CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, October 30, 2010

உதிரிப்பூக்கள்

                                                                                                     
உலக சினிமா என்பதற்கான இலக்கணம் எது? ஒரே வரிதான். Think Global. Act Local. ஒரு திரைப்படம் மக்களால் தலைமுறை தாண்டியும் போற்றப்பட வேண்டும்.  உலகின் எந்த தேசத்தவரும் பார்க்கும் வகையில் கதை, திரைக்கதை மற்றும் (பின்னணி) இசை அமைந்திருக்க வேண்டும். மண்சார்ந்த, யதார்த்தமான, இதயத்தை தொடும் படமாக இருக்க வேண்டும். உலக அளவில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட Children of Heaven, City of God, The Cyclist போன்ற பல படங்களை இவ்வாறு சொல்லலாம். அப்படி பார்க்கையில் தமிழில் எனக்கு தெரிந்து ஒரு சில படங்களே வந்துள்ளன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அப்பேற்பட்ட படங்கள் என சொல்வதென்றால் பராசக்தி, அவள் ஒரு தொடர்கதை, கருத்தம்மா, முள்ளும் மலரும், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் மற்றும் அங்காடி தெரு போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் அவற்றுள் முதன்மையானது 'உதிரிப்பூக்கள்' என்பது என் கருத்து. அப்படம் இன்று ஜெயா டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மீண்டும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.                                           

காரணம்....இதுதான். ஹீரோயிசம், சண்டை, டூயட், உணர்ச்சி கொந்தளிப்பு, வட்டார வழக்கு, எதிர்பார்த்த கிளைமாக்ஸ், வன்முறை, ஆபாசம், அசட்டு நகைச்சுவை, செட், கருத்து சொல்லுதல் என தமிழ் சினிமாவின் அனைத்து இலக்கணங்களையும் உடைத்து எறிந்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு, மக்களாலும் பேசப்பட்டு, வசூலிலும் வெற்றி மாலை சூடிய ஒரே உலக தமிழ் சினிமா இந்த 'உதிரிப்பூக்கள்' என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

                                                
பல கோடி பட்ஜெட்டில், பல தேசத்தில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், சாதாரண கிராமத்தில், நட்சத்திர பட்டாளங்கள் இன்றி ஒரு உன்னத படத்தை எடுத்த நம் மகேந்திரன் வாழ்க. இவர் ஏன் மற்ற இயக்குனர்களை விட அனைத்து தரப்பினராலும் பெரிதாக பேசப்படுகிறார்? அதற்கு முக்கிய காரணம் வேறொன்றுமில்லை. பாலசந்தர் படங்களில் வரும் 'சற்றே' அதிமேதாவி பாத்திரங்கள் இல்லை. இயல்பான மனிதர்கள். பாரதிராஜாவின் படங்களில் வரும் வட்டார வழக்குகள் இல்லை. பொது தமிழ். மணிரத்னத்தின் படங்களில் வரும் கேமரா யுத்திகள் இல்லை. இயற்கை மட்டுமே. ஷங்கர் படங்களில் வருவது போன்று பிரம்மாண்டம் இல்லை. ஆனால் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' மற்றும் 'முள்ளும் மலரும்' போன்றவை என்றும் மக்கள் மனதில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும்.

                                                                
ஆரம்பம் முதல் இறுதி வரை இமை அசையாமல் பார்க்க வைக்கும் அற்புதமான களம். தெளிந்த நீரோடை போல நகரும் கதை. விஜயன் ஒரு வில்லனா அல்லது ஹீரோவா என்பதை எளிதில் யூகிக்க முடியாமல் அவர் காட்டி இருக்கும் முக பாவங்கள். அற்புதம். சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, முடி திருத்துபவர், சலவையாள், குழந்தையாக நடித்த அஞ்சு, மாஸ்டர் ராஜா உட்பட அனைவரும் நடித்ததாகவே தெரியவில்லை. இந்த படம் வருவதற்கு முன் கதை நாயகி அஸ்வினி தமிழ் சினிமாவின் ராசியற்ற நடிகையாக கருதப்பட்டார். ஆனால், அதை பொய்ப்பிக்கும் வண்ணம் மகேந்திரன் அஸ்வினியை தேர்வு செய்து சரித்திரத்தை மாற்றி அமைத்தார். இப்படத்தில் வரும் சிறுவன் 'அந்த ஏழு நாட்கள்' புகழ் காஜா செரீப் என எண்ணி இருந்தேன். இன்றுதான் அவன் காஜா செரீப்பின் தம்பி ராஜா என்பதை அறிந்து கொண்டேன்.

