CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 25, 2010

B.P.O

குறிப்புஇப்பதிவுமுதல் முறையாக (சென்னையில்)  ஒரு (பெரிய) B.P.O நிறுவனத்தில்வேலைக்கு சேர இருக்கும் தோழர்களுக்கு.  குறிப்பாக இரவு பணிக்கு செல்பவர்களுக்கு


                                                  
                                                                             
காசொந்த மண்ணை விட்டு சென்னைக்கு ஒருவழியாக வந்து விட்டீர்களாவருக.வருக. இன்டர்வியு நடந்த சமயத்தில் நைட் ஷிப்டுக்கு தயாரா என H.R. கேட்டதும் ஆம் என நாம் தலை ஆட்டும் அந்த ஒரு நொடிதான் ஆடு பிரியாணி ஆவதற்கான ஆரம்ப புள்ளி. அதிர்ஷ்டம் உள்ளவன் பகல் ஷிப்ட் உள்ள டீமில் நுழைகிறான். அதுவும் நகரின் மைய பகுதியில் அவனுக்கு வீடும், அலுவலகமும் அமைந்தால்....அவனுக்கு தீபாவளிதான். ஆனால், வட சென்னையில் வீடு இருந்து...(குறிப்பாக சொந்த வீடு)  சோழிங்கநல்லூர், சிறுசேரி என அத்துவான காட்டில்..அதுவும்  நைட் ஷிப்ட் செல்லும் தோழர்களின்  நிலைமையை விட கொடுமையானது வேறில்லை. எல்லாம் பூர்வ ஜென்ம பாவம்..

                                                        
 நைட் ஷிப்ட்தான் விதி என்று ஆனா பிறகு வேறு என்ன செய்ய முடியும். நண்பா, பல நிறுவனங்கள் ட்ரைனிங்கை கூட  இரவில்தான் வைக்கும். பாவம்.. இரவு பத்து மணிக்கு மேல் விழித்திராத வாழ்வை 20 வருடங்களாக பழகிய புது மாப்பிள்ளைகளுக்கு இது சற்று கடினம்தான். முதல் ஓரிரு நாட்கள் தலை கிர் அடிக்கும். ஒரு பக்கம் ட்ரைனர் எதையோ சொல்லிகொண்டிருக்க...உங்களுக்கு கண் சுழற்றி அடிக்கும். அலெர்ட் ஆறுமுகமாக இருந்தே தீர வேண்டும். என்னதான் ட்ரைனிங் சமயத்தில் வளைத்து வளைத்து நண்பர்களை பிடித்து கொண்டாலும்.. அடுத்த குண்டு விரைவில் வெடிக்கும். அனைவரையும் சிதற அடித்து வேறு வேறு டீம் மாற்றி விடுவார்கள். அங்கு நம்மை விட அனுபவம் பெற்றவர்களுடன் அமர்ந்து மீண்டும் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க பல ராஜ தந்திரங்கள் தெரிய வேண்டும். 


                                                   
ஆரம்பத்தில் சீனியர்கள் "வெள்ளை காக்கா பறக்குது பார்" என்றால் நீங்களும் "ஆமாம். ஜொய்யுனு பறக்குது" என்று சொல்லுங்கள். அப்போதுதான் அவர்களிடம் வித்தை கற்க முடியும். உடை விசயத்தில் ஆரம்பத்திலேயே அலப்பறை செய்யாதீர்கள். ஏன் என்றால் உங்களுக்கு முன்பாகவே ஓரிரண்டு ஸ்டைல் ராசாக்கள் உங்கள் அணியில் முகாம் இட்டு இருப்பார்கள். அதனால் முதல் சில மாதங்கள் அடக்கி வாசியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் டவுட் கேட்க செல்லும்போது அந்த ராசாக்கள் உங்களை சுற்றலில் விடலாம் அல்லது கழற்றி விடலாம். முதலில் வித்தை கற்க. பிறகு பட்டைய கிளப்புக. 

