தனர் பலர். இப்போது ஐஸ்..(உங்கள் வழக்கில் மாமி..) உடன் ஆட்டம் போடுகிறார் என்று அலறுகிறீர்கள். உங்கள் சொற்படி மாமா மாமியுடன் ஆடினாலும் தவறா?   What a Pity, சாரு சார். 

சன் தொலைக்காட்சி என்றுமே தன்னை "அறிவு ஜீவிகளுக்கான" ஊடகம் என்று பறைசாற்றியதே இல்லை. ஆரம்பம் முதல் அது ஒரு கமர்சியல் சேனல் என்பது அனைவரும் அறிந்ததே. கக்கூசுக்கே விளம்பரம் அளிக்கும் இந்த மார்கெட்டிங் போட்டி உலகில், 150 - கோடி போட்டு படம் எடுத்த கலாநிதி அதை அறுவடை செய்யாமல் வாயில் லாலிபாப் வைத்து கொண்டு சும்மாவா இருப்பார். அவரவர் தொலைக்காட்சியில் தங்கள் கட்சி அல்லது துறை சார்ந்த விளம்பரம் போடுதல் 'உலக தொலைக்காட்சி' வரலாற்றில் ஒன்றும் புதிதல்லவே? பிடிக்காவிட்டால் சேனலை திருப்ப வேண்டியதுதானே? என்ன கொடும சரவணன்.

தழுவல் படங்களில் 'கஜினி' சுவையான மசாலா படம் என்றும், எந்திரன் அது கூட இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். திருடுவதே  தவறு....அதில் என்ன சுவையான திருட்டு  வேண்டி கிடக்கிறது?? பாவம் 'Memento' படம் எடுத்த புண்ணியவான். இதை கேட்டிருந்தால் அவன்தான் தற்கொலை செய்திருப்பான். என்னை பொறுத்தவரை inspiration என்பது நாம் காணும் சமூகத்தில் இருந்து வர வேண்டும். ஒரு கதையை சுட்டோ அல்லது படத்தை சுட்டோ வருவதை inspiration என்று சொல்வது 'சப்பை கட்டே' தவிர வேறில்லை. ஒரு நேர்மையான படைப்பாளி, தன் படைப்பில் ஒரு ஸ்டில்லை உருவி உபயோகிப்பது கூட தவறுதான். அதில் என்ன சந்தேகம். படத்தின் தலைப்பாக வரும் Font- ஐ கூடவா காப்பி அடிப்பார்கள். கலிகாலம். ஒன்றும் செய்ய முடியாது. 

       

இம்சை அரசன், கல்லூரி போன்ற நல்ல படங்களை தந்த இளம் இயக்குனர்களின் திறமை வெளிப்படும் சூழல் எந்திரன் மூலம் காணமல் போய் விட்டது என்றீர்கள். அப்படி எதுவும் காணாமல் போனதாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அரங்குகளை அடைத்துக்கொண்டு மற்ற சிறு படங்கள் வராமல் இருந்த 'எந்திர' நிலை தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை. 
Bicentennial man, Irobot போன்ற படங்களில் இருந்து எந்திரனின் சில/பல  காட்சிகள் லபக் செய்யப்பட்டது என்பது உங்கள் குற்றச்சாட்டு. அது உண்மையாக இருக்கலாம். நான் அந்த படங்களை இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதுபற்றி கருத்து கூற எனக்கு துப்பு இல்லை. உங்களை போன்று பலர் எந்த படம் எங்கிருந்து ஸ்வாகா செய்யப்பட்டது என விவரம் தருவது என்னைப்போன்ற உலக சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் கத்துக்குட்டிகளுக்கு பெரும்
உதவியாக உள்ளது. சுட்ட படத்தை பார்க்காமல், ஒரிஜினலை பார்க்க உதவும் இத்தகைய உள்ளங்களுக்கு நன்றி. நாளை Bicentennial man, Irobot படங்களை பாரிமுனையில் தேடி பயணிக்க முடிவு செய்துள்ளேன். அத்துடன் உங்கள் நண்பர் மிஸ்கின் உருவியதாக 'கூறப்படும்' (கேள்விப்பட்ட செய்தி) Kikujiro(நந்தலாலா),  Trade(அஞ்சாதே),  Memories of Murder (யுத்தம் செய்) போன்ற படங்களையும் வாங்கி விடுவேன். 