                                                            
ஒரு காட்சியில், இரவு நேரத்தில் குழந்தைகள் இருவரும் நாயகியின் தங்கை வீட்டிற்கு செல்வர். ஏன் என அவள் கேட்க, அந்த சிறுவன் மெலிதாக சிரித்துகொண்டே சொல்கிறான் "பவானிக்கு பசிக்குதாம்". பவானியும் சிரிப்பை படரவிடுவாள். ஆனால் நம் இதயத்தில் இடி இறங்கும். இதை விட பசியின் கொடுமையை இயல்பாக எந்த இயக்குனரும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பஞ்சாயத்து மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை, மண்வாசனையுடன் கலந்த உலகத்தரம். சிறந்த ஒளிப்பதிவாளர் என பெயர் பெற இன்று பலர், சாதாரண கிராமத்து படங்களில் கூட கண்ட கண்ட ஆங்கிளில் காட்சிகளையும், கலர் டோன்களையும் வைத்து படத்தை சிதைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தயவு செய்து 'உதிரிப்பூக்களில்' அசோக்குமாரின் ஒளிப்பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தால் நலம்.

                                              
குழந்தைகள் பட்டினி கிடந்ததை கேள்விப்படும் விஜயன், தனது இரண்டாம் மனைவியிடம் பேசும் வசனம், "குழந்தைங்களை நீ பட்டினி போட்ட அப்டின்னு சொல்லல. ஆனா அவுங்க முழுசா சாப்டாங்கலான்னு பாத்திருக்கலாம்". அங்கே நிற்கிறார் மகேந்திரன். படத்தின் இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் 'உதிரிப்பூக்களாய்' ஆகி விடுவதை அழகாக காட்டியிருக்கும் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார். ஆனால், தற்போது மண்வாசனையுடன் படம் எடுக்கிறோம் பேர்வழி என்று மதுரையில் ரத்தம் பீறிடும் காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களை என்னவென்று சொல்ல. சர்வதேச திரைப்பட விருது வழங்கும் கமிட்டிகள் சொல்வது என்ன? உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது? யதார்த்த வட்டார வழக்கும், வீதிகளும், துணை கதாபாத்திரங்களும் மட்டுமே இருந்தால் அது யதார்த்த படம் என்று யார் சொன்னது?

                                                  
என்னை கேட்டால்  மகேந்திரன் எனும் உன்னத படைப்பாளி, தமிழ் கலைத்தாயின் கழுத்தில் உதிரிப்பூக்களை கோர்த்து, என்றும் மணம் மாறாத ரோஜா மாலையை சூட்டி இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. பல சிறந்த தமிழ் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அது என்னவோ தெரியவில்லை. இந்த படத்தை பார்க்கையில் ஏற்படும் மன உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. அடுத்த உலகத்தரத்திலான  தமிழ் சினிமா என்று வரும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். நன்றி.

பேருந்து
குறிப்பு: இப்பதிவு, சென்னை மாநகர பேருந்தில் நான் நித்தமும் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பு
                                                           
                                                                      
சென்னைவாசிகளின் பூர்வ ஜென்ம பலனோ என்னவோ தெரியவில்லை. மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தால் ஒன்று கூட வந்து தொலைக்காது. திடீரென ஒரே எண் உள்ள பேருந்துகள் அடுத்தடுத்து வரும். வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வரும்.. "லேட் ஆக்கிகிட்டே போறீங்க இல்ல. இருக்கட்டும். இந்த போக்குவரத்து துறை அமைச்சருக்கு  போனு போட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாதான் இந்த சூனா பானா யாருன்னு தெரியும்". 

