நிஜ மனிதர்களும், விலங்குகளும் நடித்த படங்கள் ஆயிரம் வந்தாலும்... மனிதன் கற்பனையில் உருவாகும் அசத்தலான அனிமேஷன் படங்கள்தான் போற்றுதலுக்குரியவை என்பது என் கருத்து. அப், பைண்டிங் நிமோ, ஷ்ரெக், போலார் எக்ஸ்பிரஸ் போன்ற சிறந்த அனிமேஷன் படங்களை நான் பார்க்க தவறியதில்லை. அந்த படங்களின் வரிசையில் தற்போது வந்திருக்கும் படம்தான் வார்னர் பிரதர்ஸின் 'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'-3D. ட்ரைலர் பார்த்த நாள் முதல் இதற்காக காத்திருந்தேன். நேற்று இப்படத்தை சென்னை பீ.வீ.ஆர். தியேட்டரில் பார்த்தேன். அனிமேஷன் ஆந்தைகளை கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், பரவசமான 3D அனுபவமாக அமைந்தது.
கதை:
அண்ணன் க்லட், தம்பி சோரேன் மற்றும் இளைய தங்கை எக் மூவரும் நல்ல ஆந்தைகளோடு வாழ்பவர்கள். இவர்களின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் வில்லன் அணியின் பெயர் ப்யூர் ஒன்ஸ், அதன் தல 'மெட்டல் பீக்'. ராணி பெயர் நைரா. ஒருநாள் க்லட்,சோரேன் இருவரையும் எதிர் அணியினர் கடத்தி சென்று விடுகின்றனர். அங்கு இவர்களை போல பல நல்ல ஆந்தைகள் எதிரிகளின் அடிமைகளாக மாற்றப்படுவதை காண்கின்றனர். அங்கு நடக்கும் பயிற்சியில் க்லட் மனம் மாறி எதிர் அணிக்காக வேலை செய்கிறான். சோரேனையும் அதில் சேர சொல்கிறான். ஆனால் சோரேன் அதை மறுத்து விட்டு அங்கிருந்து தப்பி செல்கிறான். 'கார்டியன்ஸ்' எனும் நல்லவர்களின் கூட்டம் இருக்கும் இடமான காஹூல் எனும் பிரம்மாண்ட மரத்தை வந்தடைகிறான். எதிர் அணியில் நடக்கும் கொடுமைகளை எடுத்து சொல்கிறான்.
அல்லோமேர் எனும் தளபதியின் தலைமையில் எதிரிகளை வெளுத்துக்கட்ட கிளம்புகிறது நல்லவர்களின் அணி. 'கார்டியன்சை' ஏமாற்றி கொண்டு வந்து விட்டேன். எனக்கு வாக்கு அளித்தது போல காஹூல் மரத்தின் மன்னனாக முடி சூட்டுங்கள் என அல்லோமேர் வில்லன் மெட்டல் பீக்கிடம் கேட்கிறான். ஆனால் மெட்டல் பீக், "ஒரே மன்னன்தான் இங்கு இருக்க முடியும், அது நான்தான்" என கூறிவிடுகிறான். அதன் விளைவாக தொடங்குகிறது இறுதி கட்ட யுத்தம். சோரேனுக்கும் க்லட்டுக்கும் நடக்கும் சண்டையில் க்லட் மர உச்சியில் இருந்து நெருப்பில் விழுந்து விடுகிறான். மெட்டல் பீக் மற்றும் அவர்கள் அணி இறக்க, மீதம் உள்ள ஒரு சிலருடன் பயந்து ஓடி விடுகிறாள் வில்லி நைரா. சோரேன் தன் குடும்பத்துடன் இணைகிறான். அவ்வளவுதான் படம் என்று நினைத்தால்.. இறுதி காட்சி அதை பொய்ப்பிக்கறது. வில்லி நைரா தன் சிறு அணியுடன் இருப்பதையும், க்லட் சிவந்த கண்களுடன் மெட்டல் பெக்கின் கவசங்களை அணிந்து கொண்டு நம்மை பார்ப்பதை காணுகையில் இரண்டாம் பாகம் வரவிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சிறப்பு அம்சங்கள்:
படம் தொடங்கும் முன்பாக ஒரு குட்டி போனஸ் படத்தை காண்பிக்கிறார்கள் வார்னர் பிரதர்ஸ். அதுவே அரங்கை சிரிப்பொலியால் அதிர வைக்கிறது. தாமதமாக சென்றால் கண்டிப்பாக மிஸ் செய்வீர்கள். 'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்' படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் அசத்தலாக எடுக்கப்பட்டுள்ளது. ஆந்தைகள் வானில் பறக்கையில் அதன் ஒவ்வொரு திசுவும் காற்றில் அசைவதை வெகு நேர்த்தியாக செதுக்கி இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆந்தைகளின் உலகம் இது. ஆந்தைகள் பறக்கும் சில காட்சிகள், நம் கண்ணில் இருந்து அவை பறந்து முன்னே செல்லும் வண்ணம் 3D ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, க்லட் ஒரு நீல நிற பறவையை துரத்தி பிடிக்கும் காட்சி(இந்த பக்கத்தின் இறுதியில் உள்ள படம்) , மழைக்காலத்தில் ஆந்தையின் மீது விழும் தண்ணீர் துளிகள் போன்றவை(இந்த பக்கத்தின் மூன்றாம் படம்) வெகு கச்சிதமாக 3D-யில் படம் ஆக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து ட்ரைலரை பார்த்தால் கண்டிப்பாக படம் பார்த்தே தீருவீர்கள் என நம்புகிறேன்.
http://www.youtube.com/watch?v=x8RKCmkOyB4
ட்வைலைட் எனும் பாட்டு பாடி, இசையும் அமைக்கும் ஆந்தையின் நகைச்சுவை காட்சிகள் மக்களுக்கு விருந்து. படத்தில் வரும் 'டு தி ஸ்கை' எனும் பாடல் இனிமை. படத்தின் முக்கிய அம்சங்களாக இருப்பது அற்புதமான பின்னணி குரல் மற்றும் மிரட்டும் பின்னணி இசை. இசை அமைத்த படைப்பாளிகளுக்கு ராயல் சல்யூட். இதில் வரும் இறுதி கட்ட சண்டை காட்சிகள் ஒரு பெரிய கமர்சியல் படத்தை போல் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் நல்லவன், கெட்டவன், நகைச்சுவை, செண்டிமெண்ட், அனல் பறக்கும் சண்டை அனைத்து தரப்பினரையும் கவரும் பக்கா அனிமேஷன் மசாலாவாக வந்திருக்கிறது 'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'. வரும் வெள்ளி முதல், தீபாவளி படங்கள் வருவதற்கு முன் இந்த படத்தை குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு காட்டி விடவும். விரைவில் ஏகப்பட்ட தமிழ் படங்கள் மொய்க்கப்போவதால், தீபாவளி தாண்டி இதை ஓட்டுவார்களா என்று தெரியவில்லை.
உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இப்படம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அடுத்து நான் ஆவலுடன் பார்க்க காத்திருப்பது அடுத்த வாரம் நமது நாட்டில் வெளியாகப்போகும் 'சோசியல் நெட்வொர்க்' திரைப்படம். மீண்டும் சந்திப்போம். நன்றி.
2 comments:
பின்னோட்டம் போடுமிடத்தில் கேட்கப்படும் word verification ஐ நீக்கி விடவும்...
nice i like this movie
Post a Comment