பீட்டர் விடுதல் மிக முக்கியம் அமைச்சரே! என்னதான் தொழில் தெரிந்தாலும்,அடிப்படை ஆங்கிலம் நன்றாக தெரிதல் முக்கியம். எனவே, விடுமுறை நாட்களில் ஆங்கில செய்தி சானெல் பார்த்தல், ஆங்கில தினசரி படித்தல் போன்ற பழக்கங்களை கடைபிடியுங்கள். ஓரளவு வித்தை,நல்ல ஆங்கிலம் தெரிந்தவன்.... வித்தையில் நல்ல தேர்ச்சி பெற்று, ஆங்கிலத்தில் கோட்டை விட்டவனை முந்திவிடுவான். உஷாரு. 


                                                    
இரவு பணியில் குறிப்பாக 2 மணிக்கு மேல் பொதுவாக கண்கள் சொக்கும். அதை முறியடிக்க முயன்று பலர் கஜினி போல் தோற்பதுண்டு. நீங்கள் கவலைப்பட வேண்டாம். கண் சொக்க ஆரம்பிக்கையில் சீட்டை விட்டு எழுந்து... வெளியே பத்து நிமிடம் இயற்கை காற்றை சுவாசியுங்கள். அதுதான் ஆண்டவன் நமக்கு அளித்த இலவச ரீ-சார்ஜ் பேட்டரி.  மீண்டும் வந்து அமர்ந்து பாருங்கள். வேலை வேகமாக நடக்கும். வேலை செய்யும் அறையில் தூங்குவதை பொதுவாக எந்த உயர் அதிகாரியும் விரும்ப மாட்டார்கள். நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும். என் 5 வருட இரவு பணியில் ஒரு நாள் கூட என் சேரில் அமர்ந்து டெஸ்கில் தலை வைத்து தூங்கியதில்லை. சுய கௌரவம் முக்கியம் இல்லையா.அதனால்தான். என் பணி நேரம் அப்போது இரவு 11 முதல் காலை 7 மணி வரை. எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள். உங்களால்  தூக்கத்தை நிறுத்த முடியவில்லை என்றால், உணவு அருந்தும் இடத்தின் ஒரு மூலையில் விளக்கை அனைத்து விட்டு 15 நிமிடம் ஒய்வு எடுத்து விட்டு பணியை தொடருங்கள். 


                                                           
இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை தவிர்க்க என்ன செய்வேன் என்றால்.. என்னை சுற்றி ஆங்காங்கே தூங்கி வழியும் நண்பர்களை வேடிக்கை பார்ப்பேன். ஆஹா.. அந்த சுகமே அலாதி. இடியே விழுந்தாலும் அசராமல் தூங்குபவர், சிஸ்டம் லாக் ஆகாமல் இருக்க மவுசை ஆட்டிக்கொண்டே தூங்குபவர், தூக்கத்தில் தலையால் கம்ப்யூட்டரை முட்டுபவர்..என பல ரகம். அதிலும் குறிப்பாக, தூக்கம் பாதியில் கலைந்ததும் திடீர் என பதறி போய் முழிக்கும் நண்பர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே.. செம காமெடியாக இருக்கும். அதே சமயத்தில் இதயத்தில் வேதனை முள் தைக்கும். தமிழகத்தில் தாய்மொழி சார்ந்த வேலையை பகல் பொழுதில் செய்து, மாலை நேரத்தை உடற்பயிற்சிக்கும், குடும்பத்திற்கும் ஒதுக்க இயலாமல் நம் இளைய தலைமுறை எங்கோ ஒரு காட்டில்..ஏதோ ஒரு மாடியில்..வெள்ளைக்கார துரைகளுக்காக.. இரவு முழுக்க விழித்து..தன் வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கிறதே என்று... என்று விடியுமோ? 