 ஆண்கள், பெண்கள் என சென்னை பேருந்துகளில் எழுதுவதை நிறுத்தினால் தேவலை.  இளைஞர்களும், பள்ளி சிறுவர்களும் சில இம்சை பயணிகளிடம்  படும் பாடு இருக்கிறதே. அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து வந்ததும் இருக்கையில் அடித்து பிடித்து இடம் பிடிப்பேன். உட்கார்ந்த அடுத்த சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு நடுத்தர வயது பெண் வருவார். கூட ஒரு பெண்ணையும் அழைத்து கொண்டு. அல்லது ஒரு நடுத்தர வயது ஆண் வருவார். மனைவியை அழைத்து கொண்டு. அவர்கள் என்னிடம் சொல்வது "தம்பி வேற எங்கயாவது உக்காருப்பா. நாங்க ஒண்ணா உக்காரணும்". திரும்பி பார்ப்பேன். பெண்கள் இருக்கை காலியாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு அமர மாட்டார்கள். சரி போகட்டும் என்று வேறு எங்காவது ஆண்கள் இருக்கையில் ஜன்னலோர இருக்கையில் அல்ல) அமர்ந்தால் அன்று இருக்குது எனக்கு தீபாவளி. 

                                                                  
கூட்டம் சேர சேர நம் தோள்பட்டையில் தன் புட்டத்தை வைத்து சொகுசாக பயணிப்பார்..நின்று கொண்டு வரும் சக பிரயாணி. "இந்த பைய கொஞ்சம் வச்சிகங்க" என்று பல கிலோ எடையுள்ள சுமையை தொடையில் இறக்குவார் அடுத்த நண்பர். ஒரு வழியாக அந்த நெரிசலில் "எட்டணா அமுக்கி" நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியதும்தான் நிம்மதி வரும். முன்பெல்லாம் எட்டணா இல்லையென சொல்லும் நடத்துனர்கள், இப்போது அதையும் சொல்வதில்லை. நடத்துங்கள் நடத்துனர்களே. வயதில் பெரியவர்களை கூட ஏதோ அடிமைகளுடன் பேசுவது போல "அங்க போய் உக்காரு. சீக்கிரம் ஏறு, இறங்கு. உள்ள போ" என நடத்துனர்கள் ஏக வசனத்தில் பேசுவதை எப்போதுதான்  நிறுத்தப் போகிறார்களோ?   

                                                                             
 மாநகர பேருந்துகளில், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லி மாளாது. முதுகில் டன் கணக்கில் புத்தகங்களை சுமந்து கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்தில் அந்த பிள்ளைகள் ஏறினால்.. அவர்கள் மேல் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள் நம் மக்கள். 'பையை வச்சி இடிக்காத. நவுந்து நில்லு" என கடிந்து கொள்பவர்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறதா.. இல்லையா தெரியவில்லை. நேற்று கூட தி. நகர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காட்சி கண்டேன். அரசு பள்ளியில் பயிலும் ஒரு சிறுமி ஓட்டுனரிடம் 'அண்ணா, இந்த வண்டி பாரிமுனை போகுமா" என கேட்க அதற்கு அவர்.. மன்னிக்கவும் அவன் அந்த சிறுமியிடம் கடிந்து கொண்டு சொல்கிறான் "காலைலா சாப்டியா இல்லியா. கத்தி பேசு".  பாவம் அந்த தங்கையின் முகம் சுருங்கிப்போனது. அரசு பள்ளி பிள்ளைகள் என்றால் அப்படி என்ன இளக்காரம் இவர்களுக்கு. அரசாங்கம் இப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு தனியாக பேருந்து விட்டால்தான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி. வறுமையின் நிறத்தை முகத்தில் அடர்த்தியாக பூசியபடி பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகள், இப்படி அவஸ்தை படுவதை சகிக்க முடியவில்லை. 