                                                                            
அதுசரி,  அது என்ன அவ்வப்போது கமலை வாருகிறீர்கள்?  எந்திரன் விமர்சனத்தில் முதல் பேராவில் தாங்கள் எழுதியது........ "அப்போது அங்கே ஒரு பிரபலமான நடிகர் வந்தார். உலக சினிமாவிலும் இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். (கமல் அல்ல, obviously)."............
அப்படி போடுங்க அருவாள. உலக சினிமாவிலும், இலக்கியத்திலும் பரிச்சயம் அற்றவர் கமல் என்பது சத்தியமாக உங்கள் கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அப்படியே இருந்தாலும், கமல் அப்படி என்ன வகையில் குறைந்து போய் விட்டார் என்பது தெரியவில்லை. கேட்டால் ஆங்கில படங்களை சுட்டார், பார்ப்பனீயம் அது இது என்று அடுக்குவார்கள் சில சான்றோர்கள். 50-ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் கமலுக்கே இந்த கதி... ரைட்டு. அவர் நினைத்து இருந்தால் இன்று வரை கமர்சியல் படங்களில் நடித்து, விசில் அடிச்சான் குஞ்சுகள் மூலம் செம கல்லா கட்டி இருக்க முடியும். ஆனால், பல புதிய முயற்சிகளால் நல்ல படங்களை தொடர்ந்து தரும் கமலை நீங்கள் இப்படி "ஒரேடியாக" லந்து செய்வீர்கள் என எண்ணவில்லை. கமலை பற்றி ரஜினி சொன்னது "நான் தொட்ட உயரத்தை அவர் தொட்டு விட்டார். அவர் தொட்ட உயரத்தை நான் தொடவில்லை".  கமல் தன்னை உலக மகா நடிகன் என்று சொன்னதாக எனக்கு தெரியவில்லை. இலக்கியத்திலும் தான் ஒரு வல்லவன் என்றும் மார் தட்டியதில்லை. கமல் அவர்கள்  சமீபத்தில் தீபாவளி நிகழ்ச்சியில் சொன்ன கவிதை உங்கள் கருத்துக்கு பதில் தருமென நினைக்கிறேன்:

"என் அம்மணத்தை கேலி செய்யும் உன் பகட்டு ஆடைக்குள் ஒளிந்து இருக்கும் அம்மணம் எனக்கு பட்டவர்த்தனமாக தெரிகிறது".

அதுதான் அவர் பலமுறை சொல்லி விட்டாரே. என் படுக்கை அறையையோ, குளியல் அறையையோ எட்டிப்பார்க்காதீர்கள். அது உங்களுக்குதான் அவமானம் என்று. தமிழன், தமிழன் என்று மார்தட்டி விட்டு தமிழ் பேச தடுமாறும் பலருக்கு மத்தியில் தூய தமிழ் மொழி பேசும் கமல் எவ்விதத்தில் மட்டமானவர்?  கமல் சொன்னது உங்கள் நினைவிற்கு "நீங்கள்தான் என்னையும், ரஜினியையும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்று உயரத்தில் வைத்து இருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு எங்கள் இடம் எதுவென்று நன்றாக தெரியும்". இதை விட வேறு என்ன அடக்கத்தை அவ்விரு தோழர்களிடம் இருந்து எதிர்பாக்க முடியும்? இதோ எங்கள் கலைஞானி பேசிய அந்த பதிவு கீழே: 


சாரு சார், இப்படி எழுதியதின் நோக்கமே உங்களை பகடி செய்வதோ அல்லது கலைஞர்களுக்கு கொடி பிடிப்பதோ அல்ல. ஒரு படத்தை குப்பை என்று சர்வ சாதாரணமாக கூறியதுதான் என்னை எழுத தூண்டியது. அதுவும் ரஜினி என்றால் பக்கம் பக்கமாக வசவு பாடுவது உங்களை போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு சரிப்படும் என தெரியவில்லை. எந்திரன் தமிழ் கலாச்சாரத்தை தீ வைத்து கொளுத்தி விட்ட ரேஞ்சுக்கு அலப்பறை செய்வது நன்றாக படவில்லை. குழாயடி சண்டை அற்ற விவாதங்களே நமக்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன். தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம். என்னை போன்ற பாமரர்களுக்கு பிடித்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் "பாமரன்" என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவர் சுத்தி வளைப்பதில்லை, தடுமாறுவதில்லை. முக்கியமாக பம்முவதில்லை.  ஆள் வேறு பார்க்க படு ஸ்டைலாக இருக்கிறார். நான் படம் எடுத்தால் பாமரன் தான் ஹீரோ. நீங்கள் வில்லன். தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் கடுக்கன் அந்த கெட்டப்புக்கு பொருந்தும் என நினைக்கிறேன். ( புகைப்படங்கள் நன்றி: சாரு, பாமரன்) 


           
எழுத்துலக சூப்பர் ஸ்டார்! 
                                                      
சினிமாவுக்கு வாங்க பாஸ்! எந்திரிங்க! 


