மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!
ஸ்டார்ட்டர்:
'டெஸ்பிகப்ல்' என்றால் எத்தகைய வன்செயலையும் செய்யக்கூடிய என்று அர்த்தமாம். சென்ற வாரம் லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த நான், இன்று மாலை சென்றது 'எஸ்கேப்' அரங்கிற்கு. 'டெஸ்பிகப்ல் மீ' விமர்சகர்கள் மற்றும் பார்த்த பலராலும் பாராட்டப்பட்ட படம் என்பதால் சென்று பார்த்தேன். $69 மில்லியன் செலவு செய்து $247 மில்லியன் வசூலை வாரிய படமாயிற்றே. ஐஸ் ஏஜ் படம் தந்த அணியின் படைப்புதான் இது.
சாப்பாடு:
படத்தில் ஹீரோவே கிடையாது. வில்லன் மட்டும்தான், பெயர் க்ரு(Gru). ஆரம்ப காட்சியில் பிரமிடை சுற்றிப்பார்க்க அமெரிக்கர்கள் செல்கின்றனர். அப்போது ஒரு சிறுவன் தவறுதலாக பிரமிடின் மேலே போய் விழுந்து விடுகிறான். சில நொடிகளில் பறந்து வந்து தரையில் பாய்கிறான். அனைவரும் வியக்க, பிறகுதான் தெரிகிறது அது ரப்பர் பிரமிட் என்றும், நிஜ பிரமிடை யாரோ களவாடி விட்டனர் என்றும். உடனே அனைத்து நாட்டு உலக அதிசயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. இதை கேள்விப்பட்ட க்ரு கொதிக்கிறான். எவன்டா அது என்னை விட பெரிய களவாணி என கோபப்படுகிறான். அதை விட பெரிய பெயர் வாங்க என்ன செய்யலாம் என சிந்திக்கிறான். தனது படியான மிநியான்சை(Minions) திரட்டி, நிலவை திருடினால்தான் நமக்கு பெருமை என கூறுகிறான். அதற்கு ஆராய்ச்சி உபகரணங்கள் வாங்க 'கெட்ட' பயலுகளுக்கு மட்டும் லோன் தரும் வங்கிக்கு செல்கிறான். ஆனால் வங்கி அதிகாரியோ அவ்வளவு பெரிய நிலவை திருடி எடுத்த வர இயலுமா? அதற்கு முன் ஸ்ரின்க் ரே (shrink ray) எனும் கதிரை கண்டுபிடி. அதன் மூலம் நிலவை சிறிதாக்கி கொண்டு வரலாம் என க்ருவை திருப்பி அனுப்பி விடுகிறார். ஒருவழியாக 'ஸ்ரின்க் ரே' வை கிழக்கு ஆசியாவில் இருந்து திருடி விடுகிறான் க்ரு. ஆனால், அங்குதான் அடுத்த வில்லன் வெக்டர் அறிமுகமாகிறான். இவன் க்ருவை விட செம கில்லி. க்ருவிடம் இருந்து 'ஸ்ரின்க் ரே' வை லபக்கி விடுகிறான். அதை திரும்ப பெற ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மூன்று சிறுமிகளின் துணையோடு க்ரு என்ன செய்கிறான் என்பதுதான் மிச்ச கதை.
நம்ம ஊர் வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அறிமுக காட்சிகளுடன் வருகிறான் க்ரு. அவன் வைத்திருக்கும் வாகனமே மிரட்டலாக உள்ளது. தன் வண்டியை பார்க் செய்ய, முன்னும் பின்னும் உள்ள வண்டிகளை நொறுக்குவது, டெர்ரராக வீட்டை வடிவமைத்திருப்பது என படு ரகளையாக அறிமுகமாகிறான் க்ரு. சிறுவயது முதல் அறிவாளித்தனமாக எதை செய்தாலும் க்ருவை கலாய்க்கும் தாய் 'செம ரகளை' பார்ட்டி. அது மட்டுமா, மூவரில் கடைக்குட்டியாக வரும் சிறுமியின் அட்டகாசமும் அரங்கில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மனதார சிரிக்க வைக்கிறது. இம்மாதிரியான படங்களை அரங்கில் குழந்தைகள் நிரம்ப நாமும் சிறிது மகிழும் சந்தோசமே தனிதான். வெக்டரின் இடத்தில் நுழைய முயற்சித்து க்ரு தோற்கும் காட்சிகளும் பயங்கர சிரிப்பை வரவழைக்கின்றன.
க்ருவின் அடிப்பொடிகளான மிநியான்ஸ் குழுவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நகைச்சுவை தீபாவளி. நம் தமிழ் படங்களில் வரும் கடத்தல் காட்சிகளை விட இந்த படத்தில் வரும் காட்சிகள் செம மசாலா கலந்த விறுவிறுப்பு. மூன்று சிறுமிகளுடன் நிலவையும் கடத்தி செல்லும் வெக்டரை துரத்தும் க்ரு மற்றும் அணியினர் புரியும் சாகசங்கள் கலக்கல். நொடிக்கு நொடி சிரிப்பு சரவெடியை கொளுத்திப்போடும் இந்த படத்தை காணத்தவறாதீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்கு நாங்கள் கியாரண்டி என நிரூபித்து இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் பியர்ரே காப்பின் மற்றும் க்றிஸ் ரெனாட். பின்னணி இசை படு பிரமாதம். படத்தின் முதுகெலும்பே அதுதான். ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. கைட்ஸ் அரங்கில் மாலை 4 மணி காட்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது இப்படம். நேரம் இருந்தால் கண்டிப்பாக பாருங்கள். அதிரடி ஆக்சன், வயிறு குலுங்கும் நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து தரப்பினரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் இந்த ''டெஸ்பிகப்ல் மீ'.
படத்தின் ட்ரெய்லாரை காண கீழே உள்ள லிங்க்கை 'க்ளிக்'கவும்:
ஊறுகாய்:
ஐநாக்சை போல, எஸ்கேப்பிலும் டிக்கெட் தரும் இடம், நொறுக்குத்தீனி விற்குமிடம் என பெண் ஊழியர்களே அதிகம். சபாஷ் சரியான போட்டி!
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:
"ஷாப்பிங் மால், சொகுசு தியேட்டர் மாதிரி இடங்கள்ள தவிச்ச வாய்க்கு தண்ணி குடிக்குற இடம் எங்க இருக்கு சாமி. மயக்கம் வந்தா கூட காசு குடுத்து தண்ணி வாங்கி நானே என் மூஞ்சில தெளிச்சிக்கனுமா.."
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
0 comments:
Post a Comment