                                                                          
                                                           
இப்படிப்பட்ட மிருகங்களுக்கு மத்தியிலும் எங்காவது ஒரு நல்ல நடத்துனரோ, ஒட்டுனாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாள் பேருந்தில் நான் கண்ட காட்சி. பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் பயணம் செய்து கொண்டு வந்தனர். அதை ஒரு பயணி காரமாக கண்டித்தார். உடனே அங்கு வந்த நடத்துனர், "பசங்கள திட்டாதீங்க சார். தன்மையா சொன்னா கேட்டுக்க போறாங்க. அவங்களுக்கு என்ன தெரியும். படிக்க சொன்னா படிப்பாங்க. வெளையாடுவாங்க. தம்பி மேல வாங்கப்பா" என அழைத்ததும் அவர்கள் அனைவரும் மேலே ஏறினர். முன் வரிசையில் அமரும் பள்ளி பிள்ளைகளிடம் அன்பாக பேசிக்கொண்டே வரும் ஓட்டுனர்களும் அரிதாக தென்படுவதுண்டு. 


                                                                      
எதற்கெடுத்தாலும், பேருந்துகளில் தொங்கி கொண்டு வரும் இளைஞர்களை வசவு பாடும் மகாஜனங்களே, கூட்டம் அதிகம் உள்ள பேருந்துகளில் அவர்கள் வெளியே தொங்குவதால்தான் உள்ளே நீங்கள் மூச்சாவது விட முடிகிறது. அவர்களும் உள்ளே வந்து அடைத்துக்கொண்டு நின்றால் உங்கள் நிலை? பொம்பளைங்க மேல வந்து விழுகிறான் என்று புராணம் வாசிப்பீர்கள். எனக்கு தெரிந்து, இளைஞர்களை விட பெரும்பாலும் பெருசுகள்தான் பெண்களை உரசுகின்றன.   தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கினால் அவன் ஏன் தொங்க போகிறான். 

நானும் ரொம்ப நாட்களாக பார்க்கிறேன், அது என்ன A/C பேருந்தில் செல்லும் சில குபேரர்கள், சாதாரண பேருந்தில் செல்லும் பயணிகளை சற்று அலட்சியமாக பார்ப்பது. அவர்கள் எல்லாம் பில் கேட்ஸ் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள்  போல முகத்தை வைத்து கொள்வது ரொம்பதான் ஓவர். நம் மக்கள் பொதுவாக பல நிமிடம் ஒரு பேருந்தில் அமர்ந்து அது கிளம்பும் நேரத்தில், திடீரென மற்றொரு பேருந்து அருகில் வந்தால் உடனே அங்கே தாவுவதும், பிறகு அது கிளம்ப நேரம் ஆகும் என தெரிந்ததும், முதலில் அமர்ந்த வண்டிக்கே ஓடி வருவதும்... ஏக ரகளையாக இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்
                                                                      

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரங்கநாதன் தெருவில்.. உச்சி வெயிலில் கூட சென்னையின் பல பகுதிகள் இருந்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் பைகளுடன் தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறார்கள் நம் சனங்கள். தயவு செய்து    சென்னை முழுதும் பல கிளைகளை சரவணா ஸ்டோர்ஸ் திறந்து வைத்தால், தி.நகர் சற்று இளைப்பாறும்

சமீப காலமாக மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. படியில் தொங்குதல், இளம் பெண்களை கிண்டல் செய்தல், இந்த வயதிலேயே மாமா, மச்சான் என பேசுதல் போன்றவை.... பேருந்தில் இவர்கள் செய்யும் அருவக்கதக்க செயல்கள் கல்லூரி மாணவர்களின் செயல்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன. இன்றைய இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறதா? பள்ளி நிர்வாகம்,அரசு மற்றும் பெற்றோர்கள் இதுபற்றி சிந்திப்பதே இல்லையா?  


