CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, October 30, 2010

உதிரிப்பூக்கள்

                                                                                                     
உலக சினிமா என்பதற்கான இலக்கணம் எது? ஒரே வரிதான். Think Global. Act Local. ஒரு திரைப்படம் மக்களால் தலைமுறை தாண்டியும் போற்றப்பட வேண்டும்.  உலகின் எந்த தேசத்தவரும் பார்க்கும் வகையில் கதை, திரைக்கதை மற்றும் (பின்னணி) இசை அமைந்திருக்க வேண்டும். மண்சார்ந்த, யதார்த்தமான, இதயத்தை தொடும் படமாக இருக்க வேண்டும். உலக அளவில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட Children of Heaven, City of God, The Cyclist போன்ற பல படங்களை இவ்வாறு சொல்லலாம். அப்படி பார்க்கையில் தமிழில் எனக்கு தெரிந்து ஒரு சில படங்களே வந்துள்ளன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அப்பேற்பட்ட படங்கள் என சொல்வதென்றால் பராசக்தி, அவள் ஒரு தொடர்கதை, கருத்தம்மா, முள்ளும் மலரும், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் மற்றும் அங்காடி தெரு போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் அவற்றுள் முதன்மையானது 'உதிரிப்பூக்கள்' என்பது என் கருத்து. அப்படம் இன்று ஜெயா டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மீண்டும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.                                           

காரணம்....இதுதான். ஹீரோயிசம், சண்டை, டூயட், உணர்ச்சி கொந்தளிப்பு, வட்டார வழக்கு, எதிர்பார்த்த கிளைமாக்ஸ், வன்முறை, ஆபாசம், அசட்டு நகைச்சுவை, செட், கருத்து சொல்லுதல் என தமிழ் சினிமாவின் அனைத்து இலக்கணங்களையும் உடைத்து எறிந்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு, மக்களாலும் பேசப்பட்டு, வசூலிலும் வெற்றி மாலை சூடிய ஒரே உலக தமிழ் சினிமா இந்த 'உதிரிப்பூக்கள்' என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

                                                
பல கோடி பட்ஜெட்டில், பல தேசத்தில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், சாதாரண கிராமத்தில், நட்சத்திர பட்டாளங்கள் இன்றி ஒரு உன்னத படத்தை எடுத்த நம் மகேந்திரன் வாழ்க. இவர் ஏன் மற்ற இயக்குனர்களை விட அனைத்து தரப்பினராலும் பெரிதாக பேசப்படுகிறார்? அதற்கு முக்கிய காரணம் வேறொன்றுமில்லை. பாலசந்தர் படங்களில் வரும் 'சற்றே' அதிமேதாவி பாத்திரங்கள் இல்லை. இயல்பான மனிதர்கள். பாரதிராஜாவின் படங்களில் வரும் வட்டார வழக்குகள் இல்லை. பொது தமிழ். மணிரத்னத்தின் படங்களில் வரும் கேமரா யுத்திகள் இல்லை. இயற்கை மட்டுமே. ஷங்கர் படங்களில் வருவது போன்று பிரம்மாண்டம் இல்லை. ஆனால் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' மற்றும் 'முள்ளும் மலரும்' போன்றவை என்றும் மக்கள் மனதில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும்.

                                                                
ஆரம்பம் முதல் இறுதி வரை இமை அசையாமல் பார்க்க வைக்கும் அற்புதமான களம். தெளிந்த நீரோடை போல நகரும் கதை. விஜயன் ஒரு வில்லனா அல்லது ஹீரோவா என்பதை எளிதில் யூகிக்க முடியாமல் அவர் காட்டி இருக்கும் முக பாவங்கள். அற்புதம். சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, முடி திருத்துபவர், சலவையாள், குழந்தையாக நடித்த அஞ்சு, மாஸ்டர் ராஜா உட்பட அனைவரும் நடித்ததாகவே தெரியவில்லை. இந்த படம் வருவதற்கு முன் கதை நாயகி அஸ்வினி தமிழ் சினிமாவின் ராசியற்ற நடிகையாக கருதப்பட்டார். ஆனால், அதை பொய்ப்பிக்கும் வண்ணம் மகேந்திரன் அஸ்வினியை தேர்வு செய்து சரித்திரத்தை மாற்றி அமைத்தார். இப்படத்தில் வரும் சிறுவன் 'அந்த ஏழு நாட்கள்' புகழ் காஜா செரீப் என எண்ணி இருந்தேன். இன்றுதான் அவன் காஜா செரீப்பின் தம்பி ராஜா என்பதை அறிந்து கொண்டேன்.

                                                            
ஒரு காட்சியில், இரவு நேரத்தில் குழந்தைகள் இருவரும் நாயகியின் தங்கை வீட்டிற்கு செல்வர். ஏன் என அவள் கேட்க, அந்த சிறுவன் மெலிதாக சிரித்துகொண்டே சொல்கிறான் "பவானிக்கு பசிக்குதாம்". பவானியும் சிரிப்பை படரவிடுவாள். ஆனால் நம் இதயத்தில் இடி இறங்கும். இதை விட பசியின் கொடுமையை இயல்பாக எந்த இயக்குனரும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பஞ்சாயத்து மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை, மண்வாசனையுடன் கலந்த உலகத்தரம். சிறந்த ஒளிப்பதிவாளர் என பெயர் பெற இன்று பலர், சாதாரண கிராமத்து படங்களில் கூட கண்ட கண்ட ஆங்கிளில் காட்சிகளையும், கலர் டோன்களையும் வைத்து படத்தை சிதைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தயவு செய்து 'உதிரிப்பூக்களில்' அசோக்குமாரின் ஒளிப்பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தால் நலம்.

                                              
குழந்தைகள் பட்டினி கிடந்ததை கேள்விப்படும் விஜயன், தனது இரண்டாம் மனைவியிடம் பேசும் வசனம், "குழந்தைங்களை நீ பட்டினி போட்ட அப்டின்னு சொல்லல. ஆனா அவுங்க முழுசா சாப்டாங்கலான்னு பாத்திருக்கலாம்". அங்கே நிற்கிறார் மகேந்திரன். படத்தின் இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் 'உதிரிப்பூக்களாய்' ஆகி விடுவதை அழகாக காட்டியிருக்கும் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார். ஆனால், தற்போது மண்வாசனையுடன் படம் எடுக்கிறோம் பேர்வழி என்று மதுரையில் ரத்தம் பீறிடும் காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களை என்னவென்று சொல்ல. சர்வதேச திரைப்பட விருது வழங்கும் கமிட்டிகள் சொல்வது என்ன? உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது? யதார்த்த வட்டார வழக்கும், வீதிகளும், துணை கதாபாத்திரங்களும் மட்டுமே இருந்தால் அது யதார்த்த படம் என்று யார் சொன்னது?

                                                  
என்னை கேட்டால்  மகேந்திரன் எனும் உன்னத படைப்பாளி, தமிழ் கலைத்தாயின் கழுத்தில் உதிரிப்பூக்களை கோர்த்து, என்றும் மணம் மாறாத ரோஜா மாலையை சூட்டி இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. பல சிறந்த தமிழ் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அது என்னவோ தெரியவில்லை. இந்த படத்தை பார்க்கையில் ஏற்படும் மன உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. அடுத்த உலகத்தரத்திலான  தமிழ் சினிமா என்று வரும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். நன்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...