கதை: திருச்சி அருகே குழுமணி எனும் ஊரை சேர்ந்த
ராகவ் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு
சேர்ந்து தனது திறமையால் விரைவில் முன்னுக்கு வருகிறான். ஒருசமயம்
அந்நிறுவனத்தின் விருந்தளிப்பு விழாவில் நண்பன் வற்புறுத்தியும் குடிக்க
மறுக்க, அதற்கான காரணம் என்னவென்பதை அவனது தந்தை மூலம் அறிகிறான் அலுவலக
நண்பன். கல்லூரிக்காலத்தில் சொன்ன சில பொய்கள் கெட்டிக்கார மாணவனான ராகவை
எப்படி சோதித்தது, அதன் மூலம் அவனுக்கு மனமாற்றம் நிகழ்ந்தது எப்படி என்பதை
சொல்கிறது டம்மிஸ் ட்ராமாவின் ‘சுகமான பொய்கள்’
கதையின் நாயகன் ராகவாக ஸ்ரீராம்.
கல்லூரிக்காலத்தில் தற்செயலாக செய்யும் தவறுக்கு பொய் சொல்லி
சிக்கிக்கொள்ளும் கேரக்டர். உற்ற நண்பன் மோகனாக ப்ரசன்னா. கல்லூரி
மாணவர்களின் அப்பாவித்தனம் மற்றும் சேட்டைகளை இயல்பாக பிரதிபலித்து
இருக்கிறார்கள். ஸ்ரீராமின் தந்தை சேதுராமனாக ஸ்ரீதர். ‘A’ Grade வாங்கிய
மகனை ஆப்சன்ட் ஆனதாக எண்ணி திட்டியும், ‘D’ Grade வாங்கிய மோகனை பாராட்டி
பேசியும் கைத்தட்டலை பெறுகிறார். கல்லூரி ஆசிரியையாக ப்ரேமா சதாசிவம்.
கண்டிப்பும், கனிவுத்தன்மையும் கொண்டவராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார். குரல் வித்யாசம் தெரியாத பெண்ணாக சில நிமிடங்களே மேடையில்
வந்தாலும் சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார் அர்ச்சனா. ப்ரின்சிபல்
வேடத்தில் பாந்தமாய் பொருந்துகிறார் ரவிசங்கர்.
சுகமான பொய்களின் கலாட்டா நாயகர்
கிரிதரன். ஸ்ரீராம் மற்றும் பிரசன்னாவை வைத்து தனது காரியத்தை சாதித்து
கொள்ளும் ராமசாமியாக முதலில் நம்மை மகிழ வைப்பவர், அதன் பிறகு ஸ்ரீராமின்
நலனில் அக்கறை உள்ளவராக நடித்து நெகிழவும் வைக்கிறார். ‘யார் அசல் தந்தை?’
என்றொரு குழப்பமான சூழல் வரும்போது ‘எனக்கு ஒரே கேரா கீதுப்பா’
‘சரக்கடிக்காமயே எனக்கு சுத்துது’ என்று கிரிதரன் கிறுகிறுக்கும்போது
கரவொலி காதை பிளக்கிறது. என்றும் நினைவில் நீங்காத ‘காதலிக்க நேரமில்லை
‘படத்தில் ரவிச்சந்திரனின் தந்தையாக வேடமிட்டு முத்துராமன் நடித்த
சுவாரஸ்யமான காட்சிகளை நினைவுபடுத்துகின்றன இந்த கல்லூரி கலாட்டா
சம்பவங்கள்.
மேடையை மூன்றாக பிரித்து ஹாஸ்டல், பேஸ்கட்
பால் மைதானம், கல்லூரி அலுவலக அறை என நேர்த்தியாக அரங்கை அமைத்த
கிருஷ்ணமூர்த்தி மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன், மூன்று இடங்களுக்கும்
தகுந்தவாறு சிறப்பான ஒளி அமைத்த பாபு ஆகியோரின் உழைப்பு மெச்சத்தக்கது.
குடிப்பழக்கத்தின் மூலம் நிகழும் சீரழிவை
பிரச்சாரம் போல நீட்டி முழக்காமல் ரத்தின சுருக்கமாக சொல்லி தனது
முத்திரையை மீண்டும் பதித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவத்சன். வழக்கம்போல
இந்த டம்மிஸ் நாடகமும் 90 நிமிடத்தில் நிறைவடைவது ஷார்ட் & ஸ்வீட்.
written for tamil.jillmore.com
........................................................