                              
விஷம்போல் ஏறும் விலைவாசியில் ஏற்கனவே திண்டாடிக்கொண்டு இருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் உயிர்நாடியாக விளங்கும் பேருந்துகள் தாழ்தளம்,சொகுசு,சிறப்பு என பல ரூபங்களில் வந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது, சாதாரண வசதியுடன், குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் பேருந்துகளைத்தான் என்பதே உண்மை. பேருந்தில் டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளும் அமர வசதி செய்து தராமல், மூட்டை மூட்டையாக மக்களை உள்ளே அடைத்து செல்லும் செயல் எப்படி தர்மமாகும். சொகுசு பேருந்துகளிலும் இதே கதிதான். சென்னை போன்ற பெரு நகரங்களில் இது நடக்காத காரியம் என்பதெல்லாம் சரியான விவாதம் ஆகாது. இன்னும் எத்தனை வருடங்கள்தான் வயதானவர்களும், இளம் பெண்களும் இப்படி நின்று கொண்டே பயணிக்க முடியும். சென்னை நகர்வாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் இதுவும் ஒன்று என்பதை எப்படி மறுக்க முடியும். மொத்தத்தில் என் மனதில் பட்டதை இங்கு பதிவு செய்து இருக்கிறேன். உங்கள் பயணமும் நல்லபடி அமைய வாழ்த்துகள். மீண்டும் பயணிப்போம். நன்றி.          
Monday, October 25, 2010

B.P.O

குறிப்புஇப்பதிவுமுதல் முறையாக (சென்னையில்)  ஒரு (பெரிய) B.P.O நிறுவனத்தில்வேலைக்கு சேர இருக்கும் தோழர்களுக்கு.  குறிப்பாக இரவு பணிக்கு செல்பவர்களுக்கு


                                                  
                                                                             
காசொந்த மண்ணை விட்டு சென்னைக்கு ஒருவழியாக வந்து விட்டீர்களாவருக.வருக. இன்டர்வியு நடந்த சமயத்தில் நைட் ஷிப்டுக்கு தயாரா என H.R. கேட்டதும் ஆம் என நாம் தலை ஆட்டும் அந்த ஒரு நொடிதான் ஆடு பிரியாணி ஆவதற்கான ஆரம்ப புள்ளி. அதிர்ஷ்டம் உள்ளவன் பகல் ஷிப்ட் உள்ள டீமில் நுழைகிறான். அதுவும் நகரின் மைய பகுதியில் அவனுக்கு வீடும், அலுவலகமும் அமைந்தால்....அவனுக்கு தீபாவளிதான். ஆனால், வட சென்னையில் வீடு இருந்து...(குறிப்பாக சொந்த வீடு)  சோழிங்கநல்லூர், சிறுசேரி என அத்துவான காட்டில்..அதுவும்  நைட் ஷிப்ட் செல்லும் தோழர்களின்  நிலைமையை விட கொடுமையானது வேறில்லை. எல்லாம் பூர்வ ஜென்ம பாவம்..

                                                        
 நைட் ஷிப்ட்தான் விதி என்று ஆனா பிறகு வேறு என்ன செய்ய முடியும். நண்பா, பல நிறுவனங்கள் ட்ரைனிங்கை கூட  இரவில்தான் வைக்கும். பாவம்.. இரவு பத்து மணிக்கு மேல் விழித்திராத வாழ்வை 20 வருடங்களாக பழகிய புது மாப்பிள்ளைகளுக்கு இது சற்று கடினம்தான். முதல் ஓரிரு நாட்கள் தலை கிர் அடிக்கும். ஒரு பக்கம் ட்ரைனர் எதையோ சொல்லிகொண்டிருக்க...உங்களுக்கு கண் சுழற்றி அடிக்கும். அலெர்ட் ஆறுமுகமாக இருந்தே தீர வேண்டும். என்னதான் ட்ரைனிங் சமயத்தில் வளைத்து வளைத்து நண்பர்களை பிடித்து கொண்டாலும்.. அடுத்த குண்டு விரைவில் வெடிக்கும். அனைவரையும் சிதற அடித்து வேறு வேறு டீம் மாற்றி விடுவார்கள். அங்கு நம்மை விட அனுபவம் பெற்றவர்களுடன் அமர்ந்து மீண்டும் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க பல ராஜ தந்திரங்கள் தெரிய வேண்டும். 