                                                          
நண்பா, அலவன்ஸ் கிடைக்கிறது என்பதற்காக வருடக்கணக்கில் இரவு பணியில் குப்பை கொட்டாதீர்கள். உடல் நலம் காணாமல் போய்விடும். இப்போது தொப்பை என்றால் போலீஸ் என்ற காலம் போய் ஐ.டி/பி.பீ.ஓ தொப்பை பிரபலம் ஆகி வருகிறது. 30 வயதை தொடும் முன்னே, 5 கர்ப்பிணி போல் ஆகி விடுகிறோம். முடிந்த அளவு வீட்டு சாப்பாடு சாப்பிடுங்கள். நடை மிக மிக முக்கியம். இரண்டு மாடியாவது படிகளில் நடக்க பழகுங்கள். 


உங்கள் நிறுவனம் உங்களுக்கு தகுந்த சம்பளம்/ஊதிய உயர்வு  தருகிறதா என்பதை தெரிந்து கொள்ள சுலபமான வழி எது தெரியுமா...உங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியை கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் வேலைக்கு சேரும்போது..அந்த கடை வெகு சாதாரணமாக இருக்கும். அதுவருடம் அண்ணாச்சி கடையை புதுப்பிப்பார். சில நாட்களுக்கு முன்பு வரை ஈ அடித்து கொண்டிருந்தவர்.. கூட்டம் கூட கூட..பல வகை பஜ்ஜிகளை போட்டு தாக்குவார். நாம் கர்ப்பம்(தொப்பை) ஆவதற்கு அவர்தான் முக்கிய காரணமாக இருப்பார். அந்த லாபத்தில் அண்ணாச்சி கழுத்தில் தங்க செயின் டால் அடிக்கும். இரண்டாம் வருடம் அண்ணாச்சி.. இட்லி, தோசை, பரோட்டா என மினி ஹோட்டலாக கடையை மாற்றுவார். அந்த சமயம் உங்கள் ஊதிய உயர்வு மொக்கையாக இருந்தால்...நாம் வாழ்வில் எங்கோ தோற்க ஆரம்பிக்கிறோம் என அர்த்தம். விழித்து கொள்ள வேண்டிய தருணம் அது. இந்த பொழப்புக்கு பேசாம டீ கடை வச்சி இருக்கலாம் என மனசாட்சி ஏளனம் செய்யும்.  


                                   
நீங்கள் வசிக்கும் இடம் உங்கள் நிறுவனம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தூரம் இருக்கிறதா? உங்கள் நிறுவனம் பிக் அப்/டிராப் தருகிறதா? பஸ் அல்லது 
டெம்போ ட்ரா- வெல்லர் போன்ற பெரிய வாகனங்கள் இருந்தால் நன்று. சுமோ போன்ற வாகனங்களில் பிரயாணிக்க நேர்ந்தால்.. கூடுமானவரை ஓட்டுனருக்கு அருகில் அல்லது பின்பக்க இருக்கையில் அமர்ந்து செல்லுங்கள். கடைசியில் இருக்கும் நால்வர் அமரும் இருக்கைகளை தவிருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, ஷிப்ட் முடிய 5 நிமிடம் இருக்கும் முன்பு லாக் ஆப் செய்து விட்டு உங்கள் வாகனம் நிற்கும் இடத்திற்கு சென்று உள்ளே அமர்ந்து விடுங்கள். பல கிலோ மீட்டர் தூரம் பிரயாணம் செய்ய வேண்டிய ஆள் நீங்கள் என்பதால் இந்த விசயத்தில் கவனம் செலுத்துங்கள். 