பாமரன் அவர்களின் பேட்டியை சமீபத்தில் வலையில் பார்த்தேன். அதில் அவர் கூறியதில் முக்கியமானது "நான் வெறும் எழுத்துகளை மட்டும் பதிவு செய்பவன் அல்ல. சமூகத்திற்காக களப்பணி ஆற்றியவன் கூட".  ஆம்! நம்மில் பலர் வெறும் காகிதப்புலிகளாகவே இருக்கிறோம். 

இதோ அந்த பேட்டி:இந்த லிங்கை அடைந்தால் யூ ட்யூபில் பாமரனின் பல பேட்டிகளின் தொகுப்பு இருக்கும். அனைத்தும் நல்ல கருத்துக்களும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்ட அற்புத நேர்காணல். 


சாரு அவர்களே, உங்களை போன்ற எழுத்தாளர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது தனி மனித தாக்குதல்களையோ அல்லது ஒரு படம் பற்றி பல பக்க விமர்சனத்தையோ அல்ல. எங்களை போன்ற இளைஞர்களை நல்ல திசையில் வழி நடத்தும் ஆக்கபூர்வமான படைப்புக்களையே.. நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களைப்போன்ற நல்ல எழுத்தாளர்கள் கை கோருங்கள். நாங்களோ, நீங்களோ திசைபிரிதல் வேண்டாம். 'நாம்' ஆக பயணிப்போம்... நல்ல திசை நோக்கி. நன்றி!

 நண்பர்களே, சாருவின் படைப்புகளில் உங்களுக்கு உடன்படாத கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் முன் வையுங்கள். ஏக வசனங்கள் வேண்டாம். தமிழ் தலை தாழ நாமே முன் நிற்க வேண்டாம். என் கருத்தில் தவறு இருப்பின் சாரு அவர்களோ  அல்லது பதிவுலக நண்பர்களோ மன்னித்தருள்க! ஏனெனில், நான் ஒரு கத்துக்குட்டி. மனதில் பட்டதை பதிவு செய்துள்ளேன். நன்றி!

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:


"அடிக்கடி சில பேரு "நான் தமிழன்டா! பச்சை தமிழன்டா!" அப்டின்னு சொல்லிக்கிட்டு திரியரானுவளே, அப்ப நாங்கல்லாம் யாரு சாமி! 


ஊறுகாய்:

உங்களுக்கு ஒரு நற்செய்தி(?!).... இன்று முதல் நானும் கவிதை (கவிதையா இல்லை குப்பையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்) எழுத முடிவு செய்து விட்டேன். கவிதை மரபு, துளியும் தெரியாதவன் என்பதை ஓங்கி பதிவு செய்கிறேன். இது ஒரு கிறுக்கல் மட்டுமே.                             
                                                             
..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ. டி. -  nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites


4 comments:

Philosophy Prabhakaran said...

அந்த புள்ளபூச்சி பாவம் சார்... போய்த்தொலையட்டும்...

எனக்கும் பாமரன் சார் ஒரு ரோல்மாடல்... அவரது எழுத்துக்களை படித்துதான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்...

Unknown said...

சார் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்தவன் நான் .எப்போது அவரின் பாமினி கடிதம் படித்தேனோ .அப்போதே விட்டுவிட்டேன் அவரின் எழுத்துகளை .

ஐயையோ நான் தமிழன் said...

"கருப்பும் வெள்ளையும் கலக்கும் கலக்கல் காம்பினேசன் சார் அது. இதை நான் சொல்லவில்லை. இந்த வாரம் வந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அபிஷேக் பச்சனே சொல்லி விட்டார். அவர் பார்த்ததிலே, ஐஸுக்கு பொருத்தமான திரைப்பட ஜோடி ரஜினிதான் என்று. அவருக்கே இல்லாத கவலையை நீங்கள் படுவது ஏன் என்று தெரியவில்லை"


சிறப்பான இடம் சிறப்பான கேள்வி

Anonymous said...

Am not into the content of this but the way you have insisted the intent of your view is great... never again use the word "little lamb" you are a young roaring lion... good work dude.... finally the food is good and delicious, inspite of its ingredients. Love Simon Anandhraj.

Related Posts Plugin for WordPress, Blogger...