                                                   
ஆரம்பத்தில் சீனியர்கள் "வெள்ளை காக்கா பறக்குது பார்" என்றால் நீங்களும் "ஆமாம். ஜொய்யுனு பறக்குது" என்று சொல்லுங்கள். அப்போதுதான் அவர்களிடம் வித்தை கற்க முடியும். உடை விசயத்தில் ஆரம்பத்திலேயே அலப்பறை செய்யாதீர்கள். ஏன் என்றால் உங்களுக்கு முன்பாகவே ஓரிரண்டு ஸ்டைல் ராசாக்கள் உங்கள் அணியில் முகாம் இட்டு இருப்பார்கள். அதனால் முதல் சில மாதங்கள் அடக்கி வாசியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் டவுட் கேட்க செல்லும்போது அந்த ராசாக்கள் உங்களை சுற்றலில் விடலாம் அல்லது கழற்றி விடலாம். முதலில் வித்தை கற்க. பிறகு பட்டைய கிளப்புக. 

பீட்டர் விடுதல் மிக முக்கியம் அமைச்சரே! என்னதான் தொழில் தெரிந்தாலும்,அடிப்படை ஆங்கிலம் நன்றாக தெரிதல் முக்கியம். எனவே, விடுமுறை நாட்களில் ஆங்கில செய்தி சானெல் பார்த்தல், ஆங்கில தினசரி படித்தல் போன்ற பழக்கங்களை கடைபிடியுங்கள். ஓரளவு வித்தை,நல்ல ஆங்கிலம் தெரிந்தவன்.... வித்தையில் நல்ல தேர்ச்சி பெற்று, ஆங்கிலத்தில் கோட்டை விட்டவனை முந்திவிடுவான். உஷாரு. 


                                                    
இரவு பணியில் குறிப்பாக 2 மணிக்கு மேல் பொதுவாக கண்கள் சொக்கும். அதை முறியடிக்க முயன்று பலர் கஜினி போல் தோற்பதுண்டு. நீங்கள் கவலைப்பட வேண்டாம். கண் சொக்க ஆரம்பிக்கையில் சீட்டை விட்டு எழுந்து... வெளியே பத்து நிமிடம் இயற்கை காற்றை சுவாசியுங்கள். அதுதான் ஆண்டவன் நமக்கு அளித்த இலவச ரீ-சார்ஜ் பேட்டரி.  மீண்டும் வந்து அமர்ந்து பாருங்கள். வேலை வேகமாக நடக்கும். வேலை செய்யும் அறையில் தூங்குவதை பொதுவாக எந்த உயர் அதிகாரியும் விரும்ப மாட்டார்கள். நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும். என் 5 வருட இரவு பணியில் ஒரு நாள் கூட என் சேரில் அமர்ந்து டெஸ்கில் தலை வைத்து தூங்கியதில்லை. சுய கௌரவம் முக்கியம் இல்லையா.அதனால்தான். என் பணி நேரம் அப்போது இரவு 11 முதல் காலை 7 மணி வரை. எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள். உங்களால்  தூக்கத்தை நிறுத்த முடியவில்லை என்றால், உணவு அருந்தும் இடத்தின் ஒரு மூலையில் விளக்கை அனைத்து விட்டு 15 நிமிடம் ஒய்வு எடுத்து விட்டு பணியை தொடருங்கள். 