                                         
லிப்ட்,காப்டீரியா..போன்ற இடங்களில் சாதாரண உடை அணிந்து செல்லும் நம்மை, ஸ்டைல் ராசாக்கள் ஒரு மாதிரியாக லுக் விட்டால் அசர வேண்டாம். அவன் கண்களையே தெனாவட்டாக உற்று பாருங்கள். பயபுள்ள பம்மி விடுவான். வேலையில் சேரும்போது நம்மை போல் உடை அணிந்த ஜந்துதான் அதுவும். இன்று படம் காட்டுகிறது. கண்டு கொள்ளாதீர்கள். ஆரம்பத்தில் சென்னை வந்த வேகத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவின்யு, ஸ்பென்சர், சத்யம், அடிடாஸ், ரீபோக்..என அறிந்தும்,  அறியாமலும் காசை கரி ஆக்கதான் செய்வோம். பிறகு அந்த பக்கமே தலை காட்ட மாட்டோம். எனவே படு கஞ்சனாகவோ, பகட்டுக்காரனாவோ இருக்க வேண்டாம். பார்த்து செலவு செய்யுங்கள். வேலை வேலை என்று இராமல், அவ்வப்போது உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகள் மற்றும் அதை சுற்றி நடக்கும் விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள். இரவில் வண்டியில் பிரயாணிக்கும்போது கூடுமானவரை, ஓட்டுனரிடம் பேச்சு குடுத்துக்கொண்டோ அல்லது வண்டியில் பாடலை போடுமாறு கேட்டுகொண்டோ செல்லுங்கள். ஏன் எனில் சில ஓட்டுனர்கள் வண்டி ஒட்டும்போதே தூங்கி விடுவார்கள். அதனால் அண்ணனை அசர விடாதீர்கள். இல்லாவிட்டால் வண்டியை சாலையின் ஓரத்தில் இருக்கும் மரத்திலோ, அருகே சென்று கொண்டு இருக்கும் வண்டியிலோ சொருகி விடுவார்.


                                                             
குடும்பத்தை கிராமத்தில் விட்டு விட்டு தலைநகரில் தஞ்சம் புகுந்து இரவு வேலை செய்ய தயாராகும் நண்பர்களே, இந்த பதிவு ஒரளவேனும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்வில் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்! மீண்டும் சொல்கிறேன்..உடல் நலனில் தீவிர அக்கறை அவசியம். இரவில் பேய் போல விழித்து சம்பாதிக்கும் பணம் எத்தனை ஆயிரமாக இருந்தாலும்..உங்கள் உடலே பிரதானம். பார்த்து கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம். 


கொசுறு: தோழர்களே, இது எனது இரண்டாவது Blog. முதலில் தொடங்கியது nanbendaa.blogspot.com.    

5 comments:

Giri Ramasubramanian said...

நண்பருக்கு,
நீங்கள் பி.பீ.ஒ'வில் பணி புரிபவர் என நம்புகிறேன். ஆஹா எத்தனைத் தகவல்கள்... இதை நீங்கள் தொடர் வடிவில் தொடர முயலலாமே?

நான் இது குறித்து என் தளத்தில் எழுதி வரும் தொடர் உங்கள் பார்வைக்கு...

http://goo.gl/eeyG

Philosophy Prabhakaran said...

என் இனமடா நீ... நான் சிலகாலம் வரை கால்சென்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்... டொமஸ்டிக் கால் செண்டர் தான்... ஆனால் அதுலயும் எனக்கு நைட் ஷிபிட் தான் கெடச்சது... 300 பேர் வேலை செய்யுற எடத்துல வெறும் 10 பேர மட்டும் தான் நைட் ஷிப்ட்ல போடுவாங்க... நான் அந்த பத்துல ஒருத்தன்...

மாணவன் said...

அருமையாகவும் தெளிவாகவும் உங்கள் அனுபவங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்

நானும் சில காலம் சென்னையில் பணி புரியும்போது இந்த இரவுநேர வாழ்க்கையை அனுபவத்திருக்கிறேன்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்
மாணவன்

CS. Mohan Kumar said...

Very good article Siva. Well done

சந்திர மௌலி said...

நன்று

Related Posts Plugin for WordPress, Blogger...