மாலி'ஸ் ஸ்டேஜ் தயாரிப்பில் 30/01/2019 அன்று அரங்கேறிய நாடகம் 'இதோ எந்தன் தெய்வம்'.
01/02/2019 அன்று மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் மீண்டும் மேடையேறியது. எழுத்து - இயக்கம்: குடந்தை மாலி. தயாரிப்பு: மீனா மகாலிங்கம்.
படிப்பு மற்றும் தனித்திறன்களில் சிறந்த விளங்கும் சிறுமி ஸ்ருதி. தந்தைக்கு அமெரிக்காவில் வேலை. தாத்தா மற்றும் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள். ஒருநாள் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுகிறாள். அரிய நோய் ஒன்று தாக்கியிருப்பதாக கூறுகிறார் மருத்துவர். இதை எப்படி எதிர்கொள்கிறது ஸ்ருதியின் குடும்பம் என்பதை சொல்கிறது கதை.
ஸ்ருதியாக வர்ஷா. தெளிவான உச்சரிப்பு, மேடை பதற்றம் இல்லாத நடிப்பு. கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு அருமையாக நடித்துள்ளார். பல்வேறு நாடகங்களில் இதுபோன்ற சிறார்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை போதுமான அளவு திறமையை வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால் வர்ஷாவிற்கு வலுவான கதாபாத்திரம். நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி மனதை கவர்கிறார். மேடை நாடகத்திற்கு இன்னொரு சிறந்த வரவு.
டெல்லியில் இருந்து ஸ்ருதிக்கு சிறப்பு மருத்துவம் பார்க்க வரும் டாக்டர் அசோக் எனும் கதாபாத்திரத்தில் கணேஷ். நாடகத்தின் மையம் இவர்தான். மனிதாபிமானமும், நியாயமான கண்டிப்பும் கலந்தவராக சிறந்த நடிப்பினை தந்திருக்கிறார். இந்நாடகத்தின் வெற்றிக்கு கணேஷின் பங்கு மிக முக்கியமானது.
ஸ்ருதியின் தாத்தாவாக சண்டிகர் ரமணி மற்றும் தாயாக சௌம்யா ஆகியோரின் உணர்வுபூர்வ நடிப்பு பாஸ்மார்க்கை பெறுகிறது. தந்தையாக உமாசங்கரும் ஓகே. ஆனால் கண் கலங்குவது போல நடிப்பதில் இன்னும் யதார்த்தம் தேவை.
பெரியளவில் பட்ஜெட், நட்சத்திர பட்டாளம் இல்லாத எளிமையான படைப்பு. பத்மா ஸ்டேஜ் கண்ணன் (அரங்க அமைப்பு), பெரம்பூர் குமார் (ஒப்பனை), கலைவாணர் கிச்சா (ஒலி மற்றும் ஒளியமைப்பு) ஆகியோர் தங்கள் பங்கினை நிறைவாக செய்துள்ளனர்.
பொதுவாக குடந்தை மாலியின் நாடகங்களில் சாதி மற்றும் மதம் சார்ந்த தர்க்கங்கள் இடம்பெறும். இருதரப்பு வாதங்களையும் கதைக்களமாக கொண்டு இறுதியில் 'தனக்கே' உரிய பாணியில் க்ளைமாக்ஸை முடிப்பார்.
ஆனால் இந்நாடகம் அவற்றை விட சிறந்ததாக இருக்கிறது. அதற்குக்காரணம் தன்னுடைய கருத்தை திணிக்காமல் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான்.
என்னதான் கடவுள் இல்லையென்று நாத்திகர்களும், அறிவியல் சார்ந்த மேதைகளும் பொதுவில் சொன்னாலும் அவர்களில் பலரது மனதில் கடவுள் எனும் சக்தி உள்ளதை நம்புவதாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட்டை ஏவும் முன்பு தேங்காய், பூ, ஆரத்தி எடுத்து வழிபட வேண்டிய அவசியமென்ன?
ஒரு நோயாளிக்கு கூடுமானவரை மருத்துவம் பார்த்துவிட்டு கையறு நிலையில் இருக்கும் மருத்துவர்கள் 'எதற்கும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்' என்று சொல்லத்தான் செய்கிறார்கள். அந்த மருத்துவர்களின் நெற்றியில் விபூதி - சந்தனம் - குங்குமமும், அவர்களின் வீடு/க்ளினிக்கில் இறைவனின் புகைப்படங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இதோ எந்தன் தெய்வத்தின் கதைக்கரு புதிதல்ல. ஆனால் அதனை தொய்வின்றி இறுதிவரை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றதில் மாலி ஜெயித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் இந்நாடகத்தை நல்ல முறையில் கட்டமைத்து நிறைவான படைப்பை தந்திருக்கும் மாலி அவர்களுக்கு இதயபூர்வ வாழ்த்துகள்.
இதோ எந்தன் தெய்வம் - மாலியின் வெற்றிக்கொடி.
------------------------------
விமர்சனம்:
ஏ.ஜி.சிவகுமார்.