                                                           
இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை தவிர்க்க என்ன செய்வேன் என்றால்.. என்னை சுற்றி ஆங்காங்கே தூங்கி வழியும் நண்பர்களை வேடிக்கை பார்ப்பேன். ஆஹா.. அந்த சுகமே அலாதி. இடியே விழுந்தாலும் அசராமல் தூங்குபவர், சிஸ்டம் லாக் ஆகாமல் இருக்க மவுசை ஆட்டிக்கொண்டே தூங்குபவர், தூக்கத்தில் தலையால் கம்ப்யூட்டரை முட்டுபவர்..என பல ரகம். அதிலும் குறிப்பாக, தூக்கம் பாதியில் கலைந்ததும் திடீர் என பதறி போய் முழிக்கும் நண்பர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே.. செம காமெடியாக இருக்கும். அதே சமயத்தில் இதயத்தில் வேதனை முள் தைக்கும். தமிழகத்தில் தாய்மொழி சார்ந்த வேலையை பகல் பொழுதில் செய்து, மாலை நேரத்தை உடற்பயிற்சிக்கும், குடும்பத்திற்கும் ஒதுக்க இயலாமல் நம் இளைய தலைமுறை எங்கோ ஒரு காட்டில்..ஏதோ ஒரு மாடியில்..வெள்ளைக்கார துரைகளுக்காக.. இரவு முழுக்க விழித்து..தன் வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கிறதே என்று... என்று விடியுமோ? 


                                                          
நண்பா, அலவன்ஸ் கிடைக்கிறது என்பதற்காக வருடக்கணக்கில் இரவு பணியில் குப்பை கொட்டாதீர்கள். உடல் நலம் காணாமல் போய்விடும். இப்போது தொப்பை என்றால் போலீஸ் என்ற காலம் போய் ஐ.டி/பி.பீ.ஓ தொப்பை பிரபலம் ஆகி வருகிறது. 30 வயதை தொடும் முன்னே, 5 கர்ப்பிணி போல் ஆகி விடுகிறோம். முடிந்த அளவு வீட்டு சாப்பாடு சாப்பிடுங்கள். நடை மிக மிக முக்கியம். இரண்டு மாடியாவது படிகளில் நடக்க பழகுங்கள். 


உங்கள் நிறுவனம் உங்களுக்கு தகுந்த சம்பளம்/ஊதிய உயர்வு  தருகிறதா என்பதை தெரிந்து கொள்ள சுலபமான வழி எது தெரியுமா...உங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியை கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் வேலைக்கு சேரும்போது..அந்த கடை வெகு சாதாரணமாக இருக்கும். அதுவருடம் அண்ணாச்சி கடையை புதுப்பிப்பார். சில நாட்களுக்கு முன்பு வரை ஈ அடித்து கொண்டிருந்தவர்.. கூட்டம் கூட கூட..பல வகை பஜ்ஜிகளை போட்டு தாக்குவார். நாம் கர்ப்பம்(தொப்பை) ஆவதற்கு அவர்தான் முக்கிய காரணமாக இருப்பார். அந்த லாபத்தில் அண்ணாச்சி கழுத்தில் தங்க செயின் டால் அடிக்கும். இரண்டாம் வருடம் அண்ணாச்சி.. இட்லி, தோசை, பரோட்டா என மினி ஹோட்டலாக கடையை மாற்றுவார். அந்த சமயம் உங்கள் ஊதிய உயர்வு மொக்கையாக இருந்தால்...நாம் வாழ்வில் எங்கோ தோற்க ஆரம்பிக்கிறோம் என அர்த்தம். விழித்து கொள்ள வேண்டிய தருணம் அது. இந்த பொழப்புக்கு பேசாம டீ கடை வச்சி இருக்கலாம் என மனசாட்சி ஏளனம் செய்யும்.  


                                   
நீங்கள் வசிக்கும் இடம் உங்கள் நிறுவனம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தூரம் இருக்கிறதா? உங்கள் நிறுவனம் பிக் அப்/டிராப் தருகிறதா? பஸ் அல்லது 
டெம்போ ட்ரா- வெல்லர் போன்ற பெரிய வாகனங்கள் இருந்தால் நன்று. சுமோ போன்ற வாகனங்களில் பிரயாணிக்க நேர்ந்தால்.. கூடுமானவரை ஓட்டுனருக்கு அருகில் அல்லது பின்பக்க இருக்கையில் அமர்ந்து செல்லுங்கள். கடைசியில் இருக்கும் நால்வர் அமரும் இருக்கைகளை தவிருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, ஷிப்ட் முடிய 5 நிமிடம் இருக்கும் முன்பு லாக் ஆப் செய்து விட்டு உங்கள் வாகனம் நிற்கும் இடத்திற்கு சென்று உள்ளே அமர்ந்து விடுங்கள். பல கிலோ மீட்டர் தூரம் பிரயாணம் செய்ய வேண்டிய ஆள் நீங்கள் என்பதால் இந்த விசயத்தில் கவனம் செலுத்துங்கள். 


                                         
லிப்ட்,காப்டீரியா..போன்ற இடங்களில் சாதாரண உடை அணிந்து செல்லும் நம்மை, ஸ்டைல் ராசாக்கள் ஒரு மாதிரியாக லுக் விட்டால் அசர வேண்டாம். அவன் கண்களையே தெனாவட்டாக உற்று பாருங்கள். பயபுள்ள பம்மி விடுவான். வேலையில் சேரும்போது நம்மை போல் உடை அணிந்த ஜந்துதான் அதுவும். இன்று படம் காட்டுகிறது. கண்டு கொள்ளாதீர்கள். ஆரம்பத்தில் சென்னை வந்த வேகத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவின்யு, ஸ்பென்சர், சத்யம், அடிடாஸ், ரீபோக்..என அறிந்தும்,  அறியாமலும் காசை கரி ஆக்கதான் செய்வோம். பிறகு அந்த பக்கமே தலை காட்ட மாட்டோம். எனவே படு கஞ்சனாகவோ, பகட்டுக்காரனாவோ இருக்க வேண்டாம். பார்த்து செலவு செய்யுங்கள். வேலை வேலை என்று இராமல், அவ்வப்போது உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகள் மற்றும் அதை சுற்றி நடக்கும் விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள். இரவில் வண்டியில் பிரயாணிக்கும்போது கூடுமானவரை, ஓட்டுனரிடம் பேச்சு குடுத்துக்கொண்டோ அல்லது வண்டியில் பாடலை போடுமாறு கேட்டுகொண்டோ செல்லுங்கள். ஏன் எனில் சில ஓட்டுனர்கள் வண்டி ஒட்டும்போதே தூங்கி விடுவார்கள். அதனால் அண்ணனை அசர விடாதீர்கள். இல்லாவிட்டால் வண்டியை சாலையின் ஓரத்தில் இருக்கும் மரத்திலோ, அருகே சென்று கொண்டு இருக்கும் வண்டியிலோ சொருகி விடுவார்.


                                                             
குடும்பத்தை கிராமத்தில் விட்டு விட்டு தலைநகரில் தஞ்சம் புகுந்து இரவு வேலை செய்ய தயாராகும் நண்பர்களே, இந்த பதிவு ஒரளவேனும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்வில் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்! மீண்டும் சொல்கிறேன்..உடல் நலனில் தீவிர அக்கறை அவசியம். இரவில் பேய் போல விழித்து சம்பாதிக்கும் பணம் எத்தனை ஆயிரமாக இருந்தாலும்..உங்கள் உடலே பிரதானம். பார்த்து கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம். 


கொசுறு: தோழர்களே, இது எனது இரண்டாவது Blog. முதலில் தொடங்கியது nanbendaa.blogspot.com.    
Related Posts Plugin for WordPress, Blogger...